Sunday, May 10, 2009

சில நொடிச் சிந்தனைகள் சில

சர்க்கரை டப்பாவுக்குள்
செத்துக் கிடந்தது
எறும்பு.

-o0o-

7 மணி. தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பதறியடித்து எழுந்தாள்
ரிமைண்டர் அடித்தவுடன்.

-o0o-

முன் சீட்டில் அவருடன்
அழகாக வேடிக்கை பார்க்கும் பிரவுனி.
மனைவி விவாகரத்தாகியிருந்தாள்.

-o0o-

பாஸ்வோர்டாய் காதலி பெயர்.
ஒவ்வொரு மெயில் ஐடிக்கும்
வேறு வேறாய்.

-o0o-

சௌந்தர்ய லட்சுமி
கிழிந்து வழிந்தாள்
ATM குப்பைக்கூடையில்.

-o0o-

மொத்த அபார்ட்மெண்ட்டுக்கும்
Happy New Yearக் கோலம் போட்டிருந்தாள்
வேலைக்காரி.

-o0o-

அமெரிக்க நாயின்
குரைப்புச் சத்தம்
கான்ஃப்ரன்ஸ் காலில்.

-o0o-

நடுவீதியிலொரு
கவன ஈர்ப்புத் தீர்மானம்
நைட்டிக்கு மேல் துண்டு.

-o0o-

சிமெண்ட் ரோட்டில்
சில கால்தடங்கள்
அவசரம் ஆறிப்போய்.

-o0o-

தண்டவாளத்தில்
மலமாக
ரயிலின் நன்றி.

Read more...

Thursday, May 7, 2009

யானும் ஒரு லௌகீகன்

கார்னர் சைட்டா..?
செம்மண் பூமியா..?
சிட்டில இருந்து எவ்ளோ தூரம்..?
மெயின் ரோட்டுக்குப் பக்கம்னாப் பரவால்ல..
பஞ்சாயத்தப்ரூவ்டா..?
தார் ரோடு, தண்ணி வசதி..?
ரொம்ப சதுரமாவோ, செவ்வகமாவோ வேண்டாம்..
NOC முக்கியம்..
தாய்ப் பத்திரமெல்லாம்..?
பக்கத்துல வீடெதும் ஆயிருக்கா..?
.
.
.
.
சற்று கூடக்குறைய
உருவகப்படுத்த வேண்டுமானால்
சில பழைய படங்களில் வருவது போல்
வகை வகையாய் முகரூபங்கள்
மாறி மாறி வந்து வந்து கேட்கையில்
இறுக இறுகக் கண் மூடவும்,
முழங்கைகள் முகம் மறைக்கவும்,
இடவலமாய் தலையை ஆட்டுவேன்
என்று சொல்லலாம்.
பர்சனல் லோனைப் போட்டதில்
ரெஜிஸ்ட்ரேஷனும் ஆயிற்று.
பாரதி ஸ்வரூபனாய் வாழ நினைத்த
நான் கடன் வாங்கிக்
கட்டப் போகும் வீட்டுக்கும்
மஞ்ச பெயிண்ட் கிடைக்கும்.
தாக்ஷாயணி பொதினா சட்னி
நன்றாய் செய்வாள்.
நைட்டுக்கும் நன்றாய்த்தான் இருப்பாள்.

Read more...

Friday, May 1, 2009

சாரு - கடிதம் II

from Mathan V
to charunivedita@charuonline.com
date Fri, Mar 27, 2009 at 4:38 AM
subject ஒரு சிறுகதை முயற்சி


ப்ரிய சாரு,

மீண்டும் மதன்.

என் முயற்சிகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடனும், தங்கள் நேரத்தைத் திருட முயற்சி செய்கிறேனோ என்ற தயக்கத்துடனும், என் அடுத்த சிறுகதை முயற்சியின் லிங்கைத் தருகிறேன்.

http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/03/blog-post_27.html

வலைத்தளங்களுக்கெல்லாம் நீங்கள் வர மாட்டீர்கள் என்று தெரியும். வந்து பார்ப்பீகள் என்று நம்புகிறேன் ஏனோ.

நன்றி.

--மதன்

பதில் கடிதம்:

படித்தேன் மதன். ஆனால் கதை என்னைக் கவரவில்லை. நாம் கற்க வேண்டியது இன்னும் எத்தனையோ இருக்கிறது. சிறுகதைகளில் கு.ப. ரா., தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், மௌனி, ஆதவன், அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், ந. முத்துசாமி, சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், ஷோபா சக்தி என்று பல சாதனையாளர்களை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. ஷோபா சக்தியின் சிறுகதைகளை நீங்கள் படித்திருக்கிறீர்களா? உங்களுடைய ஆத்தா என்ற கதையைப் போல் தமிழில் ஒரு நூறு கதைகள் எழுதப் பட்டுள்ளன. இப்படி ஏற்கனவே எழுதப் பட்ட ஒரு கதையை நாமும் ஏன் மீண்டும் எழுத வேண்டும்?

5.4.2009.

7.20 p.m.

from Mathan V
to charunivedita@charuonline.com
date Sat, Apr 25, 2009 at 2:36 PM
subject Re: ஒரு சிறுகதை முயற்சி

ப்ரிய சாரு,

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு தமிழில் தட்டச்சு செய்கிறேன். கடைசியாக எழுதியது உங்களுக்கு எழுதிய கீழ்க்கண்ட கடிதம் தான். மிக அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக உங்களுக்கு உடனே பதில் எழுத முடியவில்லை. மன்னியுங்கள்.

வழக்கம் போலவே, எத்தனை சிறுவனாக இருந்தாலும், என் கடிதத்தையும் மதித்து, என்னுடைய 'ஆத்தா' என்ற கதையைப் படித்து, தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தீர்கள்.

எதிர்மறைக் கருத்தாக இருந்தாலும் அதை உவந்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உங்கள் எழுத்திலிருந்தே கற்றுக்கொண்டிருக்கிறேன். சாருவின் வாசகனாக இருந்துவிட்டு, நடுநிலைமையில்லாமல் இருந்தால் எப்படி? உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும் நன்றி சாரு.

எழுத்து ஏனோ என்னை ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இளம்பிராயந் தொட்டு எழுத்தின் மேல் ஒரு இனம்புரியாத காதல். இப்பொழுது உங்களையெல்லாம் படிக்கும் போது அது பல்கிப் பெருகுவது எப்படி என்று யோசிப்பது அர்த்தமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். நீங்கள் சொன்னது போல சிறுகதை, கவிதை மற்றும் பல இலக்கிய வடிவங்களிலும் நம்மைத் தாண்டி நெடுந்தொலைவு சென்றுவிட்ட எத்தனையோ மகானுபாவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொட்ட எல்லைகளையெல்லாம் தாண்டி நம் படைப்பை எடுத்துச் செல்லும் கடைமையும், உழைப்பும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருக்க வேண்டும்.

இந்த உண்மை புரிந்த மூத்த படைப்பாளியான நீங்கள், எதுவும் தெரியாத என்னைப் போன்ற கத்துக் குட்டிக்கு அதைத் தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். ஒரு வகையில் பார்த்தால் நீங்கள் உங்கள் கடைமையை செய்ய நான் உதவியிருக்கிறேன். தெருவோர பேட்ஸ்மேன் ஒருவன் சச்சினைப் பார்த்தால் ஆட்டோகிராஃப்தான் கேட்க வேண்டுமா. பேட்டிங் நுணுக்கங்களைப் பற்றியும் கேட்கலாம்தானே?

உங்களுடைய நேர்கோட்டு விமர்சனங்களுக்காகவும், எதைப் படிக்க வேண்டும், எவருடையதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும் தான் எதையாவது எழுதித் தொலைத்தால், அதனை உங்களுக்கு அனுப்ப ஆவலுறுகிறது.

எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் சாரு என் மூலதனம். 'அதற்கான உழைப்பு முதலில் வாசித்தலின் வடிவில் வெளிப்பட வேண்டும்' என்ற உண்மையே சமீபமாகத்தான் புரிந்தது. வெறும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டே என் சில கவிதைகளுக்கு உங்கள் பாராட்டைப் பெற்றது என்னுடைய மிகப் பெரிய சாதனையாகத்தான் கருதுகிறேன். எனில், நீங்கள் சொன்ன எழுத்தாளர்களையெல்லாம் படித்து விட்டு முயற்சி செய்தால் ஓரளவுக்குத் தேறும் படைப்புகளைத் தர முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்விடத்தான் செய்கிறது.

நீங்கள் சமீபமாய் எழுதியிருந்தீர்கள். ‘வலையில் எழுதுபவர்கள் பொழுது போக்குவதற்காக எழுதுகிறார்கள்’ என்று. இருக்கலாம். ஆனால் நான் அப்படியில்லை சாரு. நீங்கள் சொல்வீர்களே. ‘எழுத்து என்னுடைய பேஷன்’ என்று. அதைப் போல. எனக்கும் அது ஒரு பேஷன். என்ன.. உங்களுக்கு இருப்பதை அளவில் ‘சற்று’ குறைவாக இருக்கிறது. இதை வளர்த்து, வார்த்து வைத்துக் கொள்வது என் கடைமை.

ஆத்தா என்ற அந்தக் கதையைப் பற்றி நீங்கள் சொல்லும்போது "உங்களுடைய ஆத்தா என்ற கதையைப் போல் தமிழில் ஒரு நூறு கதைகள் எழுதப் பட்டுள்ளன. இப்படி ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு கதையை நாமும் ஏன் மீண்டும் எழுத வேண்டும்?" என்று சொல்லியிருந்தீர்கள். ஏற்கெனவே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாததால் வந்த வினைதான் சாரு இது. தெரிந்திருந்தால் இதுவரையில் இல்லாத முறையில் தான் முயற்சி செய்திருப்பேன். பரவாயில்லை. குட்டுப்பட்டாலும், சாரு கையில் தானே குட்டுப்பட்டேன்! என் எழுதும் ஆசைக்குத் தீனி போட முதலில் படிக்க ஆரம்பிக்கிறேன். எதிர் காலத்தில் எப்போதாவது உங்களுக்குப் பிடிக்கும் வகையில் எழுதியிருக்கிறேன் என்று தோன்றினால் அனுப்புகிறேன் சாரு. எப்படியும் இன்னும் ஒரு இரண்டு, மூன்று ஆண்டுகளாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

உங்கள் எழுத்தில் தினமும் உங்களை சந்தித்து, என் எழுத்தில் உங்களை சந்திக்கக் காத்திருக்கும்,

மதன்

Read more...

  ©Template by Dicas Blogger.

TOPO