Thursday, July 16, 2009

ஈஷ்வரோ ரக்ஷது!



வழமை போலவே அலாதியானதொரு பெங்களூரின் குளிர் மாலை. அலுவலகத்தின் ஆறாம் தளத்திலிருந்து, வேறுபட்ட தொலைவுகளில் வானளாவும் அபார்ட்மெண்டுகளும், வளர்ந்து வரும் அபார்ட்மெண்டுகளும், வளர்த்து வரும் நெடிதுயர்ந்த க்ரெய்ன்களும், சீரான வேகத்தில் உலவிக் கொண்டிருக்கும் மேகக் குழுமங்களும், சாரலுக்கும், தூறலுக்கும் பிறந்த குழந்தையாய் மேல்விழும் துளிகளும், பரந்து கிடக்கும் வானும், தொலைவில் ஊரும் மானுடமுமாய் இயற்கையின் பிரம்மாண்டம் ஏற்படுத்திய குறு குறுப்பும், குறித்து வைக்காத இன்னும் சில இனிமைகளும்.. அன்றாட இறுக்கங்களிருந்து சற்று ஆசுவாசமளித்தன.

இவற்றை விடுத்து உணவகத்தின் உட்சென்று, சமோசாவை சன்னாவும் ஆசை எனக்கில்லை. என்றாலும், சொல்லிப் புரிய வைக்க முடியாத நம் அலுவலக நண்பர்களிடம், ஒரு முறை, கொழிக்கும் பணத்தைக் கொட்ட இடமில்லாத உங்கள் காலாண்டுக் கொண்டாட்டங்களை, மேல்தட்டு Bar-களுக்கு சென்று, 4 மணிநேரம் கும்மாளமிட்டு, போதைத் தலைவலியையும், ரூ. 40,000 செலவையும் தடுப்பதற்காக இல்லாவிடினும், ஒரு அரை நாளையும், ஒரு வேளை சோறையும் சேவாசதன் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகவேனும் செய்யலாமே என்று சொன்னபோது, எல்லாரும் என்னை Septic-காகப் பார்த்தார்கள். அப்போதே இங்கே மௌனம்தான் எனக்கேற்ற வழியென்று முடிவெடுத்து இருந்ததால், அமைதியாக உள்ளே சென்று விட்டேன்.

வெளிப்புறத்துக் கூதல் உள்ளும் உருண்டு கொண்டிருந்தது. நம் மக்களுக்கு ஊர்வம்பு பேசுவதில் உவப்பு அதிகமாயிருந்தது. என்னைப் போலவே எல்லோரும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சகஜப் புத்தியில்லை. அது ஏன் உங்கள் விருப்பம் ஊர்வம்பில் தொடங்கி, உள்ளூர் அரசியலோடு நின்று விடுகிறது என்பது புரியாத அறிவீனனாகத்தான் கேட்கிறேன். பொதுவாகவே சாஃப்ட்வேர் மக்களைப் பற்றிய மதிப்பீடுகள் நம் சமூகத்தில் எதிர்மறையாகவே இருக்கும். பணத்தைக் கண்டபடி செலவழிப்பதில் துவங்கி, கலாச்சார சீர்கேடு வரை வகை வகையாக. எம்மக்களும், பரத கண்டத்தின் எந்தப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும், அச்சில் வார்த்த அழகோவியங்களாய் அதற்கேற்றாற்போல்தான் நடந்து கொள்வார்கள். Unity in Diversity!

வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகையில் ஒருவர், அவரால் மிச்சம் பிடிக்க முடிந்த டாலர்களுக்கு சாக்லேட்டுகள் வாங்கி வந்திருப்பார். சாக்லேட் தீர்ந்து போவதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமே. Literally அடித்துக் கொள்வார்கள்!

கூழைக் கும்பிடு என்பதை நான் புரிந்து கொண்டது இங்குதான். என்னதான் வேலை பார்த்தாலும், ஆண்டிறுதியில் நம் பதவி / ஊதிய உயர்வு, வெளிநாட்டு வாய்ப்பு என்று சகலமும் 'அவர்' முடிவுக்குட்பட்டதால், ஸ்டேப்ளர் வாங்கி வரும் வேலைக்குக் கூட சிலரை உபயோகிக்கும் 'ப்ராஜக்ட் மேனேஜர்'களும் உண்டு. அவர் என்ன சொன்னாலும் பல்லைக் காட்டும் வித்தை ஏனோ எனக்கு வாய் கூடுவதேயில்லை. இரு தரப்பிலும், அனைவரும் அப்படியில்லை என்பது ஆறுதல்.

அதி முக்கியமாக ஆறாம் வகுப்பு மாணவர்கள் போல் யூரினலுக்குள் பபுள்கம்மைத் துப்பி வைப்பது! பபுள்கம் இல்லாத யூரினல் தேடினாலும் கிடைப்பதில்லை. கேட்டால் துப்புரவாளர் க்ளவுஸ் போட்டிருக்கிறாராம். அதனால் துப்பலாமாம். என் நாகரீக வெங்காயங்களை உரித்தெறிந்து விட்டுப் பேசச் சொன்னால், எல்லோரும் பேய்ந்த பின் அதே பபுள்கம்மை அவன் வாயிலேயே போட்டுவிட்டு, அதை சுத்தம் செய்யும் பொறுப்பிலிருப்பவரை, அதே பபுள்கம்மின் மேல் பேய வைக்க வேண்டும்.. You know.. Professionals!

அடுத்தவரைக் குற்றம் சொல்லும் என் வாக்கியம் முடியும் முன்பே, என் முதுகின் அழுக்கு எனக்கு நினைவுக்கு வரும் சராசரியன் நான். பின் ஏன் இத்தனை குறை சொல்கிறேன்? ஆண்டுக்கு அரை லட்சம் சம்பாதிக்கும் நீங்கள், உங்கள் சம்பாத்தியத்திலிருந்து தராவிடினும், உங்கள் அலுவலகம் அள்ளித் தருவதிலிருந்து, கிள்ளித் தந்து கூட ஒரு குழந்தைக்கு சோறு போடாது அனுபவிக்கும் கொண்டாட்டங்கள் எனக்குக் குமட்டலைத் தந்ததால், இங்கே என் புலம்பல்களுக்கு நானே நியாயம் கற்பித்துக் கொள்கிறேன்.

சமோசா சன்னாக்கள் தீரும் நிலையிலிருந்தன. என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் காதுகளில் தன்னைத் திணிந்து கொண்டது. சாரை சாரையாய் வார்த்தைகள் காதுகளை சல்லடை போட்டு வென்றிருந்தன.

"You Expect Promotion in September?"

"Not sure in the Office man.. But for sure I will get promotion in my life!"

"Hey good man.. You know what? In Denmark know.. They will give you Promotion and Hike when you get promoted as a Dad too!"


இத்துணை நேரம் அமைதி காத்த என் சாத்தான் என்னிடமிருந்து தன்னை அவிழ்த்துக் கொண்டு சொன்னது.

"You gotta be careful dude.. Next time when you are lookin for promotion, your manager would like to give you a Child too!"



4 மறுமொழிகள்:

ச.முத்துவேல் July 18, 2009 at 5:13 PM  

உங்களை இன்னும் அதிகமாய் பிடிக்கிறது.

மதன் July 18, 2009 at 7:11 PM  

நான் என்ன முத்து செய்துவிட்டேன். செலவு செய்வதற்கென்றே பணம் கொடுக்கிறார்கள். அதில் பத்தில் ஒரு பங்கைக் கூட நல்ல விஷயத்துக்காகத் தர விரும்பாதவர்களின் மீதான கோபம் தான்!

Saminathan August 27, 2009 at 11:50 PM  

//"You gotta be careful dude.. Next time when you are lookin for promotion, your manager would like to give you a Child too!"
//

good...very good !

மதன் August 28, 2009 at 12:37 AM  

நன்றிங்க ஈர வெங்காயம்!

  ©Template by Dicas Blogger.

TOPO