Monday, July 27, 2009

கைப்பழக்கம், சுய இன்பம், சொப்பன ஸ்கலிதம், இன்ன பிற - சில உண்மைகள்!

குறிப்பு: சற்று நீண்ட கட்டுரை. மன்னிக்கவும்.

என் பள்ளி இறுதியாண்டில் (2002), ஒரு நாள் வீட்டில் யாருமில்லாத மாலை நேரம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். ரிமோட்டின் ஏதோவொரு பொத்தான் என்னை சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் கொண்டு தள்ளியது. அங்கிருக்கும் எத்தனையோ சிவராஜ்களில் ஒரு மூத்த சிவராஜ் பேசிக்கொண்டிருந்தார்.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்.

என்னிடம் தினமும் இது போல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருகிறார்கள். அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். என் பேரக்குழந்தைகள் இப்படிச் சீரழிவதை என்னால் தாங்க முடியவில்லை. உங்களுக்கும் கைப்பழக்கம் இருந்தால், நீங்கள் என்னிடம் வாருங்கள். நான் உங்கள் தாத்தா மாதிரி. உங்கள் வீட்டுக்குத் தெரியாமல் நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்.." அது இது என்று மிகவும் அக்கறையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் வேறு வடித்தார்.

நான் அரண்டு போய்விட்டேன். நான் மட்டுமல்ல. என் வயதையொத்த எந்தவொரு இளைஞன் பார்த்தாலும் பயந்துதான் போவான்.
இதில் மறைத்து வைக்க ஒன்றுமில்லை. வயது அப்படி! ஒரு ஆர்வத்தில், வளரும் தன்னுடலை ஆராய்தலின் ஈர்ப்பில், தனியாக இருக்கும் சில சந்தர்ப்பங்களில் சுயபுணர்ச்சியில் ஈடுபடுடத் தொடங்கியிருக்கும் ஒரு விவரந்தெரியாத விடலையிடம் இப்படிப்பட்ட தகவல்கள் தரப்பட்டால் விளைவுகள் மோசமாகத்தான் இருக்கும்.

மிகவும் பயந்து போனால் அவன் என்ன செய்வான். அப்படி, இப்படி என்று எப்படியாவது காசைப் புரட்டிக் கொண்டு, கோவை லலிதா லாட்ஜில் மாதாமாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஆஜராகும் ஒரு சிவராஜைப் பார்க்கப் போவான். காசைக் கொடுத்து விட்டுக் காலில் விழுவான். "அவரும் நீ ஒண்ணும் பயந்துக்காத தம்பி நாங்க பாத்துக்கறோம்" என்று வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு லேகியத்தையும், சூரணத்தையும் கொடுத்துவிட்டு "வர்ட்ட்டா.." என்று போய்விடுவார்.

நமக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லையென்றாலும், எனக்குக் குழந்தை பிறக்காது என்று உள்ளூர நம்பத் தொடங்கி விட்டேன். அவர் வேறு மறதி, பயம், சந்தேகம் போன்ற சகஜமாய் நிகழ்பவற்றையெல்லாம் கூட இந்த 'வியாதி'க்கான அறிகுறிகளாகச் சொல்லியிருந்ததால் பேனாவை மறந்து விட்டுப் பள்ளி சென்று விட்டால் கூட பயமாகவே இருந்தது. ஒரு மாதிரி என்னை நானே தேற்றிக் கொண்டு அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று இருந்தேன். பள்ளி, கல்லூரி எல்லாம் முடிந்தது.

இப்போதுதான்.. ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு செக்ஸாலஜிஸ்ட் ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது (அப்போதும் தற்செயல்தான். நானாகப் போகவில்லை). அவரிடம் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன். சுய இன்பம் குழந்தைப் பேறைப் பாதிக்குமா என்று. சிறு புன்னகையுடன் அவர் சொன்னார்-

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்?

If Masturbation is wrong, and of course Sex is also WRONG. அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்தல் மட்டும் அவசியம். அது வெறும் பழக்கம் மட்டுமே. வியாதி அல்ல.

நீ உன்னைக் குழப்பிக் கொள்ளாதே. அதிகபட்சம் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையென்ற இடைவெளியில், சீராக உன்னால் சுய இன்பத்தைக் கட்டுப்பாட்டுடன் செய்ய முடிகிறது என்றால், ஒரு சராசரியான செக்ஸ் வாழ்க்கை உனக்காகக் காத்திருக்கிறது. சந்தோஷமாக இரு!"

சுய இன்பத்தை அடுத்து நம் சிவராஜ் அவர்கள் கூறிய இன்னொரு முக்கியமான 'வியாதி' - சொப்பன ஸ்கலிதம்! அதாவது உறங்குகையில் விந்து வெளியாதல். திருவாளர் சிவராஜ் அவர்கள் இதையும் ஒரு மிகக் கொடிய நோயாக சித்தரித்தார். இதைப் பற்றியும் கேட்டேன். அவர் பதில் -

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்த காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை."

'என்னடா இது.. தூங்கும்போது இப்படி ஆகுதே' என்று குழம்பிப் போயிருக்கும் இளைஞன் சிவராஜ் பேசுவதைக் கேட்டால் என்ன ஆகாமல் இருப்பான்?

இவையெல்லாவற்றையும் விட மருத்துவர் சொன்ன அடுத்த வாசகம்தான் மிக முக்கியமானது.

"ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் 2 ஆண்டுகளாகப் பணிபுரியும் உனக்கே இவையெல்லாம் தெரியாது எனும் போது, இந்நாட்டின் மற்ற இளைஞர்களை நினைத்து மிகுந்த அச்சப்படுகிறேன்."

இவ்வரிகள்தான் நம் சமூகம் எனக்கு மாட்டிவிட்ட முகமூடியைப் பிய்த்தெறிந்து விட்டு, இதை எழுதும் தைரியத்தைக் கொடுத்தன. இப்படியே படித்தவன், படிக்காதவன் என்று எல்லாரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், பின் நம் இளைஞர்களுக்கு உண்மையை யார்தான் சொல்லித் தருவது?

பாலியலை மூடி மூடி வைப்பதன் மூலம் நாம் இங்கே காப்பாற்றுவதற்கு எந்தக் கலாச்சாரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செக்ஸ் என்ற சொல் வீடுகளுக்குள் புழங்கத் தகாதவொன்றாகவே இருக்கிறது. கெட்ட வார்த்தை! உடலியல் குறித்தான எந்த ஒரு விளக்கமும் குழந்தைகளுக்குப் பெற்றோரிடமிருந்து தரப்படுவதில்லை.

பண்பாடு, கலாச்சாரம் என்பதான மாயைகள் ஏற்படுத்தியிருக்கும் பொய் வலைக்குள் இவை சாதாரணமாக சாத்தியம். சரி. வீட்டில் தான் இந்நிலை. பள்ளியிலாவது தரமான பாலியல் கல்வி தரப்படுகிறதா எனில், நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒரு பெரிய 'இல்லை' மட்டுமே.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் கல்வியெல்லாம் சொல்லித்தர மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தரக்குறைவான செயல். அவமானம்! சிறார்கள் அவர்கள் உடலையும், உறுப்புகளையும் பேணுவதற்குக் கற்றுத் தருவதிலிருக்கும் ஆசிரிய தர்மம் புரியாதவர்கள். தத்தம் பிள்ளைகளுக்கே அவற்றை சொல்லித் தர எண்ணம் வராதவர்கள், ஊரான் பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்றுவிப்பார்கள்?

அவ்வளவு ஏன்? நான் இங்கே இத்தனை நியாயம் பேசுகிறேனே.. எப்படி? என் வலைப்பக்கத்தை என் பெற்றோர்கள் படிப்பதில்லை என்ற தைரியந்தான். என் உடன் பிறந்தோர் இருக்கும் வகுப்புக்கு பாலியல் கல்வி தரச் சொன்னால் செல்வேனா. மாட்டேன்! நம்முடைய மூன்றாந்தர சமூகம் என்னை அப்படித்தானே வளர்த்து வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்காவது இந்தத் தேவையில்லாத தயக்கங்கள் இல்லாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சமூகக் கட்டமைப்பில் வளரும் இளைஞர்கள், பாலியல் மற்றும் உடலுறவு சம்மந்தப்பட்ட தவறான தகவல்களை வணிக நோக்கில் பரப்பும் காசாசை விஷமிகளிடம் எளிதாக சிக்கிவிடும் அபாயங்கள் மயிரிழை அளவேனும் குறையவும், எனக்குத் தெரிவதற்குத் தாமதமான நடைமுறை மற்றும் அறிவியல் பூர்வமான உண்மைகளை ஒரு சிலருக்கேனும் சரியான தருணத்தில் கொண்டு சேர்க்கவும் இது ஒரு சிறு முயற்சி.


தொடர்புடைய சுட்டிகள்:

http://www.ayurvediccure.com/over_masturbation.htm

http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

Read more...

Friday, July 24, 2009

என் பங்குக் காதல் கவிதைகள்..


அடுத்த முறையேனும்
காதலில் வெற்றி பெற
ஆசைப்படுகிறேன்
உன்னுடனேயே.

இன்னொரு முறையெனினும்
காதலில் ஆசையோடு
தோற்றுக் கொள்கிறேன்
உன்னுடனேயே.


-oOo-


ஒரு அவன்.
ஒரு அவள்.
ஒரு காதல் வந்தது.
ஒரு உலகம் காணாமல் போனது.


-oOo-


நம்முடையவர்களும்,
நம்முடையதுகளும்
எல்லாவித
சமரசங்களுக்கும்
ஆட்படுத்தப்படுகிறார்கள்
நம்முடையதுக்காக


-oOo-


என் பெயரைக்
கூவினேன்.
உன் பெயராய்
எதிரொலித்தது.
மாற்றின் சாத்தியமும்
பலித்தது.
யாரோ சொன்னார்கள்
எதிர் மலையில்தான்
தற்கொலை முனை
உள்ளதென்று.


-oOo-


'காத்திருத்தல்' என்ற
வார்த்தைக்குள்
'காதல்' என்ற
வார்த்தை.

ஒருவரையொருவர்
காத்து இருத்தலும்,
ஒருவருக்காக ஒருவர்
காத்திருத்தலும்
நிகழாத போது
'திருத்த' என்கிறது
வாழ்க்கை.

Read more...

Tuesday, July 21, 2009

சூட்சுமப் பூட்டுகள்நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.

Read more...

Monday, July 20, 2009

கையாலாகாக் கவிதைக் குறிப்புகள்

சினிமாப் பாடல்களல்லாது, கவிதை அல்லது அதை எழுதும் கவிஞன் என்றாலே ஒரு இளப்பம் நம் சமூகத்தில் நிலவுகிறது. சமீபத்தில் நெடுநாள் கழித்து இணையத்தில் சந்தித்த ஒரு நண்பனிடம் வேலை நேரம் போக, அவ்வப்பொழுது எழுதுவதுண்டு என்று கூறிக் கொண்டிருந்தேன். உடனே, "இந்தக் காதல் கவிதை எல்லாம் எழுதுவியாடா மச்சி.. ?" என்ற அவன் கேள்வியில் இருந்த ஏளனத் தொனி சற்று யோசிக்க வைத்தது.

'வேலை வெட்டியில்லாதவன்கள், இப்படித்தான் எதையாவது எழுதிக் கொண்டிருப்பான்கள், இதுக்கெல்லாம் நேரத்தை செலவழிக்க முடியுமா' என்பது போன்றதொரு பொதுப்புத்தி எழுதுபவர்களைப் பற்றியிங்கு பரவலாகவே காணப்படுகிறது. விவேக் ஒரு படத்தில், "ஒரு.. ஸ்வீட் ஸ்டாலே.. பனியாரம் சாப்பிடுகிறதே.. ஆச்சரியக் குறி.." என்று காமெடி செய்தது கூட இந்த வெகுஜன மனநிலையின் ஒரு மறைமுக வெளிப்பாடுதானோ என்று சந்தேகிக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி இருக்கிறான் என்பதும், ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணிலாப் படைப்புகள் ஊறிக் கிடக்கத்தான் செய்கின்றன என்பதும் நாமனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால் எந்தப் புள்ளியில் இந்தப் படைப்புகளை எழுத்தாய் கொட்ட ஒருவன் முயற்சிக்கத் தொடங்குகிறான் என்ற கேள்விக்கான பதில் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.

எனக்குப் பள்ளி நாட்களில் தமிழ் என்றால் உயிர்.(இப்போதுப் பிடிக்கும்தான். இருந்தாலும் தாய்நாடு, தாய்மொழி போன்ற செயற்கை பிம்ப ஆதிக்கங்களின் பொய்மை நீர்த்து விட்டது) தமிழைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் ஆத்திரம் தலைக்கேறி விடும். என்ன பிடிக்கும் என்று கேட்டால் கூட அம்மாவுக்குப் பின் தமிழைத்தான் சொல்வேன். தாய்த்தமிழுக்கு என்னாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி யோசித்ததில்தான் "எழுதலாம்" என்ற எண்ணம் உதயமானது. அதுவும் அப்போது புதுக்கவிதையாவது ஒண்ணாவது.. படித்ததெல்லாம் பாடப்புத்தகத்தில் இருந்த பாரதியும், திருக்குறளும், சங்கத்தமிழ்ப் பாக்களும்தான்.

திருக்குறளும், புறநானூறும் கடினமாக இருந்ததால், 'வளர்ந்த' பிறகு அவற்றை எழுதிக்கொள்ளலாமென்று முடிவெடுத்து, பாரதி பாணியிலேயே, நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அள்ளித் தெளிக்கும் 'கவிதை'கள் எழுதித் தள்ளினேன். பின்பு கல்லூரி வந்ததா.. கூட என்ன வரும்? வேறென்ன காதல்தான்! எனக்குக் காதல் மனதில் வாராவிட்டாலும், கவிதையில் நன்றாகவே வந்தது. அதிலும் காதல் தோல்விக் கவிதைகள் பிரவாகமெடுத்தூற்றின!


புள்ளி வைத்தாய்
கோலமானேன்
தள்ளி வைத்தாய்
அலங்கோலமானேன்!


-oOo-

நான் உன்னை என்
மனச்சிறையில் வைத்தேன்
உன் அப்பாவோ என்னை
மத்திய சிறையில் வைத்தார்!


-oOo-

சொர்க்கத்தை மறைக்கும்
சாதனம்
அடுத்த வீட்டு சுவர்!


-oOo-

ஜன்னல் கம்பிச்
சிறையினின்று
தப்பிப் பறக்கிறதென்
வெண்ணிலா!

என்ற வகையில் (நல்ல வேளையாக ஞாபகத்திலில்லாத) இன்னும் பலவற்றை வகுப்பறை வேளைகளிலேயே ஆக்கித் தமிழன்னையின் திருவடித் தாள்களுக்கு கவிதாபிஷேகம் செய்வித்தேன். ஒன்று, இரண்டு சுமாராகத் தேறும் என்ற போதும் பெரும்பாலும் எல்லாம் மூன்றாந்தரம்தான்.

பாரதிக்குப் பின் துரோணாச்சாரியாராக அருள வந்தவர், நமது வைரமுத்து. டூயட் படத்தின் இறுதிக் காட்சியில், பிரபு ஒப்பிக்கும் "கண் பார்த்ததும், கெண்டைக் கால் பார்த்ததும்" என்று தொடங்கும் கவிதையைப் பின்பற்றி அதே சந்தத்தில் நான் என் வரிகளைப் போட்டு எழுதிய காதல் தோல்விக் கவிதை கல்லூரியெங்கும் என் பிரசித்தியைப் பரப்பிற்று.

ஆதாமேவாளுக்கு நம்மாலான நன்றியைச் செலுத்துகையில் இடையிடையே குடும்ப, சமூக மற்றும் நாட்டு நலன் குறித்து வேறு 'கவிதை'யெழுதினேன். உரைநடையை ஒடித்துப் போட்டு நடைபெற்ற இப்படியானதொரு கவி வாழ்வு ஒரு நன்னாளில் கல்லூரி நூலகத்தின் கடைக்கண் பார்வை பட்டு, சற்றேனும் உருப்படுவதற்கான சில பல வழிகளைக் காட்டியதின் விளைவாக, அன்று தொட்டு என் கவிதாவேசப் பிரசங்கித்தனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு, இயல்பாகவும், சுமாராகவும் எழுத முயற்சித்து வருகிறேன்.

இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்குள் இருக்கும் கவிஞனை அடையாளங் காட்டும் சூழ்நிலைகள் ஒவ்வொரு வகையாக இருக்கும். சொல்லப்போனால் பலருக்கும் வலி, பிரிவு, தோல்வி, தற்கொலை, விரக்தி, அவமானம் என்று எதிர்மறை நிகழ்வுகள்தான் கவிதைக்கான முதற்காரணியாக இருக்கும்.

அவனவன் இப்படி படாதபாடுபட்டு ஒரு கவிஞனாக உருப்பெற்று கவிதையெழுதினால், இவர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு "இவனுங்க வேலையத்தவனுங்க" என்பது போல் முத்துதிர்ப்பது, 'எங்கள் வேலையில்லாத் தனத்தையல்ல; விஜய் படத்திற்கு சென்று விசிலடிக்கும் நம் சமூகத்தின் ரசனையைத்தானே பறை சாற்றுகிறது' என்ற உண்மையை, இதுவரை ஒரு கவிதையைக் கூட உருப்படியாக எழுதாவிடினும், என்றேனும் ஒருநாள் ஒன்றே, ஒன்றையாவது எழுதப்போகும் நானும் ஒரு கவிஞன் என்ற கடமைக்காகவேனும், உரக்கக் கூறிக் கொள்கிறேன்.

ஆகவே பொது ஜனங்களே, உங்களை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளவே வேண்டாம். நீங்கள் விஜய் படத்தில் பிஸியாகவே இருங்கள். எங்களைப் பற்றி குறை கூறாதீர்கள். தயவு செய்து! நாங்கள் எங்கள்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறோம்.

Read more...

Thursday, July 16, 2009

ஈஷ்வரோ ரக்ஷது!வழமை போலவே அலாதியானதொரு பெங்களூரின் குளிர் மாலை. அலுவலகத்தின் ஆறாம் தளத்திலிருந்து, வேறுபட்ட தொலைவுகளில் வானளாவும் அபார்ட்மெண்டுகளும், வளர்ந்து வரும் அபார்ட்மெண்டுகளும், வளர்த்து வரும் நெடிதுயர்ந்த க்ரெய்ன்களும், சீரான வேகத்தில் உலவிக் கொண்டிருக்கும் மேகக் குழுமங்களும், சாரலுக்கும், தூறலுக்கும் பிறந்த குழந்தையாய் மேல்விழும் துளிகளும், பரந்து கிடக்கும் வானும், தொலைவில் ஊரும் மானுடமுமாய் இயற்கையின் பிரம்மாண்டம் ஏற்படுத்திய குறு குறுப்பும், குறித்து வைக்காத இன்னும் சில இனிமைகளும்.. அன்றாட இறுக்கங்களிருந்து சற்று ஆசுவாசமளித்தன.

இவற்றை விடுத்து உணவகத்தின் உட்சென்று, சமோசாவை சன்னாவும் ஆசை எனக்கில்லை. என்றாலும், சொல்லிப் புரிய வைக்க முடியாத நம் அலுவலக நண்பர்களிடம், ஒரு முறை, கொழிக்கும் பணத்தைக் கொட்ட இடமில்லாத உங்கள் காலாண்டுக் கொண்டாட்டங்களை, மேல்தட்டு Bar-களுக்கு சென்று, 4 மணிநேரம் கும்மாளமிட்டு, போதைத் தலைவலியையும், ரூ. 40,000 செலவையும் தடுப்பதற்காக இல்லாவிடினும், ஒரு அரை நாளையும், ஒரு வேளை சோறையும் சேவாசதன் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகவேனும் செய்யலாமே என்று சொன்னபோது, எல்லாரும் என்னை Septic-காகப் பார்த்தார்கள். அப்போதே இங்கே மௌனம்தான் எனக்கேற்ற வழியென்று முடிவெடுத்து இருந்ததால், அமைதியாக உள்ளே சென்று விட்டேன்.

வெளிப்புறத்துக் கூதல் உள்ளும் உருண்டு கொண்டிருந்தது. நம் மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் உவப்பு அதிகமாயிருந்தது. என்னைப் போலவே எல்லோரும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சகஜப் புத்தியில்லை. அது ஏன் உங்கள் விருப்பம் ஊர்வம்பில் தொடங்கி, உள்ளூர் அரசியலோடு நின்று விடுகிறது என்பது புரியாத அறிவீனனாகத்தான் கேட்கிறேன். பொதுவாகவே சாஃப்ட்வேர் மக்களைப் பற்றிய மதிப்பீடுகள் நம் சமூகத்தில் எதிர்மறையாகவே இருக்கும். பணத்தைக் கண்டபடி செலவழிப்பதில் துவங்கி, கலாச்சார சீர்கேடு வரை வகை வகையாக. எம்மக்களும், பரத கண்டத்தின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும், அச்சில் வார்த்த அழகோவியங்களாய் அதற்கேற்றாற்போல்தான் நடந்து கொள்வார்கள். Unity in Diversity!

வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகையில் ஒருவர், அவரால் மிச்சம் பிடிக்க முடிந்த டாலர்களுக்கு சாக்லேட்டுகள் வாங்கி வந்திருப்பார். சாக்லேட் தீர்ந்து போவதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமே. Literally அடித்துக் கொள்வார்கள்!

கூழைக் கும்பிடு என்பதை நான் புரிந்து கொண்டது இங்குதான். என்னதான் வேலை பார்த்தாலும், ஆண்டிறுதியில் நம் பதவி / ஊதிய உயர்வு, வெளிநாட்டு வாய்ப்பு என்று சகலமும் 'அவர்' முடிவுக்குட்பட்டதால், ஸ்டேப்ளர் வாங்கி வரும் வேலைக்குக் கூட சிலரை உபயோகிக்கும் 'ப்ராஜக்ட் மேனேஜர்'களும் உண்டு. அவர் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டும் வித்தை ஏனோ எனக்கு வாய் கூடுவதேயில்லை. இரு தரப்பிலும், அனைவரும் அப்படியில்லை என்பது ஆறுதல்.

அதி முக்கியமாக ஆறாம் வகுப்பு மாணவர்கள் போல் யூரினலுக்குள் பபுள்கம்மைத் துப்பி வைப்பது! பபுள்கம் இல்லாத யூரினல் தேடினாலும் கிடைப்பதில்லை. கேட்டால் துப்புரவாளர் க்ளவுஸ் போட்டிருக்கிறாராம். அதனால் துப்பலாமாம். என் நாகரீக வெங்காயங்களை உரித்தெறிந்து விட்டுப் பேசச் சொன்னால், எல்லோரும் பேய்ந்த பின் அதே பபுள்கம்மை அவன் வாயிலேயே போட்டுவிட்டு, அதை சுத்தம் செய்யும் பொறுப்பிலிருப்பவரை, அதே பபுள்கம்மின் மேல் பேய வைக்க வேண்டும்.. You know.. Professionals!

அடுத்தவரைக் குற்றம் சொல்லும் என் வாக்கியம் முடியும் முன்பே, என் முதுகின் அழுக்கு எனக்கு நினைவுக்கு வரும் சராசரியன் நான். பின் ஏன் இத்தனை குறை சொல்கிறேன்? ஆண்டுக்கு அரை லட்சம் சம்பாதிக்கும் நீங்கள், உங்கள் சம்பாத்தியத்திலிருந்து தராவிடினும், உங்கள் அலுவலகம் அள்ளித் தருவதிலிருந்து, கிள்ளித் தந்து கூட ஒரு குழந்தைக்கு சோறு போடாது அனுபவிக்கும் கொண்டாட்டங்கள் எனக்குக் குமட்டலைத் தந்ததால், இங்கே என் புலம்பல்களுக்கு நானே நியாயம் கற்பித்துக் கொள்கிறேன்.

சமோசா சன்னாக்கள் தீரும் நிலையிலிருந்தன. என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் காதுகளில் தன்னைத் திணிந்து கொண்டது. சாரை சாரையாய் வார்த்தைகள் காதுகளை சல்லடை போட்டு வென்றிருந்தன.

"You Expect Promotion in September?"

"Not sure in the Office man.. But for sure I will get promotion in my life!"

"Hey good man.. You know what? In Denmark know.. They will give you Promotion and Hike when you get promoted as a Dad too!"


இத்துணை நேரம் அமைதி காத்த என் சாத்தான் என்னிடமிருந்து தன்னை அவிழ்த்துக் கொண்டு சொன்னது.

"You gotta be careful dude.. Next time when you are lookin for promotion, your manager would like to give you a Child too!"

Read more...

Monday, July 13, 2009

ஸ்கிப்பிங் கயிறு


பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.

பின்னாடி இருந்தது.
இரு கைகளாலும்
இழுத்து முன்னாடி போட்டாள்.
தாண்டினாள்.

அக்காளின் வயதிலிருந்து
குழந்தையின் ஆசைக்கு
ஸ்கிப்பாகி, ஸ்கிப்பாகி
விழுந்து கொண்டிருந்தது
ஸ்கிப்பிங் கயிறு.

Read more...

Friday, July 10, 2009

A Pulp Fiction கவிதை7 மணிக்கு எழ
6:50க்கு அல(லா)ற
வைக்கும் கடிகைக்குள்
சேமித்து வைக்கிறேன்
என் நாளைகளுக்காக
ஒரு
10 நிமிட சொர்க்கத்தை.

என் சொர்க்கங்கள்
உங்கள் கைக்கெட்டுபவை
என்பதென் இயலாமையாகலாம்.
ஆனால் அதைக் குலைக்காமல்
இருப்பது உங்களுக்குப்
பெருந்தன்மையாகலாம்.

எது வேண்டுமானாலும்
நிகழலாம் இவற்றில்.
மேற்கண்ட பத்திகள்
ஒரு கவிதையாகவோ,
இரு கவிதைகளாகவோ,
மொத்தமும் ஒரு
கவிதையாகவே இல்லாமல்
கூடத் தெரியலாம்.
அதைப் போல.


pulp (pŭlp) ~ A magazine or book containing lurid subject matter and being characteristically printed on rough, unfinished paper

Read more...

Monday, July 6, 2009

தமிழ் வலையுலகும், அக்கா முலையும்!

எழுத்துலகில் யான் ஆற்றி வரும் அரும்பணிகளுக்கு(?!) இடையில், என் கெரியரின் மிக முக்கியமானதொரு ஆய்வறிக்கையை எழுதப் புகுகிறேன்! அவ்வப்போதைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் இன்னபிற என்று எழுதியவற்றை இங்கு இட்டு வைத்து விட்டு, வருபவர்களையும், வாசிப்பவர்களையும் கொஞ்சம் அவதானித்ததில், புலனான ஒரு அதிர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.

அவையாவன: இங்கே வலப்புறத்தில் பார்த்தீர்களானால், சில Gadgets இருக்கும். அவைகளில் ‘வந்த திசைகள்’ என்றிருக்கும் Gadget-டானது உலகின் எந்தப் பகுதியிலிருந்து, எப்போது வாசக அன்பர்கள் வருகை தந்தார்கள் என்று காட்டும்.

‘வர வைத்த விசைகள்’ என்ற Gadget-டானது, வருகையாளர் வேறேதேனும் வலைப்பக்கத்திலிருந்து இணைப்பு கிடைத்து வந்திருந்தால் எந்தத் தளத்திலிருந்து வந்தார்கள் என்பதை, Bangalore Arrived from tamilish.com அல்லது Madras arrived from jyovramsundar.blogspot.com என்று காட்டும். இது முதல் வகை.

அல்லாமல், வருகை தருபவர்கள் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை கூகிளிலோ அல்லது வேறேதேனும் தேடுபொறியிலோ தேடி, அந்த வார்த்தை நம் தளத்திலிருப்பதன் மூலம் இணைப்புக் கிடைத்து வந்திருந்தால், California Arrived from google.co.xx என்று காட்டும். இது இரண்டாம் வகை.

என் எழுத்தையும் மதித்து நண்பர்கள்
யாத்ரா, வேலன் அண்ணாச்சி, MSK ஆகியோர் இந்தத் தளத்திற்கு அவர்கள் வலைப்பூவிலிருந்து இணைப்புக் கொடுத்திருந்ததைக் கூட நான் அறிந்து கொண்டது இந்த Gadget மூலமாகத்தான்.சில தமிழ் சினிமா குணச்சித்திரங்கள் சொல்வதைப் போல் 'இப்ப விஷயம் என்னான்ன்னா..' என்று இழுக்காமல் நான் சொல்ல வருவது.. இந்த ‘வர வைத்த விசைகள்’ என்ற Gadgetல் நேற்று, Madras Arrived from google.co.in என்றொரு உள்ளீடு இருந்தது (ஊர் பெயர் மாற்றப்பட்டுள்ளது). நானும் வழக்கம்போல் Right Click -> Open in New Window-வைக் கிளிக்கி விட்டேன்.

அடுத்த விநாடி, சேலம் சிவராஜ் சித்த மருத்துவர் சொல்வது போல் (அடடா.. விஷயத்திற்கேற்ற உதாரணம்!), உச்சி முதல் உள்ளங்கால் வரையான அத்துணை நாடி நரம்புகளும் அதிர்ந்தடங்கின. காரணம் - அந்த வாசக சிகாமணி தேடியிருந்தது 'அக்கா முலை' என்ற வார்த்தையை!

இந்தப் பேரிலக்கிய வாசகப் பெருந்தகை தேடிய 'அந்த' வார்த்தை, என்னுடைய
'எல்லோரும் மறந்துவிட்டிருப்பது' என்ற கவிதையில் தற்செயலாய் இடம் பெற்றிருந்ததாலேயே அந்தப் புனிதரின் விரல் முனைச் சுவடுகள் நம் தளத்திற்குக் கிடைக்கப் பெற்றன என்பது பிற்பாடு புரிந்து புளகாங்கிதம் அடைந்தேன்.

அதிர்ச்சி அடங்க சில நிமிடங்கள் பிடித்த பின், மிக நீண்ட நாட்களுக்குப் பின் வயிறு வலிக்க சிரித்தேன். சிரித்து முடித்த பின், இப்படியும் மனிதர்களா என்ற ஆச்சர்யம் கொண்டேன். இதற்கு முன்பு ஓரிரு முறை வெறுமனே 'முலை' என்று தேடி, அதன் மூலம் வருகை புரிந்தவர்களைக் கண்டுள்ளேன். அப்போது கூட ஒன்றும் பெரிதாய் படவில்லை. சரி.. எதைப் பிடிப்பது.. Sorry.. படிப்பதென்பது அவரவர் விருப்பம், சுதந்திரம் என்று லூசாக விட்டுவிட்டேன்! ஆனால், இம்முறை 'அக்காவினுடையதையே' தேடி என்னை எதிர்வினையாற்றாமல் இருக்க விடவில்லை நம் இலக்கியார்விகள்.

ஆனாலும், அடுத்த முறை இதுபோல காமத்தேனைத் தேடிப் பருக வரும் வாலிப வயோதிக வண்டுகள், சப்பையான நமது தளத்தைக் கண்டு அதிருப்தியடையாமலிருக்க, அவர்களுக்கு http://storyintamil.blogspot.com என்றவொரு அஜால் குஜால் தளத்தை, காம சூத்திரக் களஞ்சியத்தை, வாத்ஸ்யாயனாருக்கே கற்பனை சொல்லிக் கொடுக்கும் ஒரு இன்பப்பீடியாவைப் பரிந்துரை செய்வதில் தன்யனாகிறேன்.

என்னளவில் எழுந்த அதிர்ச்சியை, ஆச்சர்யத்தை, ஆதங்கத்தைப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே இக்கட்டுரை. படித்த கையுடன், 'உங்க அக்காவுக்கெல்லாம் அது இல்லையா.. இது இல்லையா?' என்றெல்லாம் கேட்க வேண்டாமென்று அனானித் திலகங்களைத் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்!

Read more...

Sunday, July 5, 2009

சற்றே இருளார்ந்த அறைகள், ஊடே நீட்சியாய் மனிதர்கள்பரவிக் கிடந்த என் போர்வையில்
சுயபோகத்தில் வீணாய்ப் போன என்
லக்ஷங்கோடி மழலைகள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள்.

இருளை எழுப்பிவிட்டுப் படுக்கையில் அமர்ந்த பின்
எதேச்சையான பார்வையில் நேற்றைய
கனவில் கண்ட மார்பகம் சப்பிக் கிடந்தது ஒற்றையாய்.

சிலுவைகளை Dildoக்களாக உபயோகிக்கும்
அந்தப் பெண்கள் நம் அனைவரின்
தங்கைள், தமக்கைகள், தாய்கள்.

துணைகளற்ற அறைகளனைத்தும் கற்பனையில்
காசு கேட்கா வேசிகளும், ஆக்கப்படாத கவிதைகளும்
Vaginaவுக்கு மாற்றான உள்ளங்கைகளும் விடுத்து

யாதொன்றும் நிரம்பியில்லை

நம்முடையதும்

Read more...

Friday, July 3, 2009

இந்த நாள் இனிய நாள்..


தேமேயென்று புல்லை நக்கிக் கொண்டிருந்த
மேஷத்தின் புட்டத்தில் கொம்பைத்
தேய்த்தது பின்னாலிருந்த ரிஷபம்.
கீழே விழுந்த சில காய்ந்த புழுக்கைகளை
அள்ள வந்த இரு மிதுனப்பெண்களில்
ஒருத்தியின் காலைக் கொட்டியது
கொடுக்கு விறைத்த கடகமொன்று.
பிடரியுதறிக் கிளம்பிய சிம்மத்திற்கு
கன்னியின் முலையில்
பாலருந்தும் பசியிருக்கையில்
ஒய்யாரித்து வந்த கன்னி ஏந்தியிருந்த
அலங்காரத் துலாமின் ஒரு தட்டினடியில்
பின்னால் வால்நீண்டெழுந்த
பொன்மஞ்சள் விருச்சிகம் ஒட்டியிருந்ததால்
குறியெய்ய வேண்டியது
சிம்மத்திற்கா, விருச்சிகத்திற்கா என்று
தனுசு குழம்பியது.
மேஷத்திற்காகப் பழிவாங்க
ரிஷபத்தின் உறுப்பில் தேய்க்க
தனக்கும் கொம்பிருக்கிறதென்று
மகரம் வீறு கொள்ள,
கும்பத்தினுள் சுவரொட்டி நீந்திக் கொண்டிருந்த
மீனம் ஒரு குதி போட்டு
இன்று யார்யாருக்கென்ன பலனென்று கேட்டதில்
போட்டது போட்டபடி போட்டுவிட்டு
போய் நின்றனவாம் எல்லாமும்
தினசரி கேலண்டரின் முன்.

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO