Academy Award வசனம் முதல் ஆகாவழி வசனம் வரை!
யதார்த்தமும், கனவுகளும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி புதிர் நிரம்பியதாக உள்ளது. வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் வல்லமை அல்லது காரணியைப் பற்றிய Robert Zemeckis-ன் Forrest Gump திரைப்படத்தின் ஒரு வசனம் வாழ்வோடையின் பல கரைகளில் நினைவுக்கு வருகின்றது. 'இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட வாழ்வுக்கும், காற்றிலாடும் இறகு போல கட்டற்று அலையுறும் வாழ்வுக்கும் இடையேதான் அனைவரும் உருண்டு கொண்டிருக்கிறோம்' என்று கூறும் வசனமது.
கடந்த சில மாதங்களாக என் தகுதிக்கும், உழைப்புக்கும் அப்பாற்பட்ட எழுத்தை என்னால் வெளிக்கொணர முடிந்ததை, என்னளவிலேனும் உணர முடிந்தது. 11 மணி நேர அலுவலுக்குப் பின்பு, எழுத்துக்காகவேனும் வாசிப்பு, அதனைத் தொடர்ந்து எழுத்து, வாரமிரு நாள் இசைவகுப்பு மற்றும் நாம சங்கீர்த்தனம், எதிர் காலத்திற்காக முதுகலைப் படிப்பு என்று அசுரத்தனமாகவே வாழ்ந்திருந்தேன்.
ஒரு கட்டத்தில் எதற்காக இப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்ற என் மீதான ஆயாசம், கவனியாது விடப்பட்டிருந்த குடும்பத்தைக் கொண்டு வந்து நினைவு முழுதுக்கும் பரப்பி விட்டது. தமிழ் சினிமாவின் ஒரு மிகச்சாதாரணமான ஒரு செண்டிமெண்ட் சினிமா நாயகனின் வாழ்வை, எனதோடு ஒப்பிட, குமுதம் வாசகர்களாலும் கூட ஐந்தாறு வித்தியாசங்களை கண்டறிய முடியாதென்பது திண்ணம்.
இப்படியிருக்கையில், வரும் சம்பளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டேயிருந்தால், 'தங்கச்சி' திருமணத்தை யார் நடத்துவது? வலைப்பக்கத்தை நிரப்புவதினும் அடர்வு மிகுந்த பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுவதாய் உள்ளே உறுத்தின.
இந்திய மென்பொருள் துறையைப் பொறுத்தவரையில் ஒரு நிறுவனத்திலிருந்து, இன்னொரு நிறுவனத்திற்கு பணி மாறினால் இரண்டு மடங்கு சம்பாத்தியத்துக்கு வழி கிட்டும். அதற்குரிய உழைப்பும், அனுபவமும் முதலீடாதல் மட்டும் அவசியம்.
பார்த்தேன்! வாசிப்பு, எழுத்து, இசை, ஆன்மீகம் என்ற தனிப்பட்ட ஆர்வங்களை சற்று ஆறப்போட்டுவிட்டு, 'உட்கார்ந்து' படிக்கத் துவங்கினேன். காலையில் நேரமே தொலைபேசும் தாக்ஷாயணி எழுப்பி விடுவாள். அம்மா அருகிலில்லாத கவலையில்லை. போலவே கனவுகள் மடித்து வைக்கப்பட்ட கவலைகள் மறக்கடிக்கப்பட சில தணிவுகள் அவளாலேயே சாத்தியப்பட்டன.
ஏகப்பட்ட interviewக்கள்! (Interview க்கு தமிழ் வார்த்தை நேர்முகத்தேர்வு என்று கொண்டால், தொலைபேசி வழியான interviewக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை) பேசினேன். பேசு, பேசென்று பேசினேன். விளைவாய் கையில் 4 வேலை வாய்ப்புகள். எதைத் தெரிவு செய்வதென்று இன்னும் முடிவு செய்யாத நிலையில், இவ்வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
படிப்பு, படிப்பென்று இருந்ததில், சற்று சோர்வு ஏற்படும் போது, ஒரு மாற்றத்திற்காகவேனும், வலையகப்பக்கம் வரத் தோன்றினாலும், என் மன நிலையின் எந்திரத் தன்மையை, இலக்கியார்வம் குறைத்து விடுமோ என்ற பயம் பின்னிருந்ததால், நான் வந்துதான் தூக்கிப் பிடிக்கும் நிலை தமிழிலக்கியத்துக்கு எக்காலத்திலும் வராது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
சொந்தக்கதை எழுதுவது உவப்பில்லாத ஒன்றான போதும், எழுத்துக்கான மனோபாவம் என்னிலிருந்து மிகத் தொலைவுக்கு சென்று விட்டதைப் போன்றிருந்த பிரம்மை தொலையவா, இல்லை.. 'மதன் என்றிங்கே ஒருவன் இருந்தானே.. அவன் என்னவானான்?' என்று எவரேனும் நினைத்திருந்தால், அதற்கு பதில் சொல்லவா என்று தெரியாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் சில வாரங்களில், புது நிறுவனத்தில் நுழைந்திருக்க வேண்டும். அங்கே நமக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பதற்கும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சகமில்லாமலிருப்பதற்கும் 'நன்றியோடு' உழைக்க வேண்டும். எழுத லாயக்குப்படும் என்று தோன்றவில்லை.
'எழுத்தின் அலாதி எல்லோருக்கும் தெரிவதில்லை. தெரிந்தவர்கள் எல்லோராலும் எழுத முடிவதில்லை' என்று ஏதாவது உளுத்துப் போன வசனத்தைப் பேசி, என்னை ஆற்றிக் கொள்வேன். எழுத முடியாவிடின், சத்தமில்லாமல் ஒரு வாசகனாகவேனும் எழுத்தோடு உயிர்த்திருக்க முயற்சி செய்வேன்.
9 மறுமொழிகள்:
எப்புடியா இப்படிலாம் எழுதிரிங்க...!
நல்ல எழுத்து நடை ...!
உங்களுடைய புது வேலைக்கு வாழ்த்துக்கள் ........!
best of luck மதன்
எல்லாத்துக்கும்தான்
Best of luck மதன்
பணி வாழ்க்கை முக்கியம் மதன், வாழ்த்துகள், பணியில் அமர்ந்து சில மாதங்களில் மீண்டும் ஓய்வு நேரம் கிடைக்கும், அப்போது எழுதலாம், all the best madan.
//'மதன் என்றிங்கே ஒருவன் இருந்தானே.. அவன் என்னவானான்?' என்று எவரேனும் நினைத்திருந்தால், அதற்கு பதில் சொல்லவா என்று தெரியாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.//
நன்றி.
எல்லாம் நல்லபடியா நடந்து, மீண்டும் உங்களது தனிப்பட்ட ஆர்வங்களில் ஈடுபட மனமும்,நேரமும் அமைய வாழ்த்துக்கள் !!
நன்றி வாசிக்க மட்டும். வருகைக்கும், வாழ்த்துக்கும்!
அஷோக், நேசமித்ரன் - நன்றி!
’புது மாப்ளை’ யாத்ரா - மிக்க நன்றி. :)
கதிரவன் - நான் எங்கே என்று கூட யோசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்வைத் தருகிறது. தங்களுக்கும் மிக்க நன்றி.
/ கடந்த சில மாதங்களாக என் தகுதிக்கும், உழைப்புக்கும் அப்பாற்பட்ட எழுத்தை என்னால் வெளிக்கொணர முடிந்ததை, / உங்களின் தகுதியை தரமிடுவது உங்களின் எழுத்துக்களே தவிர நீங்களில்லை. தரமான படைப்பென்பது உங்களை தகுதி உள்ளவராகவும் மாற்றி விடுகிறது இல்லையா? காலம் விரைவானது, எனினும் நெகிழும் தன்மையும் கொண்டது. எல்லாம் சாத்தியமே.
மேலும் வரைப்படுத்தப்பட்ட வாழ்வும், காற்றிலாடும் சிறகு போன்ற வாழ்வும் சந்திக்கின்ற நேரம் வரும் போது இரண்டையும் பிரிக்க முடியாத தன்மை வெளிப்படுவதை காண முடியும்.
இதே விதி யதார்த்தமும் கனவும் சந்திக்கும் புள்ளியிலும் நிகழ்கிறது. வாழ்வு இரண்டுக்கும் நடுவில் ஊசலாடினாலும் பெண்டுலம் போல் ஒரு கட்டத்தில் புள்ளியாய் நிற்கும் போது எல்லாம் இணைகிற மற்றும் கிளைகிற தன்மையை உணர முடியும். அது புதிராய் தோன்றாமல், வாழ்வின் ஆழம் கண்ட ஆனந்தமாகவும் மாறக்கூடும். அத்தகைய ஒரு புள்ளியில் நின்று ஆனந்திப்பதால், .....
"யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்பதுபோல் ஆனந்தம் அடைய வாழ்த்துகிறேன் !!
நன்றிகள் நீங்களும், உங்கள் கடவுளும்! :)
Congrats on getting a new job, Mathan!
Hope you will find some time to write a few articles on your blog, once in a while!
Good luck!
Post a Comment