தற்கொலைப் பிரியங்கள்
பிரியங்களைப் புதைத்து வைக்கும் பூங்காக்கள்
பிரியங்களைப் பூட்டி வைக்கும் கதவுகள்
பிரியங்களைப் பிரித்து வைக்கும் தீர்ப்புகள்
பிரியங்களை உடைத்து விடும் அனுமானங்கள்
பிரியங்களால் உடைந்து விட்ட தன்மானங்கள்
பிரியங்களை உருக்கி விடும் வார்த்தைகள்
பிரியங்களை எரித்து விடும் சந்திப்புகள்
பிரியங்களைச் சிதைத்து விடும் சந்தேகங்கள்
பிரியங்களைக் கிழித்து விடும் வாக்குவாதங்கள்
பிரியங்களில் விரிசலிடும் கடிதங்கள்
பிரியங்களை அசைத்து விடும் போட்டிகள்
பிரியங்களைக் கசக்கி விடும் பருவங்கள்
பிரியங்களைச் சுருக்கி விடும் போதைகள்
பிரியங்களை இறுக்கி விடும் பயணங்கள்
பிரியங்களைத் தொலைத்து விடும் பரஸ்பரங்கள்
பிரியங்களைக் கலைத்து விடும் முத்தங்கள்
பிரியங்களைப் பிய்த்து விடும் சுயங்கள்
பிரியங்களைத் தவற விடும் இச்சைகள்
பிரியங்களைப் பிளந்து விடும் ஆத்திரங்கள்
பிரியங்களை மூழ்கடிக்கும் புரிதல்கள்
பிரியங்களைச் சாய்த்து விடும் பிடிவாதங்கள்
பிரியங்களை நிறுத்தி விடும் முரண்பாடுகள்
பிரியங்களை இழந்து விடும் தோள்கள்
பிரியங்களைக் கவிழ்த்து விடும் ஆசைகள்
பிரியங்களை நொறுக்கி விடும் இயலாமைகள்
பிரியங்களைப் பிழிந்து விடும் கடமைகள்
பிரியங்களை ஒடித்து விடும் நீகள்
பிரியங்களைத் துரத்தி விடும் நான்கள்
பிரியங்களைக் கொன்று விடும் நாம்கள்
யாவற்றையும் விட
பிரியங்களால்
தற்கொலையுண்ட
பிரியத்தின்
ரணமே கொடிதாகிறது
நன்றி: பனிமுலை
3 மறுமொழிகள்:
நல்லா இருக்குங்க.
அன்பின் செல்வராஜ்,
நீண்ட நாட்களாக உங்கள் வரிகளின் மூலம் உங்களைத் தெரியும்.
ஒன்றைப் பற்றி சொல்லும் போது,இன்னொன்றைப் போலவே இருப்பதாகவே சொல்வதைப் பற்றிய உங்கள் கவிதை.. அடிக்கடி நினைவுக்கு வரக்கூடிய ஒன்று.
வந்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி.
ennaku ungal mel priyathai undakkiyathu ungalin intha kavithai...
Post a Comment