ஓட்டம்
அக்குளின் கனத்த வாசம்
சட்டைகளுக்குள் ஊரிக் கொண்டிருக்கும்
மாலை 6 மணி சென்.ஜான்ஸ் சிக்னலின்
நான்முனைகளிலும்
புளுத்துக் கொண்டேயிருக்கும்
வாகனங்களில்
இன்னும் சற்று எஞ்சியிருக்கும்
அவசரத்தின் எச்சம்
மற்றுமொரு நாளைக் கடத்திவிட
பச்சை விளக்குக்குக் காத்திருக்கையில்,
பேரோலமிட்டபடியே
முட்டி மோதி எப்படியோ
முன்னே வந்து விட்ட
ஆம்புலன்ஸ் ஒன்று
அத்தனை கண்களும் பார்த்திருக்க,
ஆத்திர கதியிலொரு U டர்ன் அடித்து
வேகமெடுத்தும்,
எடுக்க முடியாமலும்,
அரந்து பறந்தந்த
வண்டித் திரளுக்குள்
புள்ளியாகி மறையும்
ஒற்றை நொடியில் உறைக்கிறது
எதற்கிப்படி ஒவ்வொரு நாளும்
ஓடுகிறோம் என்று.
3 மறுமொழிகள்:
எந்திர வாழ்வின் அவசங்களை முன் நிறுத்தி நீங்கள் கேட்கும் கேள்வி மிக அழுத்தமாக இருக்கிறது
நல்லா இருக்கு மதன். உண்மை, எதற்கு இப்படி ஓடுகிறோம்
நன்றி நேசமித்ரன்..
ஆம் யாத்ரா.. எதற்கென்றே தெரியாமல் ஓடியோடிச் சாகிறோம்!
Post a Comment