இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா?
வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததைப் பார்த்தேன்.
ஓடி வந்து கட்டிக்கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து.
ஆச்சரியம் சுரந்தூறியது எனக்குள்.
உங்களுக்குத் தெரியாது..
எத்தனையாண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று.
அதுவும் அத்தனை இதமாக.
அத்தனை மிருதுவாக.
சுற்றியிருந்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.
அவைகளும் சந்தோஷித்தன
காற்றைக் கண்டு.
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது?
இத்துனூண்டில் பார்த்தது.
அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது, இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.
காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னகைதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.
அது சரி..
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் காற்றைப் பார்த்தீர்களா?
4 மறுமொழிகள்:
இதமான கவிதை
வருகைக்கும், வார்த்தைக்கும் நன்றி நந்தா..!
அருமையான கவிதை, மிகவும் பிடித்திருக்கிறது மதன்.
நன்றி யாத்ரா..!
Post a Comment