நம்ம செந்தில்குமாரும், தனலட்சுமியும்..
சற்றே இலகுவாக எழுதி நாள்பட்டாற் போல இருந்தது. எதையேனும் எழுதுவோமே என்று தொடங்குகிறேன். நகைச்சுவை முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. பாழும் மனதிற்கு ஆசைக்கா பஞ்சம்? உழைப்பும், முயற்சியும் தான் பற்றாக்குறையில் லோல்படுகின்றன.
மென்பொருள் பணியில் இருப்பதனால் சந்திக்க நேரும் பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது எண்ணிக்கொண்டிருப்பதுண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும், சொந்தக்கார மற்றும் / அல்லது பெரியவர்கள் எவரையேனும், எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டி வரும். தலைமுறை இடைவெளிக் கண்றாவியெல்லாம் இல்லை. நான் என்னதான் சிரத்தையாகப் பேசவேண்டும் என்று முயற்சித்தாலும், இவர்கள் செய்யும் அட்டூழியம் அளவில்லாமல் பொறுமையை சோதிக்கும்.
"எந்தக் கம்பெனி" என்பார்கள். சொல்வேன்.
"பெங்களூர்தான?" கொஞ்சம் முன்னாடிதான் யாராவது சொல்லிச் சென்றிருப்பார்கள். இருந்தாலும் கேட்பார்கள்.
"ஆமாம்". 'சரி சொல்லியாயிற்று' என்று பெருமூச்சு விட்டால் ஆயிற்றா. இனிமேல்தான் இருக்கும் பட்டாசே.
சற்றே நெற்றியைத் தேய்த்து யோசித்து.. "அந்தக் கம்பெனில.. உனக்கிந்த செந்தில் குமாரத் தெரியுமா..? நம்ம தண்டபாணி பையன்!"
ஐய்யா.. எனக்குத் தாங்காமல்தான் கேட்கிறேன்.. எங்க கம்பெனி என்ன சுப்ரமணியம் & கோ.வா..? எல்லாக் 'குமார்'களையும் தெரிந்து வைத்துக் கொள்ள..? பெருமைக்காக சொல்லவில்லை.. பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் பெங்களூர் முழுதுக்கும் இருக்கும் 30,000க்கும் அதிகமானவர்களில் நான் எங்கிருந்து செந்தில் குமாரைத் தேடுவேன்? அப்படியே எனக்கு அந்தப் புண்ணியவானைத் தெரிந்தாலும், இப்போது அவரைப் பற்றிப் பேசி என்ன சாதிக்கப் போகிறோம்?
இவர்களுக்கு எதையாவது பேச வேண்டும். எதையாவது என்றால் எதையாவது.. அந்த 'எதையாவது' என்ற வார்த்தையை Ctrl+B மற்றும் Ctrl+U செய்து கொள்ளுங்கள். என்னிடம் எப்படியும் மைக்ரோசாஃப்ட், மெய்ண்டெனென்ஸ், டெவெலப்மெண்ட் என்று பேச முடியாதுதான். போகட்டும். சரி.. சகித்துக் கொள்ளும்படியாகவாவது முயற்சி செய்யக் கூடாதா? தமிழ், சமூகம், குடும்பம், அரசியல், தொடங்கி நமிதாவின் நாபிக்கமலம் வரை எதுவானாலும் கூட அவர்கள் கருத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பேசுவேன். இப்படியொரு கேள்வி கேட்டால் கடுப்பாகுமா.. இல்லையா..?
இது பரவாயில்லை. சென்ற முறை ஒருவர், கம்பெனியைப் பற்றி கவலைப்படாமல், பெங்களூர் என்றவுடனேயே ஒரு 'தனலட்சுமி'யைப் பற்றிக் கேட்டார். எனக்குப் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. 'இவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் பெயரை மட்டும் சொல்லக் கூடாது' என்று முடிவு செய்தேன். அடுத்த முறை இவர்கள் செந்தில்குமாரிடமும், தனலட்சுமியிடமும் கேட்க வேண்டுமென்று என் பெயரைக் குறித்துக் கொள்வார்கள். யார் கண்டது.. ஏற்கெனவே என் மேல் எத்தனை பேர் காண்டாகியிருக்கிறார்களோ?!
0 மறுமொழிகள்:
Post a Comment