Thursday, December 25, 2008

நான் ரௌத்திரன்

மூக்க விறுச்சுட்டுப் பேசறாம்பாரு
என்பார் அப்பா பள்ளி நாட்களில்.

கைக்குள் சிக்கிய காற்று பிதுங்கித் தெறிக்கிறது
விரல்கள் ஒவ்வொன்றையும்
முனை முட்டி இறுக்குகையில்.

தனித்த வனத்தின் ஈரமேறித் தொங்கிப்போன
ஒற்றை வாழையின் அடியைக்
கிழித்துக் குலைக்கும் கோடாரிக் கூர்மையாய்
முறைத்து முகிழும் கண்கள்.

பொங்கித் தளும்பும் ரௌத்ரம்
அடங்குதலுக்காய் அலைந்தலைந்து
சுடு சொற்களின் சொர சொரப்பில்
முதுகு சொரிந்துகொள்கிறது.

அண்மையாகத்தான்
விறைப்பின் நீளத்தில் இற்று வரும்
வீரியம் புலனாகிறது.
ஆங்காரத்துக்கும் எனக்கும் நிகழும்
சினந்த புணர்தல்களில்.

உயிரோசை 05/01/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

துப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்

பேருந்தின் ஜன்னல்வழித் துப்பப்பட்டது
நிலத்தில் அழுந்தி நீண்டது
சிவப்புத் தாரையோடு.
சுண்ணாம்பு ஜாஸ்தி.

ஆட்டோ டிரைவர் உமிழ்ந்த
பான்பராக்குப் பிரவுன் திரவத்தில் பாதியை
காற்றென் மடியில் கொண்டு சேர்த்து
பேண்ட்டை உறிஞ்ச வைத்தது.

காறித் துப்பல்களின் வெள்ளை முட்டைகள்
அனைவருக்குமான அம்மாவை ஈரமாக்குவதாய்
நினைக்க நிர்ப்பந்திக்கிறேன்.

வீதியோரமாய் இருந்து வைத்த ஒண்ணுக்கில்
அதிகமான மஞ்சளைக் கவலைப்படுவோமாம்.
திரட்டிய கோழையை
உருட்டித் துப்பவா யோசிப்போம்?

Read more...

இரண்டு அழகிகள்

அடுத்த வீட்டு அழகியவள்.
காதலும், காமமும்
கணக்கில் வரத் தகாதவை.
அகவை ஐந்தைத் தாண்டியிருக்கமாட்டாள்.

குடும்பத்தைக் குழப்பினாலும்
நால்வருக்கும் நல்லவள்தான்.
அம்மாவை அத்தை என்பாள்.
அப்பாவைத் தாத்தா என்பாள்.
தங்கையை அக்கா என்பாள்.
என்னை மாமா என்பாள்.

ஏதோ ஒரு மாலை நாளில்
எல்லோரின் குழுமத்தில்,
அடர்ந்திருந்த அமைதி குலைத்தவள்
மாமா ஐ லவ் யூ என்றுவிட்டாள்.

சிரமமாய்ச் சிரித்து வைத்தவன்,
உள்ளுக்குள் கோணித்து நெளிந்தவன்
அப்பாவை ஏறிடவேயில்லை.

கொட்டித் தீராத சிரிப்பை
நிறுத்த முற்படாதவராய்
அள்ளியெடுத்துக் கொஞ்சினார் அவளை.

முதன்முதலாய்
தைரியம் தட்டியது.
என் அழகியையும்
ஏற்றுக் கொள்வாரென.

Read more...

கையாலாகாதவனின் காலை

இறுகிவிட்டிருந்த தேங்காயெண்ணைக்
குப்பியைப் பிதுக்குகிறேன்
டிசம்பர்க் காலைகளில்.

குளிர்ந்திருந்த முந்தின இரவில்
தீர்க்க முடியாத
மனைவியின் தாபம்
நினைவில் வந்துறுத்துகிறது
வெளிவருதலின் ரூபத்தில்.

Read more...

ஒற்றைத் துளி

சிவப்பேறிவிட்டிருந்த வார்த்தை ஊசியை
கோபச்சூட்டில் இருந்தெடுத்தவன்
ராத்திரியின் ஊடலில்
அவள் மேல் இழுத்துவிட்டதில்
தடிப்புக் கோடுகளை முந்தானையில் மறைத்தபடி
தூங்கிப் போயிருந்தாள்.

'அழகா..' என்று அழைத்தவளையும்
அடித்துச் சாய்த்திருக்கிறேன்
குரூரனாய்.

காயத்தில் என்னைக் களிம்பிட்டு
மன்னிக்க மனமுவப்பாள்.
உறங்கியபின் நான் துடைத்த
ஒற்றைத் துளியது தெரிந்தால்.

Read more...

அவிழா முடிச்சுகள்

பரவிக் கிடக்கும்
பால்வெளியில் பல கோடிச்
சூரியன்கள் படைத்துவிட்டேன்.
இருண்ட வெற்றிடத்தை,
இடமாகவே
இல்லாத இடத்திலும் இட்டு
நிரப்பிவிட்டேன்.
பரவலைத் தாண்டிய
வடிவேதும் தரவில்லை வெளிக்கு.

அவனுக்கெட்டிய அறிவின் வரையில்
பூதமென்கிறான் மானிடன்.
தீயை,
நீரை,
காற்றை.
இவை போன்ற இன்னபிற எண்ணிலா
விடயங்களால் ஆக்கியிருக்கிறேன்
அண்டத்தை என்றறியான்.

கோளங்கள் ஒன்றொன்றும்,
இன்னொன்றுக்கு
ஈயாய், எறும்பாய்.
எது, எதின் எறும்பு என்பதை
அழித்தாயிற்று.

பெயர்களேதும் மிச்சமில்லை.
அத்தனை வகை வாழ்விகளென்
சராசரத்தில்.
எல்லாமே முயல்கிறது
அறிவதற்காகா
என் பேரண்டத்தை அறிய.

பெருமிதமில்லை.
உனக்கு பிரம்மமான நானும்
ஒன்றுமில்லாத
வேறொன்றுக்கு
எறும்போ, கனவோ
என்ற ஐயமிருப்பதால்.

விரவிக் கிடக்கும் வெளியில்,
நானும்,
நீயும்,
தோன்றியதும்,
தோற்றுவித்ததும்,
எல்லாமும்,
தூசின் தொண்ணூறே.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று வலைத்தளத்திற்கு நன்றி.

Read more...

Tuesday, December 23, 2008

உயிரோசையில்..

வணக்கம்,

நவீன தமிழிலக்கியத்துக்கும், வளரும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் உயிர்மை தரமான பல படைப்புகளையாக்கித் தந்து பதிப்புலகில் வழி செய்கையில், உயிரோசையோ எழுத்துலக இளங்கன்றுகளின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்குவித்து வருகிறது.

இதைப்பற்றி முன்பே பேசாமல், கடந்த சில வாரங்களாக உயிரோசையில் எனது சில படைப்புகள் வெளியான பின்பு எழுதி, என் சுயநலத்தை இங்கு பதிவாய் இடுகிறேன்.

புத்திலக்கியத்தை அறிந்து கொள்ள உயிர்மையின் வலைத்தளம் வாசிப்புக்குள்ளாக வேண்டிய ஒன்று.

பார்க்க:
உயிர்மை

நன்றி.

Read more...

Friday, December 12, 2008

குறிப்பிறழ்வும், குப்புறப் படுத்தலும்

அவசரமாய்ப் பகுடர் அப்பி,
உதட்டில் இழுக்கியிருக்கும்
அடர்சிவப்புக் கண்றாவி தொட்டெடுத்து,
நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
ஒரு ஆறேழு திருநங்கைகள்.

பிறழ்ந்த குறியால்
நிகழ்ந்த குற்றத்தைக்
கழுவ வழியில்லாக்
கேடு அவர்களுக்கு.
சமூகம் செத்தால் சாகட்டும்.
பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
குப்புறப்படுத்தெந்திரிப்பதை விட
அதிகமில்லை.

Read more...

Thursday, December 11, 2008

கள்ளமும், பொய்மையும்



எனதில்லாதவைகளுக்கும், என்னால் ஆகாதவைகளுக்குமாய்
உள்ளுக்குள் புரையோடும் இயலாமை
பொய்த்துப் பிரசவிக்கிறது
நிதர்சனத்தின் கால்ப்பிளவில்.

கிடைமட்டமாகியிருக்க வேண்டிய
தலையாட்டல்கள்,
நெடுமட்டங்களாகுகையில்
உண்மையின் ஆசனவாயில்
உளியொன்று உட்புகுத்தப்படுகிறது.

நிஜத்தின் கண்ணில் கறுப்புத்துணி கட்டி
அதன் முதுகில் குத்தித் தள்ளும் நாவு,
பொய்யுரைக்கும் வாய் முகட்டில் இருக்கும்.

காற்றோடு திரிந்தலையும் எண்ணிலாப்
பொய்களைத் துகிலுரிய
காலம் சிமிட்டிக் கொண்டேதான் இருக்கிறது
நொடிகளை.

உயிரோசை 15/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

தேரோடும் சூலூரில்..

மற்ற ஊர்களைப் பற்றித் தெரியவில்லை. சரியாக விஜய தசமியன்று எங்களூராம் சூலூரில் பெருமாள் கோயில் தேர். தேர் என்றால் எங்களுக்கெல்லாம் இருப்புக் கொள்ளாது. காலாண்டு விடுமுறையின் முடிவில் முத்தாய்ப்பாய்த் தேரோட்டம் என்பதால் துள்ளல் இன்னும் கூடும். எங்கள் பெருமாள் கோயிலின் முன்பு ஒரு மைதானம் உண்டு. "பெருமா கோயில் க்ரவுண்டு" என்று வழங்குவோம் அதை. வாரக் கடைசிகளில், பொழியும் வெயிலில் கிரிக்கெட் ஆடி, பெருமா கோயிலுக்குள் சென்ற பந்தை பயந்து, பயந்து எடுத்து வந்து, திட்டு வாங்கும் வானரங்கள் எல்லோரும், தேர்நாளன்று நல்ல பிள்ளைகளாக அணிவகுத்து நிற்போம் கோயில் முன்பு.

வடக்குப் பகுதி வாழ் எஞ்சோட்டான்கள் எல்லாரும் இருப்போம் ஒருவிதப் பதட்டத்தோடு. ஆளாளுக்கு ஓரிடம் பிடிக்க வேண்டுமே தேரிழுக்க. அனைவரையும் ஒட்டுக்காய் காணுதல் அரிதுதான் என்றாலும் இடம்பிடிக்கும் வரை பதை பதைப்பு கூடிக்கொண்டே இருக்கும். பேசவெல்லாம் நேரமில்லை.

பெருமா கோயிலுக்கு முன் இருக்கும் பிள்ளையாருக்கும், ஆஞ்சநேயருக்கும் மரியாதை செலுத்திவிட்டு, மஞ்சள், ரோஸ், பச்சை என்று மல்லிகா ஸ்டோர்சில் வாங்கிய கலர் பேப்பர்களுடன் அழகு மிளிரும் தேரில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் எங்கள் உற்சவருக்கும் ஒரு கற்பூரம் காட்டிவிட்டு, ஊர்ப் பெரியவர்கள் மடுச்சுக் கட்டிய வேட்டியுடன் நிற்க, அப்போதைய பல்லடம் எம்மெல்யேவோ, கோவைத் தொகுதி எம்ப்பியோ, வடத்தைத் தொட்டுக் கொடுக்க, ஊரே கூடியிருக்கும் ஜே ஜே-வென்று. தேரிழுக்க.

எங்கள் தேருக்காகவே பிரத்யேகமாக கேரளாவிலிருந்து வரும் நீண்ட தலை முடிச் சாமி கையில் வித்தியாசமான ஒரு அரிவாள் வைத்திருப்பார். தேருக்கு முன்னால் யாவருக்கும் முதலில் செல்வது அவர் தான். அவருக்குப் பின்னால் அவர் குழுமத்தை சேர்ந்தவர்கள் ஒரு மாதிரி சேர்ந்தாற்போல் ஆடிக்கொண்டே வருவார்கள் இரண்டு வரிசைகளில் வெற்றுடம்போடு. அடுத்து 2, 3 யானைகள் வரும். யானைச் சாணியை மிதித்தால் படிப்பு வரும், உடம்புக்கு நல்லது என்ற காற்றுவழிச் செய்திகளுக்கெல்லாம் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், ஈரம் இற்று, நாராகும் வரை அதை மிதிப்பதில் வந்து முடியும்.

இழுக்க ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் கரை காணாது அலை பாயும் ஆரவாரம். சிறியவர், பெரியவர் என்றில்லாது அதகளப்படும் ஏரியாவே. ஆங்காங்கே கட்சி வேட்டிகள் கண்ணில்படும். குச்சி வைத்திருக்கும் போலீஸ்காரர்கள் அங்கும், இங்கும் முறைப்பர். இதற்கிடையில் எப்படியாவது முட்டி மோதி உள்ளுக்கு வர வேண்டுமென்று ஆடியோடிக் கொண்டிருக்கும் அடிப் பொடியன்கள் நாங்கள் வேறு.

தேர் சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக, "கட்டை போடுபவர்" என்பவர் பக்கத்திற்கு ஒருவர் என இருவர் இருப்பர். அவர்கள் கையில் இருக்கும் பச்சை கலர் கட்டையை தேரின் பிரம்மாண்டச் சக்கரத்தில் வைத்து, வைத்து, தேர் செல்லும் திசையைத் தீர்மானிப்பார்கள். எனக்கெல்லாம் ஹீரோயிசம் என்றால் எத்தனை கிலோ வேண்டும் என்று கேட்பவர்கள் போல் இருக்கும் அவர்களைப் பார்க்கையில். சற்று பிசகினால் கழுத்தில் ஏறிவிடும் தேர்க்கால். அடுத்த வேளை சோறு நிச்சயமில்லை. ஆனாலும், அவர்களை அறிந்தோ, அறியாமலோ, சிலநூறு சிறுவர்களுக்கு அவர்கள் ஹீரோக்களாய்த் தெரிவது அவர்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் என்ன நினைப்பர் என்று நினைப்பேன் நான்.

மேடும், பள்ளமுமாய்ப் படுத்துக் கிடக்கும் சாலையில் தேரை இழுத்துச் செல்வதைப் பார்க்கவே நன்றாக இருக்கும். முன்னே சில நூறு பேர்கள் இழுத்தால் மட்டும் போதாது. பின்னால் இழுத்துப் பிடிக்க என்று சில பத்துப் பேர்கள் இருக்க வேண்டும். வடத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானெல்லாம் முன்னேயும், பின்னேயும் ஓடிக்கொண்டிருப்பேன். எங்கே ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தாலும் சரியென்று.

முன்னிருப்பவர்கள் இழுக்கையில், கட்டுக்கடங்கா வேகமெடுத்து முன்னே செல்லும் தேர். முன்னுக்கும் இல்லாமல், பின்னுக்கும் இல்லாமல் ஒரு மாதிரி நடுவாண்டி நடந்து வரும் ஊர்ப் பிரமுகர் "டேய் டேய் இழுத்துப் புடிங்கடா.. தடம் மாருதல்லோ" என்று பின்னால் இருப்பவர்களுக்குச் சொல்வார். அப்போது பின்னவர்கள் சேர்ந்து கயிற்றை இழுத்துப் பிடிக்க, தேர் வேகம் குன்றி, ஒரு மாதிரி கோணலாய் நிற்கும். இவ்வாறே இழுக்க, இழுத்துப் பிடிக்கவென்று தேர்வலம் களைகட்டும். இந்த 'பின்னணித்' தலைவர் பதவிக்கு ஒருவர் இல்லாது ஒருவர் எப்போதும் இருந்து கொண்டே இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கும்.

தேர்வீதிகளில் வலம் வந்து, திரும்ப கோயிலை அடைந்து உற்சவரை, உள்சேர்ப்பதே எல்லா ஊர்களையும் போல எங்கள் முறையும். கிழக்குத்தேர் வீதியின் குறுகல்களில் தேரை நகர்த்த முனைகையில், நேரம் நீராய் செலவழியும். அவ்வீதி முனையில், ஒரு ரைட் டர்ன் எடுத்துத் தேரைத் தெற்குத்தேர் வீதியில் திருப்பி நிப்பாட்டுகையில் அவனவனுக்கு மூச்சிரைத்து, வேர்த்துக் கொட்டித், தண்ணி கேட்டுத் தவித்துவிடும்.

இடையே சும்மாவா வருவான்கள் நம்ம பையன்கள். வாழைப் பழத்தை வாங்கி, வருவோர், போவோர் மீதெல்லாம் அடிப்பான்கள். கேட்டால் தேர்ச்சடங்காம். இந்த சம்பிரதாயத்தை எவன் கண்டுபிடித்தானோ தெரியாது. ஆனால் நிச்சயமாகப் பெருமாளுக்காகச் செய்வதாய்த் தோன்றவில்லை.

மேலே, எவன் சைட்டாவது தீபாராதனையைப் பார்க்கத் தப்பித், தவறி வந்து விட்டால் ஆயிற்று. அளப்பறை தாங்காது. என்னமோ இவர்கள் தான் ஒற்றை ஆளாய், அம்மாம் பெரிய தேரை இழுத்துக் கட்டி வந்து, நிற்கச் செய்திருப்பதைப் போலவும், மற்றவர்களெல்லாம் ஒப்புக்குச் சப்பாணிகள் போலவும் லந்து பண்ணிவிடுவார்கள்.

தேரின் உயரத்தை சமாளிக்க தேர் வீதிகளைக் கடக்கும் வயர்கள் அனைத்தும் முந்தின நாளில், அந்தந்த இலாகாக்களால் அவிழ்த்து விடப்பட்டிருக்கும். மின்சாரம் வேறு இல்லையா. பெருமாளின் தேரோட்டத்திற்கு விளக்கொளி வருவது சந்திரனின் வெள்ளோட்டத்தில்.

மேற்கூறிய ரைட் டர்ன் முடிகையிலேயே சாயங்காலத்திற்குக் கிளம்பினது, இருட்டாகியிருக்கும். இந்த முக்கில் தேரை நிறுத்தி விட்டால், "ஒரு பொட்டுத் தொளின்னாலும் உளுந்துன்ன எடுத்துர்லாம் டா" என்று மழை வாராவிட்டால் தேரை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் ஐதீகம் அவர்களுக்கு. நாம் ஏன் முறைப்பானேன். உக்கார எடம் கெடச்சா மூச்சு வாங்கி, முதுகு சாச்சுக்கப் பார்க்கும் மனசு.

நிறுத்தி விட்ட சில நிமிடத் துளிகளில், இருட்டுக் கட்டிய வானத்திலிருந்து இரண்டு துளி மேல் விழுகையில் தான் நமக்கெல்லாம் பெருமாளின் நினைப்பே வரும். ஏதோ ஒன்று உள்ளே புரண்டு என்னமோ பண்ணும். "இருக்கார்ரா பெருமாள்" என்று தெரிந்த உண்மையை புதியதாய் உணர்த்தி யோசிக்கச் செய்யும். நிலா வெளிச்சத்தில், கற்பூர ஒளியில் மங்கலாக முகம் காட்டும் உற்சவர் அழகு கூடியிருப்பார். கண்மூடி தியானித்து, அரை நிமிடமாகியிருக்கையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் தேரைத் துவங்க. காணாது போன உற்சாகத்தை அள்ளிக் கொடுத்ததால்தான் உற்சவர் எனப் பெயர் வந்ததோ என்று யோசிக்கவெல்லாம் நேரமின்றி, துள்ளித் தொடங்கியிருப்போம் கோயிலை நோக்கி.

நம்ம வீட்டைத் தாண்டுகையில் நான் எந்த மூலையிலிருந்தாலும், என்ன கூட்டமிருந்தாலும், அம்மா பார்த்து விடுவாள் அந்த இருட்டொளியிலும். எல்லா அம்மாக்களுக்குமே தத்தம் பிள்ளைகளை அடையாளங்காணுதல் கடினமாயிருப்பதேயில்லை. "அங்க வாரவன.." என்று கை காட்டிச் சிரிக்கும் அழகில் சந்தோஷம் உள்ளோடும்.

ஒரு வழியாக கோயிலுக்குப் பக்கத்தில் வந்து சேர்கையில் நிலா உச்சியில் இருக்கும். உற்சாகம் அடிவானில் இருக்கும். ஒரு நான்கு மணி நேரப் பந்தமே ஆனாலும், தேரை நிலைக்குக் கொண்டு வந்து நிப்பாட்டுகையில், பிரிவுக் கீற்று ஒன்று சற்றே உறுத்தும். இன்னும் ஒரு வருசம் ஆகுமே இதெல்லாம் நடக்கவென்று. நம்ம பயல்கள் திரும்ப ஆனைச்சாணி தேடுவர் க்ரவுண்டில். "யானமுடி கெடச்சாப் பார்றா.. ஆயர்றுவா டா ஒரு முடி.." என்பான் ஒருவன்.

ஏதோ ஒரு வகையிலான அமைதி ஆட்கொள்ள, உள்ளே சென்று, பெருமாளை சேவித்து விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்கையில், எதனால் என்று தெரியாத போதும் ஒரு திருப்தி உள்ளே சுரக்கும் வயது மறந்த நிலையில்.

"செரமனாட்ட வருவான்னு நாஞ்சொன்னில்லடா" என்பார் அப்பா அம்மாவிடம். நிலைகொண்ட தேர், இனி ஒரு வருசத்துக்கு சீந்துவாரின்றித்தான் இருக்கும் என்று நினைத்துக் கிடந்தவன், எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருப்பதில் முடியும் எங்கள் தேரோட்டம்.

சாமிக்கோ, சடங்குக்கோ.. தேர் எங்களைப்போன்ற இத்துனூண்டுகளுக்கெல்லாம் உவகை தருவதாகவே இருந்தது. இதுவரை பார்த்திராத ஊர்வாசி முகங்களையும் அறிமுகப்படுத்துவதாயிருந்தது. ஆயிரங்கை சேர்ந்து ஏதோ ஒன்றைச் சாதிப்பதைப் போன்றதாயிருந்தது. சாலையின், மற்றும் சமூகத்தின் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்காமல் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை உணர்த்தவும் தேவையாயிருந்தது.

சென்ற வாரம் விஜய தசமியன்று அப்பா சொன்னார்.. "கரண்ட் இல்ல.. இங்க தேரல்லோ.." அதிகம் சலனப்படாமல் ஃபோனை வைத்தபின், முகத்துக்கு முன்னால் கொசுவர்த்திச் சுருள் வளராமலேயே போய்வந்தேன் தேரிழுக்க.

Read more...

Tuesday, December 2, 2008

நினைவில் கொள்ளும் கலை.

எதுகையும், மோனையும் இடித்தன.
மோனை - முதல் எழுத்துப் பொருத்தம்.
மு - மோ என்று வைத்துக்கொள்ளச்
சொன்னது
10 D-யின் கனகாங்கி மிஸ்.
90 மதிப்பெண் தமிழில்.

'புஷ்'-ஷும், 'புல்'-லும் குழப்பின.
'ஷ்ஷ்'ஷிக்கையில் காற்று வெளியேறும் திசையில்
தள்ளச் சொன்னது
கோடை விடுமுறைக்கு வந்திருந்த
ஸ்ருதிக் குட்டி.
தள்ளும் பிரச்சினை
இழுக்கவில்லை அதன்பின்.

ஹரிஸாண்டலும், வெர்ட்டிக்கலும்
வெறுப்பேற்றின.
ஸிப்பை இறக்கையில்
'வெர்ர்' என்று கேட்குமாதலால்
அதுவே வெர்ட்டிக்கல் என்று கொள்வாயாக
என்று கழிவறையில் அருள்வாக்கு சொன்னவன்
நட்பின் முதற்பொருள் பரத்.

சமீபமாய்
இட, வலங்கள்
இடம்பெயர்கின்றன
வண்டியைத் திருப்புகையில்.
எவரேனும் உதவுங்களேன்.

உயிரோசை 15/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

போய்வா மழையே..

ஓய்ந்துவிட்ட
மழை மாலையால்
ஈரம் சொட்டிக்கொண்டிருக்கும்
பின்மழை நேரங்கள்.

ஜன்னல் கம்பியில்
மழைப் பிள்ளைகளின்
வரிசைத் தற்கொலைகள்.

கழுவப்பட்ட
ஊரின் அமைதி
மிகப் புதியதாய்.

வெள்ளையான வானம்.
வண்ணங்களின் நிலையின்மையைப்
பறையிட்டபடி.
இல்லாத மஞ்சள்
என்னை மட்டும் உறுத்தும்.

மழை உதிர்த்துவிட்ட
இலைகளுக்கு,
செத்துப் போய்விட்ட மழையின்
மிச்சப் பெருந்துளிகளையே
கண்ணீராக்கிப் பழி வாங்கும்
மரங்கள்.

மழையின் மரண அஞ்சலிக்கு
திடீரென முளைக்கும்
குடை மனிதர்கள்.

உடலை உறுத்தா இதக்குளிரில்
சாலைக்குழி
மழை எச்சத்தில்
கால் வைத்து விடாமல்
அவள் கைப்பிடித்து,
நின்றுவிட்ட
மழையில் நனைந்தபடி
நான்.

இக்கவிதையை வெளியிட்ட கீற்று குழுமத்திற்கு நன்றி.

Read more...

ஏனோ

எழுத எண்ணமில்லை.
எண்ணத்திலும் ஏதுமில்லை.
எழுத எத்தனிக்கவில்லை.
எழுதவும் எதுவுமில்லை.
ஆனாலும்
எழுதிக்கொண்டே
இருக்கிறேன்
ஏனோ எதையோ எப்படியோ.
இரவு முழுதும்.

Read more...

வறுமையின் வெறுமை

அபார்ட்மென்ட் செக்யூரிட்டியின்
மனைவி அவள்.
மஞ்சளிடும் தெரு விளக்கில்
அமர்ந்து,
பிரக்ஞையற்று எதையோ
வெறித்துக் கொண்டிருந்தவளின்
மார் முட்டிப்
பாலுறிஞ்சிக் கொண்டிருந்தது
குழந்தை.
தாய்மையும் மரத்து விட்டிருந்த
காரணம்
குழந்தைக்கு இல்லாத பல்லா
இல்லை
புருஷனிடம் இல்லாத காசா
தெரியவில்லை.

Read more...

அவள்காட்டி விரல்

சோறு வைத்த நான்கு விரல்களும்,
தள்ளிவிட வாகாய்க் கட்டைவிரலும்
இருத்தலே முறை.
சற்றே தள்ளிப் போகும்
என் ஆள்காட்டி விரலைக் கண்டித்தவள்
சொல்லிவிட்டுப் போனாள்.

அதுவரை
ஆளைக் காட்டியதோ என்னவோ,
அன்று முதல்
அவளைக் காட்டுவதாகிவிட்டது.
ஒவ்வொரு விள்ளலுக்கும்
அவள் ஞாபகம்.

Read more...

திருப்தி

மதிம்மாவிடம்
மட்டுமல்ல.
நாடெங்கிலும்
அடுத்த வீட்டு ஆண்ட்டிகளால்
சத்தமாகக் கேட்கப்படும் கேள்வி.
உங்க வீட்ல கரண்ட் ருக்கா..?
பதில் மறுதலிப்புக்குப்பின்
திருப்தி தொனிக்க,
இல்ல எங்க வீட்ல போய்டுச்சேனு கேட்டேன்.
திருமூலர் சொல்லாம்
யான் பெற்ற இன்பம்.

Read more...

இன்னும்

அவ்வப்போது கிட்கேட்
கேட்கிறது.
டைரி மில்க்கும் பிடிக்கிறது.
குட் டே சாக்கோ பரவால்லியா சார்
என்றால்..
ம்ஹும்ம்.. ஹைடன் சீக் தான்
வேண்டும் என்கிறது.
சுமதி ஸ்வீட்ஸ் அண்ட் சிப்சின்
அதிரசம் நாக்கை நீர்ப்பிக்கிறது.
ஆரஞ்சு மிட்டாயும்,
தேன் மிட்டாயும்,
எளந்த வடையும்
கூட தேடிப் பார்க்கத் தோன்றுகிறது.
மிச்சமிருக்கிறது
இன்னும் என்னுள்
குழந்தைமை.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO