கமல்ஹாசன்! - வேறென்ன சொல்ல?
கமல்ஹாசன் என்ற ஆளுமையைப் பற்றிய பிம்பம் நினைவுக்கு வந்தவுடனேயே, கட்டறுப்புகள் எவற்றுக்கும் அஞ்சாத ஒரு பாசாங்கின்மையும், உள்ளேயிருப்பதன் சாரத்தை முகமூடிகளுக்குள் பதுக்கி வைத்து கள்ளம் ஒழுக கொஞ்சம், கொஞ்சமாய் துப்பாத தன்மையும், சுய சார்புகள் யாவற்றுக்கும் பிடி கொடுக்காமல் நிஜத்தை, எதார்த்தத்தை விசிறியடிக்கும் வார்த்தைகளில் 'இதுதான் நான். என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ள யோசிக்கும் சுதந்திரம் உங்களுக்கேயானது' என்று நான் கடைப் பிடிக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்த முதிர்வும், இப்படி நீளும் சில காற்புள்ளிகளும் வந்து மறைகின்றன.
சினிமா என்ற வணிக வட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும், எத்தனையோ கருத்து முரண்கள் இருந்தாலும், "கமல்றா.." என்று அருகிலமர்ந்திருக்கும் குணச்சித்திர மாமாவின் வயதையும் பொருட்படுத்தாது, திரையரங்கில் நான் அடிக்கும் விசில்கள், நம்மனைவருக்குமே இதுபோன்ற ஒருசார்புடைமைகள், காரணங்களுக்கு அப்பாற்பட்ட விருப்பக் கூறுகள் இருத்தல், அன்றாட கழிசடைகளினின்று சற்றேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும் உதவும் என்ற காரணத்துக்காக ஒப்புக் கொள்ளலாம்.
கீழ்க்கண்ட நகரொளிப் படத்தைப் (வீடியோ!) பாருங்களேன். மிடுக்கும், கம்பீரமும், தேஜஸும் வேண்டாம், வேண்டாமென்று விரட்ட, விரட்ட வந்தமர்கின்றன விரலசைவில்.
ஆரம்பமே அசரடிக்கிறது. வந்து நின்றவுடன் "ஆழ்வார்பேட்ட தெய்வமே.." என்றொருவன் கத்துகிறான். "எனக்கதுல நம்பிக்க கெடையாது" என்ற வாசகத்தை எதிர்பாராதவொரு நிகழ்வின் எதிர்வினை என்பதற்கான எந்தவொரு அடையாளத்தையும் கொணராது கூறி, அதே அசந்தர்ப்பத்தை, "நம்பிக்கையென்பது இந்த மேடையைப் பார்க்கும்போது வருகிறது" என்று தன் பேச்சுக்கான முதலடியாக்கித் தடாலடியாகத் தொடங்கும் அச்சுப் பிசகாத்தனத்தை ரசிக்காமல் இருக்க முயன்று தோற்பதில், என் ரசனை மெருகேறுகிறது.
"என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே" என்ற வாசகத்தை அவை வணக்கக் குறிப்பின் இறுதி வரியாகச் சேர்த்து ஒவ்வொரு மேடையிலும், கைதட்டல் வாங்கத் தெரியாத கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பேசிய பின் கடைசியாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதால் தமிழ் சினிமாவுலகின் மனுநீதிக்கு ஒரு இழுக்கு ஏற்படுவதை தமிழினம் ஏற்கலாமா? கூடாது! வலிந்து திணிவுறப் பெற்ற இந்நாகரீகங்களுக்கான கமலின் புன்னகை, பக்குவத்தின் உதட்டில் வீற்றிருக்கும்.
'காற்றோடு புணரும் அசைவுகளை'க் கண்டு, உளம் மிகுந்த உவகையுடன் "வசந்த்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா"வினைக் குப்புறப் போட்டுப் புணருபவர்கள், கவிதைக்கு மிக அருகிலான அவ்வாசகத்தின் ஆழ்அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இயன்றிருந்தால் குணாவும், மகாநதியும் குப்புறப் படுத்திருக்கத் தேவையிருந்திருக்காதே.
போதைப் பொருள் விற்கும் கும்பலில் தன்னையும் சேர்த்துக் கொண்டு, அவதூறை அள்ளிப் பூசிக் கொண்டு அவர் பங்கு போட்டுக் கொள்ள முன்வரும் சகோதரத்துவம், கமர்ஷியல் சினிமாக்காரர்களுக்கான கமலின் கொடை. அப்படி சம்பாதித்ததை காதலோடு ஒரு பிரதேசத்தின் சினிமாவை, அதன் தரத்தை மேடுறுத்தப் பாடுபடும் கமலுக்கும் கொஞ்சம் செலவழித்து, நன்றி செலுத்தலாம் இவர்கள்.
அமீரின் அளவு மறந்த பாராட்டுக்கொரு பதிலாக, "இது பணிவு அல்ல!"
அடக்கத்துடன் "மொழி யார்ட்டேர்ந்து எடுத்தா என்ன?"
உச்சமாய் எனைக் கவர்ந்த "கொக்கு கொண்டோந்து போட்டதில்லையே!"
என்று நயம் மிளிரும் மற்றும் கருத்தாழ்ந்தவைகளை வரிக்கு வரி எழுதச் சொன்னாலும், நான் தின்னும் கரும்பு, படிப்பவர்களுக்கு அலுப்பைக் கூலியாக்கி விடுதல் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
ஒரு சொல்தேர்ந்த பேச்சுக்குரிய எல்லா அலகுகளும் அளவு குறையாது இணைந்திருக்கும் கமல்ஹாசனின் எல்லாப் பேச்சுகளிலும் ஆங்காங்கு ஏற்படும் தடுமாற்றங்கள், முன் தயாரிப்பில்லாத பேச்சின் விளைவே ஒழிய, அத்தடுமாற்றங்களின் பொருட்டு உரையின் சுவாரசியம் குறைவதாக எண்ணி விடுதல் சரியாகாது.
குறிப்பு: http://www.youtube.com/watch?v=vuL9PBPxepc - யில் மேற்கண்ட வீடியோவில் இல்லாத சில பகுதிகளைக் காணலாம்.
7 மறுமொழிகள்:
அருமையான இடுகை!
Youtube-லும் போய் பார்த்து விட்டேன். அந்த எள்ளலும், பகடியும் கமலுக்கு தானாக வருகிறது.
அருமை மதன்.. உங்கள் ஆழ்ந்த சினிமா அறிவும் கமலின் புலமையைப் புரிந்து கொண்ட ஆழத்தையும் நான் ஏற்கெனவே உங்கள் ஹே ராம் விமர்சனத்தில் வியந்துள்ளேன்..
மீண்டும் ஒரு அருமையான கட்டுரை..
சுருங்க சொல்லின் கமல் ஒரு உலக நாயகனே.. அவரது ஆளுமைய்ல் கவரப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதே எனக்கு மிகப்பெருமை..
ரொம்ப நல்ல பகிர்வு மதன். கமல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை, இதில் எந்தச் சந்தேகமுமில்லை.
அவரது பேச்சுக்களைப் போல அவர்து பேட்டிகளும் சுவாரசியமானவை. முன்பு தீராநதி தொடங்கிய காலங்களில் அதில் ஒரு பேட்டி கொடுத்தார். அது போல அவர் ஆனந்த விகடனில் கொடுத்த பேட்டிகளும் மிகவும் சிறப்பாக இருந்தன. இது தவிர விருமாண்டி திரைப்பட வெளியீடு தொடர்பான பேட்டிகளும் சிறப்பாக இருந்தன.....
ஒரு முறை விழாவில் “நன்றி மறந்த தமிழர்களே” என்று தொடங்கி விட்டு, இங்கு பேசியவர்கள் எல்லாரும் “தாங்க் யூ” என்று ஆங்கிலத்தில் தான் சொன்னார்கள் அதனால் தான் நன்றி மறாந்த தமிழர்களே என்றேன் என்றார்...
நன்றி ஜோ.
நன்றி லோஷன்.
நன்றி யாத்ரா.
ஆம் அருண்மொழி.. கமல் பேட்டிகளும் அப்படித்தான். நாம்தான் யூட்யூபின் எந்தவொரு கமல் பேட்டியையும் விட்டு வைப்பதில்லையே.
நீங்கள் கூறியபடி விருமாண்டி பற்றி கிருஷ்ணசாமி என்ற ஒரு 'அரசியல்வாதி'க்கு பதில் சொல்லியிருப்பார் பாருங்களேன். அதுவும் ஒரு அசத்தல் பேட்டி!
மதன், நீங்கள் கொடுத்துள்ள லிங்க் ( http://www.youtube.com/watch?v=vuL9PBPxepc) தற்போது வேலை செய்யவில்லை. வேறு எங்கும் கிடைக்குமா?
Post a Comment