Monday, July 20, 2009

கையாலாகாக் கவிதைக் குறிப்புகள்

சினிமாப் பாடல்களல்லாது, கவிதை அல்லது அதை எழுதும் கவிஞன் என்றாலே ஒரு இளப்பம் நம் சமூகத்தில் நிலவுகிறது. சமீபத்தில் நெடுநாள் கழித்து இணையத்தில் சந்தித்த ஒரு நண்பனிடம் வேலை நேரம் போக, அவ்வப்பொழுது எழுதுவதுண்டு என்று கூறிக் கொண்டிருந்தேன். உடனே, "இந்தக் காதல் கவிதை எல்லாம் எழுதுவியாடா மச்சி.. ?" என்ற அவன் கேள்வியில் இருந்த ஏளனத் தொனி சற்று யோசிக்க வைத்தது.

'வேலை வெட்டியில்லாதவன்கள், இப்படித்தான் எதையாவது எழுதிக் கொண்டிருப்பான்கள், இதுக்கெல்லாம் நேரத்தை செலவழிக்க முடியுமா' என்பது போன்றதொரு பொதுப்புத்தி எழுதுபவர்களைப் பற்றியிங்கு பரவலாகவே காணப்படுகிறது. விவேக் ஒரு படத்தில், "ஒரு.. ஸ்வீட் ஸ்டாலே.. பனியாரம் சாப்பிடுகிறதே.. ஆச்சரியக் குறி.." என்று காமெடி செய்தது கூட இந்த வெகுஜன மனநிலையின் ஒரு மறைமுக வெளிப்பாடுதானோ என்று சந்தேகிக்கிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி இருக்கிறான் என்பதும், ஒவ்வொருவருக்குள்ளும் எண்ணிலாப் படைப்புகள் ஊறிக் கிடக்கத்தான் செய்கின்றன என்பதும் நாமனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால் எந்தப் புள்ளியில் இந்தப் படைப்புகளை எழுத்தாய் கொட்ட ஒருவன் முயற்சிக்கத் தொடங்குகிறான் என்ற கேள்விக்கான பதில் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.

எனக்குப் பள்ளி நாட்களில் தமிழ் என்றால் உயிர்.(இப்போதுப் பிடிக்கும்தான். இருந்தாலும் தாய்நாடு, தாய்மொழி போன்ற செயற்கை பிம்ப ஆதிக்கங்களின் பொய்மை நீர்த்து விட்டது) தமிழைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் ஆத்திரம் தலைக்கேறி விடும். என்ன பிடிக்கும் என்று கேட்டால் கூட அம்மாவுக்குப் பின் தமிழைத்தான் சொல்வேன். தாய்த்தமிழுக்கு என்னாலான ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி யோசித்ததில்தான் "எழுதலாம்" என்ற எண்ணம் உதயமானது. அதுவும் அப்போது புதுக்கவிதையாவது ஒண்ணாவது.. படித்ததெல்லாம் பாடப்புத்தகத்தில் இருந்த பாரதியும், திருக்குறளும், சங்கத்தமிழ்ப் பாக்களும்தான்.

திருக்குறளும், புறநானூறும் கடினமாக இருந்ததால், 'வளர்ந்த' பிறகு அவற்றை எழுதிக்கொள்ளலாமென்று முடிவெடுத்து, பாரதி பாணியிலேயே, நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அள்ளித் தெளிக்கும் 'கவிதை'கள் எழுதித் தள்ளினேன். பின்பு கல்லூரி வந்ததா.. கூட என்ன வரும்? வேறென்ன காதல்தான்! எனக்குக் காதல் மனதில் வாராவிட்டாலும், கவிதையில் நன்றாகவே வந்தது. அதிலும் காதல் தோல்விக் கவிதைகள் பிரவாகமெடுத்தூற்றின!


புள்ளி வைத்தாய்
கோலமானேன்
தள்ளி வைத்தாய்
அலங்கோலமானேன்!


-oOo-

நான் உன்னை என்
மனச்சிறையில் வைத்தேன்
உன் அப்பாவோ என்னை
மத்திய சிறையில் வைத்தார்!


-oOo-

சொர்க்கத்தை மறைக்கும்
சாதனம்
அடுத்த வீட்டு சுவர்!


-oOo-

ஜன்னல் கம்பிச்
சிறையினின்று
தப்பிப் பறக்கிறதென்
வெண்ணிலா!

என்ற வகையில் (நல்ல வேளையாக ஞாபகத்திலில்லாத) இன்னும் பலவற்றை வகுப்பறை வேளைகளிலேயே ஆக்கித் தமிழன்னையின் திருவடித் தாள்களுக்கு கவிதாபிஷேகம் செய்வித்தேன். ஒன்று, இரண்டு சுமாராகத் தேறும் என்ற போதும் பெரும்பாலும் எல்லாம் மூன்றாந்தரம்தான்.

பாரதிக்குப் பின் துரோணாச்சாரியாராக அருள வந்தவர், நமது வைரமுத்து. டூயட் படத்தின் இறுதிக் காட்சியில், பிரபு ஒப்பிக்கும் "கண் பார்த்ததும், கெண்டைக் கால் பார்த்ததும்" என்று தொடங்கும் கவிதையைப் பின்பற்றி அதே சந்தத்தில் நான் என் வரிகளைப் போட்டு எழுதிய காதல் தோல்விக் கவிதை கல்லூரியெங்கும் என் பிரசித்தியைப் பரப்பிற்று.

ஆதாமேவாளுக்கு நம்மாலான நன்றியைச் செலுத்துகையில் இடையிடையே குடும்ப, சமூக மற்றும் நாட்டு நலன் குறித்து வேறு 'கவிதை'யெழுதினேன். உரைநடையை ஒடித்துப் போட்டு நடைபெற்ற இப்படியானதொரு கவி வாழ்வு ஒரு நன்னாளில் கல்லூரி நூலகத்தின் கடைக்கண் பார்வை பட்டு, சற்றேனும் உருப்படுவதற்கான சில பல வழிகளைக் காட்டியதின் விளைவாக, அன்று தொட்டு என் கவிதாவேசப் பிரசங்கித்தனங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டு, இயல்பாகவும், சுமாராகவும் எழுத முயற்சித்து வருகிறேன்.

இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுக்குள் இருக்கும் கவிஞனை அடையாளங் காட்டும் சூழ்நிலைகள் ஒவ்வொரு வகையாக இருக்கும். சொல்லப்போனால் பலருக்கும் வலி, பிரிவு, தோல்வி, தற்கொலை, விரக்தி, அவமானம் என்று எதிர்மறை நிகழ்வுகள்தான் கவிதைக்கான முதற்காரணியாக இருக்கும்.

அவனவன் இப்படி படாதபாடுபட்டு ஒரு கவிஞனாக உருப்பெற்று கவிதையெழுதினால், இவர்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு "இவனுங்க வேலையத்தவனுங்க" என்பது போல் முத்துதிர்ப்பது, 'எங்கள் வேலையில்லாத் தனத்தையல்ல; விஜய் படத்திற்கு சென்று விசிலடிக்கும் நம் சமூகத்தின் ரசனையைத்தானே பறை சாற்றுகிறது' என்ற உண்மையை, இதுவரை ஒரு கவிதையைக் கூட உருப்படியாக எழுதாவிடினும், என்றேனும் ஒருநாள் ஒன்றே, ஒன்றையாவது எழுதப்போகும் நானும் ஒரு கவிஞன் என்ற கடமைக்காகவேனும், உரக்கக் கூறிக் கொள்கிறேன்.

ஆகவே பொது ஜனங்களே, உங்களை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் உங்கள் ரசனையை மாற்றிக் கொள்ளவே வேண்டாம். நீங்கள் விஜய் படத்தில் பிஸியாகவே இருங்கள். எங்களைப் பற்றி குறை கூறாதீர்கள். தயவு செய்து! நாங்கள் எங்கள்பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறோம்.4 மறுமொழிகள்:

Anonymous,  July 20, 2009 at 6:54 PM  

மதன்,

கவிமனது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் பாக்கியவான்கள்.

பிறர் இகழ்தலைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் படைப்புகள் உங்களைப் பற்றிப் பேசட்டும்.

மதன் July 20, 2009 at 7:10 PM  

சரிங்க அண்ணாச்சி.. ரொம்ப நன்றி!

அருண்மொழிவர்மன் July 22, 2009 at 9:24 AM  

எழுதுபவர்களை மட்டுமல்ல, வாசிப்பவர்களை கூட இப்படி எப்போதோ காலாவ்தியானவர்களைப்போல பார்க்கின்ற மனப்பான்மை பலரிடம் இருக்கின்றது. என்னளாவில் இவர்களை “பசித்த புலி தின்னட்டும்” என்றூ திட்டிவிட்டு கடந்துவிடுவேன்

மதன் July 22, 2009 at 10:57 AM  

பகிர்வுக்கு நன்றி அருண்மொழிவர்மன்.

  ©Template by Dicas Blogger.

TOPO