ஹேராமும், நானும், நீங்களும்..!
ஹேராம், ’இயக்கம் - கமல்ஹாசன்’ என்று "பெயர் போட்டு" வெளிவந்த முதல் திரைப்படம். ஏன் இப்படி எடுத்த எடுப்பிலேயே கமல்ஹாசனின் பொய்மையைச் சுட்டுகிறேன் என்றால், அவர் படங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த இன்னொரு படமான குணா ’இயக்கம் - சந்தான பாரதி’ என்ற அடையாளத்துடன் களமிறங்கியது.
ஒரு கலைஞன் அவன் படைப்பொன்றைப் பொதுவில் வைக்கிறான் என்றால், அப்படைப்பு விளைவிக்கும் பொருளாதார மற்றும் கலையாதார சாதக, பாதகங்களை நேர்கொண்டு எதிர்கொள்பவனாக இருத்தல் வேண்டும். கமலுக்கு இந்த தைரியம் இல்லையென்று கூறவில்லை. ஆனாலும் குணா போன்ற ஒரு தரமான படத்துக்குத் தன்பெயரைப் போடுவதில் அவருக்கு அப்படி என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.
ஒருவேளை மணிரத்னத்தின் தளபதி வெளியான நாளில் திரைக்கு வந்து, கடுமையானதொரு போட்டிச் சூழலை சந்திக்க வேண்டியிருந்ததால், எதற்கும் சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம் என்று பினாமி பெயரைப் போட்டாரா அதுவும் விளங்கவில்லை. இவரளவுக்குத் திறமை இருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்லை என்பது என் போன்றோரின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை எனக்கிருப்பதை விட கமலுக்கு இருத்தலே தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.
எனதிந்த நம்பிக்கைக்கு உரந்தூவி வளர்த்தெடுத்த திரைப்படம் ஹேராம். இப்படி ஒரு படைப்புதான், தான் நேசிக்கும் சினிமாவுக்கு தான் இயக்கிய முதல் படமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு ஆசையில்தான் குணாவை பினாமிக்கு விட்டுக்கொடுத்தாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என்னைக் கவர்ந்தது ஹேராம்.
ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.
1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.
ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.
என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்.
கலவரம் முடிந்த காலை. ஊரே பிணக்காடாகக் காட்சியளிக்கையில், அதைக் தாளாத சாகேத்ராமன் (கமல்ஹாசனின் பாத்திரப்பெயர்) ”அம்ம்மா.. அம்ம்மா..” என்று வாய் திறக்காமல் சொல்லிக்கொண்டே அழும் காட்சி, கவிதை. Saving Private Ryan (1998) என்று ஒரு ஹாலிவுட் திரைப்படம். Steven Spielberg இயக்கியது. போரின் கொடுமைகளைப் பற்றியெடுக்கப்பட்ட படங்களில் உலகின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அதில் ஒரு காட்சி வரும். அடிபட்டு, உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரன், ”Mammma.. Mammma..” என்று நடுங்கியபடியே உயிர்விடுவான். Saving Private Ryan பார்க்கையில் எனக்கு ஹேராம் தான் நினைவுக்கு வந்தது. Wise Men Think Alike என்பது இதுதானோ.
கலவரம் முடிந்த சமயத்தில் ஒரு காட்சி. அங்கே கட்டப்பட்டிருக்கும் யானை, அதன் பாகனையே கொன்றுவிட்டு, அவன் பிணத்தின் அருகிலேயே அமைதியாக நின்றிருக்கும். ’சாதியென்ற யானையை வளர்த்தெடுத்த மனிதர்களின் பிணங்கள் ஊரெங்கும் கிடக்கையில் இன்னும் இங்கு அமைதியாக, ஒன்றும் தெரியாத யானையைப் போல, சாதியும் நம்மிடையே நின்று கொண்டுதானிருக்கிறது. மதம் யானைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை மனிதனுக்குப் பிடித்திருக்கிறதா?’ போன்ற அக்கறைகளை அந்த அரைநொடிக் காட்சியில் சூசகமாகச் சொல்லியிருப்பார் கமல்.
கொல்கத்தாவுக்கு அடுத்து கதை பயணிப்பது ஸ்ரீரங்கம். சாகேத்ராமன் காரில் பயணிக்கும் போது, கூட வரும் பாஷ்யம் மாமாவுடன் பேசிக்கொண்டு வருவார். அப்போது காரணமே இல்லாமல் சாகேத்ராமன் காருக்கு வெளியே எட்டிப் பார்ப்பார். அங்கே அவர் பார்ப்பது ஸ்ரீரங்கம் கோயில் யானை. மண்டபத்துத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டு சாந்தமே வடிவாய் நின்றிருக்கும். அங்கே இந்து, முஸ்லிம் பிரச்சினைகளில் வட இந்தியா எரிந்து கொண்டிருக்கும் காலத்திலும், தென்னிந்தியா எவ்வளவு அமைதியாக இருந்தது என்பது புலனாகும் இந்தக் காட்சியில். அங்கே பாகனைக் கொன்ற யானையை நினைவுபடுத்திக் கொள்க.
மைதிலியைப் பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் அவள் தம்பிக்கு 5 வயதாகக் காட்டி, அந்தக் காலத்துத் தமிழகத்தின் குடும்ப அமைப்பில் இருந்த ஒழுங்கின்மையைச் சொல்லியிருப்பார். இந்தத் தம்பிக்கும், படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும், சின்ன விஷயத்தையும் சொல்ல விழைந்த முனைப்பு, அழகு.
முதலிரவில் பால் வேண்டாம் என்று கூறும் சாகேத்ராமனிடம் மைதிலி, ”ஏன்.. டாக்டர் ப்ப்டாதுன்னூட்டாரா..?” என்று கேட்கும் கேள்வியின் அழகை ரசிக்கும் ரசனை, சராசரி தமிழ் ரசிகனுக்கு வரும் காலம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.
நீ பார்த்த பார்வை பாடலில், ஆரம்பத்தில் வரும் String-ஐ பியானோவில், சாகேத்ராமன் ஒரு கையால் வாசிக்க, அபர்ணா ஒரு கையால் வாசிப்பாள். அபர்ணா இறந்த பின்பு, சாகேத்ராமன் அவன் பங்கை மட்டும் வாசிப்பது, துக்கத்தையும் அழகாகக் காட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
படத்தில் சாகேத்ராமன் இரண்டு முறை உறவு கொள்வது காட்டப்படும். ஒன்று அபர்ணாவுடன். இன்னொன்று மைதிலியுடன். அபர்ணாவுடன் அழகாக, ரசனையாக, அனுபவிப்பதைப் போலவும், ஆனால் மைதிலியுடன் மூர்க்கத்தனமாகக் கொள்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். இந்த இரு கலவிகளுக்கும் இடையேதான் சாகேத்ராமன் சாதிக்கலவரத்தின் கொடூரத்தை சந்தித்திருப்பான். வன்முறையும், தீவிரவாதமும் சராசரி மனிதனின் ஆழ்மனதிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொன்னவிதம் புதுமையிலும், புதுமை.
அத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று சாகேத்ராமனுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மகாத்மாவைக் கொல்லத் துடிக்கும் அவன் மனதின் குரூரம், உறவு கொண்டிருக்கையில், அவன் மனைவி மைதிலியே அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் போலத் தெரிவதில் சொல்லப்பட்டிருக்கும்.
வயதான சாகேத்ராமனின் நினைவில் ஓடும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருப்பவையே, நாற்பதுகளின் காட்சிகள் என்பது நாமறிந்த ஒன்று. தற்காலக் காட்சிகள் கருப்பு, வெள்ளையிலும், Flash Back காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாத்தா சாகேத்ராமனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், டிசம்பர் 6-ன் பொருட்டு நிகழும் சாதிச் சண்டைகளின்போது வெடிக்கும் குண்டுகளும், எரியும் தீயும் மட்டும் வண்ணத்தில் இருக்கும். இது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்ன பதில்:
”தற்காலத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளை என்று பிரிக்கிறோம். Grey Areas-ஐ மறந்திருக்கிறோம். அதனால் நேர்மையென்ற வண்ணமிழந்திருக்கிறோம். ஆனால், சாதியென்ற தீ மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது” என்று காட்டவே அவ்வாறு படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இப்படி படம் நெடுகக் குறிப்பாலுணர்த்தப்பட்ட விஷயங்கள் ஏராளம்.
உயிர் பிரியும் வேளையிலும் சாகேத்ராமன் அவரைக் கொண்டுசெல்லும் வண்டிக்கு வெளியே நடக்கும் சாதிச்சண்டைகளைக் குறித்து “இன்னுமாடா..” என்று கேட்பது, நாம் ஒவ்வொருவரும், நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வியின் எதிரொலிப்பு. இறுதியில், சாகேத்ராமனைக் காப்பாற்ற வரும் காவல்துறை அதிகாரியையும் (நாசர்) ஒரு இஸ்லாமியராகக் காட்டி, ஒன்றுபட்டு வாழ்வதன் அவசியத்தை, நமக்கெல்லாம் உணர்த்தப் போராடியிருப்பார் கமல்.
சொல்லவந்த நல்லபல கருத்துகளைக் காற்றில் விட்டு விட்டு, பல மொழிக் கலப்பு, மெதுவான திரைக்கதை, ரொம்ப நீளம், புரியவில்லை என்று அடுக்கும் நக்கீரர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.
தேசப்பிதாவின் மேல் இன்னமும் கூட சாட்டப்பட்டு வரும் குற்றத்திற்கு பதிலளிக்கும் ஒரு முயற்சியாக, தன் கதையின் நாயகன் மீதே பழியைப் போட்டு, அவனையே காந்தியடிகள் மேல் அவதூறு கொள்ளச் செய்து, ’இறுதியில் சாகேத்ராமன் உண்மையைப் புரிந்து கொண்டான். நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்வியை கமல் முன்வைத்திருப்பார்.
இந்தக் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும்...
இல்லை.. அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
ஹேராம் போன்ற புதுமையான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். ஆனால், நம் ரசனையோ இப்படித் தான் இருக்கிறது.
”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”
”ஏண்டா அப்டி சொல்ற..?”
”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்..”
20 மறுமொழிகள்:
மீண்டும் பார்க்க தூண்டுகிறது...
நன்றி குடுகுடுப்பை அவர்களே..!
மிக அருமையான பதிவு. சிம்பாலிக் ஆக எடுக்கப்பட்ட பல காட்சிகளை அழகாக் சொல்லி இருக்கிறீர்கள். ஜமாலன் அவர்கள் எழுதிய ஹேராம் ஒரு பின்னவீனத்துவ பார்வை என்ற கட்டுரையிலும், ஸ்ரீ அவர்கள் சகலகலாவல்லவன் வலைப்பூவில் கமல் படம் பார்க்கிறீங்களா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலும் இந்த ஸ்ரீரங்கம் யானை சம்பவத்தை அவர்கள் பார்வையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி முரளி. தாங்கள்தான் சாருவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினீர்கள் என்று படித்தேன். வாழ்த்துக்கள். நீங்கள் கூறிய பதிவுகளை நான் படித்ததில்லை. படிக்கிறேன் முரளி..!
நீங்கள் கூறிய பிறகே பல காட்சிகளை அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கிறேன். அருமையா விளக்கி கூறி இருக்கீங்க.
அருமையான விமர்சனம், தாமதமாக வந்தாலும்.
//முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். //
இதற்க்கு காலம் எடுக்கும் என்பது என் கருத்து
//”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”
”ஏண்டா அப்டி சொல்ற..?”
”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்.//
:-))) சுருக்கமா! புரியற மாதிரி நச்சுன்னு சொல்லிட்டீங்க
நன்றி கிரி. என்ன செய்றது. இந்த மாதிரி படங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு நமக்கெல்லாம் கொஞ்சம் லேட் ஆகத்தான செய்யும். அதுவும் இல்லாம படம் ரிலீஸ் ஆகும் போது நான் 10th படிச்சுட்டு இருந்தேன். அப்ப எழுதிருந்தன்னா ’ஒண்ணுமே புரியல’னு தான் எழுதிருப்பேன் உண்மைய சொல்லணும்னா. அதான் 10ஆவது படிக்கும் போது எழுதாம 10 வருஷம் கழிச்சு எழுதிருக்கேன்.!!:)
மிக அருமையான் பதிவு. எப்பவுமே கமல் திங்க் அஹெட்.. இதே ஹேராம் ஒரு ஐந்துவருடம் பின்பு வந்திருந்தால்.. கண்டிப்பாய் ஹிட்.. கமலின் ராஜபார்வையை இப்போது பார்த்தாலும் இளமையாய் இருக்கும். அந்த அளவுக்கு துள்ளளான படம்.. அப்போது ஓடாத படம் மாதிரி இப்போது பல படஙகள் வந்து ஹிட்டாகிறது. உதாரணமாய் மொழி..
கமல் திங்க் அஹெடோ இல்லையோ.. நமது ரசனை திங்க்-ஏ இல்லாமல் தான் இருக்கிறது. இன்றைக்கும் விஜய்களும், பேரரசுகளும் வசூலை அள்ளிக் குவிச்சுட்டுத் தான இருக்காங்க.
Commercial-aa ஹிட் ஆகற படம் நல்ல படமா இல்லாம போலாம். ஆனா ஒரு நல்ல படம் Commercial-aa ஹிட் ஆகணும். அந்த நிலைமை எப்ப வருதோ, அன்னிக்குதான் நாமும் நல்ல படைப்புகளை எதிர்பார்க்கும் உரிமை இருப்பவர்கள் ஆவோம். இல்லையா Sankar?
நம்ம ஜமாலன் எழுதுன விமரிசனத்தைப் படிச்சபிறகு,
நான் உணர்ந்தவைகள் பூராவும் மறுபடி நினைவுக்கு வந்துருக்கு.
நல்ல பதிவு.
ரசனை மாறவேண்டியது திரைப்படத்துக்கு மட்டுமா?
Hey Ram has got good review comment from many Americans in NetFlix movie site. One such review:
After seeing this movie I feel like I have a better understanding of the upheaval and trauma that partition was and is for India/Pakistan, and how it tied in to a hatred of Gandhi for some factions. Awe inspiring job done by Kamal Hassan as one man's experience at the eye of the hurricane. He’s the suave, sophisticated archeologist, the shell shocked murderous member of a mob, the detached radical, the friend/husband that comes back to life... The use of the songs is restrained and out of the ordinary in their style (the three friends dancing at the party, the drug trip, the wandering elephant), and how they move the story first and foremost, rather than act as fluffy video interludes. There’s a varsity squad supporting cast too, especially Rani Mukherjee, Atul Kulkarni (ever the fiery eyed radical!), Naseeruddin Shah, and Vasundhara Das. Shahrukh Khan is pretty good, but just not in the same league as the rest. ‘Hey Ram’ will put you through the wringer yet leave you feeling there’s still reason to hope. Great movie.
நன்றி துளசிகோபால். ரசனையைப் போலவே சமூகம் கொண்டிருக்கும் சாதிச் சழக்குகளும் மாறவேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா..? ஆம் எனில், கட்டாயம் மாற வேண்டும் தான்.
Hello Arun.. Thanks for sharing the review from Netflix. Happy that KH has got recognized atleast by an alien country which has never happened in his beloved motherland.
இந்தப் படத்தைப் பற்றிய சாரு எழுதிய காலச்சுவடு (கடிதம்?) படித்திருப்பீர்கள்தானே...
கமலும் அவர் மனைவியும் (வங்காள நடிகை - பெயர் மறந்து விட்டது), வரும் காட்சியில் என்ன தர எனக் கேட்கும்போது ‘கூதியைக் கொடு' என பார்வையாளர்கள் சத்தம்போட்டதாய் எழுதியிருப்பார் :) எனக்குப் பிடித்த வரியது :) :)
வேறு இருவர் சொல்லியிருக்கிறார்கள், இருந்தாலும், நானும் சொல்கிறேன், நீங்கள் ஜமாலனின் பதிவைப் படித்துப் பார்க்கலாம்.
சில உடலரசியல் சார்ந்த பார்வைகள் கிட்ட அப்பதிவு ஏதுவாயிருக்கும்.
ஜமாலன் அவர்களுடைய கட்டுரையை நான் படித்தேன் சுந்தர். வித்தியாசமான பல பார்வைகளும், கோணங்களும் கிடைத்தன.
சாரு - என்ன சொல்வது? ஒரு படம் பிடித்துப் போய்விட்டால் சிலாகித்துப் பேசுவதும், பிடிக்கவில்லையென்றால் மிகக் காட்டமாக விமர்சித்தலும் சாருவிடம் எனக்கு ஒவ்வாத விஷயம்.
தனக்குப் பிடித்த எழுத்தாளரிடம், அவரை மதிக்கும் ஒரு வாசகனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் இல்லையா..!:)
அவருடைய ஹேராம் விமர்சனத்தை நான் பல நாட்களாகத் தேடி வருகிறேன். தசாவதாரத்தை விமர்சிக்கையில் எழுதியிருந்தார். குருதிப்புனல், ஹேராம், விருமாண்டியில் எல்லாம் அவருக்கு இல்லாத உடன்பாடுகள் பற்றி. அப்போதுதான் ஹேராமில் அவரின் நிலைப்பாடு புரிந்தது.
ya.
but kamal hav a little oly abt the aftermaths of the particition.
i hav heard them through my friend's thadima.
kamal tried to take tamil audience to next stage.... but what to do....
in one scene ths dialogue comes...
"ram, laxhman"
"bhai, bhai"
"u and ur wife"
"bhai, bhai"
after reading ur post i hav decided to buy dvd of ths movie.
Hindu Muslim Bhai Bhai..
Germany England Bhai Bhai..
China Japan Bhai Bhai..
Bhakri Kasai Bhai Bhai..
Then what about your wife..??
--This happens to be the dialog which critisizes the people who are Gandhians durin the partition.. Delivered by Shri Ram Abhyankar..(For this role Atul Kulkarni has won the National Award for Best Supportin Actor)
எல்லாரும் சகோதரர்கள் என்றால் கற்பழிக்கப்பட்ட நம் பெண்களின் நிலையென்ன என்ற கேள்வியை முன்னிறுத்தும் வசனம்.
MayVee.. I doubt that you will be able to get the DVD.. I have already strived and couldn quite get it.. Even in Google Videos only the first 2 parts are downloadin and last one is not.
However if you wanna watch the movie online you can try the below:
http://www.videoduniya.com/index.php?option=com_content&task=view&id=317&Itemid=27
Good thing about this link is that you can buffer all the 3 parts at the same while watchin the first one.
”அனைவருமே சகோதரர்கள் என்றால் Then who will be your wife?” என்று குடித்து விட்டு கோஷம் போட்டு வருபவரிடம்
Abhyankar கேட்பதாகவும் கொள்ளலாம்..!
I want to watch the movie again.. Very good.
It was an awesome movie! Not sure why you didn't submit it on Tamilish or other sites?
I have submitted Joe. Since I have changed my Template after that, those details are not been visible. Not sure why!
Post a Comment