Wednesday, April 28, 2010

பெரியது கேட்பின்..

நீ பெரிதா
நான் பெரிதா
என்பதிலல்ல.
உன்னுடைய நான் பெரிதா
என்னுடைய நான் பெரிதா
என்பதில்தான்
எல்லாம்.

Read more...

Monday, April 26, 2010

தற்கொலைப் பிரியங்கள்


பிரியங்களைப் புதைத்து வைக்கும் பூங்காக்கள்
பிரியங்களைப் பூட்டி வைக்கும் கதவுகள்
பிரியங்களைப் பிரித்து வைக்கும் தீர்ப்புகள்
பிரியங்களை உடைத்து விடும் அனுமானங்கள்
பிரியங்களால் உடைந்து விட்ட தன்மானங்கள்
பிரியங்களை உருக்கி விடும் வார்த்தைகள்
பிரியங்களை எரித்து விடும் சந்திப்புகள்
பிரியங்களைச் சிதைத்து விடும் சந்தேகங்கள்
பிரியங்களைக் கிழித்து விடும் வாக்குவாதங்கள்
பிரியங்களில் விரிசலிடும் கடிதங்கள்
பிரியங்களை அசைத்து விடும் போட்டிகள்
பிரியங்களைக் கசக்கி விடும் பருவங்கள்
பிரியங்களைச் சுருக்கி விடும் போதைகள்
பிரியங்களை இறுக்கி விடும் பயணங்கள்
பிரியங்களைத் தொலைத்து விடும் பரஸ்பரங்கள்
பிரியங்களைக் கலைத்து விடும் முத்தங்கள்
பிரியங்களைப் பிய்த்து விடும் சுயங்கள்
பிரியங்களைத் தவற விடும் இச்சைகள்
பிரியங்களைப் பிளந்து விடும் ஆத்திரங்கள்
பிரியங்களை மூழ்கடிக்கும் புரிதல்கள்
பிரியங்களைச் சாய்த்து விடும் பிடிவாதங்கள்
பிரியங்களை நிறுத்தி விடும் முரண்பாடுகள்
பிரியங்களை இழந்து விடும் தோள்கள்
பிரியங்களைக் கவிழ்த்து விடும் ஆசைகள்
பிரியங்களை நொறுக்கி விடும் இயலாமைகள்
பிரியங்களைப் பிழிந்து விடும் கடமைகள்
பிரியங்களை ஒடித்து விடும் நீகள்
பிரியங்களைத் துரத்தி விடும் நான்கள்
பிரியங்களைக் கொன்று விடும் நாம்கள்
யாவற்றையும் விட

பிரியங்களால்
தற்கொலையுண்ட
பிரியத்தின்
ரணமே கொடிதாகிறது


நன்றி: பனிமுலை

Read more...

Friday, April 23, 2010

பாடும் நிலா பாலு.. பாட வந்த கதை!


AMIE படித்துக் கொண்டிருந்த இளைஞரான SPBக்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவு. சுமார் 17 வயதில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார் அவர். தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் அந்தப் போட்டியில் முதல் பரிசு வென்றிருந்த SPBக்கு அது மூன்றாம் வருடம். இந்த வருடமும் அவருக்கே கொடுப்பதா என்ற அயற்சியா, இல்லை வேறேதேனும் உள்ளரசியலோ தெரியவில்லை.. முதற் பரிசு வேறொருவருக்கும், இரண்டாம் பரிசு SPBக்கும் தரப்படுகிறது.

பரிசளிப்பு விழாவுக்கு வந்த பாடகி S.ஜானகி அவர்களின் முன் வெற்றி பெற்ற இருவரையும் பாடச் சொன்னபோது, இரண்டாம் பரிசு பெற்ற பையன்தான் நன்றாகப் பாடினான். அவனுக்குதானே முதற் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்று மைக்கிலேயே கடிந்து கொள்கிறார் ஜானகி. சினிமாவில் முயற்சிக்க வேண்டியதுதானே என்று கேட்கும் ஜானகியிடம், இல்லை அதெல்லாம் எனக்கு சரி வராது. நான் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்று கூறும் SPBயிடம், நானும்தான் சங்கீதம் கற்றதில்லை.. பாடவில்லையா? முயற்சி செய்தால் பாடலாம் என்று கூறுகிறார் ஜானகி.

சரியென்று சில தயாரிப்பாளர்களை அணுகும் SPBயிடம், வாய்ஸ் இன்னும் மெச்சூராகவில்லை. இன்னும் சில காலம் ஆகவேண்டும் என்ற பதில் தரப்படுகிறது. சரி இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று படிப்பை கவனிக்கத் துவங்குகிறார் SPB.

இந்நிலையில் சென்னை ஆந்திரா கிளப்பில் தேசிய அளவிலான இசைப் போட்டியொன்று நடக்க, அதில் SPBக்குத் தெரியாமல் அவருடைய அறைத் தோழர் 10 ரூபாய் கட்டிப் பதிவு செய்துவிடுகிறார். சினிமாப் பாடல்களைப் பாடக்கூடாத போட்டியது. வேறு பாடல்களேதும் தெரியாததால், அவரே தெலுங்கில் ஒரு பாட்டெழுதி, ஒரு ட்யூனையும் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார் விளையும் பயிர் SPB.

ஆல்ஃபபெட்டிகல் வரிசையில் Aவில் யாருமில்லாமலிருக்க, பாலுதான் முதல் போட்டியாளர். கண்டசாலா மாஸ்டர், நாகேஸ்வர ராவ், தட்சிணா மூர்த்தி முதலிய நடுவர்களின் முன்பு கண்ணை மூடிக் கொண்டு பாடிவிட்டு வந்து அமர்ந்து விடுகிறார் SPB.

குள்ளமான, வெளுத்த மனிதரொருவர், அவரிடம் வந்து சினிமாவில் பாடுகிறாயா என்று கேட்கிறார். அம்மனிதர் தன்னை கிண்டல் செய்கிறாரென்று நினைக்கும் SPB எழுந்து கூட நிற்காமல், சினிமாவில் பாட எனக்கு விருப்பமில்லை. இங்கே பாடிவிட்டால் சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடுமா என்று கேட்கிறார். நான் சான்ஸ் தந்தால் பாடுகிறாயா என்று கேட்கிறார் அந்த மனிதர். பின்னர்தான் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர் போலிருக்கிறது என்று உணர்கிறார் SPB.

அதன்பின் தன் பெயர் கோதண்டபாணி என்றும், தான் 4 படங்களுக்கு இசையமைத்திருப்பதாகவும் கூறும் அவர், தயாரிப்பாளரிடம் SPBயை அழைத்துச் செல்கிறார். குரல் இன்னும் சற்று அமெச்சூராக இருப்பதால் ஹீரோவுக்கும் பாட வைக்க முடியாது, குழந்தைக்கும் பாட வைக்க முடியாது.. பிறகு பார்ப்போமே என்ற பதில் கிடைக்கிறது மீண்டும். முதலிலேயே This is not my cup of Tea என்றிருக்கும் SPB தன் தொலைபேசி எண்ணைக் கூடத் தராமல் வெளியேறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எப்படியோ அலைந்து திரிந்து SPBயை அவரின் கல்லூரியில் கண்டுபிடித்து விடுகிறார் கோதண்டபாணி. பாடல் ரிகர்சலெல்லாம் நடக்கிறது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. 2 மணிக்கு விஜயா கார்டன்ஸில் ரெக்கார்டிங். ப்ரொடக்ஷன் காரனுப்புகிறோம் வந்துவிடுங்கள் என்கிறார்கள் கடைசியாக.

இருந்த 3 செட்டுத் துணியில் பிடித்ததான வெள்ளை பேண்ட் சட்டையைப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறார் SPB, நண்பர் முரளியுடன். (இன்றும் SPBயின் ஸ்டுடியோவில் அசிஸ்டண்ட் ரெக்கார்டிஸ்டாகப் பணிபுரிகிறார் இந்த முரளி) மணி நாலாகியும் வண்டி வரவில்லை. நாம் பாடியது பிடிக்கவில்லை. அதனால்தான் வண்டி வரவில்லை என்றெண்ணும் SPB சட்டையைக் கழட்டப் போக, எதற்கும் ஒரு முறை ஸ்டுடியோவுக்குச் சென்று பார்க்கலாம் என்று முரளி வற்புறுத்த, சைக்கிளில் கிளம்புகிறார்கள் இருவரும்.

விஜயா கார்டன்ஸ் வாசலில் கூர்க்கா க்யா ச்சாயியே என்று முறைக்கிறார். இல்லை இவன் பாடணும் என்று முரளி SPBயைக் கைகாட்ட, ஏண்டா இங்க எல்லாரும் நடிக்கணும்னு வந்து ஏமாத்தறானுங்க. நீங்க பாடணும்ங்கிறீங்களா? போய்ப் படிக்கற வேலையப் பாருங்கடா என்று கூர்க்காவிடம் வசவு வாங்குகையில் கண்களில் நீர் முட்டுகிறது SPBக்கு.

இல்ல சார் இந்தப் பையன் வேணா இங்கயே இருக்கட்டும். ரெண்டு சைக்கிளும் இங்கயே இருக்கட்டும். நான் உள்ள போய் ப்ரொடக்ஷன் ஆளக் கூட்டி வரேன். அப்றமாவது அனுப்புங்க சார் என்று கெஞ்சும் முரளி, பலத்த யோசனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார். பின்னர் நிஜமான ப்ரொடக்ஷன் ஆள் வந்து சொன்ன பிறகு SPB உள்ளே கூட்டிச் செல்லப்படுகிறார்.

வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று கோபப்படுகிறார் கோதண்டபாணி. அதன்பின் தான் அனைவருக்கும் தெரிய வருகிறது. அவர்கள் அனுப்பி வைத்த கார் ஒரு விபத்தில் சிக்கி காவல் நிலையத்தில் இருப்பது.

ரெக்கார்டிங் போகும் முன், தயரிப்பாளர் பத்மனாபன் SPBயிடம் தம்பி நல்லாப் பாட்ற.. மைக்ல கேக்கும் போது ஒருவே…ள எங்களுக்குப் பிடிக்காமப் போனா கண்டசாலா மாஸ்டர வச்சு டப் பண்ணிக்கிறோம்.. என்கிறார். போகும்போதே இப்படி சொல்லிவிட்டாரே என்று அரை மனதோடேயே செல்கிறார் SPB.

Cubicle வசதிகளில்லாத நாட்களவை. குறைந்தது நாற்பது லைவ் ஆர்ட்டிஸ்ட்களிருக்கும் ஒரே ஹாலில் முதல் பிட் பாடவேண்டும். அது முடிந்த பின்னர் கட் செய்து, அடுத்த பிட் எடுக்க வேண்டும். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு முதல் பிட்டைப் பாடுகிறார் SPB.

அடுத்த பிட்டுக்கு போகும் முன் ரிசல்ட் வந்தாக வேண்டும். உள்ளேயிருந்து இப்போதுவரை எந்த செய்தியும் இல்லை. உடன் பாடிய சுசீலா அவர்கள் நல்லாப் பாட்ன தம்பி.. அநேகமா இன்னொரு டேக் எடுக்கறதுக்கு யோசிக்கறாங்க போலிருக்கு என்கிறார். நொடிக்கு நொடி டென்ஷன் எகிறுகிறது நம்மாளுக்கு.

திடீரென்று எல்லோரும் உள்ளே வந்து இந்த் டேக் ஓகே.. நல்லாப் பாட்னப்பா.. என்கிறார்கள். 150 ரூபாய் சம்பளப் பணம் தரப்படுகிறது SPBக்கு.

இதுதான் 3 மாநிலங்களில், 30 வருடங்களில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் பொருந்திய ஒரே ஒரு குரலின் அசாத்தியம் நிகழக் காரணமாக இருந்த கதை.

குரலைக் காப்பாற்றுவதற்காக நிகழும் மெனக்கெடல்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் எந்த விதமான முயற்சிகளுமில்லாமல், ஐஸ் வாட்டர், தயிர், கூல் ட்ரிங்க்ஸ்.. ஏன்.. முப்பது வருடமாக புகைப்பழக்கம் கூட இவர் குரலை ஒன்றும் செய்யவில்லை என்பது சாமி சத்தியமாக அதே சாமியின் அருளேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்கிறார் SPB. வேறென்னவாகவுமே இருக்க முடியாது என்று நானும் நம்புகிறேன். பொறாமையுடன்.

தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பிடித்த, மிகச்சில ஆளுமைகளுள் ஒருவர். இத்தனை திறமையிருந்தும், அத்தனை புகழிருந்தும், எத்தனையோ பணமிருந்தும், தலைக்கனமில்லாமல், எளிமையே உருவாய் இருப்பதற்கு நான் ஆதர்ஷமாகக் கருதும் இருவரில் ஒருவர்.

இன்னொருவர் AR Rahman!

Read more...

Wednesday, April 21, 2010

சில கவிதைகள்..

ஒட்டாமல் கேட்டல்













கிடைக்காமல் லைனில் கிடைத்த
யூஸரிடம் சற்று தள்ளி
தொலைபேசிக் கொண்டிருக்கிறான்
சக அலுவலன்
விடாமல்
வைப்ரேட்டிக் கொண்டிருக்கும்
அவனது அலைபேசி யதிர்வில்
கேட்டன
நடுவழியலையில் பொறிந்துதிர்ந்த
ஏதோ
யாரோ
வார்த்தைகளின்
சாம்பல் சத்தங்கள்

-0-

இடம் பொருள் கேவல்









எப்படியோ கையில் கிடைத்துவிட்ட
பிளேடைக் கீழே வைத்துக்
கிர்ர்றீச்சி விட்டாள்
குழந்தை
பல் கூசிவிட்டதாம்
பில்லிங் கவுண்ட்டரில்
எல்லோர் முன்பும்
அசிங்கமாகத் திட்டினார்
வளர்ந்தவர்
நா கூசவில்லையாம்

-0-

நீள் மௌனம்













நான் இங்கே தனியாக இருந்தேன்
அவள் அங்கே தனியாக இருந்தாள்
எங்கள் தனிமைகள்
புணர்ந்து கொண்டிருந்தன


நன்றி: பனிமுலை

Read more...

Wednesday, April 14, 2010

பால்யத்திலிருந்து, பாலியம் வரை.. சில சிரிப்புகள்!

அப்பொழுது 6ஆம் வகுப்பா, 7ஆம் வகுப்பா என்று சரியாக நினைவிலில்லை. பள்ளி இலக்கிய மன்ற விழாவில் தமிழாசிரியை எழுதிக் கொடுத்த 'நாளைய பாரதம், நவமணிப் பூ ரதம்!' என்ற கட்டுரையை உணர்ச்சி பொங்கப் படித்துக் கைதட்டல் வாங்கிய ஆர்வத்தில், தமிழைத் தவிர வேறெதையும் சிந்திக்காமலும் இருந்தேன்.

பல்வலி என்று மருத்துவரிடம் அழைத்து சென்றிருந்தார்கள்.

சிகிச்சை முடிந்த பின் டாக்டரிடம், "டாக்டர்.. நீங்க ஒரு பல்துறை வித்தகர்" என்ற வாசகத்தை, 'பல்'லென்பதை மட்டும் நன்றாக அழுத்திச் சொல்லிவிட்டு அதையே காட்டி சிரித்தேன்.

வாய்விட்டுச் சிரித்த டாக்டர் என் வாழ்வின் முதல் ஃபாரின் சாக்லேட்டைப் பரிசளித்தார்.

-0-

அப்போதெல்லாம் பள்ளிக்கு CEO வருகிறாரென்றால் ஒரே தடபுடல்தான். ஆளாளுக்கு ச்சார்ட்டெழுதுவது, வகுப்பறைகளில் ஒட்டுவது என்றெல்லாம்.

அது போன்றதொரு காலகட்டத்தில், எதையோ பற்றிப் பேச தலைமையாசிரியர் அறைக்குச் சென்ற தமிழாசிரியர், உடன் என்னையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

பேசிக்கொண்டிருக்கும்போது எதிர்பாரா சமயத்தில் CEO வந்துவிட்டார். அப்படி வந்து சோதிப்பதுதானே அவர் பணி.

கல்வி சம்பந்தமானவை தவிர இதர பணிகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சைகளிருந்த காலமது.

"இவர் தமிழாசிரியர்.. இவர் யார்..?" என்று என்னைக் கைகாட்டியவாறே குறுகுறு பார்வையுடன் பார்க்கிறார் CEO.

சிறியது என்று குறிப்பிடும் தொனியில் கைகளை வைத்து "இவர் தமிழா-சிறியர். நல்லாப் படிப்பார்" என்று கூறிய தமிழாசிரியரின் அங்கதத்தை CEO ரசித்துச் சிரித்தார். தலைமையாசிரியர் பயந்தெளிந்து சிரித்தார். நான் வெட்கித்து சிரித்தேன்.

-0-

கல்லூரிக் காலங்களில்தான் எத்தனை லூட்டிகள்.

எப்போது பார்த்தாலும் வள் வள்ளென்று விழுந்து கொண்டே இருப்பார் ஒரு சார்.

பார்த்தான் பரத் ஸ்றீனிவாசன்!

எங்கள் கல்லூரி பார்க்கிங் ஏரியாவின் நடைபாதையில் வைத்திருந்த No Parking போர்டில் டைகர் பிஸ்கட் விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சனிக்கிழமையாகப் பார்த்து அதை லவட்டிக் கொண்டு வந்து, Parking என்ற வார்த்தையில் இருந்த Pஐ Bயாக மாற்றியதோடு, ஸ்டாஃப் ரூமில் குறிப்பிட்ட அந்த சார் அமருமிடத்தில் வைத்துவிட்டான்.

மேசை மேலொரு டைகர் பிஸ்கட் பேக்கட்டும்!

-0-

அலுவலகத்தில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பிரேக்.

காஃபியருந்திக் கொண்டிருக்கையில், தொலைவில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை மிகப் பிடித்து விட்டது நண்பன் ஹரிக்கு.

கல்லூரியில் இருந்து கார்ப்பரேட்டுக்குள் நுழைந்திருக்கும் பால் மணம் மாறா பாலகர்கள் ஹரியும், அஷ்வினும்.

ஹரி சொன்னான்.

"மச்சான்.. குத்து வெளக்காட்ட இருக்காடா.. ச்சான்ஸே இல்ல.."

சலனப்படாமல் சொன்னான் அஷ்வின்.

"பாத்த உட்னே முடிவு பண்ணாத மச்சி.. குத்துன வெளக்காக் கூட இருக்கலாம்"

இடி இடியென்று சிரித்தேன். மிக நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு!

Read more...

Sunday, April 11, 2010

அசைவம் சாப்பிடுபவரே.. ஒரு நிமிடம்..

நேற்று மாலை Forum Mallன் உணவரங்கத்தில் இருக்கையில்தான் அது நடந்தது. அங்கிருந்த ChicKing என்ற அங்காடியிலிருந்து அழகாகப் பேக் செய்யப்பட்ட பெட்டிகளில் பொறித்த கோழி வறுவற் துண்டுகளைப் பெற்று செல்லும் எத்தனையோ தட்டுகளில் ஏதேனும் ஒரு தட்டு எனக்குள் அதை வாங்கியுண்ணும் ஆசையை என் நாவணுக்களுள் மீட்டி விட்டது.

அதற்கென்ன வாங்கிச் சாப்பிட வேண்டியதுதானே? என்கிறீர்களா. பிரச்சினை அதுவல்ல. அடிப்படையில் நான் பிறந்தது ஒரு அசைவம் சாப்பிடும் குடும்பத்தில்தான் என்றாலும், பின்னாளில் என் தனிப்பட்ட கோட்பாடுகளின் மீதான பற்றின் பொருட்டு என்னை சைவியாகத் திரித்துக் கொண்டேன்.

1999ல் நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் அசைவம் சாப்பிட்டது. அதற்குப் பின் நேற்றுவரை தொட்டது கூட கிடையாது. அம்மா சமையலையே வெற்றி கொண்டவன் இந்த பிசாத்து ச்சிக்கிங்-ல் எப்படி மனதைப் பறி கொடுத்தேன் என்று தெரியவில்லை. ஆசை வித்தை ஊன்றி விடும் அந்த ஒரு நொடி.. அந்தப் புள்ளியைக் கடந்து செல்வதுதான் நம்மைக் காத்துக் கொள்ளும் ரகசியம் என்றெல்லாம் தத்துவம் பேசப் போவதில்லை நான். என் நோக்கம் வேறு.

ஆசைப் பட்டாலும் எப்படியோ தப்பித்துக் கொண்டு வந்துவிட்டேன். இன்று காலை எழுந்து இணையத்தை நோண்டிக் கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் ஸ்டேடஸ் மெஸேஜில் பார்த்தேன்.

http://www.meat.org/ - The Website that Meat Industry & Meat'atarians do not want to see.If they had glasswalls, everyone would be vegetarian...

நல்ல வேளையாக கோழியைத் திங்காமல் வந்தேன். இல்லையென்றால் அறைக்குள் கூணிப் படுத்திருப்பேன். குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றிருக்கும்.

ஏன் என்பதை அந்தத் தளத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்!

Read more...

Thursday, April 8, 2010

நினைவின் மணலில்


















மறுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை விட
திருப்பித் தரப்பட்ட பரிசுப் பொருட்கள்
கனம் மிகுந்து காண்கின்றன

துணிகளுக்கடியில்...
ஷோகேஸில்...
புத்தகங்களுக்கிடையில்...
எங்கு ஒளித்து வைப்பினும்
அவ்வப்போதைய கண்படுதல்கள்
தவிர்க்கக் கூடியவையாயில்லை

பேனா, கைக்குட்டை, கீ செயின்
போன்றவை பரிசளிக்க ராசியில்லாதவையாம்
திரும்பி வந்த பட்டியலில்
அப்புறப்படுத்த சிரமமில்லாதவையும் கூட

எஞ்சியவற்றை
சிக்னல் பிச்சைகளின்
குளிருக்குக் கொடுத்துவிடலாம்

நினைவின் மணலில் மீதமிருக்கும்
சில தேதிகளும்
வாழ்த்து அட்டைக் குறிப்புகளும்
காலக்காற்றிலழியும் வரை....?

நன்றி: பனிமுலை

Read more...

Wednesday, April 7, 2010

இரு கவிதைகள்

1)

துரோகத்தின் ஈர முத்தங்கள்

அந்தராத்மாவின் கழுத்தில்
இறுகத் துவங்கியிருக்கும்
முடிச்சினிடையே சிக்கியிருப்பது
தாய்ப்பாலின் மணம் மாறாத
ஆலகால துரோகமாகவோ,
நிராகரிப்பின் பீடத்தில் தலையைப்
பலி கொடுத்த தன்மானத்தின்
முண்டத் துடி உதறலாகவோ
இருக்கக் கூடும்.

மந்தகாச வதனத்தில்
தொலைத்து விட்ட
இதயக்குஞ்சின் அலகினுள் பக்குவமாய்
புகட்டிவிடலாம்
விஷந்தோய்ந்த குருதியினை.

ஓங்கி அடர்ந்த
அத்துவானத் தனிமையில்
சுய புணர்தலின்
உச்சத்தில் வெண் துளிகள் ஏனோ
சிவந்து ஒழுகையில்
வெதும்பித் தெறிக்கும்
ஆசுவாசப் பெருமூச்சின் போது
கருகக் கூடும்

துரோகங்களுக்கும்,
புறக்கணிப்புகளுக்குமான
வாசனாதி
இத்யாதிகள்

2)

மழைக்காரி

நினைவுகளைத் தேக்கிய
கண்ணாடிக் குவளைகளைக்
கல்லெனத் திரளும்
பிரிவின் வலியிலிருந்து
ஒளித்து வைக்க வேண்டுமென்கிறாய்

நனைதலின்
மீதானவுன் பிரியத்துக்கு
மஞ்சள் குடைகளும்
உடன் நனையும் நேசம்
எனக்குப் புரியாதென்கிறாய்

உன் மலரினின்று
என் பிரியத்தின் மணம் உதிர்ந்தால்
வேர்களுக்குள் முளை விடுகிறது
எரிமலை என்கிறாய்

நானே குவளையாகி
நிறைந்து வழிகிறேன்
நானே குடையாகி
நனைந்து நைகிறேன்
நானே எரிமலை வேரில்
புதைந்து போகிறேன்

உனதான மழையென்றும்
என்னோடே
பெய்யுமெனில்

-தாக்ஷாயணிக்கு!


நன்றி: அகநாழிகை (மார்ச் 2010 இதழ்)

Read more...

Monday, April 5, 2010

அங்காடித் தெரு - தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

என்னுடைய முந்தைய கட்டுரையில் நான் கொஞ்சமாய் பதிவு செய்திருந்த ‘தரமான திரைப்படங்கள் நம் புறத்தே உருவாகாமலிருப்பதற்கான’ என் ஆதங்கத்திற்குக் கிடைத்த ஒரு பதிலாகவே நான் அங்காடித் தெரு-வைக் கண்ணுறுகிறேன்.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியோ, பின்னணி இசையின் தரம் பற்றியோ, கதையின் நேர்த்தி பற்றியோ, நேர் மற்றும் எதிர் மறையான இன்னபிற எந்தக் காரணிகளையுமோ அலசிக், கொடியில் தொங்கப் போடுவது என் நோக்கமல்ல.

அன்றி, வணிகக் கட்டுப்பாடுகளின் கொடுங்கரங்கள் இயக்குனரின் குரல்வளையை இறுகப் பற்றிக் கொண்டிருக்க, கத்தரியைக் கூர் தீட்டிக் கொண்டு சென்சாரார்கள் கண்ணில் விட விளக்கெண்ணெய் தேட, அரசியல்வாதிகளும், மதவாதிகளும் வக்கீல் நோட்டீஸ் அச்சடிக்க ஆளுக்கொரு பிரசுரம் வைத்திருக்க..

நீளும் இப்பட்டியலின் வேலிகளைத் தாண்டி தரமான, யதார்த்தமான, சமகால வாழ்வின் கரும் பக்கங்களைப் பதிவு செய்து வைக்கும் வகையில் படமெடுக்கும் திறனுள்ள, தைரியமுள்ள படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும் என்றால், தமிழ் சினிமாவின் ரசிகப் பெருமக்களான நாமனைவரும் தயவுசெய்து திரையரங்குக்குச் சென்று அங்காடித் தெரு-வைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துதான் இந்தப் பதிவு.

பனி பொழியும் பின்னிரவுகளில் ஏதேனுமொரு மேலை நாட்டுத் திரைப்படம் முடிந்து மனம் அழுந்தி, கனக்கும் சமயத்தில், ஏன் நம் பிரதேசத்தில் இவை போன்ற படங்கள் உருவாவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதை எத்தனையோ முறை உணர்ந்துள்ளேன். ஒருவாறு ஆற்றிக் கொண்டு சென்னையின் மேன்ஷன்களில் தூங்காமல் ஓரிரு அசிஸ்டண்ட் டைரக்டர்களேனும் என்னைப் போலவே நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்களா என்று அவர்கள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் தூங்கப் போய் விடுவேன்.

வணிகப் படங்கள் கெட்ட படங்கள்.. புதுமையான படங்கள்தான் நல்ல படங்கள்.. என்ற கருத்தை நோக்கி உங்களைத் தள்ளுவது என் பணியல்ல. உங்களுடைய சுயவிருப்பில் என் மூக்கு நுழைவது எனக்கு உவப்பானதுமல்ல. அவரவர்களுக்கு எதெது வேண்டுமென்பதைத் தெரிவு செய்வது அவரவர் விருப்பமேயொழிய எவரும், யாரையும் கட்டுப்படுத்தத் தேவையில்லை.

ஆனால் நான் கேட்பது இதுதான். இது மட்டுந்தான். வேட்டைக்காரனையும், ஆதவனையும், அவனையும், இவனையும் எப்படி உளம் நிறைந்த உவகையுடன் திரையரங்குக்குச் சென்று பார்க்கிறீர்களோ.. அதே போன்றதொரு அங்கீகாரத்தை அங்காடித் தெரு-வுக்கும் நீங்கள் வழங்க வேண்டும். இதைச் செய்யத் துவங்கினீர்களானால், வணிகப் படங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார ஆதரவுகள், மாற்று சினிமா உருவாக்கத்துக்கும் எளிதில் கிடைக்கும் சூழல் உருவாக ஏதுவாக இருக்கும்.

இங்கே நான் இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். நான் சிலாகித்துக் கொண்டிருக்கும் அங்காடித் தெரு என்ற இத்திரைப்படம் உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். அதனால் என்ன.. போகட்டுமே. ஒரு பரிசோதனை முயற்சியின் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமல்லவா. அது தோல்வியாகவே இருப்பினும், அடுத்த எட்டிலாவது வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க குறிப்பிட்ட அந்தப் படைப்பாளிக்கு நீங்கள் செலவு செய்யும் பணம் சிறிதளவேனும் உதவி செய்யும்.

இந்தப் படத்தில் குறையே இல்லையென்றோ, 100 சதம் எனக்கிந்தப் படம் பிடித்தது என்றோ நான் கூறவில்லை. இவ்வகையான படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் நாம் அங்கீகரிக்கத் துவங்கும் புள்ளியில்தான், வித்தியாசமான முயற்சிகளுக்கு முதல் போட்டாலும், போட்ட காசு வரும் என்ற நம்பிகையை தயாரிப்பாளருக்குள் முளைவிடச் செய்யும் விதைப்புள்ளியாக இருக்கும்.

ஏதோ தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களிடம் காசே இல்லாதது போல், இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகாமல் இருந்ததும், இந்தக் காலகட்டத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி, கோடிகளைக் குவித்த so called மசாலாப் படங்களும் நம் சினிமா ரசனைக்கு சான்றுகள்! உங்களுக்கெப்படியோ தெரியவில்லை. எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இதை உலக சினிமா ரசிகனாக சொல்லவில்லை. வசந்தபாலனின் அடுத்த திரைப்படத்தை, இன்னும் ஆவலுடன் (அவரது இயக்கத்துக்காகவா, இல்லை அடுத்த படத்தையாவது பெட்டிக்குள் முடக்காமல் வெளியிட மாட்டார்களாவென்ற ஏக்கத்துக்காகவா என்று தெரியாமலே) எதிர்பார்க்கத் துவங்கியிருக்கும் ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகனாக சொல்லிக் கொள்கிறேன்.

குறிப்பு: தமிழ் சினிமாவின் தரம், கலைப்படம், வணிகப்படம் போன்றவை குறித்தான சில வீடியோக்கள் பகிர்தலுக்காக:

http://www.youtube.com/watch?v=XRTFdAxGW6g
http://www.youtube.com/watch?v=WswDvFJqjvA
http://www.youtube.com/watch?v=VyYYAyzbhKs

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO