Tuesday, November 25, 2008

காதலித்த கவிதைகள்..

கையிலேந்த வழியின்றி,
வெட்கங்கள் வீணாகின்றன.
தொலைபேசிக்
காதலிக்கையில்.

*************************************************

சில்லிடல்களும், சிலிர்ப்புறல்களும்
மரத்துப் போகின்றன
காதலின்
கைப்பிடித்தல்களில்.

*************************************************

பார்த்துக் கொண்டேயிருக்கும்
இருளில் நகரும்
உருவிலா
வெள்ளை உருவங்கள்போல்,
இருப்பும், இல்லாமையும்
ஒருங்கே காதலில்.

*************************************************

வார்த்தைக்கும் வலிக்காமலே
கவிதை
எழுதுகிறேன்.
காதலை
எழுதுகையில்.

*************************************************

அவளுக்கும், எனக்கும்
மட்டுமின்றி
சரிக்கும், தவறுக்கும்
இடையேயும்
ஊடாடுகிறது.
காதலென்ற மாயச்சரடு.

*************************************************

கடித்துத் துப்பிய நகம்
அவள் கன்னக் கதுப்பில்
பட்டுத் தெறிக்கையில்,
மஞ்சள்ப்பூ
இதழ் விரித்து,
முறைப்போடு சேர்ந்த
சிரிப்பொன்று வருகையில்,
நகங்கடித்தலும்
நல்ல பழக்கமாகிறது.

*************************************************

மயிர்கோதி
மருவி மைகோதி ஆனதாம்.
குழல் பொதிந்து,
ஈரம் படிந்து,
வெளிவருகையில்
என் ஆறடி அரையடியாகிறது.
மைகோதி மாத்திரம் எம்மாத்திரமாம்?

*************************************************

காதலின் சுகந்தம்
நாசி நுழைந்து, உடல் நிறைத்தது.
கருவிழி மேல்சென்று
இமைக்குள் மறைந்தது.
சற்றே வெண்மை குன்றி,
ஒற்றை முடி சுற்றியிருந்த
மல்லிகையை முகர்ந்தபோது.

*************************************************

நினைவுகள் நிறைகின்றன.
நிறைக்கின்றன.
நீ நிறைய,
நான் நிறைய,
நிறைய நீயும்,
நிறைய நானும்,
நிறைந்த நீயும்,
நிறைந்த நானுமாய்,
நிறையவே நினைவுகள்.
நிறைந்த நினைவுகள்.

*************************************************

சூரியனில்
முகம் கழுவும் பனித்துளியாய்
எட்டிப் பார்த்து உலரும்
உன் கோபக் கீற்றுகள்,
மின்னல் குழந்தைகளாய்
கிள்ளிவிட்டுச் செல்கின்றன.

*************************************************

இறக்கடிக்கும்
இறந்த செல்கள்.
அவள் முடியும், நகமும்.

*************************************************

தெய்வீகப் பூச்சுகளெல்லாம்
தேவையில்லை.
இருந்தவாறு இருத்தலே
நலம்.
நம் காதலுக்கு.

*************************************************

வண்ணமும், வாசமும்
மருங்காப் பூவொன்று
பூத்துக்கொண்டே
இருக்கின்றது
ஒவ்வொருவரின் பதின்மங்களிலும்.

*************************************************

தொட்டும், தொடாமலும்
விரல் முட்டும்
நடை வேளைகளில்,
சிந்துகிறது
அரைத் துளிக் காமம்.
என்னையும் அறியாமல்.

*************************************************

வேண்டுமென்றே
அடுத்த பெண்ணை ஏறிடுகிறேன்.
இவளின்
செல்லக் கடிதல்களில்
உள்ளுக்குள்
மின்மினித் துந்துபிகள்.

*************************************************

உனக்குள்
எனக்காக ஊறிய
ஒரு பொட்டு நேசம்,
என் பாலைகளிலும்
பால் வடிக்கிறது.

*************************************************

நிகழும் சந்திப்புகள்
முடியும் வேளைகள்.
பிரிவு பீடிக்கும்
பீடிகை நிமிடங்கள்.
பரிதவிக்கும்
பட்டாம்பூச்சிக் கண்களில்
தெரிகிறது.
காதலின் கனம்.

*************************************************

என் காதலைச் சொல்லும்
எழுத்தே..
உன் காதலை
எப்படிச் சொல்வேன்..
ஈரம் உலராப்
பேனா முத்தம்
என்றா?

*************************************************

காலமும், மொழியுங்
கடந்து
காதல் வழிந்த
கவிதைகள்
ஆயிரங்கோடி தாண்டியும்,
தீரப்போவதேயில்லை.
காதலும் சரி.
கவிதையும் சரி.

Read more...

குழப்பத் தீர்வுகள்



சில நாட்களின் எவருமற்ற பொழுதுகளில்
திணிவுறும் தனிமைகள்.
நட்பு வட்டத்தின் சுற்றளவு
ஒற்றைப் புள்ளிக்குச் சிறுத்தாற்போல்
என் எல்லோரும் எங்கேனும் ஏதேனும்
நிமித்தங்களின் நிமித்தமாய்.

மலைபோல் குவியும்
எண்ணக் குப்பைகளுக்கு
மத்தியில் உழல்கையில்,
எதிர்காலப்பயம் வந்து அச்சுறுத்தும்.

முன்னெப்போதோ,
பள்ளிக்காலத்தின் ஒரு சனிக்கிழமை மதியத்தில்,
அம்மா மடியில் கிடந்திருக்கையில்,
அவள் சொன்னது நினைவில் வரும்.
நீ பொறக்றப்போ பாத்துட்டுதான்டா இருந்தேன் நான் என்று.
பொங்கும் நெஞ்சுரத்தை
அளக்க ஆகாது என்னால்.
உதிரும் சிரிப்போடு
கவலை உதிரிகளைக் கால்தள்ளி,
அடுத்த வேலையைக் கைகொள்வேன்.
மீண்டும் பிறந்து,
மீண்டவனாய்.

உயிரோசை 22/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

உறவுகள்

நத்தையைப்போல் நகர்ந்து ஊரும் வாழ்வின் நாட்களில், பிடிமானமாய் விளங்குவது உறவு. தளர்வு மனதை ஆட்கொள்ளும்போதெல்லாம் ஊக்கம் அளிப்பது உறவு. உறவில்லாத ஒரு தனிமர வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது மனித சமுதாயத்தால். அந்த அளவு நாம் அனைவரும் உறவெனும் சங்கிலியினுள் பிணையுண்டு கிடக்கிறோம்.

உறவு என்று இங்கே அர்த்தப்படுத்துவது, குடும்ப உறவுகளை, அதாவது பிறப்பால் உண்டான உறவுகளை மட்டும் அல்ல. நாம் அறிந்த மனிதர்களுள், நாம், நம்மைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு உயிருமே உறவுதான். ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டுமே உறவென்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. சொல்லப்போனால், குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும் நட்பில் பகிர்ந்து கொண்டு, ஆறுதலோ, தெளிவோ, வேறு எது வேண்டுமோ அதைப்பெற முடியும்.

பெற்றோரையோ, உடன் பிறந்தோரையோ, நாம் தெரிவு செய்து கொள்ள இயலாது. ஆனால் நட்பில் இந்த வசதி உண்டு. இந்தத் தெரிவை சரியாக செய்யக் கற்றுக்கொண்டால், வாழ்வும், உறவும் துலங்கும். இல்லையேல், நட்பே வாழ்வைக் கெடுக்கும். அங்கே உறவென்ற வார்த்தைக்கெல்லாம் இடம் இல்லை.

சரி, காலத்துக்கும் கூட வரும் உறவைக் கண்டு கொள்வது எப்படி? மனிதர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவரோடு நல்லதொரு உறவு அமையுமா என்று அறிந்துகொள்வது சாத்தியமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேட வேண்டிய அவசியமே இல்லை. நாம், நாமாக இருந்து விட்டாலே, நமக்கான உறவுகள், நம்மை வந்து சேரும்.

மிகச்சாதாரணமாகப் பழகும் இருவர், எப்போது நட்பென்ற எல்லை கடந்து, உறவென்ற ஊர் சேர்கிறார்கள் என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாத ரகசியம். அது அவர்கள் அறிமுகமான சமீபத்திலேயே நிகழலாம். இல்லை மாதங்களோ, வருடங்களோ கூட ஆகலாம். காலம் தன் கையில் வைத்திருக்கும் கணக்கு நோட்டில் தீர்மானிக்கப்படுவது அது. ஒரு வேளை நீண்ட காலம் கழித்து மனதால் ஒன்றும்போது, இத்துணை காலத்தை வீணடித்துவிட்டோமே என்று வருந்துவதைக் காட்டிலும், இப்போதாவது காலம் அதன் திரையை விலக்கியதே என்று சந்தோஷப்படுவதே உத்தமம்.

இப்படி மனதால் ஒன்றி விட்ட உறவுகளுக்குள் விரிசல் வராமல் பார்த்துக்கொள்வது அவரவர் சாமர்த்தியமே. ஏனென்றால், கருத்து வேறுபாடும், அதையொட்டி வரக்கூடிய வாதப் பிரதிவாதங்களும் உறவுகளுக்குள் மிக இயல்பானவை. நெருக்கம் கூடும் அளவுக்கு உரையாடும் மற்றும் உடனிருக்கும் நேரமும் அதிகரிக்கும் அல்லவா. கூடவே பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கத்தானே செய்யும். இத்தகைய தருணங்களையும் தாண்டி, கூடவே வரும் உறவுகளைப் பெற, ஒருமித்த புரிந்துகொள்ளுதல் மிக அவசியம். சிலரைக் கேட்டால், பெறாமல், பெற்ற உறவுகளிடம், வெறுமனே கருத்தை நிரூபித்து, சூழ்நிலையை வெற்றி கொள்வதற்காக விவாதிப்பதை விட, உறவின் முக்கியத்துவத்தை காப்பதற்காக விட்டுக்கொடுத்துவிடுவதே உசிதம் என்பார்கள்.

இன்னொருபுறம், "இல்லை.. இல்லை.. என்னதான் வாதம் செய்தாலும், கருத்தின் பொருட்டு பிரயத்தனங்களே நிகழ்ந்தாலும், நாங்கள், நாங்களாகவேதான் இருப்போம். அதில் விட்டுக்கொடுக்க தேவை இல்லை. நான் நேசிப்பவரின் கருத்து தவறென்றால், இடித்துரைப்பது என் பொறுப்புதானே.." என்கிறீர்களா? அதுவும் சரிதான். உறவில் விரிசல் வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்தலும் அழகுதான். திருத்தியே தீருவேன் என்ற தீர்மானமும் அழகுதான்..!

நமக்கு ஒருவர் முக்கியம் என்ற நிலை வந்த உடனேயே, எவ்வளவு முக்கியம் என்ற கேள்வியும் பின்தொடர்கிறது. அதற்கு பதில் "எனக்கு மட்டும்தான் முக்கியம்" என்ற நிலைதானென்று மனது, தன்னை அறியாமலேயே நம்பத்தொடங்குகிறது. Here comes the so called possessiveness. (Possessiveness-ஐ இப்போதைக்கு உரிமைத்தனம் என்று தமிழ்ப்படுத்திக் கொள்வோம்) பாசம், நேசம் போன்ற வார்த்தைகளை எல்லாம் பிரயோகப்படுத்தும் உறவுகளிடமும், உரிமைத்தனம் இல்லாமல் பழகுவதற்கு உண்மையாகவே பக்குவப்பட்ட மனம் வேண்டும்.

எனக்கு முக்கியமான ஒருவருக்கு நான் முக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், நான் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கும் புள்ளியில்தான் விரிசலுக்கு வித்திடுகிறோம்.

எனக்கு ஏன் செய்யவில்லை என்று நான் கேட்கலாம். தவறில்லை. எனக்கு யாரென்றே தெரியாத ஒருவருக்கு ஏன் செய்கிறாய் என்று நான் கேட்கலாமா? கூடாது என்ற உண்மை பலருக்கும், பட்டுத் தெளிந்த பின்தான் புரிகிறது என்பதே கண்கூடு. உண்மை புரியும் வரை, அந்த உறவோடு சம்பந்தப்பட்டவர்கள் யாவருக்குமே நிம்மதி இருக்காது. இந்த அவஸ்தை எல்லாம் படாமலே உண்மை புரியும் அளவு பக்குவப்பட்டிருந்தால், பாராட்டப்பட வேண்டியது அவசியம்.

ஒரு காலகட்டத்தில் என்னை நேசிக்க ஆரம்பித்த ஒருவர், அவர் வாழ்வில், மேலும் எத்தனையோ பேரைச் சந்திக்க வேண்டியிருக்கும். பழக வேண்டியிருக்கும். என்றோ, எப்போதோ, என்னுடன் பழகி, என்னை நேசிக்க ஆரம்பித்த பாவத்துக்காக வேறு யாரையுமே அவர் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் காட்டுமிராண்டித்தனமில்லையா? இதற்காக நேசிப்பவர்களின் மீதே தன் கருத்தை, வலுக்கட்டாயமாகத் திணிக்கத் துணிதலும், அது மறுக்கப்படும் பட்சத்தில், உறவே வேண்டாமென்று உதறும் அளவுக்கு, கண்மூடச் செய்துவிடலும் உரிமைத்தனத்தின் சிறப்பியல்புகள்.

எனக்குப் பிடித்தமானவருக்கு, எனக்கு பிடித்தவைகள்தான் பிடிக்க வேண்டும், எனக்குப் பிடிக்காதவைகள், பிடித்தமானவைகளாக இருக்கக்கூடாது என்ற எண்ணமும் உரிமைத்தனத்தின் ஒரு பரிமாணம். எனக்கு எப்படி வேண்டுமோ, அப்படியெல்லாம் ஆட்டுவிப்பதற்கு, அவர் என்ன களிமண்ணா? அவரும் சக மனிதர்தானே. மேலும், நாம் நேசிக்கும் ஒருவரை, அவருடைய இயல்புகளை, உள்ளது உள்ளவாறே ஏற்றுக்கொள்வதுதான் அந்த உறவுக்கு நாம் கொடுக்கும் மதிப்பாக இருக்க முடியும்? ஆக, உறவுக்குள், தனிப்பட்ட சுதந்திரம் என்பது, தேவையான ஒன்று.

நான் ஒருவரிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் (Impact), அல்லது என்மேலான அவருடைய பாசம், என்னுடைய தனித்தன்மைக்கான அடையாளமாகக் (Symbol of my individuality) கருதப்பட வேண்டுமே தவிர, இன்னொருவர் மீது அவர் கொண்ட ஈடுபாடு, எந்த விதத்திலும் என் மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பாதிக்காது என்ற உண்மை விளங்கினால் கொண்டிருக்கும் உறவுக்கு நல்லது.

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் இடமளிக்காமல், நேசிப்பவர்கள் எங்கு சென்றாலும், எத்தனை காலம் பார்க்காதிருந்தாலும், பேசாதிருந்தாலும், நமக்கான அந்த நேசத்தின் ஆழம், குறையவே குறையாது என்ற நம்பிக்கை இருந்துவிட்டால், உறவின் அழகு என்றைக்கும் குன்றாதிருக்கும்.

உறவுக்குள் பிரச்சினைகளைத் தவிர்க்க விழைந்தால், முதலில் எதிர்பார்த்தலைக் குறைக்க வேண்டும். குறைக்க முயற்சித்தலில் ஆரம்பித்து, எதிர்பார்த்தல் என்பதே இல்லாத நிலைதனை அடைய வேண்டும். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. எதிர்பார்ப்பு ஒரு கிருமி. எதிர்பார்த்தது நடக்கும்போது, சந்தோஷப்படும் மனது, அதுவே ஏமாற்றமாகும்போது விரக்தியடைகிறது (Depression). விரக்தியின் அடர்த்தி அதிகரித்து, மன அழுத்தம், கோபம் என்று பல வடிவங்களில் வெடித்து, வெளிப்படுகிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமைக்கு என்னதான் நியாயமான காரணமாக இருந்தாலும், அந்தக் கற்பிதத்தைக் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இருப்பதில்லை மனது.

எதிர்பார்த்ததையெல்லாம் ஈடு செய்யும் வரைதான் நான் நேசிப்பேன், இல்லையென்றால் யோசிப்பேன் என்ற கூற்றில், சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஒன்றை எதிர்பார்த்து, அதை எனக்காக, நான் விரும்பும் ஒருவர் செய்தால், சந்தோஷம்தான். ஆனால் இந்தச் சந்தோஷம் தற்காலிகமானதுதான். அடுத்த முறை என் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்போது, இந்தத் தற்காலிகச் சந்தோஷம் காற்றில் கரைந்துவிடுகிறது. நான் எதிர்பார்க்காமலேயே எனக்கு என்ன வேண்டும், என்ன செய்தால் நான் சந்தோஷமாக இருபேன் என்று உணர்ந்துகொண்டு, அதைச் செய்யும் உறவு தரும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுவே நிரந்தரமானது.

அப்படியான உறவுகள் கிடைக்க முதலில் எதிர்பார்த்தல் என்பது இல்லாது இருக்க வேண்டும். நான் ஒன்றை எதிர்பார்க்கிறேன் எனும்போது, எதிர்பார்ப்பதை நிறைவேற்றுவதுடனேயே சந்தோஷப்படுத்தும் கடமை முடிந்து போகிறது. ஆனால், நான் எதுவுமே எதிர்பார்ப்பதே இல்லை எனும்போது, சந்தோஷப்படுத்துபவருக்கு இருக்கும் பொறுப்பு கூடுகிறது. என்ன செய்தால் நான் சந்தோஷமாக இருப்பேனென்று, கணக்கிட்டுச் சந்தோஷப்படுத்த எதிர்தரப்பு முயலுகையில், உறவு உறவாகிறது. முறிவு மறைவாகிறது.

உலகத்தில் ஒவ்வொருவரும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இன்னொருவரைச் சார்ந்தே இயங்குகிறோம். தனியொருவனாக எவரும், வாழ்ந்து விட முடியாது. சமயத்தில், ஏன்தான் இந்த வாழ்கை இப்படிப் படுத்துகிறதோ என்று மனது உழலும்போது, தோளும், மடியும், தலைகோதும் விரலும் கிடைக்காதா என்று ஏங்கும்போது, நாமாக ஏற்படுத்திக்கொண்ட உறவுகள்தான் நேசக்கரம் நீட்டி, சேர்த்தணைத்துக் கொள்கின்றன. உறவுகள் முக்கியமானவை. இன்றியமையாதவை.
சண்டைகளும், சங்கடங்களும், கால ஓட்டத்தில் கற்பூரமாய்க் காணாமற்போகக்கூடியவை. உறவும், உறவால் விளைந்த நினைவுகளுமே கல்லறை வரை வழித்துணைக்கு வருபவை.

சக மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை மதிப்போம். எதையும் எதிர்பாராமல் உறவுகளை நேசிக்கும் மனம் பெறுவோம். உறவால் உலகை முழுமையாக்குவோம்..!

Read more...

Thursday, November 20, 2008

ரத்த ராத்திரிகள்

அடைந்து கிடந்த
வாகனச்சாலை
யாருமின்றி.

உருகியோடும்
மஞ்சள் வெள்ளம்
நியான்களுடையதாய்.

தவழ்ந்து கொண்டிருக்கும்
ராத்திரி வாடையின்
தீண்டல் தேகமெங்கும்.

கவிச்சூழல்
ரத்தத்தில் ரணமாகிறது
சீறும் வேகத்தால்.

என்ஜின் உறுமல்களால் குதறுறுகின்றன
நிசப்தம் சொல்லும்
மௌனக்கதைகள்.

அர்த்த ராத்திரிகளில்,
தொலைகின்றன
வாழ்க்கையின் அர்த்தங்கள்.

குருதிக் குமிழிகள்
கொப்பளிக்கின்றன
அம்மாக்களின், அக்காக்களின் மேல்.

தாரோடு ஒன்றிய,
தலைகீழ்த் தவளைகள்
சொல்லும் நியாயம் விளங்கவில்லை
மனிதனுக்கு இன்னும்.

மித வேகம்;
மிக நன்று.

Read more...

உறங்கி விழித்த வார்த்தைகள்

கண்ணில் தளும்பும்
தூக்கம் கன்னம்
தாண்டி
வழிகிறது.

இருட்டுப் பிரதேசம் ஒன்றில்
தொலைக்கப் பட்டவனாய்
முழிக்கிறேன்.

இமைக்கும் தோல்
பூர்த்திப்பது
அரை செண்டிமீட்டர்தான்
என்றபோதும்
அத்தொலைவு
கடக்கப்படாமலிருப்பதன் வலி,
முழு முகத்தையும்
சுருங்கி விரிந்து
சோம்பல் முறிக்கச் செய்து,
இறுக்கி மூடித்
திறக்கும் விழியை
செங்குளத்துக் கருமீனாய்க்
காட்சிப் படுத்துகிறது.

அறை முழுதும்
வெள்ளை
வெளிச்சப் பிரவாகம்.
கூசும் கண்ணின்
மூடத் துடிக்கும்
கடையடைப்பிற்கு
எதிர்க் கட்சிபோல்
பேராதரவளிக்கிறது.

தேய்த்தெடுத்த கண்ணினின்று
சிந்துகிறது செந்தூரம்
இரு கையிலும்.
உடன் தூக்கமும்.

மடியிருக்கும் சதுரக்
கணிப்பொறி சொல்லுகிறது.
எழுதுகிறேன் பேர்வழியென்று
நான் நள்ளிரவில்
தூங்காது,
தூங்கி வழிந்த
கதைதன்னை.

Read more...

கடற்காதலி

காதலியின் பால்வகையை
விவாதித்ததுண்டா எவனும்?
நானொருவன் தானென்று
மார்தட்டுவேனிங்கு.

மறுக்கப்படும் அனுமதிகளால்,
கையால் முடியாத போதும்
கண்ணாலாவது கட்டியணைப்பானாம்
காதலன், காதலியை.
எனக்கான அனுமதிக் கதவுகள்
திறந்தே இருந்தபோதும்,
கண்ணால் கூட முழுதாய்க்
கட்டியணைக்க முடியாதவள்.

காத்திருக்கும் கடற்
காதலனுக்குள் கலந்து காணாமற்போக,
ஓடி வருகிறார்களாம்
ஆறாய், நதியாய்க்
காதலிகள்.
அதனால் என் கடலழகி
பெண்பாலுக்குச் சேராதவளாம்.

முன்னிற்பதெவரானாலும்
ஓடி வந்து கால்தழுவிக்
கண் சிமிட்டுவாள்தான்.
கண்கொண்டு நோக்க இயலாவண்ணம்
அக்கரையிலல்லவா இருக்கிறது
அவள் விழி.

அலைக்கரங்கொண்டு
தழுவுங்கால் ஒவ்வொன்றும்
நானாயிருக்காதா என்ற அவளின்
ஏக்க ஈரம் நுரைத்துப்பொங்கி,
அசராது அடுத்த காலைக்
கட்டியணைத்துக் கண்டறிய
ஆயிரங்கரங்கொண்டு ஆயத்தமாகிறாள்.

நாடோடி வரும்
ஆறும், நதியும்,
அவை தொட்ட கால்களுள்,
அவற்றைத் தொட்ட கைகளுள்,
எங்கேனும், எதுவேனும்
என் சேதி சொல்லாதாவென்று
கலக்கையில் கணக்கு கேட்பவள்
என் கடற்காதலி.

கடற்கரை நேரங்களிலெல்லாம்
காலைத் தொட வரும்
கடல் நீட்சிகளுக்குச் சிக்காது,
ஓடித் தள்ளியாடியிருப்பேன்.
ஏங்கியடங்காக் காதலின்
கால தாமதங்களை சற்று நீட்டி,
கன்னாமூச்சியேனும் காட்டாவிட்டால்
என்ன காதலன் நான்..?

அவள் மடியில் கண்ணயர்ந்து,
மனமில்லாது பின்னெழுந்து,
விடிதல் வேளைகளை
உலகுணர்த்தும் சூரியனாய்
நானாக ஆசை.

கண்ணெதிரே கன்னியவள்.
கலக்க முடியாச் சூடு,
வெக்கையாய், வெம்மையாய்
கொழுந்து விடும் மதியத்தில்.

ஆற்றாமையின் ஆழங்கண்டு,
என் சூட்டில், அவள் வெந்து
ஆவித்தூது அனுப்புவாள்.
மாலை மஞ்சள்க் காலந்தாண்டிக்
கூடலாமென்று.

கவலைக் கதிர்களை உள்ளிழுத்து,
கொண்டவளைத் தேடிக்
கீழிறங்கி,
மனிதக் காதலர்கள்
இருட்டில் சேர வழிவிட்டு,
என்னழகியின்
இடம் சேர்ந்து கண்ணயர்வேன்.

எங்கள் புணர்வுகளின்
மீட்சிகள்..
மழையாய்ப் பிரசவித்து
ஆறாய், நதியாய்.

Read more...

Friday, November 14, 2008

ஒருத்தி




ஒருத்தியுடனான
முடிவற்று நீளும்
வார்த்தைப் புணர்ச்சிகள்
என் மஞ்சள் இரவுகளின் மேல்
சந்தனத்தை அப்பிவிட்டன.

ஒருத்தியுடனான
கனவில் நிகழும்
துவம்சத் துளிர்ப்புகள்
பன்னீர் அகழியில்
முழுகச் செய்தன.

ஒருத்தியுடனான
அரை நிமிஷ ஸ்பரிசிப்புகள்
தாழம்பூச் சாற்றை
புனல் வைத்து
மூக்கில் ஊற்றின.

ஒருத்தியுடனாகாத
கலகக் கலவிகளோ
முத்துவெள்ளைத் திரவமான
விஷப்பெருக்கில்
உடல் புரண்டு ஊறச் செய்து
அடி வருடி காயச் செய்தன.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று குழுமத்திற்கு நன்றி.

Read more...

இசையோடு

மீட்டப்படும்
வயலின் நரம்புகள்
காற்றில் நடந்து
செவிவழி சேர்கையில்,
நினைவு கடந்த
வெற்றுப் பெருவெளியில் அலைகிறேன்.

ஒத்திசையும்
மிருதங்க நாதம்
பேரண்டத்தின்
இருண்ட மூலையொன்றில்
பருப்பொருளாக்கி விடுகிறது.

குரல்வளைக்கும்
இத்துணை வசீகரத்தை
இசை பூசப்பட்ட
காற்று அளிப்பதன்
ஆச்சர்யக் கோடுகளுக்குள்
பிணையுண்டு சாகிறேன்.

கிறங்கடிக்கும்
ஏகாந்த வாசம்
காதுக் கணவாய் புகுந்து,
பின்னிக் கிடக்கும்
மூளை நரம்புகளைச்
சிக்கெடுத்து சிலிர்ப்புற வைக்கிறது.

இசை.
சங்கீதம்.
நாதம்.
மற்றும்பல சந்தப் படிமங்கள்.
நீண்டு கிடக்கும்
யாருமற்ற ஸ்வர சாயங்காலங்கள்.
இவற்றுக்குள் காணாமற்போய்,
என்னை நானே தேடியலைகிறேன்.
மீட்டெடுக்க மனமின்றி,
வெறுங்கையுடன்
வீடு திரும்புகிறேன்.

Read more...

தலைவலி

காணா
நரகங்கள் நிஜமாகும்
பொழுதுகள்.

மூளையின் வழமையின்
மேலூறும்
ஈரத்தின் காரணம்
காய்ச்சப்பட்ட
கந்தக அமிலம்.
கருகி எழும்பும் நெடியை
முகர்ந்து பார்க்கிறேன்
நான்.

தலையை வலிக்கையில்
உணர்கிறேன் இப்படி.

Read more...

Wednesday, November 12, 2008

பயணிக்கும் காலை

அழகானதோர் காலை.
இறுக்கி மூடியிருக்கும் என் வலது கை
நாம்பியிருக்கும் உருளை
பின்னோக்கித் திருப்பப்படுகையில்,
என் மூக்கால் கிழிபட்டுத் தெறிக்கும்
காற்றுத் திவலைகளின்
தூரம் அதிகரிக்கிறது.

குத்தும் குளிர்
எலும்பு மஜ்ஜையைக் குழைக்கிறது.
உடலைத் தழுவும்
வாடைக்கும், எனக்குமான
அழுத்தத்தை அளந்து காட்டுகிறது
என் மோட்டார் சைக்கிளின் ஸ்பீடோமீட்டர்.

Read more...

முரண்

கார்த்திகைக் காலைகள்.
பனித் தூறலும்,
நுரையீரலில் படிந்தேறி விட்ட
கார்பன் குப்பைகள்,
பேசுகையில் புகையாய்
வெளியேறும் சுத்திகரிப்பும்,
கோயிலுக்குச் செல்லும்
கருப்பாடை ஐய்யப்ப சாமிகளும்,
எதுவும் கவனத்திலில்லை.
கூட்டமாய்ப் புணர்ந்து கொண்டிருக்கும்
நாய்கள் முன்பு.

Read more...

ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ்

பெங்களூர் நகரம். இனிக்கும் சாம்பாரும், பை-2 காபியும், குங்குமப் பொட்டு வைத்த, வெளுத்த மனிதர்களும் நிறைந்த ஊர். அப்போது இரண்டாண்டுகளாகி விட்டிருந்தது. அந்த ஊரில் அவன் ப்ரம்மச்சர்யத்தைக் (பேச்சலர்?!) கடைப்பிடிக்க ஆரம்பித்து. மடிவாலாவுக்குப் பின்புறம் இருக்கும் S G பாள்யா அலியாஸ் சடுகுண்டே பாள்யாவில் வாசம். அங்கிருந்து, பன்னர்கட்டா ரோட்டுக்குச் செல்லும் ஒரு குறுகலான, பாதையின், மிகச் சிக்கலான ஒரு முனையில் இருக்கும் ஹோட்டல்தான் நமது 'ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ்'.

பொதுவாகவே மலையாளக் கிறிஸ்துவர்கள் அதிகமான அந்தப் பகுதியில், கேரளா மெஸ்களே அதிகம். சற்றேனும் தமிழ் கலந்த சாப்பாடு வேண்டுமானால், அன்னபூர்ணேஸ்வரியைத் தான் நம்ப வேண்டும். பெரிய அரிசிச் சாதமும், கவுச்சி வாசமும் கமழும் கேரளா மெஸ்களுக்கு, சைவனான இவன் ஆரம்பத்தில் தெரியாமல் சென்றுவிட்டு பட்டபாடு சொல்லி மாளாது.

அந்தப் பகுதியில், தமிழர்களும் சற்று அதிகம்தான். பெரும்பாலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து பிழைப்புக்காக அங்கு வந்து, கட்டிட வேலையும், இதரபல விளிம்பு நிலைத் தொழில்களும் செய்வோர். அந்த பகுதியில் வசிக்கும் ஏனையோர்கள், இவனைப் போன்ற மென்பொருளாளர்களும், டை கட்டியபடி கல்லூரியில் படிக்கும், வட நாட்டுப் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும், மற்றும் சில சீனா ஜப்பான் தோற்றமுடையவர்களும். இவ்வகையோர் அனைவரும் உணவுக்காய், ஒன்று கூடி, கலந்து கட்டி அடிக்கும் சமத்துவக்கூடம் தான் நமது அன்னபூர்ணேஸ்வரி ரெஃப்ரெஸ்மென்ட்ஸ். பொதுவாக, மலையாளிகள் இங்கே வருவதில்லை. ஏனென்றால், இங்கே சாப்பிடும்போது விக்கினால் தண்ணீர் தான் கிடைக்கும். டீ கிடைக்காதே. அதனாலோ என்னவோ.

அன்னபூர்ணேஸ்வரியை நடத்துபவர் மதுரைக்காரர். 18 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் வந்து செட்டில் ஆனவர். பெயர் கந்தன். சற்று குள்ளமான, பருத்த மனிதர். அவருடைய சகோதரர்களும், அவருக்கு ஹோட்டல் தொழிலில் கைவேலைகளுக்கு உதவுகிறார்கள். சகோதரர்களுக்கு பழனிசாமி, குமரன், செந்தில் என்று எல்லாமே முருகன் பெயர்கள். அப்பா முருக பக்தர் போலும். அவரையும் அவ்வப்பொழுது அன்னபூர்ணேஸ்வரியில் காணலாம். கல்லாவில் அப்பாவை, இருத்தி, அவர் கொஞ்சமே கேட்கும் காதுடன், அமௌண்டைக் கேட்டு, சில்லறை கொடுப்பதைக் காண்பதில் கந்தண்ணனுக்கு ஒரு சந்தோஷம். அப்பா பெயரும் முருகன் பெயராக இருக்குமா என்றொரு ஐயப்பாடு இவனுக்கு.

சில சமயங்களில், கல்லாவில் கொடுத்த காசிற்கு மீதி கொடுக்கையில், சாஸ்தியா இருந்தா குடுத்துருங்க.. கம்மியா இருந்தா கேக்காதீக என்பார் கந்தண்ணன்.

பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும் எனும்படியெல்லாம் ஒன்றும் உணவிருக்காது அன்னபூர்ணேஸ்வரியில். காலையும், இரவும், இட்லி, பரோட்டா, தோசை வகையறாக்கள். மதியம் சாப்பாடு, சாம்பார், காரக்குழம்பு தொட்டு பொரியல், அப்பளம், வடை எல்லாம். மதிய உணவைப் பொறுத்த வரை அன்னபூர்ணேஸ்வரியை தாராளமாய் நம்பலாம். ஆனால், காலையும், இரவும் எப்போது வேகாத பரோட்டா கிடைக்கும், எப்போது புளித்த இட்லி கிடைக்கும் என்பதெல்லாம் அவரவர் புண்ணியம். இரவில், அன்னா சாம்பார் உண்பவர்களுக்கெல்லாம் தெரிந்த / தெரிய வேண்டிய உண்மை, மாலைக்கு மேல், சாம்பாரில், ரசத்தையும் கலந்து விடுவர் என்பது.

சக்திவேல், கோடீஸ்வரன், ராமராஜன், செல்வண்ணன் போன்றோர்தான் அன்னபூர்ணேஸ்வரியின் வழங்குநர்கள். அதாவது சப்ளையர்கள். ஓராண்டுக்கும் மேலாக இவன் அன்னபூர்ணேஸ்வரியின் வாடிக்கையாளன் என்பதால் அவர்கள் அனைவருக்குமே இவனை நன்றாகத் தெரியும். மற்றவர்களை விட, இவன் கேட்டது சீக்கிரம் கிடைக்கும். இவனுடன் உணவருந்த வரும் இவன் மாமாவுக்கு, இட்லியுடன் காரச்சட்னி என்பது அமிர்தத்துடன், அவிர்பாகம் போன்றது. சக்திவேல், மாமாவுக்காக காரச்சட்னியைத் தனியாக எடுத்து வைத்திருப்பான். அந்தக் காரச்சட்னியை எப்படித்தான் மாமாவுக்குப் பிடிக்கிறதோ என்று இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

சக்திவேலும், கோடீஸ்வரனும், ஒன்று விட்ட சகோதரர்கள். தர்மபுரிக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன தொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். சக்திவேல் 10 ஆவதும், கோடீஸ்வரன் 6 ஆவதும் படித்து, 'முடித்து' விட்டிருந்தார்கள். மேலே படிக்காமல், வேலை பார்ப்பதைப் பற்றி ஒருநாள் மாமா கேட்டபோது, சக்திவேல் அவன் வேலை பார்ப்பதால்தான் அவன் தம்பியைப் படிக்க வைக்க முடிகிறது என்றும், தான் தம்பியாகப் பிறக்காத வருத்தத்தையும் சொன்னான். வந்த இடத்தில், வாயைக் கட்டிக்கொண்டிருக்க முடியாதா என்று, இவன் மாமாவைப் பின்னால் கத்திய போதும், சக்திவேலின் வார்த்தைகள், உள்ளுக்குள் உறுத்திக் கொண்டுதான் இருந்தன. மற்றொரு நாள், அவன் பல்லில் இருந்த கறையைப் பற்றிக் கேட்டபோது, ஊரில் குடித்த தண்ணீரால் பல் கறைபட்டு விட்டதாகவும், தர்மபுரிப் பக்கம் இது மிகச் சாதாரணம் என்றும் கூறினான் சக்திவேல்.

என்னதான் வறுமையின் பிடியில், வளர்ந்திருந்தாலும், எந்த வேலையைச் செய்யும்போதும், சந்தோஷத்துடன் இருப்பான் சக்திவேல். அதிலும் இவனைக் கண்டால், வள வளவென்று எதையாவது பேசி, கந்தண்ணனிடம் கெட்ட வார்த்தை வாங்காவிட்டால், அடுத்த நாள் விடியாது சக்திவேலுக்கு. என்னுடைய சந்தோஷத்தின் சாவி அடுத்தவர்கள் கையில் இல்லை என்ற தத்துவம் தெரிந்தவன் போல, அவர் திட்டுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

ஒருநாள், மதியம் 2 மணியிருக்கும். இரைச்சல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்கும் சூழலில் பர பரத்துக் கொண்டிருந்தது அன்னபூர்ணேஸ்வரி. பாத்திரம் கழுவும் பாத்திரமான மல்லிகா அக்கா, எங்கேயோ, போய் விட்டு, அப்போதுதான் உள்ளே வந்துகொண்டிருந்தது. இன்னா மத்யானத்த்லயே தண்ணி அட்ச்சுனு வண்ட்டியா என்று மல்லிகா அக்காவைக் கேட்டான் சக்திவேல். அதுவும் கந்தண்ணனின் அப்பாவுக்கே கேட்கும் ஸ்தாயியில். அய்யே.. உனுக்கும் வேண்ணா வாயேன்.. ஊத்துறேன்.. என்று இவன் காதும், கேட்காததாகி விடும் டெசிபெலில் கூறி விட்டு மல்லிகா அக்கா உள்ளே சென்றுவிட்டது.

மற்றொரு நாள் இரவில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, இவன் தோழி, அலைபேசிக்கு அழைத்து, இவனைப் பார்க்க வந்திருப்பதாகச் சொல்ல, இவன் வேக, வேகமாய் சாப்பிட, அலைபேசியையும், அலைபாயும் இட்லியையும் கணக்கிட்டு, அண்ணா.. கூப்ட்டது கேர்ள் பிரெண்டா.. லவ் பிரெண்டா-ணா.. என்று ஒரு கேள்வியைக் கேட்டான் சக்திவேல். சென்னை-28 படத்தில், சண்முகசுந்தரம் பௌலிங்கா, பீல்டிங்கா.. என்று கேட்பாரே. அப்படி ஒரு கேள்வி. பீறிட்டு வந்த சிரிப்பைத் தவிர வேறு ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டான் இவன்.

சக்திவேலும், கோடீஸ்வரனும் தவிர வேறுசில சப்ளையிங் சிறார்களும் இருந்தனர். ஆனால் நிர்வாகம் எதிர்பார்த்த லாங் டெர்ம் கமிட்மென்ட் இல்லாத காரணத்தால், அதிகபட்சம் ஒரு மாதம்தான். சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவர். இப்படி நிகழும்போதெல்லாம், அதே வயதிலோ, இல்லை இன்னும் சிறியவர்களையோ, அடுத்த ஓரிரு நாட்களில் கொண்டுவந்து இறக்கிவிடுவார் கந்தண்ணன். புதிதாக வருபவர்களிடமும், பெயர், ஊர் என்று கேட்டுத் தெரிந்து கொள்வது இவன் வழக்கம். பெரும்பாலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளாகத்தான் இருக்கும். இதற்கு இந்தப் பகுதி மக்களில் அதிகப்பேருக்கு கன்னடம் தெரிந்திருக்கிறது என்ற காரணம் மேலோட்டமாய்த் தெரிந்தாலும், இப்பகுதி மக்கள் வறுமைக்குத் தப்புவதற்காக குழந்தைகளை, பெங்களூருக்கு அடகு வைக்கத் தயங்குவதேயில்லை என்பதுதான், கந்தண்ணன் போன்றோருக்கு வசதியாய்ப் போய்விட்டது.

பையனுக்கு போடும் சாப்பாட்டு செலவும் மிச்சம். மாதம் 3000 ரூபாய் பணமும் கிடைக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பணத்தை சிறார்களிடம் கந்தண்ணன் தருவதே இல்லை. வாங்கிவிட்டு எங்கேனும் ஓடிவிட்டால் வீட்டுக்கும் இல்லாமல், கடைக்கும் இல்லாமல் ஒரு ரிஸோர்ஸ் வீணாகிவிடுமே என்ற நல்லெண்ணம்தான். முதல் வாரத்தில், அப்பா வந்து சம்பளத்தை பத்திரமாக வாங்கிக்கொள்வாராம். தகவல் உபயம் சக்திவேல்தான். 'டீ காசு' என்று தினமும் கிடைக்கும் 5, 10 ரூபாய்கள் தான் இவர்களுக்கு வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் சந்தோஷத்தின் ஒரே அடையாளம்.

கடிவாளமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கை சீரழிவதற்கு மாய மந்திரமா போட வேண்டும். கோடீஸ்வரன் ஒரே சமயத்தில் 2 பீடி குடிக்றாண்ணா என்று சக்திவேல் இவனிடம் கூறியபோது, நம்பவே முடியவில்லை. இல்லண்ணா என்று கூறிவிட்டு கோடீஸ்வரன் வெட்கத்துடன் உள்ளே ஓடிவிட்டான். ஒரு தலைமுறை சீரழிவதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் பாரம் மனதை அழுத்தியது இவனுக்கு.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும். அப்பா வந்து, கந்தண்ணனிடம் 3500 ரூபாய் வாங்கிக்கொண்டு, தீபாவளிக்கு ஊருக்குக் கூட்டிச்செல்வார் என்று சக்திவேல் கூறினான். அன்று தொடங்கி ஒரே தீபாவளிப் பேச்சுதான். தங்கச்சி ராணிக்குப் பட்டாசு வாங்கித்தருவேன் என்று தொடங்கி, அவனையறியாமல் அவன் மனதில் பூட்டி வைத்திருந்த ஆசைகளையெல்லாம் இவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சக்திவேல். இவனைவிட சிறியவனான கோடீஸ்வரன் பீடி குடிக்கும்போது, சக்திவேலுக்கு மட்டும் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதிருந்த காரணம், அவனுக்குள் மறைந்திருந்த கடமையுணர்வும், பாசமுந்தானென்று புரிந்தது இவனுக்கு.

தீபாவளிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை இரவு. இவன் அன்று தான் ஊருக்குக் கிளம்புகிறான் என்று அனைவருக்கும் தெரியும். நீ இன்னிக்கு போணா.. ஞாயத்துக்கெலம ராத்ரி நம்மளும் போறோம்ல என்றபடியே, இவன் கேட்டிருந்த ஆனியனைக் கொண்டு தந்தான் சக்திவேல். சாம்பார் ஊற்றுகையில், என்னணா அந்தக்கா எப்டி க்குது.. என்று இவனைக் கலாய்த்துக் கொண்டே திரும்புகையில், அவ்வழியே எதேச்சையாக வந்த கந்தண்ணனின் மச்சான் பூபதியின் மேல் கையிலிருந்த சாம்பார் பக்கெட்டை தவற விட்டான்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சடுதியில் வந்த கந்தண்ணன், வந்த வேகத்தில், நிற்காமல், 'பொளேர்' என்று அறைந்து விட்டார் சக்திவேலை. எதிர்பாராமல் நடந்தேறிவிட்ட நிகழ்வுகளை இவன் புரிந்துகொள்வதற்குள், தன் வயதை மறந்து, அவமானத்தால் நெக்குருகி, சத்தமாக அழுதபடி அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தான் சக்திவேல். அதற்கு மேல், அந்த ஆனியனை சாப்பிடப் பிடிக்காமல், தங்கச்சி ராணி தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பாளா, லேட்டாக வந்தால் இனிமேல் மாமாவுக்கு காரச்சட்னி கிடைக்குமா, அடுத்து வரும் பையன் எந்த ஊரைச் சேர்ந்தவனாக இருப்பான் என்றெல்லாம், புதிதாய் ஊற்றிய தோசையில் முளைக்கும் ஓட்டைகளைப் போல, முளைத்துக் கொண்டே இருக்கும் கேள்விகளுடன், கை கழுவி விட்டு, பஸ்சைப் பிடிக்க நடக்கத் தொடங்கினான் இவன்.

உயிரோசை 02/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

தீராத விளையாட்டுப் பிள்ளை.

அ.. ஆ.. - இது நான்..அ.. ஆ.. - இது குழந்தைகள்..

இ.. ஈ.. - இது நான்..இ.. ஈ.. - இது குழந்தைகள்..

என் தூக்கத்தில் எப்பொழுதும் என்னையறியாமல் ஒலிக்கும் சத்தம் மேற்கூறிய்தாகத்தானிருக்கும். ஆம்.. அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியன் நான். நாட்டின் ஒரு கோடியில், கோடிக்கணக்கான எதிர்கால இளைஞர்களில், சில நூறுகளை உருவாக்கும் பணிக்கு பிள்ளையார் சுழியிடும் பொறுப்பு என்னுடையது.

குழந்தைகளுடன் இருப்பது எப்பொழுதும் எனக்கு பிடிக்கும். பணியும் அதற்கேற்றவாறு அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. சில சமயங்கள் அவர்களின் துடுக்குத்தனமும், நல்ல பேர் வாங்குவதில் இருக்கும் அதீத ஆர்வமும் அழகு. அந்த ஆர்வத்தால், சேர்ந்தே தப்பு செய்திருந்தாலும், "சார் சார்.. இன்னிக்கு குமரேசன், வீட்ல இருந்து காசு திருடி, அண்ணாச்சி கடைல வாங்கி தின்னான் சார்.." என்பதில் தொடங்கி, மகாலட்சுமி வகுப்புக்கு குளிக்காமல் வந்த வரை எல்லாம் வந்து விடும்.

துவக்கப்பள்ளிதான் என்பதால் நானே எல்லா வகுப்புகளையும் எடுக்க வேண்டும். கல்லூரிகளில் இது போல் ஒரே ஆசிரியர் எல்லா வகுப்புகளையும் எடுக்கும் முறை அமலில் இருந்தால், மாணவர்களுக்கு எவ்வளவு கடுப்பு ஏற்படும் என்று அவ்வப்பொழுது யோசிப்பேன். அதிலும் ஆசிரியர் ஆணாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

ஒரு வெயில் காலக் காலை நேரமது. சில நிமிடத் தாமதத்தில், முத்துக்கௌண்டன்புதுர் செல்லும் மினி பஸ்சை விட்டுவிட்டேன். லிஃப்ட் கேட்டு, காய்ந்து போய், ஒரு வழியாய் பள்ளி சென்று சேர்ந்து, அதுவும் சரியாக ப்ரேயர் முடிந்த நேரத்தில் சென்று சேர்ந்து, ஹெச்செமிடம் வாங்கி கட்டிக்கொண்டேன்.

காலை வெயிலோடு கூடி, என் கடுப்பும் உச்சத்தில் இருந்தது. இருந்தாலும் பொறுமையைக் கடைப்பிடிக்க உறுதி மேற்கொண்டு, அன்றைக்காக schedule செய்யப்பட்டிருந்த, 4B-க்கான சமூகவியல் தேர்வை சிரமேற்கொண்டேன்.

மதிய உணவுக்கு இன்னும் சற்று நேரமே இருக்கும். தேர்வும் முடிந்தாகிற்று. விடைத்தாட்களைத் திருத்திக் கொடுத்து விட்டு, காலையிலிருந்து கடைப்பிடித்த பொறுமையை எண்ணி சற்றே கர்வம் கொண்டு, நாற்காலியில் சாய்ந்தேன்.

ஒரு சில நிமிடங்கள் சென்றிருக்கும். கோபாலன் கூப்பிட்டான்.

"சார்.. ஒரு கேள்விக்கு பதில் கரெக்ட். நீங்க தப்புன்னு போட்டுட்டீங்க சார்.. "

மூடியிருந்த கண்களை விழித்து, அவனைப் பார்த்தேன். வகுப்பறையெங்கும் வியாபித்திருந்த அமைதி, எல்லார் கவனத்தையும், என் மேல் முன்னிறுத்தியிருந்தது.

"எந்த கேள்வி டா..?" -சற்றே மேலேற ஆரம்பித்து விட்டது, அடக்கி வைத்திருந்த என் கோபம் என்ற உண்மை அப்போது எனக்கு விளங்கியிருக்கவில்லை.

"10 -ஆவது கேள்வி சார்.."

"உலகிலேயே மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?". கேள்வி இதுதான்.

நன்றாக செதுக்கப்பட்டிருந்த ரூல் பென்சிலில் தெளிவாய் எழுதியிருந்தான் கோபாலன்.

10. பதில்: சை -என்று.

நான் அவன் பேப்பரைப் பார்ப்பதை ஆர்வமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் கோபாலன். என் இடக்கைக்கு வாகாய் இருந்த அவன் காதைப் பிடித்து நன்றாய்த் திருகியவாறே கேட்டேன்.

"ஏண்டா.. அதென்ன டா.. சை..? பதில முழுசா எழுத முடியாதோ தொரைக்கு..?"

"சார்.. கரெக்ட்-ஆ தான சார் எழுதிருக்கேன்..?"

அரை வட்டத்திற்கு திருகியிருந்த அவன் காதை, முக்கால் வட்டத்திற்கே கொண்டு சென்று விட்டிருந்தேன் அப்போது நான்.

"எதுத்து வேற பேசறியா டா நீ..?"

"சார்.. சார்.. இல்ல சார்.. 'அ'-னு போட்டா, அ-னா னும், 'க'-னு போட்டா, க-னா னும், சொல்லும்போது, 'சை'-னு போட்டா, சைனா-னு சொல்லக்கூடாதா சார்..?"

எப்போது கன்னம் வழியே, உருண்டோடக்கூடும், என்று தெரியாத அளவுக்கு, கண்களின் விளிம்பில், எட்டிப்பார்த்திருந்த கண்ணீரோடு, பாவமாய்க் கேட்டான் கோபாலன்.

சாதாரணமாய்த் திட்டியிருந்தாலும் பரவாயில்லை. புதியதாய் பள்ளியில் சேர்ந்திருந்த வளர்மதி டீச்சர் முன்னாலேயே ஹெச்செம் திட்டியது தான், கோபாலன் மேல் விடிந்து விட்டதோ என்ற என் சந்தேகத்தை யாரிடம் கேட்பது என்ற கேள்வியோடு, மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டுவிட்டேன்.

Read more...

மணிக்குட்டி

வந்த கண்ணீரைத்
துடைத்துக் கொண்டிருக்கும் மகள்களையும்,
வராத கண்ணீருக்குப் பதிலாய்
மூக்கைச் சிந்தித்
துடைத்துக் கொண்டிருக்கும் மருமகள்களையும்,
காக்கைக்குச் சோறு வைத்துக்
கா காவென்று,
கரைந்து கொண்டிருக்கும் மகன்களையும்,
தினத்தந்தியில் கற்பழிப்புச் செய்தி
வாசித்துக் கொண்டிருக்கும் மருமகன்களையும் விட,
ஓரமாய்ச் சுருண்டு படுத்திருக்கும்
மணிக்குட்டி என்ற நாய்
நினைக்கிறதோ நாச்சாத்தா பாட்டியை,
அவளின் வருசாந்தரத்தன்று.

Read more...

Tuesday, November 11, 2008

நினைவில்..

உயிர் நண்பனுக்குப்
பிறந்த நாள்.
கண் திறந்து, கம்பளிக்குள்ளேயே இருந்து,
தொலைபேசியில்
வாழ்த்திவிட்டுக் கண்ணயர முயலுகையில்,
நினைவிற்கு வந்தது.
கல்லூரிக் காலத்தில் நான்,
ஐ லவ் யு சொன்ன பெண்ணுக்கும்
இன்றே
பிறந்த நாள் என்று.

உணர்ந்திருந்த உண்மைகள்,
வயதின் முதிர்ச்சிகள்,
எல்லாம் தாண்டி,
உள்ளுக்குள் தைத்திருந்த,
நான் மறந்துபோய் விட்டிருந்த,
முள்ளை யாரோ பிடித்து ஆட்டுவதைப்
போலிருந்தது.

குறுஞ்செய்தி அனுப்பினேன்.
அந்த நாட்களை நான்
பகிர்ந்து கொண்ட தோழிக்கு.
ரிப்ளையித்தாள்.
ஊய் என்ன இது
எப்பவோ முடிஞ்சத இப்போ நெனைக்கற..
மனசு சரியில்லனா ரைட் எ கவிதை
என்று.

Read more...

"போதல்"

அந்தக் கம்பார்ட்மென்டில்,
அழைப்பவர்கள் பலர் இருந்தாலும்
என்னிடம் தான் தாவி வந்தது
அந்த கொழுக் மொழுக் குழந்தை.
வந்த இரண்டாவது நிமிடத்தில்
ஆய் போய் விட்டது என் மேல்.
ஓடும் ரயிலின் கழிப்பறைக்குச்
சென்றிருந்த அந்தக் குழந்தையின் அப்பா
வந்தவுடன்,
சரியாக இடம் மாறிப்
"போனாளா" என் மகள் என்று கேட்டவரிடம்,
அதன் அம்மா,
மகள் சரியாகத்தான் "போகிறாள்".
இப்போது "போய்" வந்தது போல்,
போன வாரம் நீங்கள்
இடம் மாறிப் "போகாததால்தான்",
உங்கள் மூத்திரப் படுக்கையை நான்
துவைக்க வேண்டியதாப் போச்சு,
என்று என் முன்னாலேயே
சொல்லியிருக்க வேண்டாம்தான்.

Read more...

Wednesday, November 5, 2008

நானும் காதலிக்கிறேன்..!

வரப்போகும் காதலிக்காய்,
என்னுள்
வந்துவிட்ட காதலதைக்
காகிதத்தில் வார்த்தெடுக்க
கரைந்துருகி வார்த்தையெடுக்கிறேன்.. !

நான்
காணக் காத்திருக்கும்
கண்களைக் கடந்து சென்ற காற்று
காயப்படுத்தியதோவென்று
கதறுமளவு, இன்னும்
காதலிக்க ஆரம்பிக்கவில்லையடி..!

ஆனால்,
நீ கடந்து சென்ற கணப்பொழுதில்
காட்டிச்சென்ற புன்சிரிப்பும்,
நடந்து வந்த பாதையிலேயே
நிகழ்ந்து முடிந்த என் மரிப்பும்,
கனவில் மாத்திரமே கண்டாலும்
இன்னும் என் கண்ணை
விட்டகலா விந்தைதான்
விளங்கவில்லையடி..!

காதல் சுகிக்கிறதுதான்..
கூடவே வலிக்கிறதடி..!
எங்கேயோ நீயிருந்து
இரவானால் போர்தொடுக்க..
பெண்ணியலின் புதிர்களனைத்தும்
புரியாமல் மனம் தவிக்க..
வலிக்கிறது..!

காத்திருப்போம்..
காதலுடன் காத்திருப்போம்..

நல் சுற்றமும், நட்பும் சூழ,
என் கொற்றவையை
உற்றவனிடம்
ஒப்படைக்கும் வரை
காத்திருப்போம்..

உச்சி முகர்ந்து,
இச்சை பகர்ந்து,
நெற்றி வழியே,
சுற்றி வந்து,
சேலைக்குள் சொன்ன சேதி
சேலைத்தலைப்புக்கும் கேட்காமல்
நாகரிகமாய்க் காதலிக்கும்
நாள் வரும் வரை காத்திருப்போம்..

இக்காலத்தவர்கள் போல்
பூங்காவில் மட்டும் காத்திருக்காமல்,
எக்காலத்துக்கும்
நீங்காமல் காத்திருப்போம்..
காதலிப்போம்..!

Read more...

Tuesday, November 4, 2008

இப்படிக்கு சாஃப்ட்வேர் இன்ஜினியர்..!

இருந்தாக வேண்டிய அவசியத்தில்
இறங்கா முகங்காட்டும் வாடகைக்கு
இறுக்கத்தோடு இருக்கக் குடியேறுவது
என் விதி..
ஆசையல்ல..!

அறுசுவை அன்னம் கேட்கவில்லை.
அன்போடு ஒரு வாய்ச்சோறுதான் கேட்டோம்..
அம்மா சமையலின்
அருமையை அறியவைத்ததை அன்றி
வேறொன்றுமில்லை..
இங்கே அருந்திச்சுவைக்கும் உணவின் ஆதாயம்..!

அடைய விழைந்த கனவுகளையெல்லாம்
பரணில் போட்டுவிட்டு
அப்பா அடைந்துவிட்ட கடனையடைக்க
தரணி புகழ ரயிலேறினேன்.

விசைப்பலகையிலாடும் விரல்கள் தொட்டு
கசையடி பெற்றேனும்
கணக்கைச் சரி பார்க்கும் மூளை வரை
ஒவ்வொரு கணமும்
எப்பொழுது தொலையுமிந்த
எட்டு மணி நேர இலக்கு
என்ற போராட்டமாய்..!

காசில்லாமல் கார்டைத் தீட்டும்
ட்ரீட்டுகளும்,
தொட்டவை தொண்ணூறுகளுக்கும்
பார்ட்டிகளும்,
செலவழிப்பதற்கு வழி செய்யும்
செய்வினைகளல்ல..
கருமமாம் கார்ப்பரேட் கல்ச்சரது
காட்டிக்கொடுத்த
கைவினைகள்..!

அகவை இருபதில்
ஆயிரங்கள் இருபது ஈட்டியதை
இசைபாடி வாழ்த்தாவிடினும்,
"நாகரீகக் கோமாளிகள்" என்று - வசமாய்
வசைபாட வந்துவிட்டனர்
எம் சகோதரர்கள்..(?!)

புரிந்து கொள்ளுங்கள்
தயைபுரிந்து..
எங்களுக்கும் இருக்கிறதென்று,
இதயமென்ற ஒன்று..!

உறவுகளைத் துறந்திருப்பினும்,
வாழ்வியலின் சிற்சில
வரைமுறைகளை மறந்திருப்பினும்,
உயிர்த்திருக்கிறோம் நாங்கள்..
பொசுக்கியெடுக்கும்
பொருளாதாரப் புகைச்சல்களினூடேயும்
எங்களை ஈன்றெடுத்து ஆளாக்கிய,
நீங்கலா உறவுகளின்
நிதிநிலையை
மேம்படுத்தத்தான்
மேற்கூறியவையனைத்தும் என்பதால்!

வெல்க பாரதம்!

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO