இரு கவிதைகள்
1)
துரோகத்தின் ஈர முத்தங்கள்
அந்தராத்மாவின் கழுத்தில்
இறுகத் துவங்கியிருக்கும்
முடிச்சினிடையே சிக்கியிருப்பது
தாய்ப்பாலின் மணம் மாறாத
ஆலகால துரோகமாகவோ,
நிராகரிப்பின் பீடத்தில் தலையைப்
பலி கொடுத்த தன்மானத்தின்
முண்டத் துடி உதறலாகவோ
இருக்கக் கூடும்.
மந்தகாச வதனத்தில்
தொலைத்து விட்ட
இதயக்குஞ்சின் அலகினுள் பக்குவமாய்
புகட்டிவிடலாம்
விஷந்தோய்ந்த குருதியினை.
ஓங்கி அடர்ந்த
அத்துவானத் தனிமையில்
சுய புணர்தலின்
உச்சத்தில் வெண் துளிகள் ஏனோ
சிவந்து ஒழுகையில்
வெதும்பித் தெறிக்கும்
ஆசுவாசப் பெருமூச்சின் போது
கருகக் கூடும்
துரோகங்களுக்கும்,
புறக்கணிப்புகளுக்குமான
வாசனாதி
இத்யாதிகள்
2)
மழைக்காரி
நினைவுகளைத் தேக்கிய
கண்ணாடிக் குவளைகளைக்
கல்லெனத் திரளும்
பிரிவின் வலியிலிருந்து
ஒளித்து வைக்க வேண்டுமென்கிறாய்
நனைதலின்
மீதானவுன் பிரியத்துக்கு
மஞ்சள் குடைகளும்
உடன் நனையும் நேசம்
எனக்குப் புரியாதென்கிறாய்
உன் மலரினின்று
என் பிரியத்தின் மணம் உதிர்ந்தால்
வேர்களுக்குள் முளை விடுகிறது
எரிமலை என்கிறாய்
நானே குவளையாகி
நிறைந்து வழிகிறேன்
நானே குடையாகி
நனைந்து நைகிறேன்
நானே எரிமலை வேரில்
புதைந்து போகிறேன்
உனதான மழையென்றும்
என்னோடே
பெய்யுமெனில்
-தாக்ஷாயணிக்கு!
நன்றி: அகநாழிகை (மார்ச் 2010 இதழ்)
2 மறுமொழிகள்:
:)
மொழியில் நிகழ்ந்து வரும் அடர்வான மாற்றம் மற்றும் உட்பொருளின் செறிவு கவிதைக்கு புது வண்ணம் மதன்
வண்ணத்தைக் கண்டறிந்த தூரிகை வித்தகருக்கு நன்றிகள் மீண்டும்! :)
Post a Comment