Monday, November 30, 2009

கோவையிலிருந்து சூலூர் வரை!
கடந்த வாரக்கடைசியில் கோவை சென்றிருந்தேன். தோழியின் திருமண விழாவுக்கு அம்மாவுடன் சென்றுவிட்டு, காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தில், எங்களூரான சூலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது வந்தவொரு தனியார் திருப்பூர் பேருந்தில் ஏற முற்படுகையில், "திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.. திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.." என்ற கூவல் கேட்டது.

"ணா.. சூலூர் போறவெங்கெல்லாம் ஏறக்கூடாதாண்ணா.." என்றதற்கு,

"முன்னாடி நிக்கற வண்டீல போயேறிக்கப்பா.. நீயேறி உக்காந்துக்குவ.. அப்பறம் திருப்பூர் டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா" என்று அன்புமிழும் பதிலை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

"யேண்ணா.. நாங்கெல்லாம் காசு குடுக்கறதில்ல..?" நமக்கும் இருக்குமல்லவா ரோஷம்.

"யேறாதனா.. யேறாதப்பா.. போ..!"

இதற்கு மேலும் பேசாதிருந்தால், வாய்கலப்பானது, கை மற்றும் கால் கலப்புகளாகி நான் அடிபடும் (?!) வாய்ப்பு பிரகாசமானது என்று தெரியுமாதலால், என்னை அமைதிப்படுத்தி, அடுத்த பேருந்தைக் கண்டறியும் சீரிய முயற்சியில் அம்மா ஈடுபட வேண்டியதாயிற்று.

சூலூர் டவுன் பஞ்சாயத்து கோவை நகரிலிருந்து, திருப்பூர் செல்லும் வழியில் முதல் 18 கி.மீ தொலைவிலுள்ளது. இரண்டாம் 18 கி.மீ தொலைவில், பல்லடம் நகரும், மூன்றாம் 18 கி.மீ தொலைவில் திருப்பூர் நகரும் உள்ளன. மேலும் உடுமலை, தாராபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் சூலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.

சூலூரிலிருந்து, திருப்பூர் செல்லும் பயணிகளை ஏற்ற எப்படியும் சூலூரில் பேருந்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். சூலூரில் ஏறும் பயணிகள் நின்று கொண்டுதான் திருப்பூர் வரை பயணமும் செய்கிறார்கள். இது இப்படியிருக்கையில், ஒரு 18 கி.மீ மட்டும் நாங்கள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இடமில்லாவிட்டால் சரி. நின்று கொள்கிறோம். இருக்கும் போது ஏன் நிற்க வேண்டும்?

கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம், இறுதி வரை செல்லும் பயணிகள் எந்த ஆட்சேபணையும் காட்டாமல், அடுத்த பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். அதுதான் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறதே. பிரச்சினை துவங்கும் புள்ளி, பண முதலைகளின், காசாசை கொளுந்து விட்டெறிகையில்தான்.

'தனியார் பேருந்துகள்தான் இப்படியா' என்று கேட்டால், 'அரசுப் பேருந்துகளில் இன்னும் மோசமாகத் திட்டுகின்றனர்' என்று சொல்கிறார்கள். என் கல்லூரிக் காலத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியபோது, அமைதியாகத்தான் மறியல் செய்ய அமர்ந்தோம். ஆனால் பேச்சு, வீச்சாக மாறி, சில பல பேருந்துகள், தங்களின் சில பல கண்ணாடிகளை இழக்கும் நிலை வந்த பின், சூலூர் மக்கள் மதிக்கப்பட்டோம். இருக்கும் குரூரத்துக்கு மீண்டும் அவையெல்லாம் விரைவில் நடக்கும் (அ) நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முடிந்த அளவுக்கு காந்தியனாக இருக்கத்தான் நான் முயற்சிக்கிறேன். ஆனால் முகத்திலறைந்தாற் போல் வந்து விழும் வார்த்தைகள், கொள்கைகளைத் தூக்கிக் குப்பைக் கூடையில் குமுறிவிட்டு, "ஒரு கண்டக்டருக்கே இத்தன திமிருன்னா.." என்று கிளப்பிவிடும் எண்ணக் கசடுகளில், காந்தியன் ஹிட்லரியனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எய்தவனைப் பற்றி யோசிக்காமல் அம்பின் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

நான் பரவாயில்லை. நின்று கொண்டு வருகிறேன். முதியவர்கள் என்ன செய்வர்? நகரப் பேருந்தில் செல்லலாம் என்றால், முதலாவதாக எண்ணிக்கையில் அவை குறைவு. இரண்டாவதாக மஃப்சல் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்து நிலையம் ஏறக்குறைய முக்கால் கி.மீ. எல்லோருக்கும் நடக்கக் காலாலாகுமா?

இங்கே கர்நாடகத்தில் பரவாயில்லை. மக்களைக் கொஞ்சமேனும் மனிதர்களாக மதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை தமிழ்நாடு செல்லும் போதும், 'கூடிய வரை இங்கே வரக்கூடாது' என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில்தான் ஒவ்வொன்றும் நடக்கின்றன.

இதையெல்லாம் எண்ணி, எனக்கு வந்த கோபத்துக்கு, மனதுக்குள் எல்லாருக்கும் மரண தண்டனை விதித்து விட்டு, வலையிலும் பதிவித்து விட்டேன். எதற்கும் கையாலாகாத பொதுஜனங்களான நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? சொல்லுங்கள்!

Read more...

Thursday, November 26, 2009

பொய்க்கால் கவிதை

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

Read more...

Wednesday, November 25, 2009

கைசுடும் பிளம்புகளுக்குக் காலநீர் சுரப்புகள்
1. உன் கிறீச்சிடல்களுடன்
நகர மறுத்த என் கால்கள்
அடர் வனமொன்றின் கூதல் மாலை
இருளினுள் ஒளிந்துகொள்ள முற்பட்டும்,

பொதுவாய் சொல்லப்படும்
உதாரணங்களையும் என்மேல் வீசாது
தனியான என் திமிருக்கும்
மதிப்பளிக்கும் உன் வெயில் நேரங்களும்,

பனிப்புலமொன்றின் காலையில் தேநீரின்
வெதுவெதுப்போடு
ஒன்றின் இருண்மை இன்னொன்றில்
நீங்க
நமக்காக.


-oOo-


2. சற்று முன்னர் மாறிவிட்டிருக்கும்
என் சுற்றத்தினுள்
சிரமப்பட்டு நுழைகிறேன்.
கிஞ்சித்தும் யோசிக்காமல்
கலைத்துப் போடுகிறது
காலம் திரும்பவும்.
சமச்சீர் பொதித்த
தினசரியின் போக்கு மாற்றி
பாலையில் தொலைந்த
மணற்துகளாக்கி எனைத்
தனித்து விடுகிறது.
பஞ்சுப்பொதி சேர்த்து வைத்து
உள்ளடங்குகையில்
கூடு முட்காடாகிறது.
எனில் அனைத்தும் அனைவரும்
திரும்பத், திரும்ப
அவ்வாறே இருப்பது
திரும்பத், திரும்ப
அவ்வாறில்லாமல் ஆவதற்கான
காத்திருப்புதானோ.
நீள்கிறது சுழற்சி.


-oOo-

11/02/2009 அன்று எழுதியது.

Read more...

Tuesday, November 24, 2009

Academy Award வசனம் முதல் ஆகாவழி வசனம் வரை!

யதார்த்தமும், கனவுகளும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி புதிர் நிரம்பியதாக உள்ளது. வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் வல்லமை அல்லது காரணியைப் பற்றிய Robert Zemeckis-ன் Forrest Gump திரைப்படத்தின் ஒரு வசனம் வாழ்வோடையின் பல கரைகளில் நினைவுக்கு வருகின்றது. 'இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வாழ்வுக்கும், காற்றிலாடும் இறகு போல கட்டற்று அலையுறும் வாழ்வுக்கும் இடையேதான் அனைவரும் உருண்டு கொண்டிருக்கிறோம்' என்று கூறும் வசனமது.

கடந்த சில மாதங்களாக என் தகுதிக்கும், உழைப்புக்கும் அப்பாற்பட்ட எழுத்தை என்னால் வெளிக்கொணர முடிந்ததை, என்னளவிலேனும் உணர முடிந்தது. 11 மணி நேர அலுவலுக்குப் பின்பு, எழுத்துக்காகவேனும் வாசிப்பு, அதனைத் தொடர்ந்து எழுத்து, வாரமிரு நாள் இசைவகுப்பு மற்றும் நாம சங்கீர்த்தனம், எதிர் காலத்திற்காக முதுகலைப் படிப்பு என்று அசுரத்தனமாகவே வாழ்ந்திருந்தேன்.

ஒரு கட்டத்தில் எதற்காக இப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்ற என் மீதான ஆயாசம், கவனியாது விடப்பட்டிருந்த குடும்பத்தைக் கொண்டு வந்து நினைவு முழுதுக்கும் பரப்பி விட்டது. தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சாதாரணமான ஒரு செண்டிமெண்ட் சினிமா நாயகனின் வாழ்வை, எனதோடு ஒப்பிட, குமுதம் வாசகர்களாலும் கூட ஐந்தாறு வித்தியாசங்களை கண்டறிய முடியாதென்பது திண்ணம்.

இப்படியிருக்கையில், வரும் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டேயிருந்தால், 'தங்கச்சி' திருமணத்தை யார் நடத்துவது? வலைப்பக்கத்தை நிரப்புவதினும் அடர்வு மிகுந்த பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுவதாய் உள்ளே உறுத்தின.

இந்திய மென்பொருள் துறையைப் பொறுத்தவரையில் ஒரு நிறுவனத்திலிருந்து, இன்னொரு நிறுவனத்திற்கு பணி மாறினால் இரண்டு மடங்கு சம்பாத்தியத்துக்கு வழி கிட்டும். அதற்குரிய உழைப்பும், அனுபவமும் முதலீடாதல் மட்டும் அவசியம்.

பார்த்தேன்! வாசிப்பு, எழுத்து, இசை, ஆன்மீகம் என்ற தனிப்பட்ட ஆர்வங்களை சற்று ஆறப்போட்டுவிட்டு, 'உட்கார்ந்து' படிக்கத் துவங்கினேன். காலையில் நேரமே தொலைபேசும் தாக்ஷாயணி எழுப்பி விடுவாள். அம்மா அருகிலில்லாத கவலையில்லை. போலவே கனவுகள் மடித்து வைக்கப்பட்ட கவலைகள் மறக்கடிக்கப்பட சில தணிவுகள் அவளாலேயே சாத்தியப்பட்டன.

ஏகப்பட்ட interviewக்கள்! (Interview க்கு தமிழ் வார்த்தை நேர்முகத்தேர்வு என்று கொண்டால், தொலைபேசி வழியான interviewக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை) பேசினேன். பேசு, பேசென்று பேசினேன். விளைவாய் கையில் 4 வேலை வாய்ப்புகள். எதைத் தெரிவு செய்வதென்று இன்னும் முடிவு செய்யாத நிலையில், இவ்வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

படிப்பு, படிப்பென்று இருந்ததில், சற்று சோர்வு ஏற்படும் போது, ஒரு மாற்றத்திற்காகவேனும், வலையகப்பக்கம் வரத் தோன்றினாலும், என் மன நிலையின் எந்திரத் தன்மையை, இலக்கியார்வம் குறைத்து விடுமோ என்ற பயம் பின்னிருந்ததால், நான் வந்துதான் தூக்கிப் பிடிக்கும் நிலை தமிழிலக்கியத்துக்கு எக்காலத்திலும் வராது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

சொந்தக்கதை எழுதுவது உவப்பில்லாத ஒன்றான போதும், எழுத்துக்கான மனோபாவம் என்னிலிருந்து மிகத் தொலைவுக்கு சென்று விட்டதைப் போன்றிருந்த பிரம்மை தொலையவா, இல்லை.. 'மதன் என்றிங்கே ஒருவன் இருந்தானே.. அவன் என்னவானான்?' என்று எவரேனும் நினைத்திருந்தால், அதற்கு பதில் சொல்லவா என்று தெரியாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சில வாரங்களில், புது நிறுவனத்தில் நுழைந்திருக்க வேண்டும். அங்கே நமக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமலிருப்பதற்கும் 'நன்றியோடு' உழைக்க வேண்டும். எழுத லாயக்குப்படும் என்று தோன்றவில்லை.

'எழுத்தின் அலாதி எல்லோருக்கும் தெரிவதில்லை. தெரிந்தவர்கள் எல்லோராலும் எழுத முடிவதில்லை' என்று ஏதாவது உளுத்துப் போன வசனத்தைப் பேசி, என்னை ஆற்றிக் கொள்வேன். எழுத முடியாவிடின், சத்தமில்லாமல் ஒரு வாசகனாகவேனும் எழுத்தோடு உயிர்த்திருக்க முயற்சி செய்வேன்.

Read more...

Monday, November 23, 2009

சுழலாடி வாழ்வு

நேற்றின் குழிகளுக்குள்
நான் இன்றை
விதைத்திருக்கவில்லை.

நாளைகளின்
மீதான நடுக்கம்
விழித்தே இருக்கிறது.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO