ஒரு புகைப்படம் மற்றுமொரு கவிதை
சமீபத்தில் ஆர்க்குட்டை மேய்ந்து கொண்டிருந்த போது, என் நண்பன் வினோத் எடுத்த புகைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது. நிச்சலனமான மனநிலையோடு இருந்ததாலோ என்னவோ, பார்த்த மாத்திரத்தில் அந்தப் படம் என்னுள் ஏற்படுத்திய உள்மன ரீதியிலான மாற்றங்கள் அசாதாரணமானவையாகவும், அடர்வு மிக்கவையாகவும் இருந்தன.
வினோத் புகைப்படக் கலையில் மிகுந்த நாட்டம் கொண்டவன். முறையான பயிற்சி இல்லாதபோதும், விருப்பத்தின் பொருட்டே அக்கலையின் நுண்கூறுகளைக் கற்று, தனக்குத் தானே பயிற்சி செய்து வருபவன். என்னுடைய 'நானும், இளைய தளபதி விஜயும்' என்ற கதையில் ஏற்றப்பட்டிருக்கும் என்னுடைய புகைப்படங்கள் வினோத்தின் கண்வண்ணமே.
இயல்பான, இறுக்கமில்லாத துகள்களை ஒருசேரக் கோர்த்து, கடற்கரைக் காற்றை சிறிது தூவி, சூரியனைக் கொஞ்சம் குனிந்து அமரச் சொல்லி, அழகு, மழலை, அக்கறை, பசி, பகிர்தல் என்று நீளும் ஒரு கற்றை உணர்வுகளையும், மணலாய் சிந்திவிட்டு, மனம் கனக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவளை!
அந்தத் தருணத்தில் எனக்குள் உண்டான எண்ணங்களை எங்கேயாவது பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமே என்று பதற்றப்பட்டதன் விளைவாய், 'வழக்கம்போல்' ஒரு கவிதை வாய்த்தது. படமும், கவிதையும் தொடர்கின்றன.
வினோத்தின் ஏனைய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
கூண்டில் திளைக்கும் கிள்ளையில்லாத
வானைக் காட்டிப் பதைக்கிறாள்.
அடி மறைக்கும்
துண்டுகள் கிழிந்திருப்பினும்
இருட்டக் காத்திருக்கும்
அந்திமங்களில் ஒளி துப்பி ஒத்துழையும்
பெட்ரமாக்ஸுக்குத்
தலைப்பாகையிட்டவனைத்
தொழப் போகிறேன்.
சுழலுக்குத் தாளாமல்
பெட்டியோடு ஒண்டியிருக்கும் சருகும்
என்றேனும் பசுமையாய் இருந்திருக்கும்.
விரிபட்ட வெள்ளைச் சீட்டில் விழுவது
அவன் பசிமைக்குப் பத்தப்போவதில்லை.
மிஞ்சியவையெல்லாம்
பெட்டி, பெட்ரமாக்ஸ் காதலும்,
பாசமாய்ப் பார்க்கும்
பிங்க் ஷூக்களுமே!
6 மறுமொழிகள்:
ரொம்ப அழகான வரிகள், படத்திற்கு மிகப் பொருத்தமாகவே.
ரொம்ப அழகான பதிவு. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்
பாராட்டுக்கு நன்றி கவிதை காதலன்!
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி!
நெசமாலுமே போட்டோ சுப்பராதான் இருக்கு...........
நெம்ப நன்றிங் ஷோபிகண்ணு..!
Post a Comment