Wednesday, August 12, 2009

தன்னைத் தானே..

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகைத்தவுடன் என்றேன்.
சரி நீ எழுதுவதைப்
படிப்பவர் இப்போது
புன்னகைக்கிறார்
நீ நிறுத்துவாயா என்றது.
நானும் புன்னகைத்துக் கொண்டே
சரி என்றுவிட்டேன்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது எப்போது தன்னை
முடித்துக் கொள்வது
என்று கேட்டது.
உன்னைப் படிப்பவர்
புன்னகையை
நிறுத்தியவுடன் என்றேன்.
சரி என்று சொல்லிவிட்டு
எழுதிக் கொள்ளத் துவங்கியது.
முடிவுறுவதற்கு
மனமில்லாமலேயே.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது தனக்கு
சொந்தக்காரன்
நானா நீயா என்றது.
எனக்கு நீயும்
உனக்கு நானும்
சொந்தக்காரர்கள் என்றேன்.
அது உடனே
இன்னொருவரையும்
கைகாட்டிப் புன்னகைத்தது.
அவரும் புன்னகைக்கிறார்.

-oOo-

தன்னைத் தானே
எழுதிக்கொள்ளும்
கவிதையொன்றை
உருவாக்கினேன்.
அது உள்ளபடியே
தன்னைத் தான்களுடன்
எழுதிக் கொண்டேயிருந்தது
புன்னகைக்கும்
நான்களையும்
புன்னகைக்கும்
உங்கள்களையும்.

முழுவதையும்தான் நவீன விருட்சத்துக்கு அனுப்பினேன். முதல் பத்தி மட்டும் பிரசுரமாகியுள்ளது. தன்னைத்தானே நினைத்து சிரித்துக் கொண்டேன்!

அழகிய சிங்கர் அய்யா அவர்களுக்கு நன்றி.



9 மறுமொழிகள்:

அன்புடன் அருணா August 12, 2009 at 9:23 PM  

எனக்குக் கூட முதல் பத்திதான் பிடிச்சுருக்கு!!!

விநாயக முருகன் August 12, 2009 at 9:46 PM  

அருமை தோழரே
எனக்கும் முதல் பாரா பிடித்துள்ளது. மற்றது வலிந்து திணிக்கப்பட்டது போல பட்டது

நேசமித்ரன் August 12, 2009 at 11:23 PM  

புன்னைகத்துக் கொண்டேன் நான்கைந்து முறை நன்றி அருமை தோழரே

மதன் August 12, 2009 at 11:40 PM  

சகோதரிக்கும், நண்பர்கள் விநாயக முருகன் மற்றும் நேசமித்ரனுக்கும் நன்றிகள்!

யாத்ரா August 13, 2009 at 1:44 AM  

எல்லாமே நல்லா இருக்கு மதன்

இந்த மாதிரி ராணிதிலக் நாகதிசை தொகுதியில வார்த்தைகளை மட்டும் மாற்றிப் போட்டு ஒரே கவிதையை எழுதியிருந்தார், அந்த மாதிரி இதுவும் நல்லா இருக்கு

முடிவில்லாத சாத்தியங்களால் நிரம்பியது தானே கவிதைகள்

நந்தாகுமாரன் August 13, 2009 at 10:30 AM  

கவிதை நன்றாக இருக்கிறது மதன் ... வாழ்த்துகள்

மதன் August 13, 2009 at 11:21 PM  

யாத்ரா, ஜோ, நந்தா நன்றிகள்.

நந்தா நான் உங்களை GTalkல Add செய்தேன். நீங்களும் பெங்களூர் தானே. நேரம் கிடைக்கையில் சந்திப்போமே!

Ayyanar Viswanath August 18, 2009 at 12:54 AM  

மதன் இது ஒரு நல்ல முயற்சி

கவிதைகளைச் செய்யும் அபத்தங்களை எல்லாருக்கும் காண்பிக்கிறா மாதிரிதான் நான் புரிஞ்சிகிட்டேன்.ஒரு கவிதைய செய்யும்போது மாத்தி மாத்தி தித்மா அத எழுதும்போது மாத்தினதுலாம் கவிதைன்னா மாத்தாதது என்னாகும்னு தோணியிருக்கு

இங்க மாத்தாததைலாம் போட்ருக்கிங்களோ

மதன் August 18, 2009 at 2:10 AM  

வாங்க அய்யனார்!

மாத்தாததையெல்லாம் போட்டது மட்டுமில்ல.. மாத்தாமயே அனுப்பியும் வெச்சுருக்கேன்!

’பிரசுரமாகாத என் கவிதைகளை எல்லாம் ஒரு தனிப் பிரசுரமாக்குவேன். அது எனக்கு மட்டுமான பதிப்பாக இருக்கும்’ - ங்கற அர்த்தத்துல உயிரோசைல ஒரு கவிதை வந்துது. அதுக்கு ஒத்த கருத்ததான் நீங்க சொல்லிருக்கிங்க.

ஆனா, எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லங்க. மாத்தி மாத்தி எழுதிட்டு, எது நல்லாருக்குங்கற முடிவுக்கு வர முடியாம, சரி இது எல்லாத்தயும் சேத்து ஒரு கவிதையாக்கலாம்னு முயற்சி பண்ணேன். கொஞ்சம் சொதப்பிக்குச்சு! :)

’மாத்தி மாத்தி தித்மா’ - அப்படினு நீங்க எழுதிருக்கறத ரசிச்சேன்!

  ©Template by Dicas Blogger.

TOPO