புதுப்பொங்கலும், பொன்னுச்சாமிகளும்.
வாரியடித்துக் கொண்டிருந்தது
புழுதிக் காற்று.
வரப்பு மேட்டில் நின்று,
அறுவடைக்குக் காத்திருக்கும்
ஆளுயரக் கதிர்களைப்
பார்த்துக் கொண்டிருக்கையில்,
சொந்தமென இருந்த நிலம்
பெற்றேடுத்தவனின் பட்டறிவின் பொருட்டு
அயலானிடம் அடகாகி விட்டிருந்தது
நினைவிலுறுத்தியது.
அந்தி சாயும் வேளையில்,
"பொன்னுச்சாமி.. உன்ற வையங்கிட்டிருந்து போனு.."
ஊரதிரக் கூப்பிட்டாள்
மணியகாரர் மனைவி.
"இந்த வருஷம் அறுவடைக்கு எப்படியும்
நெலத்த மீட்ரலாம்ப்பா.."
வெம்மையில் தகித்த
நிலம் கண்ட கார்மேகமாய்
மகனின் வார்த்தைகள்.
"பி.எம்-கிட்ட பேசிருக்கேம்ப்பா..
இந்த வருஷமும் லீவு கெடைக்கும்னு தோணல..
பணத்த அனுப்பி வெச்சிடரம்ப்பா.."
சுழன்றடித்த சூறைக்காற்றில்
கலைந்து விட்டிருந்தன கார்மேகங்கள்.
வானை அடகு வைத்து,
சிறகை மீட்கிறேனோ..?
அடகில் வைத்தது மீண்டு விடும்.
உறவில் வைத்தது..?
12-01-2007 அன்று எழுதியது.
7 மறுமொழிகள்:
ம்ம், நல்லா வந்திருக்குங்க.
நன்றி தல..!
எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால் சிலபேர் இது கவிதை வடிவம் என்று ஒப்புக்கொள்வார்களா என்று பயமாக இருக்கு. என்னுடைய கவிதை (?) ஒன்றில் ஒருவர் 'மடிக்கப்பட்ட வரிகளை பத்தி வடிவில் எழுதினால், பத்தி போன்று தோன்றினால், அது எப்படி கவிதை ஆகும்?' என்று கேட்டார்.
நவீன கவிதை ஓரளவு சுதந்திரம் தரும் வடிவம். அதன் சுலபத்தை ஒட்டியே என் போன்றவர்கள் எழுத முயல்கிறோம். எது வரை சுதந்திரம் என்று எப்படி வரையறுப்பது-எது கவிதை-எது பத்தி எழுத்து என்று யார் வரையறுப்பது....
மதன், இதை உங்களுக்கான கேள்வியாக இல்லாமல், சுந்தர், வாசகன் (என் பதிவில் பின்னூட்டம் இட்டவர்) போன்றவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வியாகக் கொள்ளலாம்.
அனுஜன்யா
அனு பொங்கலுக்கு ஊருக்கு கெளம்பிட்ருக்கேன். விவாதிப்போம்.. யோசனைப் பூர்வமா கேட்டிருக்கீங்க..!:)
வரிகளை உடைத்துத்தான் எழுதவேண்டுமென்பதில்லை. பல நவீன கவிதைகள் பத்திகளாகக்கூட வந்திருக்கின்றன. புதுக் கவிதைக்கென வடிவ எல்லைகள் இல்லையென்றே நினைக்கிறேன்.
உடைக்கப்பட்ட பத்தி வரிகள் கவிதையில் கூடாது என்றால், நீளவாக்கிலான கவிதை வரிகளைப் பத்தியில் உபயோகிக்கலாமா?
எவ்வகை வரிகளை எதில், எதில் உபயோகிக்கலாம் என்று வரையறுப்பவர்கள், இதுபோன்ற வரம்பு நிர்மாணங்கள் படைப்பாளிகளின் முனைப்பை நோகடித்து விடாமல் பார்த்துக் கொள்வது யார் என்றும் வரையறுப்பார்களா தெரியவில்லை.
ஒருவனுடைய படைப்பும், கருத்தும் அவன் விரும்பும் வடிவில் இருப்பது தவறாகப் படவில்லை.
Nice .
Post a Comment