Thursday, June 4, 2009

ஒரு கவிதையும், அது கற்றுத் தந்த பாடமும்.

வெற்றிகள் இனித்துக் கொண்டே இருக்கக் கூடியவை. எல்லாருக்குமே வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். மனித மனத்தின் நுண் உளவியல் தன் தீரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், நிலைப்பாட்டை அர்த்தம் செய்து கொள்வதற்கும் உதவிகரமாயிருப்பதால், விளம்பர மனோ நிலையிலேயே உழலக் கற்றுக் கொண்டிருக்கிறது.

வெற்றி பெற்றுக் கொண்டே இருத்தல் என்பது இயலாத ஒன்றானதால், பெற்ற வெற்றிகள் இதுவரை அளித்து வந்த போதையின் வெற்றிடத்தை நிரப்பவேனும் மனிதன் மீண்டும், மீண்டும் முயற்சிகளைத் துவங்குகிறான். வெற்றிகளைப் பொதுவில் வைத்து இன்பம் காணும் மனம், ஒரு தோல்வியையேனும் அடுத்திருப்பவனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராய் இருப்பதில்லை.

என்னளவில் தோல்விகள் தரும் வலியைப் பகிர்ந்து கொள்வதற்கு என் நண்பர்களுள் எவரேனும் ஒருவரை என்னை அறியாமல் நான் தெரிவு செய்து வந்திருக்கிறேன். ஒருவருடன் பகிர்ந்து கொண்டேன் என்பதிலில்லாத ஆச்சரியம், எல்லாத் தோல்விகளையும் அதிகபட்சம் ஒருவருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முனைந்தும், அதற்கான காரணமாக, அவருடனான அன்யோன்யத்தை முன்னிறுத்தியும், என் மனம் செய்து வந்த உள்ளரசியல் இன்றென்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

இந்த ஆடு புலி ஆட்டத்திற்கொரு முடிவு கட்டும் எண்ணம் என்னை ஆட்கொண்டது, இன்று சில கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருக்கையில்தான். உயிரோசைக்கு அனுப்பிய கவிதைகளையெல்லாம் இட்டு வைத்திருந்த ஃபோல்டரில், ஒரு கவிதையைக் கண்டேன். நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதி, உயிரோசையில் அந்த வாரம் வராமல் போன பிறகு அதனை மறந்தே போயிருந்தேன்.

பிரசுரமாயிருந்தால் அடுத்த நிமிடமே வலையில் இட்டு வைக்கும் மனம், ஒரு தோல்வியை மட்டும் தலையணைக்கடியில் ஒளித்து வைத்தது என் நடுவு நிலைமைக்கு சான்றாகாது என்பது அந்தக் கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் உறைத்தது. சுமாரான ஒன்றாக இருந்தாலும், அது கற்றுக் கொடுத்த பாடத்திற்கும், அப்பாடத்தைப் பின்பற்ற முடிவு செய்ததற்கும் விளைவான அக்கவிதை கீழே.

துளியாய் வழிதலின் ஆராய்வு

முத்தம் உகுத்த நிலவோடு
நானும் உதிர்ந்து கிடக்கும்
இரவில்
உன் நினைவின் வீச்சம்
விஷப் பொழுதின் வீதிகளில்
ஓடி விளையாட என்னை
அழைத்துத் துரத்துவதும்,
உரசியுலவும் வளிப்புள்ளிகள் போல்
என் புறத்தில் நீ நடந்த நாள்
நினைவிலிருப்பதன் நீட்சியாகவே
நீ வந்து நின்றவுடன் அடிக்கும்
உன் பிரத்தியேக வாசம்
செய்த குழப்படிகளை
என்னால் மறக்கலாகாததும்,
வெகுநேரம் நீர்ப்பட்டுத்
தாரைகளிலூறிய விரல்களாய்
சொத, சொதத்த மனதும்,
மற்றும் உள்ளே நைந்த நீயும்
காரணமாயிருக்கலாம்.
என் வரிகளின் சிதிலத்தில்
துளித் துளியாய் இன்னும்
நீ வழிந்திருத்தலுக்கு.



3 மறுமொழிகள்:

தமிழினி June 4, 2009 at 6:48 PM  

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

சசிகண்ணன் சி,  June 17, 2009 at 1:41 PM  

அருமை நண்பா

மதன் June 24, 2009 at 11:31 PM  

நன்றி சசி!

  ©Template by Dicas Blogger.

TOPO