என் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து
ஆஃப் பாயிலுக்கு அர்ப்பணம் செய்ய கவிப்பேரரசு வைரமுத்து ஒரு கவிதையெழுதினால்.. ஒரு சிறு கற்பனை. அவர் பாணியிலேயே படித்தல் உசிதம்.
-oOo-
என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..
சிரத்தையது சிதறாது
உன் ஓட்டுவெளியில் ஓட்டையிடுகிறேன்.
ஆழமுற ஓடுடைதல்
உன் உயிருக்கு ஊழாகலாம்!
உடைவித்த ஓடு - விரி
உயரம் ஓங்கா திருத்தல் நலம்.
கீழ்வானின் மஞ்சளுயிர்
கிழிந்தொழுகக் கண் தகுமோ?
உயிருடைந்தே வீழ்கையிலும்
ஃபுல் பாயிலாகிப் புறப்படுவாய்
ஃபுல் வாயிலும் இனிப்படைவாய்
தாழ்வுக்குத் தலை வணங்கா(து)
தன்மானம் தற்காப்பாய்!
உன் உயிரூற்றை
வெளியூற்றி
ஒரு சொட்டு சூரியனில்
உப்பு மிளகிட்டுக்
காத்திருத்தலின் கணங்களவை..
பெண்டிருக்குக் காத்திருத்தலிலுங்
கண்டிராதவை
கொண்டு தருபவை!
உன்
பொன் சிவந்து
என் உயிருவந்த
பின்
ஆற வைத்த
இளஞ் சூட்டில் - உனை
சேர வைத்த
நா முகட்டில்
வெள்ளை
மஞ்சள்
உப்பு
மிளகு
இது அதுவுடனும்
அது இதுவுடனும் - பின்
இவை அவையுடனும்
அவை இவையுடனும்,
கூடிக் கலைந்து,
குலுங்கிப் பிணைந்து,
இமைகள்
சுழன்று கொள்ள,
சுமைகள்
கழன்று கொள்ள,
காதலோடு
ஓதுகிறேன்..
என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!
உப்புள் ஊறி வந்த நீயும்
தொப்புள் கீறி வந்த நானும்
வாய்க்குள் வம்பாடலாம் வா!
ஒன்றுக்குள் ஒன்றாதல்தான்
மோகத்தில் முத்தெடுத்தலாம்.
ஒன்றான ஒன்றாகி நாமும்
மேகத்தில் பூத்தொடுக்கலாம் வா!
உனக்காக வந்த
எனக்காக வெந்த - நீ
கணக்காக
சொந்தமானாய்!
துளிர்த்தடங்கும்
நா நரம்புகளில்
நாணேற்றி
நான் விடுவேன்!
நீங்காது
நின்று
சுவையளித்து
சுகமளித்து
'நான்' என்பதிறக்கி
நீ விடுவாய்!
ஏறுதலும் இறங்குதலும்
ஏற்றமுற முடியும்.
முடிந்தபின்
ஏறியிறங்கும்
ஆட்டங்களெல்லாமே
இனிப்பென்று புரியும்!
தொண்டைக்குழி கடந்து
நீ போகையில்
பெண்டுக்குழி பொதிந்து
நான் போன சுகம்
போலிருக்க
காதலோடு மட்டுமல்ல
உனக்காய்
காமத்தோடும் கத்துகிறேன்..
என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!
9 மறுமொழிகள்:
நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சி ..
பூவுக்குள் பூகம்பம்..
இதெல்லாம் வரலை
நல்லா இருக்கு.
கலக்குறிங்க தலைவா
கவிப்பேரரசு இதைப் பார்க்காதிருக்கட்டும்.
ஆம் தருமி.. தோசைக்கல்லில் தீபாவளி, வயிற்றுக்குள் வானவில் - இப்புடி எதையாவது போட்டுருக்கலாம். நன்றி.
நன்றி ரஹ்மான்.
நன்றிங்க தங்கராசு.
அண்ணாச்சி - அவ்ளோ மோசமா எழுதிட்டனா..? :)
கவிக்காட்டில் புகுந்த
கரிசல்காடே..
இந்திரமுந்திரி
பறித்திட்ட
ராசவேர்வையே..
விண்வெளியில்
கிட்டாது
அரைவேக்காட்டுமுட்டை..
உன்
வீண்வெளியில்*
கிட்டுவதெல்லாமே
அரைவேக்காடுதானே!
* இஃது கவிப்பேரரசு மீதான விமர்சனம் என்றறிக.
\கவிதை நல்லா இருந்தது :-)
பினாத்தல் சுரேஷ்,
வைரமுத்து அவர்களை இழிவு படுத்தும் எந்த விதமான நோக்கத்துடனும் நான் இப்பதிவை எழுதவில்லை. ஆஃப் பாயில் பற்றி அவர் எழுதினாலும், ’கவிதைக்குரிய இலக்கணம் இருக்கிறதா’ என்ற தர்கக்த்தையும் தாண்டி, வார்த்தை விளையாட்டில் எப்படியும் ரசிக்க வைத்து விடுவார் என்ற எண்ணமே இதன் அடிப்படை.
உங்களுடைய அவர் மீதான விமர்சனம், உங்கள் கருத்தாகக் கொள்கிறேன். அதைப் பற்றி நான் சொல்ல ஏதுமில்லை. 5 முறை தேசிய விருது பெற்ற ஒருவரைப் பற்றி சிறியன் நான் சொல்ல என்னவிருக்க முடியும்?
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
கவிதையில் வார்த்தை விளையாட்டு நல்லா இருக்குது மதன்
நன்றிங்க கதிரவன்..!
Post a Comment