முதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்
அடர் இரவின் இந்தப் பொழுதுக்கென்று இருக்க வேண்டிய சற்றே குளிர்ந்த சுகந்தத்தை நுகர்வில் கண்டடைய முயன்று, தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எனக்கான மனோபாவ நிலைகளிலிருந்து விலகி, வெகுதூரம் வந்திருந்ததை அவ்வப்போது உணரச் செய்து கொண்டேயிருந்தது சூழல். தணிவுக்கான சாதகாம்சங்கள் சாத்தியப்படுவதற்கான விகிதாச்சாரம், இறுகும் பனிக்கட்டியின் வெப்பநிலையோடு போட்டி போடுகிறது.
என் எந்த சாதிப்புகளையும் பிரஸ்தாபிக்கும் சகஜப் புத்தி நினைவுக்கு வராத போதும், இலக்கியப் பரிச்சயத்தையேனும் முன்னிறுத்தி சொல்வதானால், பித்தேறியிருக்கிறேன் நான். எதை எழுதினாலும் எழுத்தில் வித்தை காட்டச் சொல்லி மேலோங்கும் எண்ணம், ஏனோ இப்போது, "திடீரென" மனசாட்சி விழித்துக் கொண்ட பிச்சைக்காரனுக்குரிய கூச்சத்தினை எனக்குள் உட்புகுத்துகின்றது.
விகல்பமில்லாத உணர்வுகள் பிரவாகிக்கின்றன. திரைகளே தேவையில்லாத இத்தனை உணர்வுகள் ஊற்றிக் கொண்டேயிருப்பது, என் சராசரி வாழ்வுக்கு முதல் முறையாதலால், பதட்டம் கூடுவதும், நொடிமுள் நகர்வதும் என் காலத்தின் நேர்மறையான கூறுகளாகி இருக்கின்றன.
ஒரு தோல்வி.. சாதாரணமான ஒரு தோல்வி என்பது இப்படி பூதாகரமான ஒன்றாக உருப்பெற்றது, நான் என்னை உலக வீரனாக பாவித்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டத்தின் பொன்வேளையில், அது நிகழப் பெற்றதால் இருக்கலாம். நான் கவ்வாவிடினும், என் வாய்வழி புகுத்திய மண்பிடி, என்னால் நேசிக்கப்பட்ட உள்ளங்கையினுடையது என்பதே இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் எல்லா நன்மை, தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணென்பது சற்றே கலங்கலாகப் புரிகிறது.
இத்துணை வர்ணிப்புகளுடன் எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியை யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற பயம் உள்ளுரத் தோன்றுகிறது. அந்தக் கேள்வியின் நியாயம் புரிவது போலிருந்தாலும் தெம்பூறவில்லை. ஆம். எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்? எது நடக்காது என்று நான் இறுமாந்து திரிந்திருந்தேனோ, அது செவ்வனே நடந்து முடிந்த பின், எதை எழுதிக் கிழித்துக், கற்றை கட்டினாலும், நடந்து முடிந்த ஒன்று, இல்லாமல் போகாது எனும்போது, உங்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.
பிரிவைத் தவிர வேறெதற்கும் இத்தனை வல்லமை இருக்குமா என்ற இப்போதைய ஐயம், தனக்கு வந்த தலைவலியையும், பல்வலியையும் பற்றிப் பேசும் பழமொழியை நினைவுறுத்துகிறது. அவ்வக் காலங்களுக்கான உணர்வுகள், அவ்வப்போது பெரியவை. இப்போது.. மற்றும் வேறெப்போதையும் விட எனக்கிந்தப் பிரிவு பெரியதாயும், ரணம் மிக்கதாயும் இருக்கிறது. நாளை அடுத்தது. சுழற்சி என்ற வட்டத்தைத்தான் நம்மையறியாமல், நாமாகவோ, அல்லது அடுத்தவருக்காகவோ, நம்மைச் சுற்றிக் கிழித்துக் கொண்டிருக்கிறோமே.
நேற்று வரை கூட இப்படியொரு பொழுது எனக்கு வாய்க்கும் என்று நம்பவில்லை. அதிகமில்லாத ஓரிரு நிமிடங்கள்தான். அவசரத்துக்கு உதாரணமாய், ஆண்டுக்கணக்கில் காதலித்தவளை முதலிரவில் புணர்கையில், முதல் உச்சத்தில் வாய்க்கும் அந்த தேவமணித்துளிகளைப் போல ஒரு சில நிமிடங்கள்தான். சந்தித்தறியா இரவொன்றைப் பரிசளித்துவிட்டு சற்றே தள்ளி நின்று, பரிகசித்துக் கொண்டிருக்கின்றன.
நான் கேட்பது சிக்கலில்லாத ஒரு கேள்விதான். காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உறவில் தோல்வி, மயிரில் தோல்வி.. என்று என் புலம்பலுக்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இரண்டு மணி நேரம் முன்பு வரை வெற்றி பெற்றுக் கொண்டிருந்த இருவரை, அல்லது ஒருவரை, இப்போது தோல்வி பிழிந்து சப்பும் சந்தர்ப்பவசத்தை வார்த்தைகள் வாரித் தந்து விடும் என்ற உண்மை புரிந்திராத வாயிலிருந்து வந்து விழவில்லையே நஞ்சில் தோய்ந்த சொற்கள்!
தெருவில் விடப்பட்ட என் நேசம், என்னை நோக்கித்தானே பாவமாய் பார்க்கிறது. எருமைக்கு ஒப்புவிக்கப்பட்டதுதான் என் தோலென்றாலும், அந்நேசத்திற்காகவேனும் நான் ஒரு பதிலைத் தேடி உழல வேண்டியது அவசியமாகிறது. உடல், மன, ஆன்ம எல்லைகள் வலியின் வரம்புகளை ஸ்பரிசிக்கின்றன. கோழைத்தனம் என் சுவாசக் குழாயெங்கும் நிரம்புவதை உணர்கிறேன். வெட்கிக், குறுகிக், குனிந்து படுத்து, அவமானத்தைப் புணர்ந்தெழப் ப்ரியப்படுகிறேன். ஆசுவாசம் கிட்டும் அப்பொழுதேனும் என்றின்னும் நம்பிக் கொண்டிருப்பதால்.
ஒரு புது வரியைத் தொடங்கும், இந்தக் கணத்தில் என் செயல்பாடுகள் யாவும் நின்று போய்விடக் கூடாதா என்ற ஏக்கம் உள் முழுதும் செங்குத்தாய் நிலைகொள்கிறது. உயிர் இருக்கட்டும். அசைவுகள் இல்லாது போகட்டும். நகர்வுதான் குத்துகிறது. குமைகிறது. அது நின்று போகக் கடவட்டும். ஆனால் உயிரில்லாமல் போய்விட்டால், இந்த இரவைக் கடந்து சென்று நான் சாதிக்க விரும்பும் விடியல், நரகத்தின் வாயிலில் கிடைக்கக் கூடியதாகப் போய்விடும்.
நேசங்கள், சாபங்களாக வந்து வீழாதிருக்கும் சமயம் மிக மெதுவாகவே கடந்து செல்கிறது. வென்று காட்டிய அத்தனையும் நிலையாமையென்ற பள்ளத்தினுள் உருண்டு, இருண்ட பாதாளத்தினுள் சத்தமெழுப்பாது மறைகின்றன. அதிக சலனமில்லாமல் இந்த இரவைக் கடக்க ஆசைப்படுகிறேன். வெற்றியென்ற இலக்குக்கு, இலக்கான அனுபவம், பக்குவமாக சுவாசிக்க உதவுகிறது. இதுவே என் கடைசி நிசியாக இருந்தாலும், பொழுது விடிவது எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாதிருக்க நான் வரமளிக்கிறேன்.
ஒரு புள்ளியில் மையங் கொண்டு, ஆழ்ந்த ஒரு மூச்சுவிட்டு, என்னைத் தூக்கியெறிந்த என் நேசங்களின் திசைகளுக்காகப் பொங்கித் ததும்பும் மகிழ்வோடு புன்னகைக்கிறேன். என் பிறழ்வுகள் எனக்குள் புதைதலைப் போல, அவர்களுக்கான என் காழ்ப்புகள், பிரார்த்தனைகளாக உருமாறும் இத்தருணத்தில், நானே தேவனாக.. நானே அமரனாக.. நானே யாதுமாக ஆதலில் அமைதிக்குள் அழியத் துவங்குகிறேன். இரவு தீர்ந்து கொண்டிருக்கிறது..
2 மறுமொழிகள்:
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மதன், எந்தப் பிரச்சனையும் கடந்து போகக்கூடியவைவே,,,,,,
பாராட்டுக்கு நன்றி யாத்ரா..! :)
Post a Comment