Wednesday, April 29, 2009

சாரு - கடிதம் I

from Mathan V
to charunivedita@charuonline.com
date Fri, Feb 20, 2009 at 8:49 AM
subject ப்ரிய சாருவுக்கு..


ப்ரிய சாருவுக்கு,

ஒரு வாசகன் எழுதிக்கொள்வது.

தங்கள் நேரத்தை வீணாக்காமல் விஷயத்தை சொல்லிவிடுகிறேன்.

நான் முன்பே ஓரிரு முறை தங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பிலிருந்துள்ளேன்.

நான் முதன்முதல் எழுதிய கதைக்கு 'beautiful story' என்று நீங்கள் அனுப்பிய Reply எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது என்று உங்களுக்கு நான் எழுதிய நன்றிக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.

என் சில கவிதைகள் மற்றும் ஒரு சிறுகதை ஆகியன உயிரோசையில் பிரசுரமாகியுள்ளன. தங்கள் நேரம் அனுமதியாது என்று தெரிந்தும், லிங்க் அனுப்புகிறேன். ஒருவேளை தாங்கள் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்தால், உருப்படியான எழுத்தை நோக்கி நகர எனக்கது உதவியாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=866

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=816

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=787

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=726

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=897

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=956

அன்புடன்,
மதன்

பதில் கடிதம்:

அன்புள்ள மதன்,

படித்தேன். இந்த முறையும் உங்கள் சிறுகதை பிடித்திருந்தது. கவிதைகளில் பயணச் சிதைப்பு, நான் ரௌத்திரன், பிரிதலின் வன்பிடியுள் மூன்றும் பிடித்திருந்தன. முகம் மாற்றல்கள், குழப்பத் தீர்வுகள் இரண்டும் பிடிக்கவில்லை. பிடித்தது, பிடிக்காதது இரண்டுக்குமே காரணம் தெரியவில்லை.

கவிதைகளில் அக நானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சித்தர் பாடல்கள், பாரதி போன்றவைகளைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கம்ப ராமாயணம் படித்திருந்தால் இன்னும் உத்தமம். நவ கவிதையில் தேவதச்சன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி, பிரம்மராஜன், தேவதேவன், தர்மு சிவராமு, நகுலன், கலாப்ரியா, எஸ். வைதீஸ்வரன், சேரன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைப் படிக்கலாம்; படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அநேகம் பேர் உண்டு. என்றாலும் பாப்லோ நெரூதா, ரில்கே, ஒக்தாவியோ பாஸ், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரைப் படிக்க வேண்டியது கட்டாயம். அதிலும் ஆலன் கின்ஸ்பெர்கின் ஹௌல் என்ற கவிதையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் ஏற்கனவே படித்திருந்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள் மதன். சில நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்றுதான் எழுதியிருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

20.2.2009.

2.45 p.m.

from Mathan V
to charunivedita@charuonline.com
date Sat, Feb 21, 2009 at 6:04 PM
subject Re: ப்ரிய சாருவுக்கு..


சாருவுக்கு,

தங்கள் நேரம் செலவழித்து, அனுப்பியவற்றைப் படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் பட்டியலிட்டவைகளுள் பாரதியும், மனுஷ்யபுத்திரனையும் தவிர வேறு எதையும் மற்றும் யாரையுமே படித்ததில்லை. கண்டிப்பாகப் படிக்கிறேன். அப்படியே படித்திருந்தாலும், எதற்காகக் கோபப்பட வேண்டும்?

என் பொருட்டு நீங்கள் பகிர்ந்துகொண்டவைகள், என்னைப் போன்ற இன்னும் சில நூறு பேருக்கும் உபயோகப்படும் என்பதில் எனக்கு சந்தோஷம் கூடுகிறது.

உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

ப்ரியத்துடன்,
மதன்

Read more...

Tuesday, April 28, 2009

சாரு!

சமீபத்தில் சாருவின் தளத்தில் எழுதப்பட்டிருந்தது போல், 'சாருவின் பெயரை தலைப்பில் போட்டு விட்டாலே, வலைத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதால், வலையில் எழுதுபவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்' என்ற கருத்து உண்மையா தெரியாது. ஆனால் வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நான் எழுதுபவனில்லை என்பதாலும், நீண்ட நாட்களாக சாருவைப் பற்றி எழுத நினைத்திருந்தவற்றை இப்போதேனும் எழுத வேண்டும் என்பதாலும், அந்தக் கருத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இதை எழுதுகிறேன்.

சாரு - நான் தவறாமல் படிக்கும் எழுத்தாளர்களுள் ஒருவர். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களில் எனக்கு இவரைப் பிடிக்கும், இவரைப் பிடிக்காது என்றெல்லாம் எதுவும் இல்லை. சாருவே சொல்வது போல் எழுத்தாளன் ஒரு பிரம்மா. அவனுடைய ஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர்களைப் படைத்துக், காத்து, அழிக்கும் சர்வேஸ்வரன். இதில் இவர்தான் உசத்தி, இவர் தாழ்த்தி என்பதிலெல்லாம் எனக்கு ஏனோ உடன்பாடில்லை.

தன் கற்பனையை நம்பி இரண்டு வரியேனும் எழுத முன்வருபவன் ஒவ்வொருவனையும் எனக்குப் பிடிக்கும். அதேபோன்று படைப்புகளிலும் எந்த பாரபட்சமும் எனக்கில்லை. குழந்தை உட்பட அவனவனுக்கு, அவனவன் உடைமைகள் உயர்வு. போலவே அவனவனுக்கு அவனவன் எழுத்தும்.

வலையுலகில் எத்தனையோ படைப்புகள் காணக்கிடைக்கின்றன. படிக்கையில், சில படைப்புகள் நன்றாக இல்லாதது போன்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் அது என்னுடைய பிழையே தவிர எழுதியவரைக் குறை சொல்லிப் புண்ணியமில்லை.

என் எதிர்பார்ப்புக்கும், ரசனைக்கும் ஏற்ற உயரத்திற்கு எழுத வேண்டும் என்று அவனுக்கு என்ன தலைவிதி? அவன் விருப்பத்திற்கு அவன் எழுத வேண்டும். எழுத்துக்கு ஒருவன் செய்யும் குறைந்தபட்ச மரியாதை இதுவாகத்தானிருக்கும். அதையும் மீறி எனக்கு படைப்பின் தரத்திலோ, கருத்திலோ உடன்பாடில்லை என்றால் மேற்கொண்டு அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளனைப் படிக்காமல் விட்டுவிட்டு, என் உயரத்துக்கேற்ற எழுத்தினைத் தேடுவதே உத்தமம்.

'எழுத்து பிடிக்கவில்லையென்றாலும், கருத்தைப் பகிர வேண்டும். அதுதான் எழுதுபவனும், அவன் எழுத்தும் மேம்பட உதவும்' என்றும் வாதிடலாம். ஆனால் எனக்கென்னவோ 'லூஸாக விட்டுவிட வேண்டும்' என்ற கருத்துதான் சரியெனப்படுகிறது. எதற்கு விவாதம். நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன். விட்டுவிடுவோமே!

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சாருவுக்கு மட்டும் நேர்ந்த விசித்திரம் ஒன்று உண்டு. அவர் வாசகர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று அவரை மிகவும் பிடித்துப் போனதால் ரசிகர்களாகிவிட்ட வாசகர்கள், மற்றொன்று 'அவர் எழுதுவதெல்லாம் குப்பை.. வெறும் செக்ஸ்' என்று அவரைக் குற்றம் சாட்டும் தரப்பினர். என்ன குற்றம் சாட்டினாலும் இவர்களால் அவரைப் படிக்காமல் இருக்க முடியாது என்பது அடுத்த விசித்திரம்.

நான் இந்த வகையில் மூன்றாம் தரப்பினன். எனக்கும் அவர் எழுதும் பல விஷயங்களில், எழுதும் விதத்தில் உடன்பாடிருக்காது. ஆனால் அடிப்படையில், என் விருப்பத்திற்கேற்ப ஒருவர் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், எனக்கு இந்தக் கருத்தியல் உடன்பாடின்மை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இதையும் தாண்டி அவர் எழுத்தில் ஒளிந்திருக்கும் சுவாரசியம்தான் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதும் உண்மை. எனினும், 'சுவாரசியமான எழுத்தாளர்' என்று ஒரு சிறு வட்டத்திற்குள் அவரை அடைத்து விட முடியாது. அப்படியானால் அவர் ஒரு இலக்கிய ஆளுமையா? என்று கேட்டாலும், நான் 'தெரியாது' என்றுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'இலக்கிய ஆளுமை' என்ற வரையறையெல்லாம் எதைக் கொண்டு அளவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அவரைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

சுஜாதாவுக்குப் பிறகு, இவரளவுக்கு இளைஞர்களின் வாழ்வோடு ஒன்றியும், இளைஞர்களைக் கவரும்படியும் எழுதத் தமிழில் தற்சமயம் ஆளில்லை என்பது மிகை கலவாத உண்மை. இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் அவரைப் புகழ எனக்கு எந்தக் காரண காரியமுமில்லை. அவரைப் புகழுமளவு நான் பெரியவனுமில்லை. என்னைப் போன்ற ஒருவன் புகழ்ந்தால் அவருக்கு எவ்வித ஆதாயமும் ஏற்படப்போவதுமில்லை. மேற்கூறியவை சாருவைப் பற்றிய என் அபிப்பிராயங்கள். அவ்வளவே.

'சரி. இப்போது எதற்கு சாருவைப் பற்றிய உன் முந்திரிக்கொட்டைக் கருத்துரைகள்' என்கிறீர்களா? வாஸ்தவமான கேள்விதான். அவரோடு அவ்வப்போது மின்னஞ்சலில் தொடர்பிலிருப்பதுண்டு. அவற்றுள் சிலவற்றை அவர், அவருடைய இணையதளத்தில் பிரசுரித்ததும் நிகழ்ந்ததுண்டு. அவற்றை இங்கேயும் பதிவிட்டு வைக்க உத்தேசித்ததில் விளைந்தவைதான், 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்' என்று ஆரம்பிக்காமல் நான் இதுவரை சொன்ன கதை.

போகட்டும். இனி அடுத்த பதிவில் சாருவுக்கும், எனக்குமான கடித இலக்கியத்தைப்(?!) பார்ப்போம்!

Read more...

Monday, April 27, 2009

ஆனந்த ஞானக்கூத்து

என்னைக் குறியெய்யும்
அழிமானங்கள்
யாதொரு கட்டவிழ்ப்பையும்
என் மேல் ஏவாதோட
ஆனந்தமாயிருக்கச் சித்தமாகிறேன்
உலகம் குழுமியிருக்கையில்
நிர்வாணம் வெட்கமுறாததாகி
என்னுடனே தெறித்தாடும் குறியைக்
கண்ணுறாமல்
கூத்தாடுதலின் ஞானாந்தகாரத்தில்
அவா கூடுகிறேன்
பிரஸ்தாபங்கள் காட்டும் ஒளிக்கூறு
காலப் பெரும்பள்ளத்தினுள்
வெள்ளைப்பூனையையும்
கண்காட்டத் தக்கதாயில்லை
உள்சென்ற துவார வாயில்களின்
வழியாகவே பிதுங்கி வழிவது
வாழ்வின் சங்கீதம்
அதன் லயத்தோடு ஒட்டாமல்
ஆடுகிறேன்
கூத்தாடுகிறேன்
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைக்கிறேன்
போட்டுடைத்துப் போட்டுடைத்துக்
கூத்தாடுகிறேன்.

Read more...

Tuesday, April 7, 2009

நம் வெற்றிகளுடன் நாம்உதடுகளின் பரிபாஷைகள் மௌனத்தின்
மொழியைச் சிறையிட்டு
பரீட்சார்த்தங்களோடு நிகழ்த்தும் போருக்குக்
குருதி துடைக்க நாவு நீட்டுகின்றன.

அகமகிழ்தலின் எல்லைக்கோட்டில்
உனக்கான மலர்ச்செண்டுகளுடன்
உன் வெற்றிக்காக இல்லாவிடினும்,
எரியும் காழ்ப்பின் புகைவாசம் மறைக்க
நான் நிற்கிறேன்.

தற்போதைய என் காலடித்தடம்
உன்னால் அடையாளங் காணப்படலாம்
ஆர்த்தெழும் வன்மம் மறைத்து
கையில் செண்டுடன் பிறிதொரு நாள்
நீ என் வெற்றிக்குப் பின்
இதே போன்றதொரு இடத்தில் நின்றிருக்கையில்.
அப்போது என் வெற்றியை விட உன்
புகைவாசம் குறித்து கவனமாயிருப்பேன் நான்.

இக்கவிதையை பிரசுரித்த கீற்று குழுவினருக்கு நன்றி.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO