அப்பாக்களுக்கும் பாசமிருக்கிறது
கிளம்புதலுக்கான ஆயத்தம்
சீரியதாயிருந்தது.
புதுத் துணி போட்டு மூடி
பெட்டியெல்லாம் கட்டியாயிற்று.
அம்மா சப்பாத்தி செய்து விட்டாள்.
பக்கத்து வீட்டு
அங்கணத் தாத்தா,
தங்கம்மா பாட்டியிடம் ஆசீர்வாதமும்
சாஷ்டாங்கமாய்ப் பெற்றாகி விட்டது.
கூடத் தங்கப் போகும்
உற்ற தோழன்
பிரபாகரனும் வந்து விட்டான்.
காலையில் தங்கை மட்டும்
கண்ணைத் தேய்த்து,
ஈரம் துடைத்தாள்.
என்னடா ஆச்சு என்றவரிடம்
பாப்பா அளுகறாங் டாடி
என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.
ரயில் நிலைய நேரங்களும்
சகஜத்திற்குக் குறைவில்லாமலே
சென்றன.
மெலிதான நகர்தலின் போது,
படியில் நின்று
கையசைக்கையில் தான் கண்டேன்.
தொண்டையைக் குத்தும்
துக்கம் மறைக்க
சற்று குனிந்து நிமிரலின்
எத்தனிப்பும்,
ஆத்தா இறப்புக்கும்
நான் கண்டிராத
அப்பாவின் கண்ணீரும்.
விடு விடுவெனத்
திரும்பி நடக்க ஆரம்பித்து
விட்டிருந்தார்.
நான் கண் மறையும் முன்பே.
அச்சில துளிகளின் வீச்சில்
அவருக்கான என் அத்துணை
துவேஷங்களும் கரைந்திருந்தன.
கட்டிக் கொண்டழ
வேண்டும் போலிருந்தது.
உள்ளே வந்தமர்ந்து
கண் மூடிக் கொண்டேன்.
பார்த்துக் கொண்டேயிருந்தான்
பிரபாகரன்.
5 மறுமொழிகள்:
கண்கள் கலங்கிவிட்டன
கவிதை படித்து முடிந்ததொரு கணத்தில்
- நன்றி.
மிக்க நன்றி கர்மா..!!
மதன் அவர்களே
இது தனக்கு நடந்ததாகவே தோணும் ஒவ்வொருவருக்கும்
அதுவும்
"தொண்டையைக் குத்தும்
துக்கம் மறைக்க
சற்று குனிந்து நிமிரலின்
எத்தனிப்பும்,
ஆத்தா இறப்புக்கும்
நான் கண்டிராத
அப்பாவின் கண்ணீரும்"
இந்த வரிகள் எனக்கு பல ஞாபங்களை கொண்டு வந்து விட்டது
மிக்க நன்றி
நெஜமாகவே வீரன்வேலுதம்பி பாசம் உள்ளவர் தான்
நன்றி திரு சிவா அவர்களே..!
Post a Comment