Monday, August 17, 2009

ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி!


ஒரு ஆதிக்க சக்தியாகவே அங்கீகரிக்கப் பெற்றுவிட்ட சக போட்டியாளனின் புகழுக்கு முன்பு, ஏனையோரின் திறமைகள் போதுமான கவனத்திற்குட்படாமல் போவது இயல்பாக நிகழும் துரதிர்ஷ்டம். சச்சின் - சவுரவ். SPB - மனோ. ஏன்.. என்னைப் பொறுத்தவரை ரஜினி - கமல் கூட. இந்தப் பட்டியலில், பாடகி ஸ்வர்ணலதாவை எவரோடு சேர்ப்பதென்று தெரியவில்லை. குறிப்பிடும்படியான எந்தவொரு காரணமும் பிடிபடவில்லை இவருக்கு போதுமான அளவு அடையாளம் கிடைக்காமற் போனதற்கு.(ஒரு நல்ல புகைப்படம் கூட இணையத்தில் இல்லை)

எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற எல்லாரையும் விட எனக்கேனோ ஸ்வர்ணலதாவை அதிகமாய் பிடிக்கிறது. உயிர்ப்புடன் உணர்வுகளை இழையோட்டும் சாரீரம் தரக்கூடிய அனுபவங்களை அநாயாசமாக சாத்தியப்படுத்துகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். ஸ்ருதியைப் போலவே அக்ஷரமும் சுத்தம்!

காதல் பாடல்களில் இவர் குரலோடு சில்லிடும் ஒரு மென்புன்னகை என் காதுகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது.(பார்வை ஒன்றே போதுமே படத்தின் துளித் துளியாய், காதலர் தினத்தின் காதலெனும் தேர்வெழுதி, ஜென்டில் மேனின் உசிலம்பட்டி பெண்குட்டி)

ரொமாண்ட்டிக் பாடல்களில் துளிரும் காமமும், உடன் ஒழுகும் தாபமும் பெண்ணுணர்வை இயல்பாகப் புலப்படுத்துகின்றன.(உழவன் படத்தின் ராக்கோழி ரெண்டு, தர்மதுரை படத்தின் மாசி மாசம் ஆளான பொண்ணு)

பிரிவை முன்னிறுத்தும் பாடல்களானால், செவிப்படலத்தில் குறுகுறுக்கும் ஏக்கம் பின்னோடுகிறது. (அலை பாயுதேவின் எவனோ ஒருவன் வாசிக்கிறான், என் ராசாவின் மனசிலே குயில் பாட்டு ஓ வந்ததென்ன)

போலவே துள்ளலான பாடல்களின் போது பொங்கும் ஆரவாரத்தை அப்படியே குரல் வழி கடத்தி நம்முள்ளும் பாய்ச்சுகிறார். (கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆட்டமா தேரோட்டமா, இந்தியன் படத்தின் அக்கடானு நாங்க உட போட்டா, சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி)

இப்படி எவ்விதப் பாடலானாலும் அழுந்தப் பதியும் இவர் முத்திரை அளவுக்கு வேறெவரிடமும் எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை.

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா, ஸ்வர்ணலதாவுக்குப் போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்பது என் கருத்து. சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பேச-வும், அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே-வும் தவிர்க்க முடியாத பாடல்கள்.

ராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடி அதிகம் பிரபலமாகாத சில நல்ல பாடல்கள் - பெரிய மருது படத்தின் விடல புள்ள நேசத்துக்கு, சக்திவேல் படத்தின் மல்லிக மொட்டு மனசத் தொட்டு, பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே மற்றும் கானகருங்குயிலே.

ரஹ்மானிடம் கேட்டீர்களானாலும் என்னைப் போலவே அவரும் ஸ்வர்ணலதாவை அதிகம் பாராட்டுவார் என்பது அவர் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்த அதிக எண்ணிக்கையிலான மற்றும் தரமான வாய்ப்புகளிலிருந்து தெரிய வருகிறது. தனிப்பாடல்கள் தவிர்த்து ரஹ்மானின் நிறையப் பாடல்களில் அங்கங்கே ஸ்வர்ணலதாவின் குரல் ராகமிழுத்துப் போகும். உதாரணத்துக்கு அந்த அரபிக் கடலோர-த்தின் ஆரம்பத்திலும், இடையிலும், பாடியது யாரென்று பலருக்கும் தெரியாத ஹம்மிங்கும், பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலுக்கு முன்னும், பின்னும் ஒலிக்கும் கண்ணில் ஒரு வலியிருந்தாலு-ம்.

சற்றேறத்தாழ ரஹ்மானின் எல்லாப் படங்களிலுமே ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

இந்தியனின் மாயா மச்சிந்திரா பாடலின் இரண்டாவது சரணத்தில் "அஜ்ஜிமா.. ச்செல்ல புஜ்ஜிமா" என்ற வரியை இவர் பாடிக் கேட்கையில், இதை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே காதலனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளும் காதலியின் தோற்றம் நினைவுக்கு வருகிறது. புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.

சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கில் பாடியிருப்பது அழகு. முத்தாய்ப்பாக சரணங்களுக்கு இடையில் அவர் சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பு, அது சொல்லும் வெட்கம், அதிலிருக்கும் எள்ளல் போன்ற எதைப்பற்றியும் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடலுக்கிடையே அளவான, அழகானதொரு சிரிப்பை உதிர்ப்பதில் SPBயும், ஜானகியும் பேசப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாத சிரிப்பு ஸ்வர்ணலதாவினுடையது.

இத்தனை சிறப்புகள் இருந்தும், ஆறு மொழிகளில் தடம் பதித்திருந்தும் கூட சமீப காலங்களில் இவர் வாய்ப்பில்லாது இருப்பது, அவருக்கல்ல.. நமக்குத்தான் குறை. செய்யும் வேலையை முழு விருப்புடன், ஈடுபாட்டுடன் தருவதுடன், படைப்பின் தரத்துக்கான உறுதியைப் பலமுறை நிரூபித்திருக்கும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு இனியேனும் முன்போல் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

மேற்குறிப்பிட்டவை அல்லாத, எனக்குத் தெரிந்த மற்ற சில இனிய பாடல்கள்:

பாடல் - படத்தின் பெயர்

போவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே - சின்னதம்பி
மலைக்கோயில் வாசலில் - வீரா
என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
என்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
காலையில் கேட்டது - செந்தமிழ் பாட்டு
ராக்கம்மா கையத்தட்டு - தளபதி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி
ராஜாதி ராஜா உன்- மன்னன்
ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
உளுந்து வெதக்கையிலே - முதல்வன்
ஹாய் ராமா - ரங்கீலா
சொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா
மெர்க்யூரிப் பூக்கள் - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மெல்லிசையே - லவ்பேர்ட்ஸ்
முக்காலா முக்காபுலா - காதலன்
குளிருது குளிருது - தாஜ்மஹால்
அஞ்சாதே ஜீவா - ஜோடி
முத்தே முத்தம்மா - உல்லாசம்
ஒரு நா ஒரு பொழுது - அந்திமந்தாரை
திருமண மலர்கள் - பூவெல்லாம் உன் வாசம்
திலோத்தமா - ஆசை
அந்தியில வானம் - சின்னவர்
விடை கொடு விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்

க்ளிக்கினால் பாடலைக் கேட்கலாம்.



36 மறுமொழிகள்:

kavi August 17, 2009 at 11:42 AM  

நல்லதொரு பதிவு, இனிமையாக இருந்தது,

Anonymous,  August 17, 2009 at 12:23 PM  

என்னோட சாய்ஸும் ஸ்வர்ணலதாதான். 'அந்தி கருக்கையில அடிபோடும் உன் நெனப்பு' பாட்டு அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனாலும் அருமையான பாட்டு.

Bleachingpowder August 17, 2009 at 12:24 PM  

அருமையான தொகுப்பு

மதன் August 17, 2009 at 12:27 PM  

நன்றி கவி.

சின்ன அம்மிணி - நீங்கள் சொல்லும் பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றது? நான் கேட்டதில்லை.

நன்றி Bleaching powder.

ஆர்வா August 17, 2009 at 1:12 PM  

வாவ். எனக்கு ரொம்ப பிடிச்ச பாடகி'ன்ன அது சுவர்ணலதாதான். அலைபாயுதே படத்துல வர்ற எவனோ ஒருவன் பாட்டு எனக்கு ஃபேவரைட். அப்படியே உயிரை உருக்குற மாதிரி இருக்கும் சுவர்ணலதாவோட குரல். எப்போ கேட்டாலும் மனசை என்னமோ பண்ணும் இந்த பாட்டு

ஆர்வா August 17, 2009 at 1:14 PM  

அஜ்ஜிமா செல்ல புஜ்ஜிமா பற்றி குறிப்பிட்டு இருந்தது ரசனை. எவ்ளோ அழகா ரசிச்சு எழுதி இருக்கீங்க..

Alb August 17, 2009 at 1:15 PM  

இனிமையான பதிவு...
சுவர்ணலதா :) தி கிரேட்!!

Joe August 17, 2009 at 6:47 PM  

WOW, you took the time to link the songs too!

மதன் August 17, 2009 at 7:05 PM  

நன்றி கவிதை காதலன்.

நன்றி Alb.

Joe - Thanks Thala!

ஷைலஜா August 17, 2009 at 7:34 PM  

பிசுசிலாக்கு அடுத்தபடி ஜீவனுள்ள குரல் ஸ்வர்ணலதா என்பது என் கருத்து...பிடிச்சபாடகியின் பிடிச்சபாட்டு மாலையில் யாரோ
பதிவிட்டதற்கு நன்றி மதன்

தமிழன்-கறுப்பி... August 17, 2009 at 7:43 PM  

மதன் மற்றப்பாடல்கள் என்னவோ ஆனால் கடந்த சில நாட்களாக நான் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல் வள்ளி படத்திலிருந்து என்னுள்ளே என்னுள்ளேதான்.. அது ஒரு விதமான அனுபவமாகத்தான் இருக்கிறது எனக்கு!

நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறேன் இதைப்பற்றி.

மதன் August 17, 2009 at 7:56 PM  

எனக்கும் பிடித்ததைத்தானே எழுதினேன் ஷைலஜா! :)

என்னுள்ளே என்னுள்ளே மிக முக்கியமான பாடல் தமிழன் கறுப்பி. சொல்லப்போனால் இன்னும் நிறையப் பாடல்களைக் குறிப்பிடவில்லை. பின் அவரின் எல்லாப் பாடல்களையும் குறிப்பிட வேண்டியிருக்குமென்பதால்.

ஷைலஜா August 17, 2009 at 9:31 PM  

மதன் said...
எனக்கும் பிடித்ததைத்தானே எழுதினேன் ஷைலஜா! :)

///

>>>>>>>>ஆமாம் மதன்....அதென்னவோ மாலையில் யாரோ பாடலைமட்டும் எனக்குமட்டும் பிடிச்சதாகவே பல டைம் கருதுவதால் இப்படி எழுதிடறேன் போல:)...பாடல்வரிகள் எங்கே கிடைக்கும்?

SUREஷ்(பழனியிலிருந்து) August 17, 2009 at 9:54 PM  

நல்ல ரசிகர் ஐயா நீங்கள்..,

kavi August 17, 2009 at 10:07 PM  

Movie Name: Chatriyan (1990)
Singer: Swarnalatha
Music Director: Ilayaraja
Year: 1990
Actors: Bhanu Priya, Vijayakanth


maalaiyil yaaroa manadhoadu paesa
maargazhi vaadai medhuvaaga veesa
dhaegam koosavae oaoaoa moagam vandhadhoa
moagam vandhadhum oaoaoa mounam vandhadhoa
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)

varuvaan kaadhal dhaevan enru kaatrum koora
varattum vaasal dhaedi inru kaaval meera
valaiyal oasai raagamaaga isaiththaen vaazhththup paadalai
orunaal vanna maalai sooda valarththaen aasaik kaadhalai
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)

karaimael naanum kaatru vaangi vinnaip paarkka
kadalmeen koottam oadi vandhu kannaip paarkka
adadaa naanum meenaip poala kadalil paayak koodumoa
alaigal velli aadai poala udalin meedhu aadumoa
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)


ஷைலஜா, கூகுளில் சர்ச் செய்தாலே கிடைக்கிறதே, எனக்கு மிகமிக பிடித்த பாடல், அதனால் உங்களுக்காக ஒரு பின்னூட்டம் பாடல் வரிகளுடன்,.

kavi August 17, 2009 at 10:08 PM  

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)


கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)

ஷைலஜா August 17, 2009 at 10:41 PM  

kavi said... ...vandhadhoa
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)

varuvaan kaadhal dhaevan enru kaatrum koora
varattum vaasal dhaedi inru kaaval meera
valaiyal oasai raagamaaga isaiththaen vaazhththup paadalai
orunaal vanna maalai sooda valarththaen aasaik kaadhalai
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)

karaimael naanum kaatru vaangi vinnaip paarkka
kadalmeen koottam oadi vandhu kannaip paarkka
adadaa naanum meenaip poala kadalil paayak koodumoa
alaigal velli aadai poala udalin meedhu aadumoa
nenjamae paattezhudhu adhil naayagan paerezhudhu

(maalaiyil)


ஷைலஜா, கூகுளில் சர்ச் செய்தாலே கிடைக்கிறதே, எனக்கு மிகமிக பிடித்த பாடல், அதனால் உங்களுக்காக ஒரு பின்னூட்டம் பாடல் வரிகளுடன்,.

August 17, 2009 10:07 PM
>>>>>>>>>>>>>>> THANKS kAVI! தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் தந்து உதவினதுக்கு ரொம்ப நன்றி அட ஆமாம்கூகுளை மறந்துட்டேனே !!!

எம்.எம்.அப்துல்லா August 17, 2009 at 11:38 PM  

ஸ்வர்னாக்கா குரலும் ஸ்வர்ணம்தான்.

மதன் August 18, 2009 at 1:52 AM  

நன்றி Sureஷ்.

நன்றி அப்துல்லா.

Ashok D August 18, 2009 at 3:28 PM  

முக்கால்வாசி பாட்டு சித்ரான்னு நெனச்சிருந்தேனே.. தகவலுக்கு தாங்ஸ்ப்பா...

தேர்ந்துதேடுத்த பாடல்கள் அனைத்தும் அருமை.

அதிலும் மாலையில் யாரோ, நான் ஏறிக்கரைமேல் போன்ற பாடலகள் சான்ஸே இல்லை.

மதன் August 19, 2009 at 12:34 AM  

மிக்க நன்றி அஷோக்.

M.Rishan Shareef August 19, 2009 at 1:46 AM  

அருமையான பாடகி சுவர்ணலதா. எனக்கு மிகப்பிடித்த பாடகிகளில் ஒருவர். அமைதியானவர்.

என்னுள்ளே என்னுள்ளே... பாடலை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார். அது போலவே எவனோ ஒருவன் மற்றும் எனது விருப்பப்பாடல் மாலையில் யாரோவையும்.

எல்லாவிதமான பாடல்களையும் அருமையாகப் பாடக் கூடிய இப் பாடகியை இப்பொழுது யாரும் கண்டுகொள்வதில்லை என்பது வருத்தம்தான். விரைவில் இந் நிலை மாறட்டும் !

மதன் August 19, 2009 at 1:52 AM  

Thank You Cliffnabird.

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரிஷான் ஷெரீஃப். உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

Anonymous,  August 20, 2009 at 6:33 AM  

//சின்ன அம்மிணி - நீங்கள் சொல்லும் பாடல் எந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றது? நான் கேட்டதில்லை//

அள்ளித்தந்த வானம் படம். எனக்கும் முதல்ல தெரியவில்லை. பதிவா போட்டேன். விஜி பின்னூட்டம் போட்டார். http://chinnaammini.blogspot.com/2008/06/blog-post.html.

அதே மாதிரி 'அந்தியில வானம், தந்தனத்தோம் போடும்' பிரபு - கஸ்தூரி நடிச்ச படம். பேர் ஞாபகமில்லை.

Anonymous,  August 20, 2009 at 6:37 AM  

குரு சிஷ்யன் படத்தில் 'உத்தம் புத்திரி நானு என்ற பாடலும் இவர் பாடியது என்றே நினைக்கிறேன்.

மதன் August 20, 2009 at 7:39 AM  

எனக்கும் பிடிச்ச பாட்டு அந்தியில வானம்.. லிஸ்ட்ல போட மறந்துருக்கேன்.. ஞாபகப்படுத்தினதுக்கு நன்றிங்க.. இப்ப போட்டுடலாம்.. படம் சின்னவர்.. இங்க பாக்கலாம் அந்தப் பாட்ட- http://www.youtube.com/watch?v=hcCgqgHaNgI

மனோ கூடப் பாடினதால தான் மறக்கறோமோனு தோணுதுங்க! :)

உத்தம புத்திரி பாட்டு ஸ்வர்ணலதாதான். அவங்க எப்பவும் போல நல்லா பாடிருப்பாங்க. ஆனா ட்யூன் ரொம்ப சாதாரணமானதாத்தான் பட்டுது. அதான் விட்டுட்டேன்.

M.Rishan Shareef August 24, 2009 at 12:40 AM  

சுவர்ணலதாவின் 'விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணமிது...' பாடலும் அருமை. 'பிரியாத வரம் வேண்டும்' படத்தில் இடம்பெற்றது. பட்டியலில் சேர்த்துவிடுங்கள் !

யாழினி August 24, 2009 at 11:17 AM  

" Kannil oru Vali irundhal kanavugal varuvadhaillai.."

valimigu andha kural..
ippavum yenai aza vaikum.


innisaiindha padaipu !!

மதன் August 24, 2009 at 12:11 PM  

சேர்த்து விட்டேன் அண்ணாச்சி. நன்றி.

நன்றி யாழினி.

Anonymous,  November 4, 2009 at 7:18 PM  

எனது உணர்வுகளின் பிரதிபலிப்பாக உங்கள் தொகுப்பை நான் பார்கிறேன் மதி!.. மிக்க நன்றி.
நீங்களும் நண்பர்களும் விட்டு விட்ட, எனக்கு பிடித்த மற்றும் ஒரு பாடல்,
காட்டுக்குயில் பாட்டு சொல்ல - சின்ன மாப்ளே..
சரணத்தின் துள்ளலான மெட்டில் அனாயசமாக பாடியிருப்பார் ஸ்வர்ணாஜி.

Fan club in orkut:
http://www.orkut.com/Main#Community?cmm=8789271

மதன் November 4, 2009 at 7:45 PM  

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பாலா!

Unknown February 28, 2010 at 6:57 PM  

MATHAN NEENGA ROMBA NALAIKKU VALANUM. SWARNALATHA ENNODA FAVORITE SINGER. NAN ENTHA PADAM PARTHALUM AVANGA PADI IRUNTHAL MATTUMTHAN ANTHA PADATHAI PARPEN . APPADI ORU THEEVIRA RASIKAN. SWARNALATHAVUKKAGA ENNA VENDUMANALUM SEIYA THAYAR.AVANGALODA FANS ELLORUM ONNA SERNTHU ETHAVATHU PANNANUM.AVANGALUKKU CHANCE IPPA ILLAI. ATHANALA NAN ELLA MUSIC DIRECTORSAYUM THITTATHA NAL ILLAI. ENNA ORU VOICE. AVANGA VOICE PAYANPADUTHATHA MUSIC DIRECTORS ELLORUM VARUTHAPADANUM.

jachin October 11, 2011 at 12:03 PM  
This comment has been removed by the author.
jachin October 11, 2011 at 12:04 PM  

Romba Romba Thanks, Avangaloda information potathuku. Na avangaloda miga miga miga theevira rasingan.

jachin October 11, 2011 at 12:05 PM  

Mr.Mathan Anna, na ungaloda peasanum. Pls call pannunga, Ennoda no 9790784978. pls pls pls pls

  ©Template by Dicas Blogger.

TOPO