Friday, August 28, 2009

Cognitive Poetics - சில கடிதங்களும், புரிதல்களும்

நண்பர் அபிலாஷ் அவர்கள் சமீப காலமாக உயிர்மை மற்றும் உயிரோசையில் மிக நல்ல கட்டுரைகளை எழுதி நல்ல அடையாளத்திற்கு உள்ளாகியிருப்பவர். சமீபத்தில் அவர் எழுதிய படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் என்ற கட்டுரை அறிமுகப்படுத்திய Cognitive Poetics என்ற சற்று நுணுக்கமான, புதுமையான விமர்சன முறையைப் பற்றிய கடிதப் பரிமாற்றம். மேற்கொண்டு படிக்கும் முன் கட்டுரையைப் படித்தல் நலம். இல்லையென்றால் எதுவும் புரியாது.

-oOo-

2009/8/18 abilash chandran <
abilashchandran70@gmail.com>

நண்பர்களே,

வணக்கம். Cognitive linguistics எனும் சுவாரஸ்யமான ஒரு விமர்சன முறையை அறிமுகப்படுத்தி ஜெயமோகன், சுஜாதா, சாரு, மனுஷ்யபுத்திரன், பூமா ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் படைப்புகளை நுணுக்கமாக அணுகும் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளேன்:
படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும்

என்னைப் பொறுத்தவரையில் இதுவொரு புது முயற்சி என்பதால் உங்கள் கருத்துக்களை அறிய் விரும்புகிறேன். குறிப்பாய் ஒரு கேள்விக்கு விடையளியுங்கள்:


இந்த விமர்சன முறை வாசகர்\எழுத்தாளர்களுக்கு பயன்படுமா?
உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி,

நட்புடன்

அபிலாஷ். ஆர்

-oOo-

2009/8/25 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

உங்கள் கட்டுரையைப் படித்தேன்.

எனக்குப் பிடித்தது. புதுமைகளைப் புகுத்தி, வழமைகள் தரும் வழவழப்பை நீக்குவது, வாழ்வுக்கும் சரி, இலக்கியத்துக்கும் சரி, ஒன்றும் புதிதில்லையே. அந்த வகையில் உங்கள் முயற்சிக்கு என் கம்பளம் சிவப்பாகிறது!

நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இம்முறை என்னைப் பொறுத்தவரை படைப்பாக்கத்தின் புதிய பரிமாணங்களை வெளிக் கொணர உதவுவதுடன், புரிந்து கொள்ள மிகவும் கடினமான உத்திகளையும் வாசகனுக்குக் கற்றுத் தர உதவி செய்யும் என்று நான் நினைக்கிறேன்.

படைப்பை உருவாக்குபவர் கவனத்திற்குட்பட்டோ / படாமலோ (?!) உபயோகித்திருக்கும் இந்த உத்திகள் மிக அடர்த்தியான / செறிவான வாசிப்பனுபவத்திற்குப் பின்னர்தான் கிட்டும் என்று நம்பத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கைக்கு உரம் போடும் காரணிகளாக எனக்கில்லாத வாசிப்பனுபவமும், உங்களுடைய வாசிப்பனுபவமும் இருக்கின்றன. :)

ஆனாலுமெனக்கு பின்புலமும், மைய உருவும் சேர்ந்து நடத்தும் நாடகம், எந்த அளவுக்கு படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையில், முன்நிர்ணயிக்கப்பட்ட கட்டமைப்பில் நிகழ சாத்தியப்படும் என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களே கூட, Cognitive Poetics முறையை மனதில் கொண்டு எழுதியிருக்க மாட்டார்கள்தானே. அப்படி முயற்சித்தாலும், அவர்கள் மனதில் கொண்டிருந்த பின்புலம் எந்த அளவுக்கு வாசகனுக்குப் புலனாகும்?

நம் சூழலில்தான் படைப்பின் எல்லாப் பரிணாமங்களுமே ’சுய புரிந்துகொள்ளல்’ முறையில் அரங்கேறுகின்றனவே. இது ஒரு ஆரம்ப நிலை வாசகனின் அனுபவ முதிர்ச்சிக் குறை காரணமாகத் தோன்றிய சந்தேகமாகக் கூட இருக்கலாம். தெரியவில்லை.

ஒரு சிறு முயற்சி. பாருங்களேன்.

நான் உள்ளே இருந்தேன்.

கதவைப் பூட்டும்
சப்தம் கேட்டது.

உள்ளிருந்து பூட்டினாயா
வெளியிலிருந்து பூட்டினாயா
என்றேன்.

பதில் வரவில்லை.

வெளியிலிருந்து
பூட்டியிருந்தால்தான்
பதில் வராது
என்ற பதில்
வராத பதிலிலிருந்து
வந்தது.

உள்ளேயிருந்தும்
பூட்டியிருக்கலாமோ?

ஆனாலும்
பதிலில்லையே.

தெரியவில்லை.

இது என்னுடையதுதான். இதை எழுதும் போது எனக்கு Cognitive Poetics முறை பற்றி இப்போது தெரிந்திருக்கும் அரை குறையும் தெரியாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இங்கு பின்புலமாக தெளிவின்மையின் ஒரு நிலை அல்லது அதையொட்டிய அறியாமையைப் போக்கும் ஒரு முயற்சி.

->தெளிவைத் தேடியடையும் பொருட்டு ஒரு கேள்வி வருகிறது.அதற்கு பதில் கிடைக்கவில்லை.

->ஆனால் வராத பதிலிலிருந்து வந்த அல்லது புரிந்து கொள்ளப்பட்ட ஒரு படிநிலை பதிலுக்குப் பிரதியீடாகிறது.

->தெளிவினை நெருங்கி வந்துவிட்டோமோ என்ற ஐயம் வரும் வேளையில் இன்னுமொரு கேள்வி வந்து, ஏறி வந்த ஜானை முழம் சறுக்க வைக்கிறது.

எனில்,

முதல் கேள்வி
அதற்குக் கிடைத்த பதில் - சற்று தெளிவு
மீண்டும் ஒரு கேள்வி - மிஞ்சும் குழப்பம்

என்பனவற்றை முன், பின் நகர்ந்து ஊடாடும் மைய உருவங்களாகக் கொள்ளலாமா?

உங்கள் பதில் இல்லை என்பதாகவும் இருக்கலாம். மாறாக இதே கவிதையில், உங்கள் கற்பனைக்கும், புரிதலின் வடிவுக்கும் ஒத்த, என்னிலிருந்து மாறுபடும் பின்புலமும், மைய உருவும் கிட்டலாம்.

எனவே, மேற்கூறிய ’எழுத்தாள - வாசக’ உறவை ஒட்டிய எனது வினாவின் ’பின்புலம்’ சற்று உறுதியாகிறதுதானே.

நேரமிருப்பின் பதிலளியுங்கள்.

கட்டுரைக்கும், கருத்துக் கேட்டமைக்கும் நன்றிகள்.

-மதன்

-oOo-

2009/8/27 abilash chandran <abilashchandran70@gmail.com>

நண்பர் மதனுக்கு

இரண்டு விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் கட்டுரையை மிக நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சற்று கடினமான விவாதப் பொருளை இணையத்தில் எழுத வேண்டாமே என்று நேற்று தான் ஒரு நண்பர் அறிவுரைத்தார். உங்கள் புரிதல் மற்றும் எனக்கு வந்துள்ள பிற கடிதங்கள் தீவிர வாசகர்கள் எங்கு எழுதினாலும் படித்து ஆழமான பொருளை சென்றடைவார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது.

அடுத்து உங்கள் அருமையான கவிதை பல அர்த்த தளங்கள் கொண்டது. அக்கவிதையை தந்ததற்கு நன்றி.

Cognitive poetics எழுத்தாளனோ வாசகரோ தங்களுக்கான உபபிரதிகளை கண்டடையலாம்; CP வாசிப்புக்கு அப்பாற்பட்டும் இது நிகழலாம் என்கிறது. இந்த கட்டற்ற வாசிப்பு தானே இலக்கியத்தின் ஒளிமிகுந்த தளம். முன்-நிர்ணயிக்கப்பட்ட எந்த உறவும் நிச்சயம் இல்லை.

நான் இக்கவிதையை எப்படி புரிகிறேன் என்பதை கீழே தந்துள்ளேன்.

கதவு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு அது குறித்து பிற தகவல்கள் இன்றி ஒரு பின்புலமாக அது செயல்படுகிறது. யார் கதவைப் பூட்டினது என்பதே கவிதையின் முக்கிய விவாதச்சரடு. இது சம்மந்தமான கவிதை சொல்லியின் தெளிவின்மை ஒரு தத்துவார்த்த ஆழத்திற்கு கவிதையை எடுத்து செல்கிறது. அதாவது யார் பூட்டினது என்னும் தொடர் கேள்விகள், அவை அதிகமான இடத்தை பற்றுவதாலும், நிகழ்வுகளை ("யார் பூட்டினது") குறித்து பேசுவதாலும், மைய உருவம் ஆகின்றன.

கதவை உறவின் குறியீடாக கொள்ளலாம். அனைத்து உறவுகளும் ஓரிடத்தில் அடைப்பை நேரிடும். ஒருவித முட்டி நிற்கும் தன்மை; வருடக்கணக்காய் பழகியும் ஒருவரது மனதிற்கும் நாம் புழங்க முடியாத இடங்கள் இருக்கும். இருத்தலியல் பார்வையில் அணுகும் போது கதவு தான் பின்புலம்; அதுவே பிரபஞ்ச இயக்கத்தின் குறியீடாகிறது. மனித-பிரபஞ்ச உறவை யார் இயக்குவது என்ற புள்ளியிருந்து இக்கவிதையை வாசிப்பதும் சாத்தியம்.

உள்ளிருந்தா வெளியில் இருந்தா என்று மைய உருவங்கள் கேள்விகளாய் ஊசலாடுவது உண்மை தான். இரு மைய உருவங்களும் ஆரம்பத்திலேயே மாறி மாறி இடத்தை பிடிக்கின்றன், இழக்கின்றன; மூன்றாவதாய் ஒரு மைய உருவத்துக்கு சாத்தியம் உள்ளதாய் எனக்குப் படுகிறது. முழுக்க முழுக்க ஒரு வாசிப்பு பின்னணியில் இருந்தே இதைக் கூறுகிறேன். மாறுபட்ட முறையிலும் மற்றொருவர் இவ்விமர்சன முறையை கவிதையில் செலுத்தலாம்.

இக்கடித பரிவர்த்தனையை என் வலைப்பூவில் பிரசுரிக்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி உண்டா?

அன்புடன் அபிலாஷ்.ஆர்

-oOo-

2009/8/27 Mathan <mathansri@gmail.com>

அன்பின் அபிலாஷ்,

சந்தேகங்களைத் தெளிவு செய்ததற்கு நன்றி.

கதவு உறவின் குறியீடு என்பது A very good catch. இதே தளத்தை மனதிற் கொண்டுதான் அந்தக் கவிதை எழுதப்பட்டது என்பதை நான் இங்கு சொல்ல வேண்டும். சரியான பின்புலத்தை அடையாளங் கண்டு கொண்ட வாசிப்பு, அவரவர் புனைவின் ஆழத்திற்கொத்து பல்வேறு உப பிரதிகளுக்கும், மைய உருவங்களுக்கும் வழிகோலுகிறது.

சாத்தியமிருப்பதாக நீங்கள் சொன்ன மூன்றாவது மைய உருவை ஒரு முறை முயன்றுதான் பார்ப்போமே.

பூட்டுதல் - உறவின் பிரிதல் அல்லது விலகல்.

வெளியில் சென்று பூட்டியிருந்தால் உறவிலிருந்த இருவருக்கும் பிரிவு.

உள்ளிருந்து பூட்டியிருந்தால், இருவருக்கும், உலகிற்குமான பிரிவு. ஆனால் உறவு நிலைக்கிறது.

மேற்கண்ட இரு நிலைகளில் எது உண்மையென்று தெரியாது.

மூன்றாவதாக, உள்ளேயிருந்தே பூட்டிவிட்டு, பூட்டியவர் பதில் சொல்லாமல் விட்டுவிட்டால் புலப்படாத ஒரு காரணத்தினால், விருப்பமிருந்தும் (உள்ளேயிருந்தும்), பகிரப்படாததால் ஒரு உறவு முறிகிறது.

ஊடே இரண்டாவது மைய உரு உண்மையாக இருக்காதா என்ற கவிதை சொல்லியின் ஏக்கம் மிக மெல்லிய இழையாகக் கசிகிறது.

நீங்கள் அனுமதி கேட்கும் அளவு நான் பெரியவனில்லை. தாராளமாகப் பதிவிடுங்கள்.

கடினம் என்றெல்லாம் யோசிக்காமல் இன்னும் பல புதுமைகளை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

நேரத்துக்கு நன்றி.

ப்ரியமுடன்,

-மதன்




4 மறுமொழிகள்:

யாத்ரா August 28, 2009 at 3:11 PM  

மதன் அருமையான கவிதை, அதை ஒட்டிய அருமையான விவாதங்கள், அபிலாஷ் அவர்களின் கட்டுரையை நானும் முன்னமே வாசித்தேன், அருமையாக இருந்தது, உங்கள் சந்தேகம் எனக்கும் இருந்தது, எழுதுபவர் இந்த அமைப்பு முறையையெல்லாம் கருத்திற்கொண்டு தான் எழுதுகிறாரா,இயல்பாக அமைகிறதா என்று.

கவிதை குறித்த ஆழமான புரிதலைப் பற்றிய இம்மாதிரியான விவாதங்கள் வரவேற்கத்தக்கது. இது வாசகர்களுக்கு நவீன கவிதையின் பால் உள்ள ஈர்ப்பை மேம்படுத்தும் என நம்புகிறேன்.

கவிதை பல தளங்களில் யோசிக்க வைக்கிறது, அவரவர் அனுபவத்திற்கேற்ப தளம் விரிகிறது, இதிலிருக்கும் தத்துவத்தளம் அருமை. நான் பல காட்சிகளில் இவ்வரிகளைப் பொருத்திப் பார்க்கிறேன்.

எனக்கு தேவதச்சன் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது, உயிரோசையில் பாவண்ணன் கூட எழுதியிருந்ததாக நினைவு.

தேவதச்சன் கவிதை

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

இந்தக் கவிதையை உங்க கவிதை நினைவூட்டியது மதன்.

மதன் August 28, 2009 at 11:05 PM  

ஆம் யாத்ரா. உயிரோசையில் பாவண்ணன் எழுதியிருந்தார். வா மணிகண்டன் கூட அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்தார் அதே கவிதையப் பற்றி. அட்டகாசமான கவிதையது.

பாராட்டுகளுக்கு நன்றி யாத்ரா!

Ashok D August 29, 2009 at 6:30 PM  

மதன் நல்ல உரையாடல் கடிதங்கள். ஆர்.அபிலாஷ் உயிரோசையில் கலக்கிக்கொண்டிருப்பவர்.

மற்றும் அற்புத இணைப்பாய் தேவதச்சன் கவிதை யாத்ராவிடமிருந்து.

தொடருங்கள் இதுபோன்ற இலக்கிய இன்னிசைகளை.

மதன் August 31, 2009 at 8:25 AM  

நன்றிங்க அஷோக்!

  ©Template by Dicas Blogger.

TOPO