Monday, February 23, 2009

நானும், இளைய தளபதி விஜயும்..அவள் அழகாயிருப்பாள். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை செய்கிறாள். மேகக் கூந்தல், சங்குக் கழுத்து போன்ற உவமைகளிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. உயர்வு நவிற்சி எனக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்று. எதையும் உள்ளது உள்ளதைப் போன்று வழங்குதலே நலம் என்று நினைப்பவன். அவளைப் பெற்றவர்களும் எனக்கு சிரமமேதும் வைக்காமல், இருப்பவைகள் இருக்க வேண்டியவைகளைப் போலவே இருக்க வைத்ததில் மகிழ்வே.

வேலை செய்யும் இடம் அருகிலிருந்தாலும் அடிக்கடி அவளைப் பார்க்க முடியாது. போகையிலும், வருகையிலும் 'எங்க டாடி குதிருக்குள்ளில்லை' எனும்படி அவளையே பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. சில நேரங்களில் கண்ணை விட புத்தி சொல்வதையும் கேட்கத்தானே வேண்டும். ஒரே ஆறுதல் மதிய உணவு வேளைதான். ஜனத்திரளின் நடுவே அவள் எங்கேயென்று தேடிக் கண்டறிகையில் அவளல்லாத முகங்கள் மறைந்து கொண்டே வரும் ஒன்றன் பின் ஒன்றாய். ஏதோ ஒரு மேஜையில் மிதமான புன்சிரிப்புடன் பருக்கைகளை அவள் விரல்கள் துழாவிக் கொண்டிருப்பதைக் காண்கையில், எங்களைத் தவிர மீதமிருந்த அனைவரும் ஆவியாகி, நாங்கள் மட்டுமே இருப்போம்.

பொருளாதாரப் பற்றாக்குறைக்கு முன்பாகவே உடையில் சிக்கனம் காட்டிவந்த IT மகளிர், சமீபகாலங்களில் ஐம்பதடி தூரத்திலிருந்தே எங்கள் கண்ணைக் குத்தும் முடிவோடுதான் அலுவலகம் வருகிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமைகளில் குலக்கொழுந்துகளின் தாக்குதல் வன்மை மிக்கதாயிருக்கும். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்று.

இப்படியானதொரு கூட்டத்திற்கு நடுவே அடர்நிறச் சுடிதார்களைக் கூடத் தவிர்த்து, அவ்வப்போது மல்லியோ, முல்லையோ சூடிவரும் இவளைப் போன்ற ஒருத்தி, என்னைப் போன்ற ஒரு சராசரி மானுடப் பிறவியைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இருக்க நியாயமே இல்லை. விடுத்து, மதிய வேளைகளில் என்னைப்போல் இன்னும் எத்தனை பேர் இவளுக்கு நைவேத்யம் செய்த பின் உணவுண்டு கொண்டிருக்கின்றார்களோ என்ற கேள்வி மிகவும் நியாயமான ஒன்று எனலாம்.

கல்லூரிக்காலம் முடியும் வரை காதலைப் பொறுத்தமட்டில், நானொரு நாத்திகன். 'அதெப்பட்றா.. பாத்த உடனே பொங்குமா உங்களுக்கெல்லாம்?' என்று ஃபிகரைக் கூட்டிக்கொண்டு சினிமாவுக்குச் செல்லும் நம்மவன்களைக் கிழித்துக் கொண்டிருந்தவன்தான். என்றாலும் இப்போது இவளைப் பார்க்கையிலெல்லாம், தமிழ் சினிமாவின் படு அபத்தமான காதல் படக்காட்சிகள் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கின்றன. என்ன செய்வது. ஒரு வாசல் மூடித்தான் மறு வாசல் வைப்பான் இறைவன். அவன் தாள் போற்றி.

பெண்ணைப் பார்த்த உடனே காதலிக்க ஆரம்பித்து விடுவதற்காக நம் பையன்களைக் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. இதுபோன்ற சமயத்தில் அவனைச் சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகளுமே சுவர்க்கத்தில் முன்னமே நடைபெற்றுவிட்ட நிச்சயதார்த்தத்தின் தாம்பூலத் தேங்காய் கொண்டு அவன் மண்டையைத் தட்டிக் கொண்டிருப்பதாய் அவனுக்கு ஒரு தோற்றம். உண்மையாகவும் இருக்கலாம். யார் கண்டது?

சில சமயங்களில் உணவருந்த ஆரம்பித்து சில நேரம் கழித்துதான் இவள் ஞாபகம் வரும். பரீட்சைக்குப் போகும் வழியில் பேனா இல்லாத சட்டைப்பையை எதேச்சையாகத் தொட்ட மாணாக்கன் எந்த வேகத்தில் வந்த திசையில் திரும்புவானோ அந்த வேகத்தில் தேடத்துவங்குவேன் அவளை.

ஒன்றரை நொடி கூட ஆகியிருக்காது. சட்டென கண்ணில் சிக்கிப் போவாள் அந்தக் கூட்டத்திலும். அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் இருக்கையிலிருந்து பார்ப்பதற்கு வாகான இடம் ஏதாவது ஒன்றில். காக்காய் உட்கார்ந்து விழுக்காட்டிய பனம்பழம் எல்லாம் இல்லை. இதுபோல பலமுறை. ஒவ்வொரு முறையும் என்னை நானே ஏதாவது சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தேன். அவையெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலாயின என்று உவமை தேடச் சொல்லாதீர்கள் தயவுசெய்து.

இயற்கையும் சில சமயம் பழியெடுக்கும். அமைதியாய் இருந்த சூழலில் திடீரென வீசத்தொடங்கும் காற்றினூடே அவளைப் பார்ப்பது என் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்களிலொன்று. அதிலும், இடக்கண்ணுக்கு, வலப்புறம் வந்துவிட்ட, நான்கு முடிகளை, வலக்கையால், இடக்காதின் பின்புறம் சொருகிவிட்டு, அவள் பாட்டுக்கு, அவள் சிரிப்புக்கு அழகு சேர்க்கத் தொடங்கிவிடுவாள். எனக்கோ இடது மார்பை நோக்கி, நகரத் துடிக்கும் வலக்கையைக் கட்டுப்படுத்த முடியாத கொடுமை பிழிந்துருக்கும்.

கூட வரும் நண்பன் என்னை அழைத்து டேய்.. உன்னோட அப்புச் செல்லம் அங்க இருக்கு என்று கைகாட்டிய நிகழ்வுகளிலெல்லாம், பொங்கிப் பெருக்கெடுத்து ஓடும் பிரவாகம், உள்ளே நிரம்பி கண்களில் வழியும். ஆனால் சமயத்தில், ஏண்டா இப்படி ஊத்தற? என்று பரிகசிக்கும் அளவுக்கு நான் அல்பித்து விடுவதைத்தான் எப்படியாவது தவிர்க்க முயற்சித்து வந்தேன். தனியாக நான் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில், அபர்ணா.. அபர்ணா.. என்று வெவ்வேறு ஸ்தாயிகளில், ஸ்ருதிகளில் சொல்லிப் பார்க்கையில் சிரிப்பு வரும்.இவ்வாறாக மதில் மேல் காதலாக என் கதை ஓடிக்கொண்டிருக்க, ஒருநாள் முன்மாலை நேரமொன்றில் கீழே வருவதற்காக லிஃப்ட்டுக்குக் காத்திருந்தேன். லிஃப்ட் வந்தது. கதவு திறந்தது. உள்ளே யாரும் இல்லை. அவளைத் தவிர. இதுநாள்வரை காலம் செய்து வந்த கொடுமைக்குக் கடவுள் கால்காசுக் கருணையைத் தெளித்துவிட்டார் போலும். சரேலென மனக்கண்ணில் வந்த காட்சியில், என்னைப் போலவே இருந்த தருமியொருவன், ஒரு புற்தரையில் புரண்டு கொண்டிருந்தான். அவனது சட்டையணியாத முதுகில் பனித்துளிகள் பட்டன அப்போது.

அமைதி ஆட்கொண்டிருந்த அந்த ஐந்து சதுர அடி அறுகோணப் பரப்பின் இருவேறு சுவர்களில் சாய்ந்திருந்தோம். என் ஆசைகள் அனைத்தும் செவ்வெறும்புகளாய் தரையில் ஊர்வதைப் போல இருந்தது. சிரமப்பட்டு அவளைப் பார்க்காமலிருக்க முயலுகையில், சுற்றியிருக்கும் எல்லா புறங்களிலும் கண்ணாடி பதிக்க முடிவெடுத்த மகான் மட்டும் என் கையில் கிடைத்தால் அவரை எதில் அடிக்கலாம் என்று என்னால் யோசிக்க முடியவில்லை.

தும்பைப்பூ சுடிதாரிலிருந்த சிறிய வாடாமல்லி நிறப் பூவின் பெயர் என்ன என்றாவது கேட்டுத் தொலைக்க மாட்டேனா? எங்களைக் கடந்து சென்ற ஒவ்வொரு விநாடியும், தனித்தனியாகத் திரும்பி என்னைப் பார்த்து வாய் மேல் ஒரு கை வைத்து சிரிப்பதைப் போல உணர்ந்தேன். பெறாமல் பெற்ற வாய்ப்பு என்பது மாறி, இந்த அவஸ்தை எப்போது முடியும்.. மதியம் கூட சரியாக இருந்த தரைத்தளத்தை பாதாளத்தில் கொண்டு வைத்து விட்டார்களா.. இவ்வளவு நேரமாக இறங்கிக் கொண்டிருக்கிறோம்.. என்றாகி விட்டது.

ஒருவழியாக என் தவிப்புக்கொரு முடிவு கிட்டியது. காற்றின் பகுமுறையியிலில் எங்கள் பார்வைப் பாகைகளும் ஏதோவொரு X, Y-களில் வெட்டிக் கொள்ளத்தான் செய்தன. முதல் முறை இரண்டே நொடிகள். இரண்டாம் முறை பரவாயில்லை. ஒரு நான்கு, ஐந்துக்காவது நீண்டது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை. மெலிதாகச் சிரித்துவிட்டாள். நானும் சிரித்து வைத்தேன். ஆண்டவா நான் வழிகிறேன் என்பதை தயவுசெய்து காட்டிக்கொடுத்து விடாதே என்ற பிரார்த்தனைகள் உள்ளோடின.

அளவான ஒரு ஹாய் சொன்னாள். தமிழா என்றாள். எந்த ப்ராஜெக்ட் என்றாள். எந்த ஊர் என்றாள். ஓரிரு வாக்கியங்களுக்கு மிகாமலிருந்தது உரையாடல். தெளிவான பார்வை. கபடமில்லாத கண்கள். இயல்பான இயல்பு நிலையிலிருந்தாள். துளிகூடப் பதற்றம் தென்படவில்லை. இந்தப் பெண்களுக்கு மட்டும் இது எப்படித்தான் சாத்தியப்படுகிறதெனப் புரியவில்லை.

அந்த இமைகள் ஏன்தான் இப்படி அடித்துக் கொள்கின்றனவோ. பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சிமிட்டல் போல. வலிக்கப் போகிறது. பாருங்கள்.. என்னையும் உயர்வு நவிற்சிக்க வைத்துவிட்டாள். ஆமாம்.. காதலிக்கவே வைத்துவிட்டாளாம். இது எம்மாத்திரம். போனால் போகிறது. கொள்கைதானே.

தரைத்தளம் வந்தது. ஒழுங்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தனர் மக்கள். லிஃப்ட்டில் இருந்த அமைதி லிஃப்ட்டோடு மேலே போய்விட்டிருந்தது. இந்த ஒழுங்கின்மை நான் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியாயிருந்தது. அடைத்து வைத்திருந்த ஏதோ ஒன்று திறந்து விட்டதைப் போலவும் பாரம் குறைந்தாற் போலவுமிருந்தது.

"நான் மெக் டி-க்கு வந்தேன். பசிக்குது. லேட் ஆயிடுச்சில்ல.. கேஃப்டீரியால ஒண்ணும் இல்லை. நீங்க?"

கழுத.. ATM கிடக்கிறது. பின்பு பார்க்கலாம். பொதுக்குழுவையெல்லாம் கூட்டிக் கொண்டிருக்க முடியாது.

"நானும் மெக் டி-க்கு தான் வந்தேன்". பொய்யின் வாசம் எனக்கு மட்டும் அடித்தது. "போறேன்" என்று சொல்லாமல் "வந்தேன்" என்று சொன்ன என் சாமர்த்தியத்துக்கு முதுகில் தட்டிக் கொடுக்கலாம்.

மெக் டி. கண்ணாடிகளால் ஆன கனசதுரமது. மலைக்குள் ஆழ்ந்து கொண்டிருந்த சூரியனின் தகதகத்த இளமஞ்சள் கண்ணாடியைக் கிழித்துக் கொண்டு தரையில் படிந்திருந்தது. என் பாவனைகளில் நிதானமும், ஒரு சராசரி நாளுக்கான தோரணையும் இன்னமும் ஒட்டிக் கொண்டிருப்பதன் ஆச்சரியத்தை வெளிக்காட்டாமலிருந்தேன். ஆளுக்கொரு மெக் வெஜ்ஜி வாங்கிக் கொண்டோம்.

ஹேராமைப் 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டு, அதே சூட்டில் 'அபர்ணா' என்ற பெயருள்ள பெண்தான் மனைவியாக வரவேண்டும் என்று கனவு கண்டு திரிந்ததுக்கும் பலன் இருக்கும் போலதானோ. நிரம்பி வழியாத ரொமான்சும், வீணாய்ப் போகும் அமைதியும் இல்லாமல் ஒருவாறு சாதாரண அளவளாவலாகத்தான் இருந்தது. நானும் சிறிது பேசினேன்.

"ரொம்ப நாளா பாத்துருக்கோம். பட்.. பேசினதுதான் இல்ல.. இல்ல..?" இது அவள்.

"ஆமாம்" என்றேன்.

"உங்ககிட்ட பேசினா ஒண்ணு சொல்லணும்னு நெனச்சுட்ருந்தேன். நீங்க தப்பா நெனக்கலனா சொல்லலாமா..?"

ம்ஹும்ம்.. இதற்கும் நான் அசரவில்லையே. குறிப்பிட்ட ஏதோ ஒரு விஷயத்தைத்தான் அவள் சொல்ல வேண்டுமென்று நானாக எதையுமே எதிர்பார்க்காதவனைப் போல "சொல்லுங்களேன்" என்றேன்.

அவள் திருவாயில் வைத்திருந்த ஒருவாய் பர்கரை விழுங்கியவள், லேசாய் எட்டிப் பார்த்த அந்த ஃபேவரிட் சிரிப்புடன், எண்ணி நான்கு விநாடி கழித்து சொன்னாள்.

"நீங்க விஜய் மாதிரியே இருக்கிங்க.. எனக்கு விஜய்னா ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு?"

இதை சொல்லத்தான் இவ்வளவு பீடிகையா? ஹடிப்பாவி.. உன் ரசனையில் மண் விழ. நான் என்னை மாதிரி இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியென்று இருப்பவனுக்கு ஊரான் படத்தையெல்லாம் ரீ-மேக்கும் ஒருவரைப்போல் இருக்கிறேன் என்று ஒரு காம்ப்ளிமென்ட்டா? கவுண்டமணி மாதிரி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். வேறு யாருமே கிடைக்கவில்லையா? எனக்கு இவளை எவ்வளவு பிடிக்குமோ, அதைவிட அதிகமாய் விஜயைப் பிடிக்காது.

கல்லுளிமங்கன் நான் இப்போதும் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே.

"ஹோ.. இஸ் இட் சோ..? இண்ட்ரெஸ்டிங்..!"

அவளுக்கு பை சொல்லிவிட்டு நடக்கையில், "Opposite Poles Attract" என்ற ஆங்கில சொலவடை ஏனோ நினைவுக்கு வந்ததுடன் எனக்குள் ஒரு பாடல் முணுமுணுக்கத் தொடங்கியிருந்தது.

கண்டேன்.. கண்டேன்.. உயிர்க்காதல் நான் கண்டேன்..!

குறிப்பு: புகைப்படத்தில் நான்தான். கதையில் நானில்லை!

Read more...

Sunday, February 22, 2009

சிக்கனக் கற்பிப்பு

அணைக்கப்பட்டு விட்ட
அடுப்பின்,
கல்சூட்டில் வேகின்றன
அம்மாவின்
கடைசித் தோசைகள்.

Read more...

போட்டி

முந்த,
முந்த,
முந்த,
வந்துகொண்டே
இருக்கின்றன வண்டிகள்.
எல்லோரின் சாலைகளிலும்.

Read more...

பின்னோக்கி நகர்தல்

உலகின்
முதல் தயிருக்குப்
பிறை கொடுத்தவள்
யாருக்குப்
பக்கத்து வீட்டுக்காரி?

Read more...

Sunday, February 15, 2009

பிரிதலின் வன்பிடியுள்எதிர்பாராது சந்திக்க நேர்ந்த
துர்கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகளில்
சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும்
சில்லுகளாய் நம் நேசம்.

போவோர் வருவோரின்
பச்சாதாபப் பார்வைகளின்
ஈரமும் நொதித்துப் போய்விட்டது
நீ கழட்டி வைத்துச் சென்ற காதலில்.

மீமீச்சிறு துகளொன்றின் பெருவெடிப்பில்
வெளி நிரம்பத் ததும்பிய நான்
என்னுள்ளேயே வந்து நிறைகிறேன்
காலத்தின் எல்லாத் துகள்களிலும்
புழுதியாய் மண்டிய உன் நினைவுகளுடன்.

உயிரோசை 16/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

Saturday, February 14, 2009

படித்ததில் ரசித்தது

ஒரு புகைவண்டிப் பயணத்தில், ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜர், ஒரு பாட்டி மற்றும் அப்பாட்டியின் பேத்தி எல்லோரும் சென்று கொண்டிருந்தார்களாம். பயணத்தில், ரயிலானது ஒரு மலையைக் குடைந்த அடிவழிப் பாதையில் சென்றதாம். கும்மிருட்டில் திடீரென்று ஒரு முத்தச் சத்தமும், அதனைத் தொடர்ந்த ஒரு ”பளாரு”ம் கேட்டனவாம்.

பாட்டி நினைத்தாளாம். ‘இந்தப் பையன் நல்லவன மாதிரி இருந்துப்ட்டு பேத்திக்கு அசந்தா நேரமாப் பாத்து முத்தம் குடுத்துட்டானே. ஆனா பரவால்லப்பா. நம்ம பேத்தி நல்ல பொண்ணா இருந்தத்னால உடனே அவன அறஞ்சுப்ட்டா. நல்லா வேணும் இந்தப் புள்ளயாண்டானுக்கு..!’.

பேத்தி நினைத்தாளாம். ‘ஸ்மார்ட்டா இருக்கான் பையன். நல்லா ஒரு முத்தம் வேற குடுத்தான். ப்ச்ச்.. இந்தப் பாட்டி அதுக்காக அவன அறைஞ்சிருக்கக் கூடாதுப்பா..!’.

ப்ராஜக்ட் மேனேஜர் நினைத்தாராம். ‘இவன் கொடுத்த முத்தத்துக்கு இந்தப் பொண்ணு அவசரப்பட்டு என்ன அறைஞ்சுட்டாளே. இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேனோ..!’.

நமது சாஃப்ட்வேர் என்ஜினியர் நினைத்தானாம். ‘ஹைய்யோ.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரே சமயத்துல, ஒரு அழகான பொண்ண கிஸ் பண்ணிட்டு, இந்தக் கடியன அறையவும் முடிஞ்சுதே..!’ என்று.

பொதுவாக ப்ராஜக்ட் மேனேஜர்களைத் தாழ்த்தி, சாஃப்ட்வேர் என்ஜினியர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையான Forwards மின்னஞ்சலில் நிறைய வருமென்றாலும், மேற்கண்டது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஒருவர் முகத்துக்கு முன் கொட்ட முடியாத வெறுப்பு உள்ளே தேங்கித் தேங்கி நிறைகையில், ஏதேனும் ஒரு வகையில் அதற்கான வடிகாலை அதுவே தேடிக்கொள்ளத்தான் செய்கிறது.

Read more...

Thursday, February 12, 2009

உச்சம் அடைதல்

காமித்தும், மோகித்தும்,
தொடர் முங்கல்களில்
முத்திழந்தும் கிடந்த
இரவொன்று

விரல்முனைத்
தொடுதல்களில் தொடங்கிய
சரீர நகர்வுகள்
உயிர்களின் உராய்வுகளானதில்
சிதைவுற்றிருந்தன
முகாந்திரங்கள்

இயங்குதல் நிறுத்திவைக்கப்பட்ட
ஒருசில அணிச்சை நொடிகள்
இருபாலுடற் திரவங்களின்
உச்சகட்ட வீச்சங்களைக்
காட்டக் காத்திருக்கலாம்

ஞாயிறு என்பது கண்ணாக
பாடச் சொன்னாள்
ஏனோ.
நீ பார்த்த பார்வைக்கொரு
நன்றியும் பகர்ந்தேன்
தூங்கிப் போயிருந்தோம்.

Read more...

Saturday, February 7, 2009

இப்படித்தான் இருக்கிறது இன்றைய இளைஞர் சக்தி..!

சமீபத்தில் ஒருநாள், அலுவலக நண்பன் ஒருவன் என்னிடம் மிக ஆவலுடன் அவன் தொலைபேசியில் இருந்த ஒரு ஆடியோ ஃபைலைக் கேட்கச் சொன்னான். ’இருடா இந்த மெயிலை அனுப்பிட்டு வரேன்’ என்றால் கேட்காமல், இப்போதே கேளுங்கள் என்று அடம். சரியென்று நான், அவன், மற்றும் ஒரு நண்பன், அனைவரும் வட்டங்கட்டி உட்கார்ந்து கேட்டோம். அதன் சுருக்கம் பின்வருமாறு:

குறிப்பு: ஆழமான கோவைத்தமிழ் சற்று சிரமமாகவே இருக்கும். பொறுத்துக்கொள்ளவும்.

ஏர்டெல் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்: வணக்கம் ஏர்டெல் அழைத்தமைக்கு நன்றி.

தினேஸ் பாபு: கண்ணு.. வணக்கங் கண்ணு.. நான் தினேஸ் பாபு பேசறங் கண்ணு. நம்ப லைன்லிருந்து அப்பா லைனுக் கூப்ட்டா, எடுக்க மாட்டேங்குதுங் கண்ணு.. கொஞ்சென்னனு பாருங் கண்ணு..

க.கே.எ: உங்க போன்ல இருந்து அப்பா போன் கூப்ட்டா கெடைக்கலிங்ளாங் சார்? (எண்ணை வாங்கிக் கொள்கிறார்).

க.கே.எ: எப்பக் கூப்ட்டீங் சார்?

தி.பா: (பக்கத்திலிருந்தவனைக் கேட்டு..) 12 மணிக்குங் கண்ணு.. அப்பதாங் கண்ணு நம்ப அப்பா ப்ரீயா இருப்பாரு.(பின்னால் சிரிப்புச் சத்தம்).

க.கே.எ: (எண்ணைப் பரிசோதித்து விட்டு) உங்க எண்ல எந்தப் பிரச்சினையும் இல்லைங் சார்.. உங்க சிம்ம வேறொரு போன்ல போட்டு ட்ரை பண்ணிப் பாருங்க..

தி.பா: ஏங்கண்ணு.. சிம் கார்ட்னா.. இந்த அட்டையாட்ட இருக்க்குமுல்ல.. அதானுங் கண்ணு..?

க.கே.எ: ஆமாங் சார். அது தான்.

தி.பா: அதெப்படிங் கண்ணு.. நம்ப சிம்ம வேற போன்ல போட்டா போன்காரவிக சண்டைக்கு வர மாட்டாங்ளா..?

(க.கே.எ, வந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு..)
இல்ல சார்.. நீங்க போட்டுப் பாருங்க.. அப்டியும் வேல செய்யலனா திரும்ப அழைங்க..

தி.பா: கண்ணு.. நம்ப அப்பா செத்தப்பவே போனையும் போட்டுப் பொதச்சுட்டமுங் கண்ணு.. அதுனால எதா பிரச்சினை இருக்குமுங்ளாங் கண்ணு..?

(க.கே.எ ஒன்றும் பேசவில்லை. சில நொடி மௌனத்திற்குப் பின்..)

தி.பா: ஏங்கண்ணு.. நம்ம கூடொப் பேசி இந்தப் பொலப்ப் பாக்றதுக்கு, நீ வேறெதா நல்ல பொலப்ப் பாத்துக்க்லாமுல்ல கண்ணு..

க.கே.எ: (இதற்கு மேலும் அவர் பொறுமையாக..) உங்க எண் பத்தின வேற எதா சந்தேகம் இருந்தா கேளுங்க சார் சொல்றேன்.

தி.பா: வேறொண்ணுமில்ல.. செரி சாப்ட்டியா கண்ணு..?

க.கே.எ: இல்ல சார்.. நீங்க ஏர்டெல் பத்தி கேளுங்க.. பதில் சொல்றேன்.

தி.பா: என்ன கண்ணு நிய்யு..? நம்ம புள்ளையாப் போய்ட்டினு கேட்டா.. செரி உனக்குப் புடிக்க்லினா உட்ரு கண்ணு..

(சிதறும் சிரிப்பொலிகளுக்கு நடுவே, தொலைபேசியில் பதிவு செய்வது நிறுத்தப்படுகிறது).

இதே போல அடுத்த ’ஒலிப்பதி’வில், வேறொரு வாடிக்கையாளர், அவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாததால், வீட்டிலிருந்து பெரியவர்கள் யாரையாவது அழைத்து வரச் சொன்னார்களாம். உங்களால் சற்று வர முடியுமா? என்று கேட்கிறார்.

இன்னுமொரு பதிவில் ஒரு பெண் க.க.ஏ-விடம், ஹலோ ட்யூன் வைக்க வேண்டும் என்றும், தனக்கு ஜெமினி ஜெமினி பாடல் தான் வேண்டும் என்றும், அதை ஒரு முறை பாடிக் காட்ட முடியுமா என்றும் கேட்கிறார், நம் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மற்றுமொரு மேலான 'வாடிக்கையாளர்'.

சுழற்றியடிக்கும் வாழ்க்கையின் சுமையில், கிடைத்த ஏதேனும் ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை கவனிக்கும் கஸ்டமர் கேர் எக்ஸிகியூட்டிவ்களை எண்ணி, உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. இந்தப் பொன்னான உரைக்குக் காரணகர்த்தாக்கள் மரியாதைக்குப் பேர்போன நம் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர்கள்.

இவர்கள் படிக்கட்டும். ஊர் சுற்றட்டும். இல்லை.. டோப்பைப் போட்டு நாசமாய்ப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன? ஆனால் சக மனிதனின் உணர்வுகளை இப்படி அற்ப சந்தோஷங்களுக்காக, வேண்டுமென்றே குத்திக் கூறு போட்டு, அதில் இன்பம் காணும் குரூரம் எங்கிருந்து வந்தது என்றுதான் புரியவில்லை.

வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிவோர், மறுமுனை என்ன பேசினாலும், பொறுமையுடன்தான் பதிலளிக்க வேண்டுமாம். இது அவர்களுக்கு ஒரு விதியாம். ’ஏர்டெல் மற்றும் பல தொலைதொடர்பு நிறுவனங்களால் வாடிக்கையாளருடனான எல்லா உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதால், சேவையாளர் மீறி எதுவும் பேசவும் முடியாது. ஆகவே, வேறு வழியே இல்லாமல் அவர்களின் உணர்வுகளையடக்கிக் கொண்டு பதிலளிக்கிறார்கள்’ என்று வியாக்யானம் வேறு.

அப்படியே எதாவது நடவடிக்கை எடுத்தாலும் அதிகபட்சம் சேவையை நிறுத்துவர். அந்த சிம் கார்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்குவதற்கு எத்தனை நேரம் ஆகப்போகிறது? அதுதான் முக்குக்கு மூன்று ’ஏஜன்சி’கள் இருக்கின்றனவே செல்தொலை பேசி சேவைகளுக்கு.

சரி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றால் ஏற்கெனவே இங்கு சட்ட சிக்கல்கள் மிகக்குறைவு(?!). ஏர்டெல் அதன் வியாபாரத்தைப் பார்க்குமா.. இல்லை.. கேவலம் ஒரு க.க.எ-விற்குப் பரிந்து கொண்டு வழக்குத் தொடுக்குமா?

ஆனால் அந்த சேவையாளரைப் பொறுத்தமட்டில், இந்நிகழ்வு அந்த சமயத்தில் ஏற்படுத்தும் கோபத்தோடு நில்லாமல், இப்படி ஒரு பணியில் தான் இருக்க நேர்ந்துவிட்ட இயலாமையை நினைத்து அவர் தனக்குள் புழுங்கும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து மன அழுத்தமும், உளைச்சலும் இலவச இணைப்புகள் ஆகலாம்.

இதே ரீதியில் சென்றால் நம் மாணவ மாமணிகள், கஸ்டமர் கேர் பெண்களை சினிமாவுக்கோ இல்லை வேறெதற்கோ அழைத்தாலும் வியப்பதற்கில்லை.

சமீபத்தில் சாரு கூட இதே போன்றதொரு கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கித் தமிழகமெங்கும் புகழீட்டிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைப் பாடலொன்று, சென்னையிலிருக்கும் மகளிர் கல்லூரிகள் வரை பிராபல்யம் அடைந்திருந்ததை சுட்டிக் காட்டியிருந்தார்.

சமூகப் பிரச்சினையொன்று வந்தால், அதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்கக் களமிறங்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் மேற்கூறியவை போன்ற கூத்துகளைப் பார்க்கையில், அடுத்த தெருவிலிருக்கும் ஒருவனின் உணர்வுகளை மதியாத இவர்களா, எங்கோ இருக்கும் கண்காணாத சகோதரர்களின் சாவுக்குக் குமுறுகிறார்கள் என்று நம்மை சந்தேகத்திற்குள்ளாக்குவதும் இவர்களேதான்.

ஆங்காங்கு காணக்கிடைக்கும் ஓரிரு அத்திப்பூ விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இக்கால இளைஞர்கள் விவேகானந்தருக்கெல்லாம் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள் என்ற உண்மையின் கசப்பு, நானும் இளைஞன்தானென்ற போதும் என்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகிறது.

Read more...

Friday, February 6, 2009

என் கவிதைகள் கையாலாகாதவை

என் கவிதைகள் கையாலாகாதவை.
முனையில் துருவேறிய குண்டூசிகள் போன்றவை.
சக்திவிரயம் என்று சொன்னாலும்
சுயமைதுனத்திலும் சுகமிருக்கும்.
என் கவிதைளால்
கண்ட சுகம் ஈதென்று எதுவுமில்லை.
எழுதி என்னத்தைக் கிழித்தேன் என்று
கவிதைக்கு வார்த்தை தேடிய வழிகளிலெல்லாம்
தேடிப்பார்த்தும் விளங்கவில்லை.
மிதித்த மலம் மட்டுமே மிச்சமாகிறது.
நேசித்த மரத்தோழிகள் கற்பழிகையில்,
உட்கார்ந்து கவிதையெழுதும் நானொரு நாயேன்.
மற்றும் என் கவிதைகள் கையாலாகாதவை.
தோழிக்குப் பருத்த இரு முலைகளில்லைதான்.
இருந்த ஒற்றை உயிரும்
இருந்தவாறே எரியிலேற,
மரத்த நேயம் தலைக்குள் திரண்டு பாரம் மிக,
ஒன்றுக்கும் ஆகாத இந்தக் கவிதையால்
ஆகப் போவது ஒன்றுமில்லை.
ஆம். என் கவிதைகள் கையாலாகாதவை.

பெங்களூர் Outer Ring Road மற்றும் பல பகுதிகளிலும் சாலை விரிவாக்கத்தின் பொருட்டு இருபுறமும், உயிரோடு எரிக்கப்படும் சில நூறு மரங்களுக்காக.

Read more...

Wednesday, February 4, 2009

சில நொடிச் சிந்தனைகள் சில

கீழிறங்கும் கைப்பிடிகளால்
புலனாகும் புதுவாசல்கள்.
கலவிகளும், கதவுகளும்!

-oOo-

பிரிவின் பொங்குநுரைகளில்
உடைந்து தீரா மொட்டுகளாய்
கடந்த நினைவுகள்.

-oOo-

உன் இறகுகளின் அடர்த்தியில்
இலகுவாகின்றன
என் பாறைகள்.

-oOo-

கிளைகள் கைவிட்ட
சருகுகளுடன்
நதியின் பயணம் இனிதே.

-oOo-

என் ஆறுகள் ஒடிகின்றன
உன் நாணல்களின்
கைகோர்ப்புக்கு.

-oOo-

அவளாய்ப் பெய்யும்
மழைக்கு முன்பே
நானாய் வானவில்.

-oOo-

எழுத்தை
வரைகிறது
குழந்தை.

-oOo-

தூறலிடும் நினைவுகளில்
ஈரமறிகின்றன
நீயில்லா வெம்பரப்புகள்

-oOo-

ஒரு அடைசல் பிரசவத்தில்
ஒன்று மட்டும் பெண்பாலாய்
இட்லியில் அம்மா விரல் முத்திரை.

-oOo-

தரையோடெரியும்
கடைசித்துளி மெழுகுடன்
தீர்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு வாழ்வின் நீட்சிக் கணங்கள்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO