Thursday, November 20, 2008

கடற்காதலி

காதலியின் பால்வகையை
விவாதித்ததுண்டா எவனும்?
நானொருவன் தானென்று
மார்தட்டுவேனிங்கு.

மறுக்கப்படும் அனுமதிகளால்,
கையால் முடியாத போதும்
கண்ணாலாவது கட்டியணைப்பானாம்
காதலன், காதலியை.
எனக்கான அனுமதிக் கதவுகள்
திறந்தே இருந்தபோதும்,
கண்ணால் கூட முழுதாய்க்
கட்டியணைக்க முடியாதவள்.

காத்திருக்கும் கடற்
காதலனுக்குள் கலந்து காணாமற்போக,
ஓடி வருகிறார்களாம்
ஆறாய், நதியாய்க்
காதலிகள்.
அதனால் என் கடலழகி
பெண்பாலுக்குச் சேராதவளாம்.

முன்னிற்பதெவரானாலும்
ஓடி வந்து கால்தழுவிக்
கண் சிமிட்டுவாள்தான்.
கண்கொண்டு நோக்க இயலாவண்ணம்
அக்கரையிலல்லவா இருக்கிறது
அவள் விழி.

அலைக்கரங்கொண்டு
தழுவுங்கால் ஒவ்வொன்றும்
நானாயிருக்காதா என்ற அவளின்
ஏக்க ஈரம் நுரைத்துப்பொங்கி,
அசராது அடுத்த காலைக்
கட்டியணைத்துக் கண்டறிய
ஆயிரங்கரங்கொண்டு ஆயத்தமாகிறாள்.

நாடோடி வரும்
ஆறும், நதியும்,
அவை தொட்ட கால்களுள்,
அவற்றைத் தொட்ட கைகளுள்,
எங்கேனும், எதுவேனும்
என் சேதி சொல்லாதாவென்று
கலக்கையில் கணக்கு கேட்பவள்
என் கடற்காதலி.

கடற்கரை நேரங்களிலெல்லாம்
காலைத் தொட வரும்
கடல் நீட்சிகளுக்குச் சிக்காது,
ஓடித் தள்ளியாடியிருப்பேன்.
ஏங்கியடங்காக் காதலின்
கால தாமதங்களை சற்று நீட்டி,
கன்னாமூச்சியேனும் காட்டாவிட்டால்
என்ன காதலன் நான்..?

அவள் மடியில் கண்ணயர்ந்து,
மனமில்லாது பின்னெழுந்து,
விடிதல் வேளைகளை
உலகுணர்த்தும் சூரியனாய்
நானாக ஆசை.

கண்ணெதிரே கன்னியவள்.
கலக்க முடியாச் சூடு,
வெக்கையாய், வெம்மையாய்
கொழுந்து விடும் மதியத்தில்.

ஆற்றாமையின் ஆழங்கண்டு,
என் சூட்டில், அவள் வெந்து
ஆவித்தூது அனுப்புவாள்.
மாலை மஞ்சள்க் காலந்தாண்டிக்
கூடலாமென்று.

கவலைக் கதிர்களை உள்ளிழுத்து,
கொண்டவளைத் தேடிக்
கீழிறங்கி,
மனிதக் காதலர்கள்
இருட்டில் சேர வழிவிட்டு,
என்னழகியின்
இடம் சேர்ந்து கண்ணயர்வேன்.

எங்கள் புணர்வுகளின்
மீட்சிகள்..
மழையாய்ப் பிரசவித்து
ஆறாய், நதியாய்.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO