Wednesday, January 7, 2009

பயணச் சிதைப்பு



வரிசைக்கிரமத்தினிடையே
கோடு கிழித்து விட்டேன்.
பின் வந்த முதல் எறும்பு
திடுமென நின்று விழித்தது.
தொடர்ந்தவையும் தேடத்
தொடங்கின வெண்சுவரின்
எண்புறமும் எதையோ.
கோட்டு வடிவின் பயணம்
குழம்பிச் சிதறுற்றிருந்தது
இந்நேரத்திற்கு.
முன்சென்ற
முதல் எறும்பு தூவிச்
சென்றிருந்தது போல
வழியெங்கும்
விலாசத் துகள்களை.
என் கோட்டை சற்றே தாண்டியிருந்த
கடைசி எறும்பு
திரும்பிப் பார்த்துவிட்டுப்
பயணிக்கத் தொடங்கியது
முகவரியை முகர்ந்தபடி.
அதன் பெருமூச்சு
எனக்குக் கேட்கவில்லை.

உயிரோசை 12/01/2009 மின்னிதழில் பிரசுரமானது.



4 மறுமொழிகள்:

மதன் January 9, 2009 at 12:58 AM  

நன்றி திரு பழமைபேசி அவர்களே..!

அனுஜன்யா January 13, 2009 at 7:23 PM  

முன்பே படித்து, நேரமின்மையால் நகர்ந்தேன். இன்று மீண்டும் உயிரோசையில் படித்தவுடன், வந்துவிட்டேன். நல்லா இருக்கு. நல்லா எழுதறீங்க. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

மதன் January 13, 2009 at 7:35 PM  

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அனுஜன்யா.. உங்க கவிதைகள்.. நான் விரும்பி படிப்பதுண்டு.. வாழ்த்துக்கள்..!

  ©Template by Dicas Blogger.

TOPO