Friday, April 23, 2010

பாடும் நிலா பாலு.. பாட வந்த கதை!


AMIE படித்துக் கொண்டிருந்த இளைஞரான SPBக்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவு. சுமார் 17 வயதில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார் அவர். தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் அந்தப் போட்டியில் முதல் பரிசு வென்றிருந்த SPBக்கு அது மூன்றாம் வருடம். இந்த வருடமும் அவருக்கே கொடுப்பதா என்ற அயற்சியா, இல்லை வேறேதேனும் உள்ளரசியலோ தெரியவில்லை.. முதற் பரிசு வேறொருவருக்கும், இரண்டாம் பரிசு SPBக்கும் தரப்படுகிறது.

பரிசளிப்பு விழாவுக்கு வந்த பாடகி S.ஜானகி அவர்களின் முன் வெற்றி பெற்ற இருவரையும் பாடச் சொன்னபோது, இரண்டாம் பரிசு பெற்ற பையன்தான் நன்றாகப் பாடினான். அவனுக்குதானே முதற் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்று மைக்கிலேயே கடிந்து கொள்கிறார் ஜானகி. சினிமாவில் முயற்சிக்க வேண்டியதுதானே என்று கேட்கும் ஜானகியிடம், இல்லை அதெல்லாம் எனக்கு சரி வராது. நான் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்று கூறும் SPBயிடம், நானும்தான் சங்கீதம் கற்றதில்லை.. பாடவில்லையா? முயற்சி செய்தால் பாடலாம் என்று கூறுகிறார் ஜானகி.

சரியென்று சில தயாரிப்பாளர்களை அணுகும் SPBயிடம், வாய்ஸ் இன்னும் மெச்சூராகவில்லை. இன்னும் சில காலம் ஆகவேண்டும் என்ற பதில் தரப்படுகிறது. சரி இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று படிப்பை கவனிக்கத் துவங்குகிறார் SPB.

இந்நிலையில் சென்னை ஆந்திரா கிளப்பில் தேசிய அளவிலான இசைப் போட்டியொன்று நடக்க, அதில் SPBக்குத் தெரியாமல் அவருடைய அறைத் தோழர் 10 ரூபாய் கட்டிப் பதிவு செய்துவிடுகிறார். சினிமாப் பாடல்களைப் பாடக்கூடாத போட்டியது. வேறு பாடல்களேதும் தெரியாததால், அவரே தெலுங்கில் ஒரு பாட்டெழுதி, ஒரு ட்யூனையும் போட்டுக் கொண்டு சென்றிருக்கிறார் விளையும் பயிர் SPB.

ஆல்ஃபபெட்டிகல் வரிசையில் Aவில் யாருமில்லாமலிருக்க, பாலுதான் முதல் போட்டியாளர். கண்டசாலா மாஸ்டர், நாகேஸ்வர ராவ், தட்சிணா மூர்த்தி முதலிய நடுவர்களின் முன்பு கண்ணை மூடிக் கொண்டு பாடிவிட்டு வந்து அமர்ந்து விடுகிறார் SPB.

குள்ளமான, வெளுத்த மனிதரொருவர், அவரிடம் வந்து சினிமாவில் பாடுகிறாயா என்று கேட்கிறார். அம்மனிதர் தன்னை கிண்டல் செய்கிறாரென்று நினைக்கும் SPB எழுந்து கூட நிற்காமல், சினிமாவில் பாட எனக்கு விருப்பமில்லை. இங்கே பாடிவிட்டால் சினிமாவில் சான்ஸ் கிடைத்து விடுமா என்று கேட்கிறார். நான் சான்ஸ் தந்தால் பாடுகிறாயா என்று கேட்கிறார் அந்த மனிதர். பின்னர்தான் அவர் உண்மையிலேயே பெரிய மனிதர் போலிருக்கிறது என்று உணர்கிறார் SPB.

அதன்பின் தன் பெயர் கோதண்டபாணி என்றும், தான் 4 படங்களுக்கு இசையமைத்திருப்பதாகவும் கூறும் அவர், தயாரிப்பாளரிடம் SPBயை அழைத்துச் செல்கிறார். குரல் இன்னும் சற்று அமெச்சூராக இருப்பதால் ஹீரோவுக்கும் பாட வைக்க முடியாது, குழந்தைக்கும் பாட வைக்க முடியாது.. பிறகு பார்ப்போமே என்ற பதில் கிடைக்கிறது மீண்டும். முதலிலேயே This is not my cup of Tea என்றிருக்கும் SPB தன் தொலைபேசி எண்ணைக் கூடத் தராமல் வெளியேறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எப்படியோ அலைந்து திரிந்து SPBயை அவரின் கல்லூரியில் கண்டுபிடித்து விடுகிறார் கோதண்டபாணி. பாடல் ரிகர்சலெல்லாம் நடக்கிறது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. 2 மணிக்கு விஜயா கார்டன்ஸில் ரெக்கார்டிங். ப்ரொடக்ஷன் காரனுப்புகிறோம் வந்துவிடுங்கள் என்கிறார்கள் கடைசியாக.

இருந்த 3 செட்டுத் துணியில் பிடித்ததான வெள்ளை பேண்ட் சட்டையைப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறார் SPB, நண்பர் முரளியுடன். (இன்றும் SPBயின் ஸ்டுடியோவில் அசிஸ்டண்ட் ரெக்கார்டிஸ்டாகப் பணிபுரிகிறார் இந்த முரளி) மணி நாலாகியும் வண்டி வரவில்லை. நாம் பாடியது பிடிக்கவில்லை. அதனால்தான் வண்டி வரவில்லை என்றெண்ணும் SPB சட்டையைக் கழட்டப் போக, எதற்கும் ஒரு முறை ஸ்டுடியோவுக்குச் சென்று பார்க்கலாம் என்று முரளி வற்புறுத்த, சைக்கிளில் கிளம்புகிறார்கள் இருவரும்.

விஜயா கார்டன்ஸ் வாசலில் கூர்க்கா க்யா ச்சாயியே என்று முறைக்கிறார். இல்லை இவன் பாடணும் என்று முரளி SPBயைக் கைகாட்ட, ஏண்டா இங்க எல்லாரும் நடிக்கணும்னு வந்து ஏமாத்தறானுங்க. நீங்க பாடணும்ங்கிறீங்களா? போய்ப் படிக்கற வேலையப் பாருங்கடா என்று கூர்க்காவிடம் வசவு வாங்குகையில் கண்களில் நீர் முட்டுகிறது SPBக்கு.

இல்ல சார் இந்தப் பையன் வேணா இங்கயே இருக்கட்டும். ரெண்டு சைக்கிளும் இங்கயே இருக்கட்டும். நான் உள்ள போய் ப்ரொடக்ஷன் ஆளக் கூட்டி வரேன். அப்றமாவது அனுப்புங்க சார் என்று கெஞ்சும் முரளி, பலத்த யோசனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறார். பின்னர் நிஜமான ப்ரொடக்ஷன் ஆள் வந்து சொன்ன பிறகு SPB உள்ளே கூட்டிச் செல்லப்படுகிறார்.

வருவதற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று கோபப்படுகிறார் கோதண்டபாணி. அதன்பின் தான் அனைவருக்கும் தெரிய வருகிறது. அவர்கள் அனுப்பி வைத்த கார் ஒரு விபத்தில் சிக்கி காவல் நிலையத்தில் இருப்பது.

ரெக்கார்டிங் போகும் முன், தயரிப்பாளர் பத்மனாபன் SPBயிடம் தம்பி நல்லாப் பாட்ற.. மைக்ல கேக்கும் போது ஒருவே…ள எங்களுக்குப் பிடிக்காமப் போனா கண்டசாலா மாஸ்டர வச்சு டப் பண்ணிக்கிறோம்.. என்கிறார். போகும்போதே இப்படி சொல்லிவிட்டாரே என்று அரை மனதோடேயே செல்கிறார் SPB.

Cubicle வசதிகளில்லாத நாட்களவை. குறைந்தது நாற்பது லைவ் ஆர்ட்டிஸ்ட்களிருக்கும் ஒரே ஹாலில் முதல் பிட் பாடவேண்டும். அது முடிந்த பின்னர் கட் செய்து, அடுத்த பிட் எடுக்க வேண்டும். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு முதல் பிட்டைப் பாடுகிறார் SPB.

அடுத்த பிட்டுக்கு போகும் முன் ரிசல்ட் வந்தாக வேண்டும். உள்ளேயிருந்து இப்போதுவரை எந்த செய்தியும் இல்லை. உடன் பாடிய சுசீலா அவர்கள் நல்லாப் பாட்ன தம்பி.. அநேகமா இன்னொரு டேக் எடுக்கறதுக்கு யோசிக்கறாங்க போலிருக்கு என்கிறார். நொடிக்கு நொடி டென்ஷன் எகிறுகிறது நம்மாளுக்கு.

திடீரென்று எல்லோரும் உள்ளே வந்து இந்த் டேக் ஓகே.. நல்லாப் பாட்னப்பா.. என்கிறார்கள். 150 ரூபாய் சம்பளப் பணம் தரப்படுகிறது SPBக்கு.

இதுதான் 3 மாநிலங்களில், 30 வருடங்களில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் பொருந்திய ஒரே ஒரு குரலின் அசாத்தியம் நிகழக் காரணமாக இருந்த கதை.

குரலைக் காப்பாற்றுவதற்காக நிகழும் மெனக்கெடல்களை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். ஆனால் எந்த விதமான முயற்சிகளுமில்லாமல், ஐஸ் வாட்டர், தயிர், கூல் ட்ரிங்க்ஸ்.. ஏன்.. முப்பது வருடமாக புகைப்பழக்கம் கூட இவர் குரலை ஒன்றும் செய்யவில்லை என்பது சாமி சத்தியமாக அதே சாமியின் அருளேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்கிறார் SPB. வேறென்னவாகவுமே இருக்க முடியாது என்று நானும் நம்புகிறேன். பொறாமையுடன்.

தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பிடித்த, மிகச்சில ஆளுமைகளுள் ஒருவர். இத்தனை திறமையிருந்தும், அத்தனை புகழிருந்தும், எத்தனையோ பணமிருந்தும், தலைக்கனமில்லாமல், எளிமையே உருவாய் இருப்பதற்கு நான் ஆதர்ஷமாகக் கருதும் இருவரில் ஒருவர்.

இன்னொருவர் AR Rahman!



8 மறுமொழிகள்:

நேசமித்ரன் April 23, 2010 at 3:49 AM  

புது அவதாரமா மதன் கலக்குங்க..

வாழ்த்துகள்

கோவி.கண்ணன் April 23, 2010 at 6:11 AM  

சிறப்பான தகவல்கள்.

எம்.எம்.அப்துல்லா April 23, 2010 at 9:23 AM  

தமிழகத்தின் பிரபல ஹீரோ அவர். அவருக்கு பாடிவிட்டால் குக்கிராமம் வரை தலைவரின்(எஸ்.பி.பி) குரல் போய்ச் சேர்ந்துவிடும். அவர் தலைவரின் குரலைக் கேட்டு ஒ.கே செய்து குறிப்பிட்ட நாளைச் சொல்லி அன்று வந்துவிடு என்கின்றார். அந்த நாளில் தலைவரை அழைக்க காரும் வந்துவிட்டது.ஆனால் அன்று அவருக்கு பயங்கர காய்ச்சல். ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்ட தலைவர் வருத்தத்தோடு விதியை எண்ணி நொந்துபோகிறார். இரண்டு வாரம் கழித்து தலைவரின் காலேஜ் ஹாஸ்டலுக்கு மீண்டும் கார் வருகின்றது. ஹீரோ அழைத்து வரச் சொன்னதாக அழைத்துச் செல்கின்றனர். என்ன தம்பி..இன்னைக்கி உடம்பு பரவாயில்லையா?? இன்னைக்கு பாட முடியுமா? என்று ஹீரோ கேட்கிறார். அதிர்ந்து போன தலைவர் ”சார் நீங்க வேற யாரையாவது வச்சு இந்நேரம் ரெக்கார்டிங் முடிச்சுருப்பீங்கன்னு நினைச்சேன்.என்னைய மாதிரி ஒரு புது பாடகனுக்காக இத்தனைநாள் காத்திருக்கது நம்ப முடியலை சார்னு” கண் கலங்க சொல்கிறார் தலைவர். அதற்கு அந்த ஹீரோ “தம்பி! நீ புது பாடகன் மட்டும் இல்லை.கல்லூரி மாணவன். எனக்குப் பாடப்போறேன்னு உன் காலேஜே சொல்லி இருப்ப. உனக்கு முடியாமப் போனது எத்தனை பேருக்குத் தெரியும்?? நீ பாடாமப் போயிருந்தீன்னா நீ கதைவிட்டதா நினைச்சு உன் நண்பர்கள் உன்னை கிண்டல் பண்ணலாம் இல்லையா...அதுனாலதான் உனக்காக வெயிட் பண்ணுனேன்” என்றார் அந்த ஹீரோ. மனிதாபிமானம் மிக்க அந்த ஹீரோ பின்னாளில் முதல்வராய் வலம் வந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்கள். அந்தப் ”பாடல் ஆயிரம் நிலவே வா”

மதன் April 23, 2010 at 5:04 PM  

அவதாரமெல்லாம் இல்லைங்க நேஸ்.. தோணறதயெல்லாம் எழுதிட்டுருக்கேன். அவ்வளவுதான்!

@கண்ணன் - நன்றி

@அப்துல்லா - நீங்கள் கூறிய நிகழ்வைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
SPBஐத் தலைவரென்றும், MGRஐ ஒருவர் என்றும் விளித்திருந்த முரண்நகையை ரசித்தேன்.

@நந்தா - நன்றிங்க.

இரசிகை April 24, 2010 at 10:26 PM  

ippothaan muzhusaa theriyum.....intha kathai!


me too love spb..........!

மதன் April 25, 2010 at 10:14 AM  

@இரசிகை-

கருவேல நிழலிலும், நேஸ் கவிதைகளிலும் உங்களை நிறையப் பார்த்திருக்கிறேன். வருகைக்கு நன்றி!

Anonymous,  February 27, 2012 at 8:03 AM  

அருமை வாழ்த்துக்கள்.நன்றி. இங்கேயும் ஒரு விசிட் அடிங்க www.myspb.blogspot.com

  ©Template by Dicas Blogger.

TOPO