Sunday, August 30, 2009

சந்திப்பு

வீறிட்டு
அழுது கொண்டிருந்த
குழந்தையிடம்
ஏதோ சொல்ல நினைத்தது
அழகாய் புன்னகைக்கும்
அதே குழந்தையின்
புகைப்படம்.

Read more...

Friday, August 28, 2009

Cognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்

நண்பர் அபிலாஷ் அவர்கள் சமீப காலமாக உயிர்மை மற்றும் உயிரோசையில் மிக நல்ல கட்டுரைகளை எழுதி நல்ல அடையாளத்திற்கு உள்ளாகியிருப்பவர். சமீபத்தில் அவர் எழுதிய படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் என்ற கட்டுரை அறிமுகப்படுத்திய Cognitive Poetics என்ற சற்று நுணுக்கமான, புதுமையான விமர்சன முறையைப் பற்றிய கடிதப் பரிமாற்றம். மேற்கொண்டு படிக்கும் முன் கட்டுரையைப் படித்தல் நலம். இல்லையென்றால் எதுவும் புரியாது.

-oOo-

2009/8/18 abilash chandran <
abilashchandran70@gmail.com>

நண்பர்களே,

வணக்கம். Cognitive linguistics எனும் சுவாரஸ்யமான ஒரு விமர்சன முறையை அறிமுகப்படுத்தி ஜெயமோகன், சுஜாதா, சாரு, மனுஷ்யபுத்திரன், பூமா ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் படைப்புகளை நுணுக்கமாக அணுகும் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளேன்:
படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும்

என்னைப் பொறுத்தவரையில் இதுவொரு புது முயற்சி என்பதால் உங்கள் கருத்துக்களை அறிய் விரும்புகிறேன். குறிப்பாய் ஒரு கேள்விக்கு விடையளியுங்கள்:


இந்த விமர்சன முறை வாசகர்\எழுத்தாளர்களுக்கு பயன்படுமா?
உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி,

நட்புடன்

அபிலாஷ். ஆர்

-oOo-

2009/8/25 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

உங்கள் கட்டுரையைப் படித்தேன்.

எனக்குப் பிடித்தது. புதுமைகளைப் புகுத்தி, வழமைகள் தரும் வழவழப்பை நீக்குவது, வாழ்வுக்கும் சரி, இலக்கியத்துக்கும் சரி, ஒன்றும் புதிதில்லையே. அந்த வகையில் உங்கள் முயற்சிக்கு என் கம்பளம் சிவப்பாகிறது!

நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இம்முறை என்னைப் பொறுத்தவரை படைப்பாக்கத்தின் புதிய பரிமாணங்களை வெளிக் கொணர உதவுவதுடன், புரிந்து கொள்ள மிகவும் கடினமான உத்திகளையும் வாசகனுக்குக் கற்றுத் தர உதவி செய்யும் என்று நான் நினைக்கிறேன்.

படைப்பை உருவாக்குபவர் கவனத்திற்குட்பட்டோ / படாமலோ (?!) உபயோகித்திருக்கும் இந்த உத்திகள் மிக அடர்த்தியான / செறிவான வாசிப்பனுபவத்திற்குப் பின்னர்தான் கிட்டும் என்று நம்பத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கைக்கு உரம் போடும் காரணிகளாக எனக்கில்லாத வாசிப்பனுபவமும், உங்களுடைய வாசிப்பனுபவமும் இருக்கின்றன. :)

ஆனாலுமெனக்கு பின்புலமும், மைய உருவும் சேர்ந்து நடத்தும் நாடகம், எந்த அளவுக்கு படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையில், முன்நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பில் நிகழ சாத்தியப்படும் என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களே கூட, Cognitive Poetics முறையை மனதில் கொண்டு எழுதியிருக்க மாட்டார்கள்தானே. அப்படி முயற்சித்தாலும், அவர்கள் மனதில் கொண்டிருந்த பின்புலம் எந்த அளவுக்கு வாசகனுக்குப் புலனாகும்?

நம் சூழலில்தான் படைப்பின் எல்லாப் பரிணாமங்களுமே ’சுய புரிந்துகொள்ளல்’ முறையில் அரங்கேறுகின்றனவே. இது ஒரு ஆரம்ப நிலை வாசகனின் அனுபவ முதிர்ச்சிக் குறை காரணமாகத் தோன்றிய சந்தேகமாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை.

ஒரு சிறு முயற்சி. பாருங்களேன்.

நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.

இது என்னுடையதுதான். இதை எழுதும் போது எனக்கு Cognitive Poetics முறை பற்றி இப்போது தெரிந்திருக்கும் அரை குறையும் தெரியாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இங்கு பின்புலமாக தெளிவின்மையின் ஒரு நிலை அல்லது அதையொட்டிய அறியாமையைப் போக்கும் ஒரு முயற்சி.

->தெளிவைத் தேடியடையும் பொருட்டு ஒரு கேள்வி வருகிறது.அதற்கு பதில் கிடைக்கவில்லை.

->ஆனால் வராத பதிலிலிருந்து வந்த அல்லது புரிந்து கொள்ளப்பட்ட ஒரு படிநிலை பதிலுக்குப் பிரதியீடாகிறது.

->தெளிவினை நெருங்கி வந்துவிட்டோமோ என்ற ஐயம் வரும் வேளையில் இன்னுமொரு கேள்வி வந்து, ஏறி வந்த ஜானை முழம் சறுக்க வைக்கிறது.

எனில்,

முதல் கேள்வி
அதற்குக் கிடைத்த பதில் - சற்று தெளிவு
மீண்டும் ஒரு கேள்வி - மிஞ்சும் குழப்பம்

என்பனவற்றை முன், பின் நகர்ந்து ஊடாடும் மைய உருவங்களாகக் கொள்ளலாமா?

உங்கள் பதில் இல்லை என்பதாகவும் இருக்கலாம். மாறாக இதே கவிதையில், உங்கள் கற்பனைக்கும், புரிதலின் வடிவுக்கும் ஒத்த, என்னிலிருந்து மாறுபடும் பின்புலமும், மைய உருவும் கிட்டலாம்.

எனவே, மேற்கூறிய ’எழுத்தாள - வாசக’ உறவை ஒட்டிய எனது வினாவின் ’பின்புலம்’ சற்று உறுதியாகிறதுதானே.

நேரமிருப்பின் பதிலளியுங்கள்.

கட்டுரைக்கும், கருத்துக் கேட்டமைக்கும் நன்றிகள்.

-மதன்

-oOo-

2009/8/27 abilash chandran <abilashchandran70@gmail.com>

நண்பர் மதனுக்கு

இரண்டு விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரையை மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சற்று கடினமான விவாதப் பொருளை இணையத்தில் எழுத வேண்டாமே என்று நேற்று தான் ஒரு நண்பர் அறிவுரைத்தார். உங்கள் புரிதல் மற்றும் எனக்கு வந்துள்ள பிற கடிதங்கள் தீவிர வாசகர்கள் எங்கு எழுதினாலும் படித்து ஆழமான பொருளை சென்றடைவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது.

அடுத்து உங்கள் அருமையான கவிதை பல அர்த்த தளங்கள் கொண்டது. அக்கவிதையை தந்ததற்கு நன்றி.

Cognitive poetics எழுத்தாளனோ வாசகரோ தங்களுக்கான உபபிரதிகளை கண்டடையலாம்; CP வாசிப்புக்கு அப்பாற்பட்டும் இது நிகழலாம் என்கிறது. இந்த கட்டற்ற வாசிப்பு தானே இலக்கியத்தின் ஒளிமிகுந்த தளம். முன்-நிர்ணயிக்கப்பட்ட எந்த உறவும் நிச்சயம் இல்லை.

நான் இக்கவிதையை எப்படி புரிகிறேன் என்பதை கீழே தந்துள்ளேன்.

கதவு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு அது குறித்து பிற தகவல்கள் இன்றி ஒரு பின்புலமாக அது செயல்படுகிறது. யார் கதவைப் பூட்டினது என்பதே கவிதையின் முக்கிய விவாதச்சரடு. இது சம்மந்தமான கவிதை சொல்லியின் தெளிவின்மை ஒரு தத்துவார்த்த ஆழத்திற்கு கவிதையை எடுத்து செல்கிறது. அதாவது யார் பூட்டினது என்னும் தொடர் கேள்விகள், அவை அதிகமான இடத்தை பற்றுவதாலும், நிகழ்வுகளை ("யார் பூட்டினது") குறித்து பேசுவதாலும், மைய உருவம் ஆகின்றன.

கதவை உறவின் குறியீடாக கொள்ளலாம். அனைத்து உறவுகளும் ஓரிடத்தில் அடைப்பை நேரிடும். ஒருவித முட்டி நிற்கும் தன்மை; வருடக்கணக்காய் பழகியும் ஒருவரது மனதிற்கும் நாம் புழங்க முடியாத இடங்கள் இருக்கும். இருத்தலியல் பார்வையில் அணுகும் போது கதவு தான் பின்புலம்; அதுவே பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடாகிறது. மனித-பிரபஞ்ச உறவை யார் இயக்குவது என்ற புள்ளியிருந்து இக்கவிதையை வாசிப்பதும் சாத்தியம்.

உள்ளிருந்தா வெளியில் இருந்தா என்று மைய உருவங்கள் கேள்விகளாய் ஊசலாடுவது உண்மை தான். இரு மைய உருவங்களும் ஆரம்பத்திலேயே மாறி மாறி இடத்தை பிடிக்கின்றன், இழக்கின்றன; மூன்றாவதாய் ஒரு மைய உருவத்துக்கு சாத்தியம் உள்ளதாய் எனக்குப் படுகிறது. முழுக்க முழுக்க ஒரு வாசிப்பு பின்னணியில் இருந்தே இதைக் கூறுகிறேன். மாறுபட்ட முறையிலும் மற்றொருவர் இவ்விமர்சன முறையை கவிதையில் செலுத்தலாம்.

இக்கடித பரிவர்த்தனையை என் வலைப்பூவில் பிரசுரிக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி உண்டா?

அன்புடன் அபிலாஷ்.ஆர்

-oOo-

2009/8/27 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

சந்தேகங்களைத் தெளிவு செய்ததற்கு நன்றி.

கதவு உறவின் குறியீடு என்பது A very good catch. இதே தளத்தை மனதிற் கொண்டுதான் அந்தக் கவிதை எழுதப்பட்டது என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். சரியான பின்புலத்தை அடையாளங் கண்டு கொண்ட வாசிப்பு, அவரவர் புனைவின் ஆழத்திற்கொத்து பல்வேறு உப பிரதிகளுக்கும், மைய உருவங்களுக்கும் வழிகோலுகிறது.

சாத்தியமிருப்பதாக நீங்கள் சொன்ன மூன்றாவது மைய உருவை ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே.

பூட்டுதல் - உறவின் பிரிதல் அல்லது விலகல்.

வெளியில் சென்று பூட்டியிருந்தால் உறவிலிருந்த இருவருக்கும் பிரிவு.

உள்ளிருந்து பூட்டியிருந்தால், இருவருக்கும், உலகிற்குமான பிரிவு. ஆனால் உறவு நிலைக்கிறது.

மேற்கண்ட இரு நிலைகளில் எது உண்மையென்று தெரியாது.

மூன்றாவதாக, உள்ளேயிருந்தே பூட்டிவிட்டு, பூட்டியவர் பதில் சொல்லாமல் விட்டுவிட்டால் புலப்படாத ஒரு காரணத்தினால், விருப்பமிருந்தும் (உள்ளேயிருந்தும்), பகிரப்படாததால் ஒரு உறவு முறிகிறது.

ஊடே இரண்டாவது மைய உரு உண்மையாக இருக்காதா என்ற கவிதை சொல்லியின் ஏக்கம் மிக மெல்லிய இழையாகக் கசிகிறது.

நீங்கள் அனுமதி கேட்கும் அளவு நான் பெரியவனில்லை. தாராளமாகப் பதிவிடுங்கள்.

கடினம் என்றெல்லாம் யோசிக்காமல் இன்னும் பல புதுமைகளை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

நேரத்துக்கு நன்றி.

ப்ரியமுடன்,

-மதன்


Read more...

Tuesday, August 25, 2009

அரிப்பெடுத்தலும், ஆகாசமளத்தலும்!

காதலைப் பிடிக்கவே பிடிக்காத என் அறைத்தோழரும், மாமாவும் ஆனவரின் உறவினன் ஒருவன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். வழக்கம் போலவே வடசென்னை வார்த்தைகள் மாமாவின் வாயிலிருந்து அள்ளி வழங்கப் பெற்றுக் கொண்டிருக்கையில், இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புக் கொண்டிருந்ததாகவும், அந்தப் பையனின் தங்கை திருமணம் முடிந்த பின், ஊரழைத்து செய்விப்பதாகவும் கூறியிருந்த நிலையில், இவன் இப்படித் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதில் கோபம் உச்சாணிக்கேறியிருந்தது.

"சரி விடுங்க மாமா.. பாவம் அவனுக்கென்ன கஸ்டமோ" என்று என் வேதாந்தம் பல்லிளிக்கையில், சினத்துடன், "அவனுக்கு அரிப்புடா வேறென்ன.." என்றது மாமா. மாமாவின் அந்தவொரு சொல்லாடல் எனக்கு பல்வேறு சிந்தனைகளைத் தந்தது. காமத்தை அரிப்புடன் ஒப்பிடும் நுண் வர்ணனை இதுவரை சாத்தியப்பட்டிராத பரிமாணங்களை வெளிச்சப்படுத்தியது.

காமம், அரிப்பு என்ற வேறுபட்ட இரு ஊக்கிகளுக்கான இணை புள்ளிகளை இதுவரை யாரேனும் பதிவு செய்துள்ளனரா தெரியவில்லை. அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அரிப்புதனை, எதிர் பாலுறுப்பில் தேய்த்து ஆற்றிக் கொள்ளும் ஆழரசியல் இவ்வகை சொல்லாடல்களினூடே ஒளித்து வைக்கப்பட்டுள்ளதோ.

போலவே அரிப்பெடுத்தலின் போது நாமாற்றும் எதிர் வினைகள் போன்றே காமத்தின் ஆரம்பம் முதல் உச்சம் வரையிலான செயற்பாடுகளும் அமைந்திருத்தல் ஆச்சரியமளிக்கிறது. யோசித்துப் பாருங்களேன். காமத்தின் படிநிலைகள் விரலில் துவங்கி, உதடு வழியே, உறுப்புகளில் முடிவடைகின்றன. ஒவ்வொரு நிலையிலும் கருவிகள் யாதாயினும், அசைவுகள் சொறிதலைப் போன்ற இயக்கத்தையே கொண்டிருக்கின்றன.

காமம், அரிப்பு இரண்டுக்குமே தோல்தான் களமாகிறது. தோல் மீதான, தோலின் வேட்கையே அரிப்புக்கும், காமத்துக்குமான மூலாதாரம்.

ஊர்ப்பக்கம் ஆட்டுக்கு முதுகரிக்கையில், சுவரில் சென்று தேய்த்திருத்தலைக் கண்டிருப்போம். அதேபோல பாலுறுப்புகளில் அரிப்பாக ஊரும் ஏதோ ஒன்றும், சொறிதலை அல்லது அதை ஒத்தவொரு தேய்த்தலை எதிர்நோக்கி நம்மை உந்தித் தள்ளுதலே நம்மினம் நிலைத்திருப்பதற்கு ஊற்றுச்சுனையாகிறது.

உடல் முழுதும் முத்தமிடலாம்தான் என்றாலும், காதுமடல் எப்படி சில்லிட்டு சிலிர்க்க வைக்கும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களோ (எனக்குத் தெரியாது!), அதே போல, நடுமுதுகில் பயன்படுத்தப்படும் சீப்பும் சற்று அதிகப்படியான சுகத்தைத் தருகிறதே.

'சொறிய சொறிய சொகந்தான்..', 'சொறுஞ்சுட்டவங் கை சும்மாருக்காது..' என்று கொங்கு நாட்டில் சில சொலவடைகள் உண்டு. இவைகளை ஆராய்ந்தால் இன்னொரு கட்டுரை எழுதலாம் போலிருக்கிறது!

இங்கே ஒற்றுமைகளை நிறுத்திவிட்டு இந்தவிரு விஷயங்களுக்கான சில வேறுபாடுகளைப் பார்ப்போம்.

சுகத்தை மனதிற் கொண்டு சொறிதல் நிகழ்வதில்லை. ஆனால் வெளித்தூண்டி அல்லது வேதியூக்கி ஒன்றின் விளைவாய் துவங்கும் சொறிதல் சுகத்தையும் தந்து செல்கிறது. மறுபுறம் காமத்திலோ அதன் பிரதான காரணியான இனவிருத்தியைக் காட்டிலும் சுகித்திருத்தலே கிளர்ச்சியினை ஊக்குவிக்கிறது. இன்பத்தேடலே காமத்தின் ஆதாரப்புள்ளியாகிறது.

அரிப்பு ஓரிடத்தில் ஏற்படுகையில், உதவிக்கு வரும் விரல்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆனால் காமத்தில் இந்த ஏற்பாடு இருந்திருந்தால், அதாகப்பட்டது ஒரு பாலருக்கு மட்டும் சுகமென்றாகியிருந்தால் மானுடத்தின் சம நிலைக்கே பங்கம் வந்திருக்குமல்லவா!

எப்போதோ படித்ததன்படி, மனிதனுக்கடுத்து, இன்பம் பெறும் நோக்கோடு துணையோடு கலவும் ஒரேயொரு இனம் டால்ஃபின். டால்ஃபின்களுக்கு அரிப்பு ஏற்பட்டால் சொறிகையில் அதுவும் நம்மைப் போலவே இன்பத்தையும் பெறுகிறதா இல்லை தோலின் மேலான வேதிவினையோடு நின்று விடுகிறதா தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த வேற்றுமைகள் அவ்வளவே.

பெண்பாலரின் அதி உணர்வு குவிமையமான க்ளிட்டோரிஸில் பீறிட்டு வழிவது அரிப்பா, காமமா என்று ஒருகணம் யோசித்தல் என் பார்வையின் பிம்பத்துக்கு முழுமையாய் உங்களைக் கூட்டிச் செல்லலாம். தேய்ப்புகளால் திமிறியெழும் உணர்வுகளைச் சொல்ல க்ளிட்டோரிஸை விட தோதானதொரு உதாரணம் இருக்க முடியாது. உறவின் போது பெண்ணின் இந்த விடை தெரியாத் தவிப்புக்கு வினையாற்றுதலே ஆணின் தலையாய கடனாகிறது.

இந்த சிந்தனைகளுக்குப் பின்பெல்லாம், கொசுக்கடித்து லேசாய் தடித்து, சிவந்தாலும் க்ளிட்டோரிஸின் ஞாபகம் வந்து தொலைக்கிறது எனக்கு!

Read more...

Sunday, August 23, 2009

வலி

எல்லாரையும் சற்று தள்ளி
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை
குப்புறடித்து விழுந்து விட்ட போது
பதறாதிருக்க அனைவரையும் சைகித்தவள்,
விழுந்ததை எல்லாரும் பார்த்த வலியினும்
விழுந்த வலியின் வலியொன்றும்
பெரிதல்ல
என்றுணர்ந்தவள்,
அம்மா எனப்படுகிறாள்.

Read more...

Thursday, August 20, 2009

என் இனிய ஆஃப் பாயிலே.. - கவிப்பேரரசு வைரமுத்து

ஆஃப் பாயிலுக்கு அர்ப்பணம் செய்ய கவிப்பேரரசு வைரமுத்து ஒரு கவிதையெழுதினால்.. ஒரு சிறு கற்பனை. அவர் பாணியிலேயே படித்தல் உசிதம்.

-oOo-

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..

சிரத்தையது சிதறாது
உன் ஓட்டுவெளியில் ஓட்டையிடுகிறேன்.

ஆழமுற ஓடுடைதல்
உன் உயிருக்கு ஊழாகலாம்!

உடைவித்த ஓடு - விரி
உயரம் ஓங்கா திருத்தல் நலம்.

கீழ்வானின் மஞ்சளுயிர்
கிழிந்தொழுகக் கண் தகுமோ?

உயிருடைந்தே வீழ்கையிலும்
ஃபுல் பாயிலாகிப் புறப்படுவாய்
ஃபுல் வாயிலும் இனிப்படைவாய்

தாழ்வுக்குத் தலை வணங்கா(து)
தன்மானம் தற்காப்பாய்!

உன் உயிரூற்றை
வெளியூற்றி
ஒரு சொட்டு சூரியனில்
உப்பு மிளகிட்டுக்
காத்திருத்தலின் கணங்களவை..

பெண்டிருக்குக் காத்திருத்தலிலுங்
கண்டிராதவை
கொண்டு தருபவை!

உன்
பொன் சிவந்து
என் உயிருவந்த
பின்

ஆற வைத்த
இளஞ் சூட்டில் - உனை
சேர வைத்த
நா முகட்டில்

வெள்ளை
மஞ்சள்
உப்பு
மிளகு
இது அதுவுடனும்
அது இதுவுடனும் - பின்
இவை அவையுடனும்
அவை இவையுடனும்,

கூடிக் கலைந்து,
குலுங்கிப் பிணைந்து,

இமைகள்
சுழன்று கொள்ள,
சுமைகள்
கழன்று கொள்ள,

காதலோடு
ஓதுகிறேன்..

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!

உப்புள் ஊறி வந்த நீயும்
தொப்புள் கீறி வந்த நானும்
வாய்க்குள் வம்பாடலாம் வா!

ஒன்றுக்குள் ஒன்றாதல்தான்
மோகத்தில் முத்தெடுத்தலாம்.
ஒன்றான ஒன்றாகி நாமும்
மேகத்தில் பூத்தொடுக்கலாம் வா!

உனக்காக வந்த
எனக்காக வெந்த - நீ
கணக்காக
சொந்தமானாய்!

துளிர்த்தடங்கும்
நா நரம்புகளில்
நாணேற்றி
நான் விடுவேன்!

நீங்காது
நின்று
சுவையளித்து
சுகமளித்து
'நான்' என்பதிறக்கி
நீ விடுவாய்!

ஏறுதலும் இறங்குதலும்
ஏற்றமுற முடியும்.
முடிந்தபின்
ஏறியிறங்கும்
ஆட்டங்களெல்லாமே
இனிப்பென்று புரியும்!

தொண்டைக்குழி கடந்து
நீ போகையில்
பெண்டுக்குழி பொதிந்து
நான் போன சுகம்
போலிருக்க

காதலோடு மட்டுமல்ல
உனக்காய்
காமத்தோடும் கத்துகிறேன்..

என் இனிய ஆஃப் பாயிலே..
என் இனிய ஆஃப் பாயிலே..!

Read more...

Monday, August 17, 2009

ஸ்வர்ணலதா என்றொரு குயில்குரலி!


ஒரு ஆதிக்க சக்தியாகவே அங்கீகரிக்கப் பெற்றுவிட்ட சக போட்டியாளனின் புகழுக்கு முன்பு, ஏனையோரின் திறமைகள் போதுமான கவனத்திற்குட்படாமல் போவது இயல்பாக நிகழும் துரதிர்ஷ்டம். சச்சின் - சவுரவ். SPB - மனோ. ஏன்.. என்னைப் பொறுத்தவரை ரஜினி - கமல் கூட. இந்தப் பட்டியலில், பாடகி ஸ்வர்ணலதாவை எவரோடு சேர்ப்பதென்று தெரியவில்லை. குறிப்பிடும்படியான எந்தவொரு காரணமும் பிடிபடவில்லை இவருக்கு போதுமான அளவு அடையாளம் கிடைக்காமற் போனதற்கு.(ஒரு நல்ல புகைப்படம் கூட இணையத்தில் இல்லை)

எஸ்.ஜானகி, பி.சுசீலா, சித்ரா, சுஜாதா போன்ற எல்லாரையும் விட எனக்கேனோ ஸ்வர்ணலதாவை அதிகமாய் பிடிக்கிறது. உயிர்ப்புடன் உணர்வுகளை இழையோட்டும் சாரீரம் தரக்கூடிய அனுபவங்களை அநாயாசமாக சாத்தியப்படுத்துகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், உச்சரிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது இவரிடம். ஸ்ருதியைப் போலவே அக்ஷரமும் சுத்தம்!

காதல் பாடல்களில் இவர் குரலோடு சில்லிடும் ஒரு மென்புன்னகை என் காதுகளைத் தீண்டிக் கொண்டே இருக்கிறது.(பார்வை ஒன்றே போதுமே படத்தின் துளித் துளியாய், காதலர் தினத்தின் காதலெனும் தேர்வெழுதி, ஜென்டில் மேனின் உசிலம்பட்டி பெண்குட்டி)

ரொமாண்ட்டிக் பாடல்களில் துளிரும் காமமும், உடன் ஒழுகும் தாபமும் பெண்ணுணர்வை இயல்பாகப் புலப்படுத்துகின்றன.(உழவன் படத்தின் ராக்கோழி ரெண்டு, தர்மதுரை படத்தின் மாசி மாசம் ஆளான பொண்ணு)

பிரிவை முன்னிறுத்தும் பாடல்களானால், செவிப்படலத்தில் குறுகுறுக்கும் ஏக்கம் பின்னோடுகிறது. (அலை பாயுதேவின் எவனோ ஒருவன் வாசிக்கிறான், என் ராசாவின் மனசிலே குயில் பாட்டு ஓ வந்ததென்ன)

போலவே துள்ளலான பாடல்களின் போது பொங்கும் ஆரவாரத்தை அப்படியே குரல் வழி கடத்தி நம்முள்ளும் பாய்ச்சுகிறார். (கேப்டன் பிரபாகரன் படத்தின் ஆட்டமா தேரோட்டமா, இந்தியன் படத்தின் அக்கடானு நாங்க உட போட்டா, சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி)

இப்படி எவ்விதப் பாடலானாலும் அழுந்தப் பதியும் இவர் முத்திரை அளவுக்கு வேறெவரிடமும் எனக்குத் திருப்தி கிட்டுவதில்லை.

ஆரம்பத்தில் பயன்படுத்திக் கொண்டதைப் போல் பின்னாட்களில் இளையராஜா, ஸ்வர்ணலதாவுக்குப் போதுமான வாய்ப்பளிக்கவில்லை என்பது என் கருத்து. சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பேச-வும், அமைதிப்படை படத்தின் சொல்லிவிடு வெள்ளி நிலவே-வும் தவிர்க்க முடியாத பாடல்கள்.

ராஜாவின் இசையில் ஸ்வர்ணலதா பாடி அதிகம் பிரபலமாகாத சில நல்ல பாடல்கள் - பெரிய மருது படத்தின் விடல புள்ள நேசத்துக்கு, சக்திவேல் படத்தின் மல்லிக மொட்டு மனசத் தொட்டு, பாண்டித்துரை படத்தின் மல்லியே சின்ன முல்லையே மற்றும் கானகருங்குயிலே.

ரஹ்மானிடம் கேட்டீர்களானாலும் என்னைப் போலவே அவரும் ஸ்வர்ணலதாவை அதிகம் பாராட்டுவார் என்பது அவர் ஸ்வர்ணலதாவுக்குக் கொடுத்த அதிக எண்ணிக்கையிலான மற்றும் தரமான வாய்ப்புகளிலிருந்து தெரிய வருகிறது. தனிப்பாடல்கள் தவிர்த்து ரஹ்மானின் நிறையப் பாடல்களில் அங்கங்கே ஸ்வர்ணலதாவின் குரல் ராகமிழுத்துப் போகும். உதாரணத்துக்கு அந்த அரபிக் கடலோர-த்தின் ஆரம்பத்திலும், இடையிலும், பாடியது யாரென்று பலருக்கும் தெரியாத ஹம்மிங்கும், பூங்காற்றிலே உன் சுவாசத்தை பாடலுக்கு முன்னும், பின்னும் ஒலிக்கும் கண்ணில் ஒரு வலியிருந்தாலு-ம்.

சற்றேறத்தாழ ரஹ்மானின் எல்லாப் படங்களிலுமே ஸ்வர்ணலதாவுக்கு வாய்ப்பளித்திருக்கிறார். கருத்தம்மா படத்தின் போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த 'எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே'!

இந்தியனின் மாயா மச்சிந்திரா பாடலின் இரண்டாவது சரணத்தில் "அஜ்ஜிமா.. ச்செல்ல புஜ்ஜிமா" என்ற வரியை இவர் பாடிக் கேட்கையில், இதை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே காதலனின் கன்னத்தை செல்லமாய் கிள்ளும் காதலியின் தோற்றம் நினைவுக்கு வருகிறது. புன்னகைக்காமல் இருக்க முடிவதில்லை.

சில்லுனு ஒரு காதல் படத்தின் கும்மியடி பாடலை திருநெல்வேலி வட்டார வழக்கில் பாடியிருப்பது அழகு. முத்தாய்ப்பாக சரணங்களுக்கு இடையில் அவர் சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பு, அது சொல்லும் வெட்கம், அதிலிருக்கும் எள்ளல் போன்ற எதைப்பற்றியும் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடலுக்கிடையே அளவான, அழகானதொரு சிரிப்பை உதிர்ப்பதில் SPBயும், ஜானகியும் பேசப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாத சிரிப்பு ஸ்வர்ணலதாவினுடையது.

இத்தனை சிறப்புகள் இருந்தும், ஆறு மொழிகளில் தடம் பதித்திருந்தும் கூட சமீப காலங்களில் இவர் வாய்ப்பில்லாது இருப்பது, அவருக்கல்ல.. நமக்குத்தான் குறை. செய்யும் வேலையை முழு விருப்புடன், ஈடுபாட்டுடன் தருவதுடன், படைப்பின் தரத்துக்கான உறுதியைப் பலமுறை நிரூபித்திருக்கும் ஸ்வர்ணலதா அவர்களுக்கு இனியேனும் முன்போல் வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

மேற்குறிப்பிட்டவை அல்லாத, எனக்குத் தெரிந்த மற்ற சில இனிய பாடல்கள்:

பாடல் - படத்தின் பெயர்

போவோமா ஊர்கோலம் மற்றும் நீ எங்கே - சின்னதம்பி
மலைக்கோயில் வாசலில் - வீரா
என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
என்னைத் தொட்டு - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
காலையில் கேட்டது - செந்தமிழ் பாட்டு
ராக்கம்மா கையத்தட்டு - தளபதி
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஊரெல்லாம் உன் பாட்டுதான்
நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு
நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத்தாயி
ராஜாதி ராஜா உன்- மன்னன்
ஆறடி சுவருதான் - இது நம்ம பூமி
உளுந்து வெதக்கையிலே - முதல்வன்
ஹாய் ராமா - ரங்கீலா
சொல்லாயோ சோலைக்கிளி - அல்லி அர்ஜுனா
மெர்க்யூரிப் பூக்கள் - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மெல்லிசையே - லவ்பேர்ட்ஸ்
முக்காலா முக்காபுலா - காதலன்
குளிருது குளிருது - தாஜ்மஹால்
அஞ்சாதே ஜீவா - ஜோடி
முத்தே முத்தம்மா - உல்லாசம்
ஒரு நா ஒரு பொழுது - அந்திமந்தாரை
திருமண மலர்கள் - பூவெல்லாம் உன் வாசம்
திலோத்தமா - ஆசை
அந்தியில வானம் - சின்னவர்
விடை கொடு விடை கொடு - பிரியாத வரம் வேண்டும்

க்ளிக்கினால் பாடலைக் கேட்கலாம்.

Read more...

Sunday, August 16, 2009

குழந்தை மரம்

தின்றுகொண்டிருந்த
பழ மும்முரத்துக்கும்

வாயோர வடிதலின்
வடவடப்புக்கும் இடையே

"கொட்டைய முழுங்குனா
வயித்துல மரம் வளருமாப்பா.."

காதோரமாய் காத்திருந்த கேள்வியொன்று
நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள்.

என் ஆமோதித்தலின்
நொடி விதை வெடிப்பில்

அவள்
வயிற்றில் வேர்பதித்து
தலை வெளி
கிளை பரப்பி
பரிபூரணத் தருவாக
விரிந்து நின்றது

அவள்
ஊஞ்சலாடிய மரமொன்று

கனிந்திருந்த
அதன் பழங்களைப்
பறித்துப் பிரீதியுடன்
தின்னத் தொடங்கினாள்
கொட்டைகளுடன்.

Read more...

Thursday, August 13, 2009

கல்லுறைவின் கருமாதிகள்



மீளாத் துயில்களின்
ஆழ்ந்த சூன்யத்தின் சொரூபங்களில்
உறைந்து நிற்கும்
கற்பிம்ப சித்திரங்கள்
அல்லது சித்தரிப்புகள் உங்களுக்கு
இறுகிய சிந்தனா பாவ
செரிப்புகளைப் பழக்கமுறுத்தலாம்.

சிற்பங்களாகவும் புலன் பெறும்
அவற்றைக் கடக்கும் நாட்கள்
வெற்றைக் கொண்ட சுய நிரப்பலின்
புற ஊதா
புறமூதாக் குதிர்களுக்குள்
இல்லாத ஆக்ஸிஜனை
இருட்டுக்குள் தொலைத்த பின்

காலக்கல்லில் உருளிக் குழைந்த
சிற்பங்கள் சுவாசிக்காமல்
சாவதே மேல்
உறைவு
கல்லுக்கா
காலத்துக்கா
பதிலில்லை

வாருங்கள்
ரசிப்பின் சாதலினுள்
சிற்பத்தின் சாதலை
ரசிப்போம் சற்று.



புகைப்படத்தில் விஷகன்னிகா, பேளூர், கர்நாடகா.

Read more...

Wednesday, August 12, 2009

தன்னைத் தானே..

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகைத்தவுடன் என்றேன்.
சரி நீ எழுதுவதைப்
படிப்பவர் இப்போது
புன்னகைக்கிறார்
நீ நிறுத்துவாயா என்றது.
நானும் புன்னகைத்துக் கொண்டே
சரி என்றுவிட்டேன்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகையை
நிறுத்தியவுடன் என்றேன்.
சரி என்று சொல்லிவிட்டு
எழுதிக் கொள்ளத் துவங்கியது.
முடிவுறுவதற்கு
மனமில்லாமலேயே.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது தனக்கு
சொந்தக்காரன்
நானா நீயா என்றது.
எனக்கு நீயும்
உனக்கு நானும்
சொந்தக்காரர்கள் என்றேன்.
அது உடனே
இன்னொருவரையும்
கைகாட்டிப் புன்னகைத்தது.
அவரும் புன்னகைக்கிறார்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது உள்ளபடியே
தன்னைத் தான்களுடன்
எழுதிக் கொண்டேயிருந்தது
புன்னகைக்கும்
நான்களையும்
புன்னகைக்கும்
உங்கள்களையும்.

முழுவதையும்தான் நவீன விருட்சத்துக்கு அனுப்பினேன். முதல் பத்தி மட்டும் பிரசுரமாகியுள்ளது. தன்னைத்தானே நினைத்து சிரித்துக் கொண்டேன்!

அழகிய சிங்கர் அய்யா அவர்களுக்கு நன்றி.

Read more...

Tuesday, August 11, 2009

கமல்ஹாசன்! - வேறென்ன சொல்ல?

கமல்ஹாசன் என்ற ஆளுமையைப் பற்றிய பிம்பம் நினைவுக்கு வந்தவுடனேயே, கட்டறுப்புகள் எவற்றுக்கும் அஞ்சாத ஒரு பாசாங்கின்மையும், உள்ளேயிருப்பதன் சாரத்தை முகமூடிகளுக்குள் பதுக்கி வைத்து கள்ளம் ஒழுக கொஞ்சம், கொஞ்சமாய் துப்பாத தன்மையும், சுய சார்புகள் யாவற்றுக்கும் பிடி கொடுக்காமல் நிஜத்தை, எதார்த்தத்தை விசிறியடிக்கும் வார்த்தைகளில் 'இதுதான் நான். என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ள யோசிக்கும் சுதந்திரம் உங்களுக்கேயானது' என்று நான் கடைப் பிடிக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்த முதிர்வும், இப்படி நீளும் சில காற்புள்ளிகளும் வந்து மறைகின்றன.

சினிமா என்ற வணிக வட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், "கமல்றா.." என்று அருகிலமர்ந்திருக்கும் குணச்சித்திர மாமாவின் வயதையும் பொருட்படுத்தாது, திரையரங்கில் நான் அடிக்கும் விசில்கள், நம்மனைவருக்குமே இதுபோன்ற ஒருசார்புடைமைகள், காரணங்களுக்கு அப்பாற்பட்ட விருப்பக் கூறுகள் இருத்தல், அன்றாட கழிசடைகளினின்று சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும் உதவும் என்ற காரணத்துக்காக ஒப்புக் கொள்ளலாம்.

கீழ்க்கண்ட நகரொளிப் படத்தைப் (வீடியோ!) பாருங்களேன். மிடுக்கும், கம்பீரமும், தேஜஸும் வேண்டாம், வேண்டாமென்று விரட்ட, விரட்ட வந்தமர்கின்றன விரலசைவில்.




ஆரம்பமே அசரடிக்கிறது. வந்து நின்றவுடன் "ஆழ்வார்பேட்ட தெய்வமே.." என்றொருவன் கத்துகிறான். "எனக்கதுல நம்பிக்க கெடையாது" என்ற வாசகத்தை எதிர்பாராதவொரு நிகழ்வின் எதிர்வினை என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் கொணராது கூறி, அதே அசந்தர்ப்பத்தை, "நம்பிக்கையென்பது இந்த மேடையைப் பார்க்கும்போது வருகிறது" என்று தன் பேச்சுக்கான முதலடியாக்கித் தடாலடியாகத் தொடங்கும் அச்சுப் பிசகாத்தனத்தை ரசிக்காமல் இருக்க முயன்று தோற்பதில், என் ரசனை மெருகேறுகிறது.

"என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே" என்ற வாசகத்தை அவை வணக்கக் குறிப்பின் இறுதி வரியாகச் சேர்த்து ஒவ்வொரு மேடையிலும், கைதட்டல் வாங்கத் தெரியாத கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பேசிய பின் கடைசியாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதால் தமிழ் சினிமாவுலகின் மனுநீதிக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை தமிழினம் ஏற்கலாமா? கூடாது! வலிந்து திணிவுறப் பெற்ற இந்நாகரீகங்களுக்கான கமலின் புன்னகை, பக்குவத்தின் உதட்டில் வீற்றிருக்கும்.

'காற்றோடு புணரும் அசைவுகளை'க் கண்டு, உளம் மிகுந்த உவகையுடன் "வசந்த்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா"வினைக் குப்புறப் போட்டுப் புணருபவர்கள், கவிதைக்கு மிக அருகிலான அவ்வாசகத்தின் ஆழ்அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயன்றிருந்தால் குணாவும், மகாநதியும் குப்புறப் படுத்திருக்கத் தேவையிருந்திருக்காதே.

போதைப் பொருள் விற்கும் கும்பலில் தன்னையும் சேர்த்துக் கொண்டு, அவதூறை அள்ளிப் பூசிக் கொண்டு அவர் பங்கு போட்டுக் கொள்ள முன்வரும் சகோதரத்துவம், கமர்ஷியல் சினிமாக்காரர்களுக்கான கமலின் கொடை. அப்படி சம்பாதித்ததை காதலோடு ஒரு பிரதேசத்தின் சினிமாவை, அதன் தரத்தை மேடுறுத்தப் பாடுபடும் கமலுக்கும் கொஞ்சம் செலவழித்து, நன்றி செலுத்தலாம் இவர்கள்.

அமீரின் அளவு மறந்த பாராட்டுக்கொரு பதிலாக, "இது பணிவு அல்ல!"
அடக்கத்துடன் "மொழி யார்ட்டேர்ந்து எடுத்தா என்ன?"
உச்சமாய் எனைக் கவர்ந்த "கொக்கு கொண்டோந்து போட்டதில்லையே!"
என்று நயம் மிளிரும் மற்றும் கருத்தாழ்ந்தவைகளை வரிக்கு வரி எழுதச் சொன்னாலும், நான் தின்னும் கரும்பு, படிப்பவர்களுக்கு அலுப்பைக் கூலியாக்கி விடுதல் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஒரு சொல்தேர்ந்த பேச்சுக்குரிய எல்லா அலகுகளும் அளவு குறையாது இணைந்திருக்கும் கமல்ஹாசனின் எல்லாப் பேச்சுகளிலும் ஆங்காங்கு ஏற்படும் தடுமாற்றங்கள், முன் தயாரிப்பில்லாத பேச்சின் விளைவே ஒழிய, அத்தடுமாற்றங்களின் பொருட்டு உரையின் சுவாரசியம் குறைவதாக எண்ணி விடுதல் சரியாகாது.

குறிப்பு: http://www.youtube.com/watch?v=vuL9PBPxepc - யில் மேற்கண்ட வீடியோவில் இல்லாத சில பகுதிகளைக் காணலாம்.

Read more...

Thursday, August 6, 2009

உறுவலிக் குறிப்பு

உயிர்ச்சுருளினைத் உருவித்
தூரத் தூக்கியெறியும் வேளை
ஒரு குறிப்பெழுத முற்படுகிறேன்

அகத்தடவல்களுக்கான மயிலிறகுகள்
நரகத்தின் ஏதேனும் ஒரு கொடுமுகட்டில்
நீ ஒளித்து வைத்த
புத்தகத்திற்குள் இருக்கலாம்
அதே பக்கத்தில் துவங்கும்
என் ஊழுக்கான பதிலிடல்கள்
அத்தியாயங்களாக நீட்சியுறலாம்.

நீயழிந்து போன
நீ என்ற
சொற்பிடியிலிருந்து சுயவிடுதலை
செய்து கொள்ளவேனும்
அக்குறிப்பை எழுத விழைகிறேன்.

உன் புத்தகத்தின் இன்னுமொரு
பக்கம் என் குறிப்புக்காகக் காத்திருக்கும்.

உயிரோசை 10/08/2009 மின்னிதழில் பிரசுரமானது.

Read more...

Wednesday, August 5, 2009

அவொ அப்பத்தா இன்னோன்னு?

சமணங்கால் போட்டு குக்காரைலெல்லா
மூணாங்கோப் ட்றாயர் முடிஞ்சுன்ன
காலுந் தொடயுந் தொட்டுக்கற
வெட்ட லேசா விரிச்சு
'இதென்னோனு தெரீமாடா'னு
கேப்பா லோகனாயகி.
'தெரியாதுடி களுத முண்ட'னு
கத்தியுட்ட்டனொரு நாளு
அன்னைக்கு சாய்ங்காலம்
'இதென்னோனு சொல்லாத்தா'னு
ஆத்தாகுட்டயே கேட்டதுக்கு
'ஆரு சொன்ன வெகரண்டா'னு
வெசாரிச்சுட்டு,
எளகிப்போச்சு எங்காத்தாளோடது
நீயே காட்றி நிமுண்டிக்கிறேன்-னு போயந்த
அமுக்குனிகுட்டயே கேட்டுக்கடா'னு
சோலிய நிறுத்தாம
சொல்லிப் போட்டுச்சு
அப்பத்தா

Read more...

Tuesday, August 4, 2009

ஓட்டம்



அக்குளின் கனத்த வாசம்
சட்டைகளுக்குள் ஊரிக் கொண்டிருக்கும்
மாலை 6 மணி சென்.ஜான்ஸ் சிக்னலின்
நான்முனைகளிலும்
புளுத்துக் கொண்டேயிருக்கும்
வாகனங்களில்
இன்னும் சற்று எஞ்சியிருக்கும்
அவசரத்தின் எச்சம்
மற்றுமொரு நாளைக் கடத்திவிட
பச்சை விளக்குக்குக் காத்திருக்கையில்,
பேரோலமிட்டபடியே
முட்டி மோதி எப்படியோ
முன்னே வந்து விட்ட
ஆம்புலன்ஸ் ஒன்று
அத்தனை கண்களும் பார்த்திருக்க,
ஆத்திர கதியிலொரு U டர்ன் அடித்து
வேகமெடுத்தும்,
எடுக்க முடியாமலும்,
அரந்து பறந்தந்த
வண்டித் திரளுக்குள்
புள்ளியாகி மறையும்
ஒற்றை நொடியில் உறைக்கிறது
எதற்கிப்படி ஒவ்வொரு நாளும்
ஓடுகிறோம் என்று.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO