உறவுகள்
நத்தையைப்போல் நகர்ந்து ஊரும் வாழ்வின் நாட்களில், பிடிமானமாய் விளங்குவது உறவு. தளர்வு மனதை ஆட்கொள்ளும்போதெல்லாம் ஊக்கம் அளிப்பது உறவு. உறவில்லாத ஒரு தனிமர வாழ்வை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது மனித சமுதாயத்தால். அந்த அளவு நாம் அனைவரும் உறவெனும் சங்கிலியினுள் பிணையுண்டு கிடக்கிறோம்.
உறவு என்று இங்கே அர்த்தப்படுத்துவது, குடும்ப உறவுகளை, அதாவது பிறப்பால் உண்டான உறவுகளை மட்டும் அல்ல. நாம் அறிந்த மனிதர்களுள், நாம், நம்மைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு உயிருமே உறவுதான். ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டுமே உறவென்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. சொல்லப்போனால், குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களையும் நட்பில் பகிர்ந்து கொண்டு, ஆறுதலோ, தெளிவோ, வேறு எது வேண்டுமோ அதைப்பெற முடியும்.
பெற்றோரையோ, உடன் பிறந்தோரையோ, நாம் தெரிவு செய்து கொள்ள இயலாது. ஆனால் நட்பில் இந்த வசதி உண்டு. இந்தத் தெரிவை சரியாக செய்யக் கற்றுக்கொண்டால், வாழ்வும், உறவும் துலங்கும். இல்லையேல், நட்பே வாழ்வைக் கெடுக்கும். அங்கே உறவென்ற வார்த்தைக்கெல்லாம் இடம் இல்லை.
சரி, காலத்துக்கும் கூட வரும் உறவைக் கண்டு கொள்வது எப்படி? மனிதர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, அவரோடு நல்லதொரு உறவு அமையுமா என்று அறிந்துகொள்வது சாத்தியமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேட வேண்டிய அவசியமே இல்லை. நாம், நாமாக இருந்து விட்டாலே, நமக்கான உறவுகள், நம்மை வந்து சேரும்.
மிகச்சாதாரணமாகப் பழகும் இருவர், எப்போது நட்பென்ற எல்லை கடந்து, உறவென்ற ஊர் சேர்கிறார்கள் என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாத ரகசியம். அது அவர்கள் அறிமுகமான சமீபத்திலேயே நிகழலாம். இல்லை மாதங்களோ, வருடங்களோ கூட ஆகலாம். காலம் தன் கையில் வைத்திருக்கும் கணக்கு நோட்டில் தீர்மானிக்கப்படுவது அது. ஒரு வேளை நீண்ட காலம் கழித்து மனதால் ஒன்றும்போது, இத்துணை காலத்தை வீணடித்துவிட்டோமே என்று வருந்துவதைக் காட்டிலும், இப்போதாவது காலம் அதன் திரையை விலக்கியதே என்று சந்தோஷப்படுவதே உத்தமம்.
இப்படி மனதால் ஒன்றி விட்ட உறவுகளுக்குள் விரிசல் வராமல் பார்த்துக்கொள்வது அவரவர் சாமர்த்தியமே. ஏனென்றால், கருத்து வேறுபாடும், அதையொட்டி வரக்கூடிய வாதப் பிரதிவாதங்களும் உறவுகளுக்குள் மிக இயல்பானவை. நெருக்கம் கூடும் அளவுக்கு உரையாடும் மற்றும் உடனிருக்கும் நேரமும் அதிகரிக்கும் அல்லவா. கூடவே பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கத்தானே செய்யும். இத்தகைய தருணங்களையும் தாண்டி, கூடவே வரும் உறவுகளைப் பெற, ஒருமித்த புரிந்துகொள்ளுதல் மிக அவசியம். சிலரைக் கேட்டால், பெறாமல், பெற்ற உறவுகளிடம், வெறுமனே கருத்தை நிரூபித்து, சூழ்நிலையை வெற்றி கொள்வதற்காக விவாதிப்பதை விட, உறவின் முக்கியத்துவத்தை காப்பதற்காக விட்டுக்கொடுத்துவிடுவதே உசிதம் என்பார்கள்.
இன்னொருபுறம், "இல்லை.. இல்லை.. என்னதான் வாதம் செய்தாலும், கருத்தின் பொருட்டு பிரயத்தனங்களே நிகழ்ந்தாலும், நாங்கள், நாங்களாகவேதான் இருப்போம். அதில் விட்டுக்கொடுக்க தேவை இல்லை. நான் நேசிப்பவரின் கருத்து தவறென்றால், இடித்துரைப்பது என் பொறுப்புதானே.." என்கிறீர்களா? அதுவும் சரிதான். உறவில் விரிசல் வேண்டாம் என்பதற்காக விட்டுக்கொடுத்தலும் அழகுதான். திருத்தியே தீருவேன் என்ற தீர்மானமும் அழகுதான்..!
நமக்கு ஒருவர் முக்கியம் என்ற நிலை வந்த உடனேயே, எவ்வளவு முக்கியம் என்ற கேள்வியும் பின்தொடர்கிறது. அதற்கு பதில் "எனக்கு மட்டும்தான் முக்கியம்" என்ற நிலைதானென்று மனது, தன்னை அறியாமலேயே நம்பத்தொடங்குகிறது. Here comes the so called possessiveness. (Possessiveness-ஐ இப்போதைக்கு உரிமைத்தனம் என்று தமிழ்ப்படுத்திக் கொள்வோம்) பாசம், நேசம் போன்ற வார்த்தைகளை எல்லாம் பிரயோகப்படுத்தும் உறவுகளிடமும், உரிமைத்தனம் இல்லாமல் பழகுவதற்கு உண்மையாகவே பக்குவப்பட்ட மனம் வேண்டும்.
எனக்கு முக்கியமான ஒருவருக்கு நான் முக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான். ஆனால், நான் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தொடங்கும் புள்ளியில்தான் விரிசலுக்கு வித்திடுகிறோம்.
எனக்கு ஏன் செய்யவில்லை என்று நான் கேட்கலாம். தவறில்லை. எனக்கு யாரென்றே தெரியாத ஒருவருக்கு ஏன் செய்கிறாய் என்று நான் கேட்கலாமா? கூடாது என்ற உண்மை பலருக்கும், பட்டுத் தெளிந்த பின்தான் புரிகிறது என்பதே கண்கூடு. உண்மை புரியும் வரை, அந்த உறவோடு சம்பந்தப்பட்டவர்கள் யாவருக்குமே நிம்மதி இருக்காது. இந்த அவஸ்தை எல்லாம் படாமலே உண்மை புரியும் அளவு பக்குவப்பட்டிருந்தால், பாராட்டப்பட வேண்டியது அவசியம்.
ஒரு காலகட்டத்தில் என்னை நேசிக்க ஆரம்பித்த ஒருவர், அவர் வாழ்வில், மேலும் எத்தனையோ பேரைச் சந்திக்க வேண்டியிருக்கும். பழக வேண்டியிருக்கும். என்றோ, எப்போதோ, என்னுடன் பழகி, என்னை நேசிக்க ஆரம்பித்த பாவத்துக்காக வேறு யாரையுமே அவர் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் காட்டுமிராண்டித்தனமில்லையா? இதற்காக நேசிப்பவர்களின் மீதே தன் கருத்தை, வலுக்கட்டாயமாகத் திணிக்கத் துணிதலும், அது மறுக்கப்படும் பட்சத்தில், உறவே வேண்டாமென்று உதறும் அளவுக்கு, கண்மூடச் செய்துவிடலும் உரிமைத்தனத்தின் சிறப்பியல்புகள்.
எனக்குப் பிடித்தமானவருக்கு, எனக்கு பிடித்தவைகள்தான் பிடிக்க வேண்டும், எனக்குப் பிடிக்காதவைகள், பிடித்தமானவைகளாக இருக்கக்கூடாது என்ற எண்ணமும் உரிமைத்தனத்தின் ஒரு பரிமாணம். எனக்கு எப்படி வேண்டுமோ, அப்படியெல்லாம் ஆட்டுவிப்பதற்கு, அவர் என்ன களிமண்ணா? அவரும் சக மனிதர்தானே. மேலும், நாம் நேசிக்கும் ஒருவரை, அவருடைய இயல்புகளை, உள்ளது உள்ளவாறே ஏற்றுக்கொள்வதுதான் அந்த உறவுக்கு நாம் கொடுக்கும் மதிப்பாக இருக்க முடியும்? ஆக, உறவுக்குள், தனிப்பட்ட சுதந்திரம் என்பது, தேவையான ஒன்று.
நான் ஒருவரிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் (Impact), அல்லது என்மேலான அவருடைய பாசம், என்னுடைய தனித்தன்மைக்கான அடையாளமாகக் (Symbol of my individuality) கருதப்பட வேண்டுமே தவிர, இன்னொருவர் மீது அவர் கொண்ட ஈடுபாடு, எந்த விதத்திலும் என் மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பாதிக்காது என்ற உண்மை விளங்கினால் கொண்டிருக்கும் உறவுக்கு நல்லது.
இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் இடமளிக்காமல், நேசிப்பவர்கள் எங்கு சென்றாலும், எத்தனை காலம் பார்க்காதிருந்தாலும், பேசாதிருந்தாலும், நமக்கான அந்த நேசத்தின் ஆழம், குறையவே குறையாது என்ற நம்பிக்கை இருந்துவிட்டால், உறவின் அழகு என்றைக்கும் குன்றாதிருக்கும்.
உறவுக்குள் பிரச்சினைகளைத் தவிர்க்க விழைந்தால், முதலில் எதிர்பார்த்தலைக் குறைக்க வேண்டும். குறைக்க முயற்சித்தலில் ஆரம்பித்து, எதிர்பார்த்தல் என்பதே இல்லாத நிலைதனை அடைய வேண்டும். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. எதிர்பார்ப்பு ஒரு கிருமி. எதிர்பார்த்தது நடக்கும்போது, சந்தோஷப்படும் மனது, அதுவே ஏமாற்றமாகும்போது விரக்தியடைகிறது (Depression). விரக்தியின் அடர்த்தி அதிகரித்து, மன அழுத்தம், கோபம் என்று பல வடிவங்களில் வெடித்து, வெளிப்படுகிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமைக்கு என்னதான் நியாயமான காரணமாக இருந்தாலும், அந்தக் கற்பிதத்தைக் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இருப்பதில்லை மனது.
எதிர்பார்த்ததையெல்லாம் ஈடு செய்யும் வரைதான் நான் நேசிப்பேன், இல்லையென்றால் யோசிப்பேன் என்ற கூற்றில், சுயநலத்தைத் தவிர வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஒன்றை எதிர்பார்த்து, அதை எனக்காக, நான் விரும்பும் ஒருவர் செய்தால், சந்தோஷம்தான். ஆனால் இந்தச் சந்தோஷம் தற்காலிகமானதுதான். அடுத்த முறை என் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்போது, இந்தத் தற்காலிகச் சந்தோஷம் காற்றில் கரைந்துவிடுகிறது. நான் எதிர்பார்க்காமலேயே எனக்கு என்ன வேண்டும், என்ன செய்தால் நான் சந்தோஷமாக இருபேன் என்று உணர்ந்துகொண்டு, அதைச் செய்யும் உறவு தரும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுவே நிரந்தரமானது.
அப்படியான உறவுகள் கிடைக்க முதலில் எதிர்பார்த்தல் என்பது இல்லாது இருக்க வேண்டும். நான் ஒன்றை எதிர்பார்க்கிறேன் எனும்போது, எதிர்பார்ப்பதை நிறைவேற்றுவதுடனேயே சந்தோஷப்படுத்தும் கடமை முடிந்து போகிறது. ஆனால், நான் எதுவுமே எதிர்பார்ப்பதே இல்லை எனும்போது, சந்தோஷப்படுத்துபவருக்கு இருக்கும் பொறுப்பு கூடுகிறது. என்ன செய்தால் நான் சந்தோஷமாக இருப்பேனென்று, கணக்கிட்டுச் சந்தோஷப்படுத்த எதிர்தரப்பு முயலுகையில், உறவு உறவாகிறது. முறிவு மறைவாகிறது.
உலகத்தில் ஒவ்வொருவரும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இன்னொருவரைச் சார்ந்தே இயங்குகிறோம். தனியொருவனாக எவரும், வாழ்ந்து விட முடியாது. சமயத்தில், ஏன்தான் இந்த வாழ்கை இப்படிப் படுத்துகிறதோ என்று மனது உழலும்போது, தோளும், மடியும், தலைகோதும் விரலும் கிடைக்காதா என்று ஏங்கும்போது, நாமாக ஏற்படுத்திக்கொண்ட உறவுகள்தான் நேசக்கரம் நீட்டி, சேர்த்தணைத்துக் கொள்கின்றன. உறவுகள் முக்கியமானவை. இன்றியமையாதவை.
சண்டைகளும், சங்கடங்களும், கால ஓட்டத்தில் கற்பூரமாய்க் காணாமற்போகக்கூடியவை. உறவும், உறவால் விளைந்த நினைவுகளுமே கல்லறை வரை வழித்துணைக்கு வருபவை.
சக மனிதர்களை, அவர்களின் உணர்வுகளை மதிப்போம். எதையும் எதிர்பாராமல் உறவுகளை நேசிக்கும் மனம் பெறுவோம். உறவால் உலகை முழுமையாக்குவோம்..!
3 மறுமொழிகள்:
Mathan, romba nalla irruku...
நல்ல பதிவு...நிறைய எழுதுங்கள்
நன்றி ராதாகிருஷ்ணன்..!
Post a Comment