Monday, November 30, 2009

கோவையிலிருந்து சூலூர் வரை!




கடந்த வாரக்கடைசியில் கோவை சென்றிருந்தேன். தோழியின் திருமண விழாவுக்கு அம்மாவுடன் சென்றுவிட்டு, காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தில், எங்களூரான சூலூர் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். அப்போது வந்தவொரு தனியார் திருப்பூர் பேருந்தில் ஏற முற்படுகையில், "திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.. திருப்பூர் மட்டும் ஏறிக்கோ.." என்ற கூவல் கேட்டது.

"ணா.. சூலூர் போறவெங்கெல்லாம் ஏறக்கூடாதாண்ணா.." என்றதற்கு,

"முன்னாடி நிக்கற வண்டீல போயேறிக்கப்பா.. நீயேறி உக்காந்துக்குவ.. அப்பறம் திருப்பூர் டிக்கட்டெல்லாம் ஏத்த வேண்டாமா" என்று அன்புமிழும் பதிலை வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

"யேண்ணா.. நாங்கெல்லாம் காசு குடுக்கறதில்ல..?" நமக்கும் இருக்குமல்லவா ரோஷம்.

"யேறாதனா.. யேறாதப்பா.. போ..!"

இதற்கு மேலும் பேசாதிருந்தால், வாய்கலப்பானது, கை மற்றும் கால் கலப்புகளாகி நான் அடிபடும் (?!) வாய்ப்பு பிரகாசமானது என்று தெரியுமாதலால், என்னை அமைதிப்படுத்தி, அடுத்த பேருந்தைக் கண்டறியும் சீரிய முயற்சியில் அம்மா ஈடுபட வேண்டியதாயிற்று.

சூலூர் டவுன் பஞ்சாயத்து கோவை நகரிலிருந்து, திருப்பூர் செல்லும் வழியில் முதல் 18 கி.மீ தொலைவிலுள்ளது. இரண்டாம் 18 கி.மீ தொலைவில், பல்லடம் நகரும், மூன்றாம் 18 கி.மீ தொலைவில் திருப்பூர் நகரும் உள்ளன. மேலும் உடுமலை, தாராபுரம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் சூலூர் வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.

சூலூரிலிருந்து, திருப்பூர் செல்லும் பயணிகளை ஏற்ற எப்படியும் சூலூரில் பேருந்தை நிறுத்தித்தான் ஆகவேண்டும். சூலூரில் ஏறும் பயணிகள் நின்று கொண்டுதான் திருப்பூர் வரை பயணமும் செய்கிறார்கள். இது இப்படியிருக்கையில், ஒரு 18 கி.மீ மட்டும் நாங்கள் அமர்ந்து கொண்டு பயணம் செய்வதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இடமில்லாவிட்டால் சரி. நின்று கொள்கிறோம். இருக்கும் போது ஏன் நிற்க வேண்டும்?

கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம், இறுதி வரை செல்லும் பயணிகள் எந்த ஆட்சேபணையும் காட்டாமல், அடுத்த பேருந்தில் ஏறிக் கொள்கின்றனர். அதுதான் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருக்கிறதே. பிரச்சினை துவங்கும் புள்ளி, பண முதலைகளின், காசாசை கொளுந்து விட்டெறிகையில்தான்.

'தனியார் பேருந்துகள்தான் இப்படியா' என்று கேட்டால், 'அரசுப் பேருந்துகளில் இன்னும் மோசமாகத் திட்டுகின்றனர்' என்று சொல்கிறார்கள். என் கல்லூரிக் காலத்தில் இதே பிரச்சினை தலை தூக்கியபோது, அமைதியாகத்தான் மறியல் செய்ய அமர்ந்தோம். ஆனால் பேச்சு, வீச்சாக மாறி, சில பல பேருந்துகள், தங்களின் சில பல கண்ணாடிகளை இழக்கும் நிலை வந்த பின், சூலூர் மக்கள் மதிக்கப்பட்டோம். இருக்கும் குரூரத்துக்கு மீண்டும் அவையெல்லாம் விரைவில் நடக்கும் (அ) நடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

முடிந்த அளவுக்கு காந்தியனாக இருக்கத்தான் நான் முயற்சிக்கிறேன். ஆனால் முகத்திலறைந்தாற் போல் வந்து விழும் வார்த்தைகள், கொள்கைகளைத் தூக்கிக் குப்பைக் கூடையில் குமுறிவிட்டு, "ஒரு கண்டக்டருக்கே இத்தன திமிருன்னா.." என்று கிளப்பிவிடும் எண்ணக் கசடுகளில், காந்தியன் ஹிட்லரியனாக மாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எய்தவனைப் பற்றி யோசிக்காமல் அம்பின் மேல் கோபம் வரத்தான் செய்கிறது.

நான் பரவாயில்லை. நின்று கொண்டு வருகிறேன். முதியவர்கள் என்ன செய்வர்? நகரப் பேருந்தில் செல்லலாம் என்றால், முதலாவதாக எண்ணிக்கையில் அவை குறைவு. இரண்டாவதாக மஃப்சல் பேருந்து நிலையத்திலிருந்து, நகரப் பேருந்து நிலையம் ஏறக்குறைய முக்கால் கி.மீ. எல்லோருக்கும் நடக்கக் காலாலாகுமா?

இங்கே கர்நாடகத்தில் பரவாயில்லை. மக்களைக் கொஞ்சமேனும் மனிதர்களாக மதிக்கிறார்கள். ஒவ்வொரு முறை தமிழ்நாடு செல்லும் போதும், 'கூடிய வரை இங்கே வரக்கூடாது' என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில்தான் ஒவ்வொன்றும் நடக்கின்றன.

இதையெல்லாம் எண்ணி, எனக்கு வந்த கோபத்துக்கு, மனதுக்குள் எல்லாருக்கும் மரண தண்டனை விதித்து விட்டு, வலையிலும் பதிவித்து விட்டேன். எதற்கும் கையாலாகாத பொதுஜனங்களான நம்மால் வேறென்ன செய்துவிட முடியும்? சொல்லுங்கள்!



20 மறுமொழிகள்:

Kumaraghuru November 30, 2009 at 5:40 PM  

I was really in bad mood, before I opened this page.....the title gave a cheer (Inampuriyatha maghizhchi).... Sulur mattum illa, Kavundampalayam, Periyanaickenpalayam...ella oor makkalum allal padum oru nigazhchi...ithu paravilla....when the ticket cost was raised to 10.50 paise...antha 50 paisakku naa patta paadu irukkae.....nai polapunga namma polappu

sindhusubash November 30, 2009 at 6:15 PM  

இந்த பிரச்சனை இப்ப மட்டுமல்ல 90களில் இருந்தே இருக்கு..இப்பவும் அதுக்கு ஒரு மாற்றம் வராரது வேதனை தான்.

Sanjai Gandhi November 30, 2009 at 6:47 PM  

நீங்க ஏன் அவன் சொல்றதை காதுல வாங்கறிங்க. ஏறி உக்கார்ந்திருகக்னும். பாதி வழியிலயா இறக்கிடுவான். பஸ் கிளம்பும் முன் இறங்க சொன்னால் இறங்காதிங்க. என்ன கிழிச்சிடுவாங்க?. நான் இது போன்ற கத்தல்களை எல்லாம் கண்டுக் கொள்வதே இல்லை.

Ashok D November 30, 2009 at 6:58 PM  

இதையே சாரு எழுதனா அவர லூசுன்னு குமுதம்(யாரோ ஒரு இலக்கியவியாதி சொன்னாராம்) விமர்சிக்குது.

மதன் November 30, 2009 at 7:01 PM  

Thanks Guru.

சிந்து - இங்க பிரச்சினைகள்தான் எப்பவும் இருந்துகிட்டே இருக்கே. விடிவு தான் வராது!

SanjaiGandhi - வழில இறக்கி விட மாட்டான் தான். ஆனா நம்ம இடத்த வேற ஒருத்தங்களுக்குக் கொடுக்க சொல்லவும், வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் நிறையப் பேர் முன்னாடி, அவமானப்பட்டா, வலி அதிகமாக உணரப்படுமில்லையா?

மதன் November 30, 2009 at 7:02 PM  

சாருவை மட்டுமில்ல.. யாராக இருந்தாலும் அவர்களை விமர்சிக்கும் உரிமையும், தகுதியும் குமுதத்துக்கு யார் குடுத்தானு தெரில அஷோக்!

Sanjai Gandhi November 30, 2009 at 7:11 PM  

//SanjaiGandhi - வழில இறக்கி விட மாட்டான் தான். ஆனா நம்ம இடத்த வேற ஒருத்தங்களுக்குக் கொடுக்க சொல்லவும், வார்த்தைகள் நம்மைக் காயப்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம்.

அதுவும் நிறையப் பேர் முன்னாடி, அவமானப்பட்டா, வலி அதிகமாக உணரப்படுமில்லையா?//

தவறு மதன். நமக்கும் வாயுண்டு. வார்த்தைகளும் உண்டு. ஞாயத்திற்காக வரம்பு மீறுவதில் தவறில்லை. 2 நாள் முன்பு கூட கிருஷ்னகிரி பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து நிறுவன AEயிடம் பெரிய வாக்குவாதம். நான் பேசாமல் இருந்திருந்தால் 10 நிமிடம் தாமதமாக பஸ் கிளம்பி இருக்கும். அவரிடன் சண்டை போட்டதால் உடனே கிளம்பியது. பலரும் வேடிக்கப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதைப் பற்றி எனக்கு கவலை இருக்கவில்லை. நான் அவர்களுக்கும் சேர்த்து தான் சண்டை போட்டேன். மேலும் நாம் அவமானப் படும் அளவு வார்த்தை விடுவதற்கெல்லாம் அவர்களுக்கு தைரியம் வராது. அதற்கு உரிமையும் கிடையாது. கொஞ்சம் பதிலுக்குப் பேசிப் பாருங்க. அனைத்தையும் பொத்திக் கொள்வார்கள். நம் அமைதி அவர்களுக்கு பலத்தைக் கொடுக்கக் கூடாது.

மதன் November 30, 2009 at 7:47 PM  

சரிதான் சஞ்சய். ஆனால் ஒவ்வொரு முறையும் மல்லுக்கு நின்று, நியாயம் தேடிக் கொண்டிருக்க முடியாதல்லவா.

நாம் மேலே பார்த்த பிரச்சினையைப் பொறுத்தவரை, எல்லாப் பேருந்துக்காரர்களுமே அதைச் செய்கிறார்கள். அனைவரிடமும், அனைத்து சமயங்களிலும் சண்டை போட்டுக் கொண்டிருத்தல் நடைமுறையில் சாத்தியப்படுதலின் சிரமம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

வாய் வழி சண்டைகள் பெருகி, முற்றுகையில் அது ஒரு சமூகம் சம்பந்தப்பட்டதாகி, மறியல், கல்வீச்சு என்று ஆகிவிடுகிறது.

அதே சமயம், நீங்கள் சொன்னது போல், நாமும் எகிறினால், இவர்கள் கொட்டம் சற்று அடங்கும் என்பது உண்மை. அது இன்றைய வாழ்நிலையில் தேவையான ஒன்றும் கூட!

vijayan November 30, 2009 at 7:56 PM  

tamilnattil busgal desiyamayamagivittathaga kazhga thundargal romba naalaga buruda vittu kondu irukkirargal aanal thaniyaar bus ownergalthan pokkuvarathu thuraiyavey natathugirargal,so avargal vaithathuthan sattam,avargalidam vaalatinal gundargalum thundargalum nammai oruvazhi pannividuvaargal.veru ella oorayumvida salem-l ivargal attakasam adhigam.VIZZY.

மதன் November 30, 2009 at 8:08 PM  

இவர்களின் கழகமும் கூட தனியார் நிறுவனம்தான் விஜயன்! :)

நந்தாகுமாரன் December 1, 2009 at 10:46 AM  

அட! நீங்களும் பெங்களூர் to கோவை தானா ...

மதன் December 1, 2009 at 10:53 AM  

நீங்களும் கோவையா நந்தா?

நந்தாகுமாரன் December 1, 2009 at 10:57 AM  

இந்த எழவுக்கு தான் நான் இம்மாதிரி பஸ்ஸில் பயணம் செய்வதை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன்.

இந்த point to point மனோபாவம் தொன்று தொட்டு இப்படித்தான் இருக்கிறது

damildumil December 1, 2009 at 11:19 AM  

இவனுங்க அட்டுழியம் வரவர தாங்க முடியலை, மேட்டுப்பாளையம் பஸ்ல ஏறுனா மேட்டுப்பாளையம் தான் போகனுமாம், பெரியநாயக்கன் பாளையம் போறவங்க வண்டி கிளம்பும் போது தான் ஏறனுமாம் ஆனா அதே வண்டி நூறடி ரோடை தாண்டினால் கவுண்டம்பாளையம் டிக்கட்டை கூட ஏத்திப்பானுங்க.

இதை விட பெரிய கொடுமை என்னன்னா கோவையில் இருந்து தாராபுரம் போறவங்க தான், சூலூராவது முக்கால் மணி நேரத்துல போயிடுவான் ஆனா தாராபுரம் போறவங்க கோவை - மதுரை பஸ்ல ஏறுனா இரண்டு மணிநேரம் நின்னுட்டு தான் போகனும். எதோ அவன் கிட்ட பிச்சை கேக்குறமாதிரி பஸ் கிளம்புற வரைக்கும் வெளிவே நிக்கனும்.

Anonymous,  December 1, 2009 at 11:27 AM  

//ஆனால் சூலூர் பயணிகள் ஏறி, 'அமர்ந்து' கொள்வதால் திருப்பூர், உடுமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் உட்கார இடமின்றி ஏற மாட்டார்கள். எனவே பேருந்து நிறையும் வரை, இறுதி வரை செல்லும் பயணிகளை மட்டும் ஏறச் சொல்லிவிட்டு, 'சூலூர் செல்லும் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்தால் போதும்' என்ற அலட்சிய மனோபாவத்தை, எழுதாத விதியாகப் பின்பற்றுவதுதான் இங்கு பிரச்சினையே.//

Yes it happens in vellore - Tirupattur buses also.. they will treat ambur, vaniyambadi n tirupattur passengers life god, n other passengers r like dogs..

even for aged too..

very bad experience..

மதன் December 1, 2009 at 6:25 PM  

எல்லோராலும் பேருந்தை நிராகரிக்க முடிவதில்லையே நந்தா!

டமீல் டுமீல் - நல்ல பேருங்க! நீங்க சொன்னது சரி. தாராபுரம் போறவங்க பாடு இன்னும் போசம்.

Sachanaa - தமிழ்நாடு முழுவதுமே நிலைமை இப்படித்தான் இருக்கிறது என்பதைக் கேட்க மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

Santhini December 2, 2009 at 9:37 PM  

சஞ்சய் காந்தி சொல்வது முற்றிலும் சரி
காந்தியவாதி என்று சொல்லிக்கொண்டு கோழையாய் இருக்க வேண்டாம் மதன். காந்திஜி எப்படிப்பட்ட அவமானத்துக்கும் அஞ்சவில்லை. உங்கள் வேகம் காலேஜ் காலத்துடன் மலையேறி விட்டதா? கல்யாணம் குடும்பம் (அனுமானம் தான்) என்று வந்தவுடன் வேகம் எங்கே மறைந்து போகிறது? இப்பொழுது இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டிய அவசியம் அல்லவா இருக்கிறது !
இதே ப்ளாக்- ஐ பயன்படுத்தி ஒரு அழைப்பு விடுங்களேன், இத்தகைய பிரச்சினைகளை எதிர்க்க ஒரு குழு !!! ஏன் முடியாது ? முயன்று பாருங்கள். அவமானத்திற்கு பயந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது. ப்ளாக் -ல் கோபப்படலாம், அவ்வளவுதான்

மதன் December 3, 2009 at 12:16 AM  

எனக்கின்னும் கல்யாணம் எல்லாம் ஆகவில்லை நண்பரே. கல்லூரிக் காலத்திலும் கூட கல்லெடுத்தெறிவதில் எனக்கு உடன்பாடும் இருக்கவில்லைதான்.
ஆனால் ஒரு கூட்டத்தின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத ஒன்று என்பதால் அந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி விட்டன.

என் மனோநிலையைப் பொறுத்தவரை அப்போதைக்கும், இப்போதைக்கும் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை.

அவமானம், வலி முதலியவற்றை முன்னிறுத்திய என் பின்னூட்டம், ஒரு சராசரியனின் பார்வையில், பொதுவான ஒரு கூற்றே தவிர, மதன் என்கிற நானாகப்பட்டவன், நடந்து கொள்ளும் முறை என்பதாக நான் சொல்லவில்லை.

நாமே மக்களைத் திரட்டிப் போராடும் உங்கள் கருத்து சற்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் எழுதப்பட்டது போல் தோன்றுவதுடன், அதன் சாத்தியப்பாடு எனக்கு சந்தேகமூட்டுவதாகவும் தோன்றுகிறது.

அதைப் பரீட்சித்துப் பார்க்கும் அளவுக்கு நேரம் தற்சமயம் எனக்கு வாய்க்கப் பெறாததால், தங்கள் கருத்தை செயலாக்கிப் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை.

ஆகவே, வலையில் மட்டும் கோபப்படும் கோழைதான் நான் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ஒளிவு மறைவில்லாமல் பேசக்கூடியவர்களைக் காண்பது அரிதாக உள்ளது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தத் தளத்திற்கு வாருங்கள்.

என்றும் நட்புடன்!

Santhini December 7, 2009 at 9:48 PM  

அன்பு மதன்,
உணர்ச்சி வசப்படுதல் என்பது பொதுவான கருத்து. அது பெரும்பாலும் தேவையில்லாத உணர்வாகவே கருதப்படுகிறது. மனிதன் உணர்வுகளால் பின்னப்பட்டவன். உணர்வுகளை மதிக்காதபோது நாம் நம்மையே மதிக்காத மனிதர்களாகிறோம். கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகள் மட்டுமே, புரட்சிகளை சந்தித்திருக்கிறது.
உங்களின் அவமான உணர்ச்சியே உங்களை கோபப்படவும் விலகி நடக்கவும் வைத்திருக்கிறது. அதே உணர்ச்சியை உரிமை உணர்ச்சியாகவும் மாற்றிப்பாருங்கள். என் வேகத்தின் அர்த்தம் புரியும்.

உங்களின் நேர்மை உணர்வு மனதை தொடுகிறது. தாழ்மையான விண்ணப்பம்: சராசரி மனிதன் என்ற போர்வைக்குள் ஒளிவதில் பயனில்லை, நிறைவில்லை. உங்களின் எழுத்து உங்களை அப்படி இனம் காட்டவில்லை.

நீங்கள் தேடும் அக்கினிக்குஞ்சு, வேறெங்கும் இல்லை. அது தழல் வீரம். அதை நெஞ்சில் பொருத்தி வையுங்கள். வெந்து தணியும் உங்கள் காடு.
அக்கினிக்குஞ்சை தேடுவதுதான் வாழ்வின் அர்த்தமென்றால், நேரமில்லாத வாழ்வு .....எங்கு உங்களை சேர்க்கும்?

வாழ்த்துக்கள் மதன்!

Azhagan December 7, 2009 at 11:09 PM  

This is not only in CBE. Happens in most of the big cities. I have encountered this while travelling between Pony - Villupuram, Pondy-Cuddalore or Chidambaram, Chennai - Chengalpattu, and I am sure this problem exists in other places too.

  ©Template by Dicas Blogger.

TOPO