Tuesday, March 23, 2010

நஞ்சில் நனைந்த வரலாற்றுத் தடங்கள்


'பிரபலமாவது எப்படி?' என்ற கேள்விக்கான பதிலை நாம் அனைவரும், அவரவருக்கு இயன்ற அளவில், தத்தமது பிரக்ஞைக்கு உட்பட்டோ, படாமலோ தேடியலைந்து கொண்டேதானிருக்கிறோம். அலுவலகத்தில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்து ஆர்க்குட்டில் புகைப்படங்களை ஏற்றுவது, GTalkன் ஸ்டேடஸ் மெஸேஜில் ரெண்டு வரி கவிதையில் மேதாவித்தனத்தைக் காட்டுவது என்பவை நானறிந்த வரையில் யோசிக்க சிரமமில்லாமல் சிக்கிய உதாரணங்கள்.

ஓரளவுக்கு சீன் போடவே இத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்க, ஒரு பிராந்தியத்தையே, ஏன் நாட்டையே தன் சொல்பேச்சுக்கு ஆட்டுவிக்கும் அளவுக்கு ஒரு குறியீடாக உருப்பெற எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கும். எம்ஜியார், ரஜினி, கமல், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கண்கூடாக நம் சமூகம் பார்த்திருக்க, தங்களுக்கானதொரு கூட்டத்தை உருவாக்கியதோடு அல்லாமல் நம் காலத்தின் தவிர்க்க முடியாத பிம்பங்களாக இருப்பவர்களில் சில உதாரணங்கள்.

இப்படி தங்கள் திறமையினாலும் (?), இருக்க வேண்டிய இடத்தில், இருக்க வேண்டிய நேரத்தில் தங்கள் இருப்பமைந்த அதிர்ஷ்டத்தாலும் எத்தனையோ பேர் மக்கள் தலைவர்களாக வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்களில் அடால்ஃப் ஹிட்லர் எனும் தனிமனிதர் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் இங்கே பதிப்பித்து வைக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன் சகோதரி தமிழ்நதி ஈழத்து நிகழ்வுகளை, The Pianist என்ற திரைப்படம் பார்த்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி உயிரோசையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையைப் படித்தபின் படம் பார்த்தேன்.

எதையாவது எழுத வேண்டும் என்று கை பரபரத்தது. படம் ஏகத்துக்கும் தமிழ்நதியின் கட்டுரை நினைவுக்கு வந்து வருத்தியதையா, ஹிட்லர் என்ற திருநாமங் கொண்ட நம்மைப் போன்ற சாதாரண மனிதரொருவர் வரலாற்றின் பக்கங்களில் தாயை வன்புணர்வதினும் கொடிய காட்சிகளை விட்டுச் சென்றதையா, மீட்க முடியாத கடந்த காலம் விட்டுச் சென்றிருக்கும் உணர்வுகளை, வன்முறை வெறியாட்டத்தின் கொடும் புழுதியைப் பதித்து வைக்க சினிமா என்ற ஊடகத்தின் சக்தியை மேலைநாட்டான் இத்தனை வீரியத்துடன் பயன்படுத்துவதையா, இதில் எதையெழுதுவது என்று ஏகப்பட்ட குழப்பம். வழக்கம் போல் ஒன்றையும் எழுதாமல் விட்டுவிட்டேன்.

ஒருவன் தலைவனாகவே இருக்கட்டும். அவன் கையில் அதிகாரம் அளவின்றி ஆர்ப்பரிக்கட்டும். அவன் சொடுக்குப் போட்டால் சொம்பைத் தூக்கிக் கொண்டு கழிவறையின் முன் தேசமே காவலிருக்கட்டும். ஆனால் அவன் சொல்கிறானென்பதற்காக எப்படி ஒரு இனத்தையே அழித்தொழிக்க மனம் வருகிறது இந்த அரசு / இராணுவ அதிகாரிகளுக்கு? ஜெர்மனியாயினும் சரி. இலங்கையாயினும் சரி.

கடமையைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யுமுன் பல்லாயிரம்பேரை வேரறுக்கும் பாதகத்துக்கு ஒத்தூதியும், அதிகப் பணமும் நேரமும் செலவில்லாமல் மக்களை மாய்த்தொழிப்பதெப்படி என்பதை ரூம் போட்டு ஆராய்ந்தும்தான் ஜீவனத்தை நடத்த வேண்டுமென்ற தேவையின் திண்மை என்னவென்று யோசிக்கத் தோன்றாதா?

எதிரியென்றாலும் பரவாயில்லை. உன் நாட்டு மக்களைக் காக்க அவர்களைக் கொல்கிறாய் எனலாம். அப்பாவிப் பொதுமக்களைப் போய் கொல்வானேன்?

The Pianist படத்தின் நாயகனான யூதனொருவன், நாஜிக்களுக்கு பயந்து ஓடுவான். ஓடுவானென்றால் ’ஓடுவான்’. அப்படி ஒரு ’ஓடுவான்’! உயிருடனிருக்க வேண்டும் என்பதைத் தவிர உயிருடனிருப்பதின் நோக்கம் வேறேதுமில்லை என்ற அவனது ஓட்டத்தின் முரண்நகையை அத்தனை அழகாகக் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குனர் Roman Polanski.

2002ல் வந்த திரைப்படம். 1945ஐ அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பார்கள் ஒவ்வொரு அங்குலத்திலும். அந்தக் காலத்து ரயில் என்ஜினையெல்லாம் எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை.

பார்ப்போம். 'அவனிடம் காசிருக்கிறது.. செய்கிறான்..' என்ற சப்பைக் கட்டையே இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம் என்று. இப்பேர்ப்பட்ட படங்களை எடுக்கக் காசைத் தாண்டிய பேருழைப்பும், சிரத்தையோடு ஒரு நாவலெழுதும் எழுத்தாளனுக்கிருக்கும் அர்ப்பணிப்புணர்வும் தேவை என்பது நிதர்சனம்.

ஒரு காட்சியில் அவனை சந்தேகத்திற்குரியவன் என்று அடையாளங்கண்டு கொள்ளும் நடுத்தர வயது ஜெர்மானியப் பெண்மணி அவளின் கண்களில் காட்டிய குரூரம், ஹிட்லருக்கு மட்டும்தான் பித்தேறியிருந்ததா இல்லை ஒரு தேசத்தையே இனப்பித்து ஆட்டிவைத்திருந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது எனக்குள்.

அதோடு விட்டேனா? நானும் சும்மாயில்லாமல் Life is Beautiful, Defiance மற்றும் சமீபத்தைய Inglorious Basterds எல்லாம் பார்த்தேன். பார்க்க வேண்டிய பட்டியலோ Black Book, Europa Europa, The Longest Day, இன்னும் பலவென்று நீள்கிறது.

ரத்தத்தை நக்கிய பூனை மனதானது எனது. நாராய்க் கிழியும் நரம்புச் சரடுகளை சதைக் கூழில் குழப்பி விளையாடுவதைக் காண்பதில் ஒருவித ருசி. சிந்தித்துப் பார்க்கையில் வன்முறையைக் கையெடுப்பதன் விளைவுகளையும், குருதிச் சூடு குறையாமல் இருக்கும் பூமியின் கண்ணீரையும் குறைந்தபட்சம் நான் மறவாதிருக்கவேனும் இந்த வகைப் படங்கள் உதவுகின்றன என்று ஆற்றிக் கொள்கிறேன்.

The Pianistஐப் போலவே உண்மைச் சம்பவத்தைத் தழுவியெடுக்கப்பட்ட Defiance படத்தில் காட்டுக்குள் ஓடியொளிந்து வாழும் இரு சகோதரர்களை நம்பி அவர்களுடன் சிறிது சிறிதாக இணையத் துவங்கி, 1500 பேராகப் பெருகிவிடும் யூதப் பொதுமக்களின் கதை. ஆயுதங்களைத் திருடி முடிந்தளவுக்குப் போராடுவார்கள். அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு அடர் வனத்தினுள் 'வாழ்ந்து' வருவார்கள். அவ்விதிகளுள் ஒன்றின்படி பெண்களெவரும் கருத்தரிக்கக் கூடாது. சோறில்லாத பிரச்சினை மற்றும் கர்ப்பிணிகளை வைத்துக் கொண்டு போரிடவும், ஆபத்து வருகையில் ஓடித்தப்பவும் முடியாது என்பதால்.

இப்படியொரு நிலையில் தான் கருத்தரித்திருப்பதாக சக சகியிடம் சொல்லியழுவாள் ஒருத்தி. இது தப்பில்லையா என்று கேட்பவளிடம் சொல்வாள் கர்ப்பிணி, ’உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை’யென்று. நினைவிலிருந்த காட்சிக்கு நானே என் வார்த்தைகளைப் போட்டிருப்பதால் காட்சியின் இறுக்கத்தை எழுத்துகளுக்கு இடையிலிருக்கும் இடைவெளி கொண்டு விளக்க முடியவில்லை. திரையில் நெருடிக் கிழிக்கிறது வலி.  

என் சகோதரி காயத்ரி சொன்னாள். 'ஜெர்மனி மேட்டர் கொஞ்சம் ஓவர் டோஸாயிடுச்சுடா..' என்று. ஹாலிவுட்டில் யூதப்படுகொலையை மையமாகக் கொண்டே அதிகப் படங்கள் எடுத்து விட்டார்கள் என்ற அர்த்தத்தில். என்னைக் கேட்டால் இந்த ஓவர் டோஸ் நமக்குள்ளும், நம் சமூகத்தினுள்ளும் புரையோடியிருக்கும் நேயமின்மையையும், வன்முறையையும் கணக்கிடும்போது மிக மிகக் குறைவேயென்று சொல்வேன்.

இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும், இன்னும் எத்தனையாயிரம் பக்கங்கள் இந்தக் கொடுமைகளைப் பேசினாலும் லட்சம் பேரைக் கொன்ற வன்மமும், ஒரு இனம் 5 ஆண்டு காலம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டோடிய கொடூரமும் நாம் மறக்கக் கூடியவையில்லை என்பதற்காக.

செய்ய வேண்டியவைகளைக் காட்டிலும், செய்யக் கூடாதவைகளை நினைவுறுத்துவதுதான் இன்றைய தேவையாயிருக்கிறது.

Read more...

Sunday, March 21, 2010

மல்லாந்து கிடக்கும் வானம்






















மானஸ கங்கையில் கரையொதுங்கிய
பிரேதங்களில்
முன்பு வலது கண்ணிருந்த
துளையினுள் ஊர்ந்து சென்றது
உறுமீனொன்று

தான் பார்த்தவைகள் குறித்தான
பீதியில் விசும்பினார்கள்
பிரேதங்கள்

நதியின் முற்றத்தில்
பௌர்ணமி நாளின் பகற்பொழுதுக்காக
அழுது கொண்டிருந்தவனுக்கு

இந்தக் கவிதையை
எழுதாதவனின் சாயலிருந்தது

மல்லாந்து கிடக்கும்
ஆகாசத்தின் மீது

காறியுமிழ்ந்தது பூமி


நன்றி:  கீற்று

Read more...

Friday, March 19, 2010

அகால யந்திரம்

என்
கடந்த காலத்தில் துவங்கி
எதிர் காலத்தில் வந்து முடிந்து
மூச்சிரைக்கும் ஒரு நொடியில்
படித்து விட முடியாது
நம் கடைசி சந்திப்பின்போது
நம்முடனிருந்த சுவரில்
முளைத்துக் கொண்டேயிருக்கும்
கிறுக்கல்களை

Read more...

Sunday, March 14, 2010

மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் – 14/03/2010

மென்பொருள் மற்றும் BPO போன்றவிடங்களில் பணிபுரிவோர் பெரும்பாலும் நேரங் கெட்ட நேரங்களில் அலுவலகத்திற்கு செல்வதும், திரும்பிச் செல்லுதலும் இயல்பான ஒன்று.

பின்னிரவு நேரங்களில் வீடு திரும்புவோரில், Cab-களில் கடைசியாக வீடு வந்து சேருவது பெண்களாக இருந்தால் (அதாவது கூட வரும் ஏனைய ஆண்கள் இறங்கிய பிறகு) ஒரு செக்யூரிட்டியும் கூட வருவது சகஜம். Cab Driverஆல் அந்தப் பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாதென்பதற்காக. பாதகமில்லை.

எனக்கு ஒரு சந்தேகம். இல்லை நிறைய. அந்த செக்யூரிட்டியும் ஒரு ஆண்பிள்ளைதானே. அவருக்கு பெண்கள் மேல் ஆசை வராதா? அந்த Driverக்கு இருக்கும் உடலமைப்புதானே அந்த செக்யூரிட்டிக்கும் இருக்கிறது? இல்லை.. ஏதாவது ஆபரேஷன் செய்த பின் தான் செக்யூரிட்டி வேலைக்கு ஆளெடுக்கிறீர்களா?

செக்யூரிட்டி என்ற வேலைக்கு வந்த உடனேயே, ஒழுக்கக் கோட்பாடுகளை அவருக்குள் பதிய வைக்க உங்களால் முடிகிறதென்றால், அதையே ஏன் அந்த Driverக்கு நிகழ்த்த முடியவில்லை? அல்லது முயற்சிக்கவில்லை?

அடுத்த வீட்டுப் பெண்ணையும் தன் சகோதரி போல் கருதும் எண்ணத்தை அவரவராக வளர்த்துக் கொள்ளும் வரை, இவைபோன்ற போலிக் கட்டுப்பாடுகளையெல்லாம் வாழ்க்கை வரைமுறை என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை, இந்தக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.

-0-

ஏனோ மொழியை ஆராய்தலென்பது உவப்பானதாக இருக்கிறது. குறிப்பாக தென்னகத்து மொழிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், அவை ஒன்றையொன்று சார்ந்தும், சாராதும், தனக்கென்று தனியான ஒலி மற்றும் எழுத்துரு வடிவுற்றுக் கிளைத்தமை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறேன். தொடர்புடைய புத்தகங்கள் குறித்து நண்பர்கள் தெரியப்படுத்துங்களேன்.

சவுரவ் என்ற பெயரை சில வங்காளிகள் ஆங்கிலத்தில் Sourabh என்றும், ஏனையோர் Sourav என்றும் எழுதுகிறார்கள். போலவே Rajiv மற்றும் Rajib போன்ற பெயர்களும்.

நாம் B என்ற ஆங்கில எழுத்திற்குப் பயன்படுத்தும் ஒலிவடிவை வங்கத்தில் V என்ற எழுத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். Vim Bar எனும் சோப்பை, Bim Bar என்றுதான் உச்சரிக்கிறார்களாம்.

போகட்டும். தமிழில் நாம் வேகம் என்கிறோம். கன்னடத்தில் Baega என்கிறார்கள். போலவே, நாம் வேற (வேறு) என்பதை, Baera என்றும், நாம் விடு என்பதை, Bidu என்றும் சொல்கிறார்கள்.

தென்னாட்டிலும் V மற்றும் B ஒலிவடிவுகள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுகின்றன. ஆச்சர்யம்.. இவை கீபோர்டிலும் அருகருகேதான் இருக்கின்றன.

-0-

கீபோர்டைப் பார்த்தாயிற்றா..? சரி..

சற்று நேரத்துக்கு முன்னர்தான் Pixar தயாரிப்பான A Bug’s Life படம் பார்த்தேன். வெள்ளைக்காரன் படமெடுத்தாலே நல்லாருக்கும்னு சொல்லீருவீங்களே என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், அப்படி சொல்லும் கூட்டத்துக்கு நான் தலைவனில்லாவிடினும், பொதுச்செயலாளராகவாவது கொள்ளுங்கள். ப்ளீஸ்..!

ஆங்கிலப் படங்கள் பார்ப்பதின் உச்சபட்ச சௌகர்யம், ஒரு படத்தைப் பார்க்கும் முன்பே அது இரண்டு மணி நேரம் செலவழிப்பதற்குத் தகுதியான ஒன்றா என்று தெரிந்து கொண்டுதான் நாம் தரவிறக்கமே செய்வோம் என்பதுதான்.

அந்த வகையில் Pixar-ன் மேல் எனக்கிருக்கும் மரியாதைக்குத் துளியும் பங்கம் கற்பிக்காத படம் A Bug’s Life. பூச்சிகளின் வாழ்நிலையைக் கூட அழகு மிளிர உருவாக்கியளிப்பது Pixarக்கு சாத்தியப்படுகிறது.

தொடர்ச்சியாக வேறு வேறான விளிம்புகளில் கதைக்களத்தையும், கதை சொல்லலையும் நிரூபிப்பதில் காட்சியூடகத்தின் எண்ணிலாப் பரிமாணங்களை வெளிக்கொணரும் திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படுவது எனக்கு சாத்தியப்படுகிறது.

-0-

ஊருக்குச் சென்று வந்த அலுவலக நண்பனொருவன், ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருந்தான். வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் மெயிலும் அனுப்பினான் வழக்கம் போலவே. இதுவரையில் எல்லாம் சரியாக நடந்தது.

Folks,

Sweets are in the Panty. Kindly grab your shares.

Thanks.


-இதைத்தவிர!

குறிப்பு: Pantry – உணவுப் பொருட்கள் வைக்குமிடம்

நேரங் கிடைக்கையில் சந்திப்போம். நன்றி.

Read more...

Thursday, March 11, 2010

வாழ்க்கை வண்டி


மின் விசிறிக் காற்றுக்கும்,
சன்னற் திரைச் சீலைக்கும்
பிறந்து கொண்டிருக்கும்
வெளிச்சக் கீற்றுகள்

உறக்கம் புணராத கண்கள் மூடி
இமைக்குள் இருக்கும் இருட்டைப்
பார்த்துக் கொண்டிருப்பேன்

அணிச்சையாய் ஆரம்பித்து
அன்றுக்கான சலிப்புகளை
அசைபோட்டு ஓய்கையில்

எப்படி இன்றை விட தீர்க்கமாய்
நாளைகளை நம்புகிறேன் இன்னும்
என்பது தெரியாது

நம்பிக்கை கொள்வதை விட
நம்பிக் கொள்வதென்பது
பாதுகாப்பானதா
என்ற பிரக்ஞை இல்லாமலே

நன்றி: உயிரோசை

Read more...

Tuesday, March 2, 2010

மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் - 02/03/2010

ஹேராம் படத்தில் ஒரு காட்சி. காந்தியடிகளைக் கொல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் டெல்லிக்கு வரும் சாகேத்ராமன் ஹோட்டல் ஒன்றின் அறையை வாடகைக்கு எடுக்கச் செல்வான். அப்போது அந்த ஹோட்டலின் வரவேற்பாளர் அவன் பெயரைக் கேட்பார். தன் பெயரை பைரவ் என்று பொய் சொல்லும் சாகேத்ராமன், பின் திடீரென K.பைரவ் என்று மாற்றிச் சொல்வான்.

ஒருநாள் எதற்காகவோ டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன். மாலை நேரம். Typical Bangalore Traffic. திடீரென்று என் மண்டைக்குள் ஒரு பல்பெரிந்தது. சாகேத்ராமன், பைரவ் என்று சொன்னதை, K.பைரவ் என்று ஏன் மாற்றிச் சொன்னான் என்று!

கேளுங்களேன்.. K.பைரவ் என்றால் கால பைரவ். கெட்டவர்களைக் கூறு போட வந்த கால பைரவன்!

'காந்தியடிகளின் மேல் சாகேத்ராமனுக்கு இருந்த கோபத்தை எத்தனை சூசகமாக சொல்லியிருக்கிறார் கமல்' என்று ஆச்சர்யப்படுபவர்கள், இத்தனை நுணுக்கமான விஷயம் எத்தனையோ நாட்கள் கழித்து, சம்பந்தமேயில்லாத சமயத்தில் எனக்குப் புரிந்தது எப்படி என்றும் கொஞ்சம் ஆச்சரியப்படுங்கள்.

ஹேராம் பற்றிய என் மற்றொரு பதிவு

-0-

ஒரு பொன்மொழி!

சாலையில் வேகத்தடைகள் எப்படி அதிகப்படியான வேகத்தைக் குறைத்து விபத்தில்லாத பயணத்திற்கு உதவுகின்றனவோ அப்படித்தான் வாழ்வில் பிரச்சினைகளும். கொஞ்சம் நிதானப்படுத்தி, துவண்டு போகாமல் யோசித்து பிரச்சினைகளைக் கடந்து செல்லச் செல்லத்தான் வாழ்வின் பயணமும் வசந்தப்படும்.

எதிர்காலத்தில் எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் சமூக அறிவியல் புத்தகத்தில் படிக்கப்போகும் மேற்கண்ட பொன்மொழியைச் சொன்ன மகானுபாவர் யாரென்று உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?

வேற யாரு.. சாக்ஷாத் அடியேன்தான்.

-0-

வாரக்கடைசிகளின் பின்னிரவு நேரங்களில் All Time Great ஹாலிவுட் படங்களில் ஏதேனும் ஒன்றினைப் பார்ப்பதன் அலாதியே தனி. நான் தண்ணியடிப்பதில்லை என்பதால் உருளைக்கிழங்கு சிப்ஸும், அப்பா வாங்கிக் கொடுத்தனுப்பிய லாலா ஸ்வீட்ஸ் ஜிலேபியும் உடனிருத்தல் நலம்.

நேற்றிரவு Rob Reiner இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த A Few Good Men பார்த்தேன். என்னதான் படத்தின் ஹீரோ Tom Cruise என்றாலும், 15 நிமிடமே வரும் நம்ம தல Jack Nicholson-னின் நடிப்பு தான் ஹைலைட்டே. அட்டகாசமான நீதிமன்றக் காட்சிகளின் போதெல்லாம் படு Sharp வசனங்களில் கொள்ளை கொள்கிறார்கள் Tomஉம், Jackஉம்.

அத்தனை பெரிய நடிகர் Jack Nicholson கிளைமாக்சில் Tom-மிடம் தோற்று, அவமானப்பட்டு வெளியேறும் காட்சியில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தோன்றியது எனக்கு. என்ன செய்ய? எல்லாம் நம் படங்களின் தாக்கம்தான்!

-0-

இந்த வலைத்தளத்தை ஆரம்பிக்கையில் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, "பலப்பம்" என்ற பெயரையும் யோசித்தேன். 'எழுதிப் பழகுவதற்கு' என்ற அர்த்தத்தில். ஆனால் வேறு சில காரணங்களால் அந்தப் பெயரை வைக்கவில்லை.


ஏன் சொல்கிறேன் என்றால், எழுதிப் பழகும் என் அபிப்ராயம், கவிதைகளின் மீதான ஆவலாலும், நேரமின்மையாலும், கவிதைகளுடனேயே நின்று விட்டது. எழுத்தின் பழக்கத்தை மீண்டும் கொணரவும், மன ரஞ்சகமான எழுத்துடன், சற்று ஜன ரஞ்சகமாகவும் எழுத ஒரு முயற்சிதான் இந்த மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள்!

சரி. அதற்கு ஏன் 'மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள்' என்று பெயர் வைத்தேன் என்று கேட்கிறீர்களா? அட என்னங்க நீங்க.. இலக்கியவாதினா அப்படித்தான் பேர் வெப்பான். இது கூடவா தெரியாது உங்களுக்கு.. என்னமோ போங்க!

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO