Band of Brothers! – சில கருத்துகள், பகிர்வுகள்..
Saving Private Ryanல் துவங்கிய யுத்தத் திரைப்படங்களின் மீதான மோகம், எனையறியாமலேயே என்னுள் காட்டுத்தீயென உருக்கொண்டு, இரண்டாம் உலகப்போரில் நானும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது போலெனக்குக் கனவுகள் வருமளவுக்கு யுத்தக்களத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்ற திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த படைப்பு என்று கருதக் கூடியது Saving Private Ryan என்றுதான் நினைத்திருந்தேன், சமீபத்தில் Band Of Brothersஐப் பார்க்கும் வரை. HBOவில் வாரமொரு முறையென்று பத்து வாரங்களுக்கு ஒளிபரப்பான இந்த மினி-சீரீஸ், உலகத்தரம் வாய்ந்தவொரு படத்துக்கான எல்லாத் தகுதிகளையும் உள்ளடக்கியதாகவுள்ளது.
Title Cardன் இசையே என்னமோ செய்ய ஆரம்பித்து விடுகிறது. மெது மெதுவாகப் பெயர்கள் திரையில் நகரத் துவங்கிய பின், Executive Producers என்ற titleக்காக நான் காத்திருப்பேன். ஏனென்றால் BOBன் Executive Producers, எனக்கு ‘ரொம்பப் பிடிச்ச’ Steven Spielbergம், Tom Hanksம்! (ஒரு நல்ல படைப்பாளியின் பணத்தில் உருவாகும் படைப்பு நல்லதாகத்தானே இருக்கும்!) ஒவ்வொரு எபிசோடிலும் அவர்கள் பெயரைப் பார்க்கையில் உள்ளே பொங்கிய உற்சாகம், அவர்கள் மேலான என் பிரியத்துக்குப் பதமான ஒரு சோறு!
Saving Private Ryan-ன் நீட்சிதான் Band Of Brothers என்பது என் அபி! ’போர்’ என்ற ஈரெழுத்து வார்த்தை தருவிக்கும் வதையை, வாதையை, போதையைப் பதிவிக்க 120 நிமிடங்கள் போதாதென்பதால்தான், 600 நிமிடங்களுக்கு நம்மைக் கட்டிப் போட்டுப் பாடம் கற்பிக்கிறார்கள் போலும் இருவரும்.
Band Of Brothers-ல் ‘கதை’யென்றெல்லாம் எதுவும் கிடையாது. போர்! இதுதான் கதை. அமெரிக்க இராணுவத்தின் 101st Air Borne, அதாவது Easy Company எனப்படும் Para-Trooper (விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்துப் போர் செய்யும் வீரர்கள்) போர்க்குழுவின் பயிற்சிக்காலம் முதல் (1942), இரண்டாமுலக யுத்தம் முடிவுறுவது வரை (1945) Easy Companyயின் வெற்றிகளை, தோல்விகளை, ஒவ்வொரு வீரனும் போரின் சூழ்நிலைகளை எதிர்கொள்வதை, அதில் சிலர் வெற்றி பெறுதலை, சிலர் தோல்வியுறுதலை, உணவு, நீர் மற்றும் ஐரோப்பியக் குளிருக்குத் தக்க ஆடைகளென்று இன்றியமையாத பொருட்கள் கூட இல்லாமல் போரின் ரணத்தில் அவர்கள் அலைக்கழிதலை, நில்லாது நீளும் இன்னபிற காற்புள்ளிகளை.. என்று ஒரு யுத்தப் பட இரசிகனுக்குத் தேவையான அத்துணை விஷயங்களும் Band Of Brothersல் அடக்கம்.
பத்து எபிசோடுகளில், ஐந்தாறு முறை கண்களில் நீர் பூத்திருக்கும். யூதர்களை அகதிகளாக அடைத்து வைத்திருந்த முகாம் காட்சிகளை நினைத்தாலே பதைக்கிறது. மிகுந்த யதார்த்தமுடன், அச்சு அசல், உண்மைக் காட்சிகளைப் போலவே உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மானியர்களால் கருக்கப்பட்ட யூத உடற் பிண்டங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் அமெரிக்க வீரர்கள் அடையும் அதிர்ச்சி நம்மிலும் அதிர்கிறது.
ஒவ்வொரு எபிசோட் துவங்கும் முன்பும் சில நிமிடங்களுக்கு இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு உயிர் தப்பிய நிஜ வீரர்கள் (இன்றைய தாத்தாக்கள்!) சிலர் பேசுவார்கள் பாருங்களேன். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய்த் தைக்கின்றன. கண்களுக்கு முன்பு நடந்தேறிய குருதிக்களரிகளை நினைத்து, குரல் தழு தழுக்க, பேச முடியாமல் விக்கித்துப் போகிறார்கள் சிலர். போலவே நமக்கும்!
2001ல் வெளிவந்த இப்படைப்பு Golden Globe விருது பெற்றிருக்கிறது.
வெறுமனே வெடித்துச் சிதறும் உடற் குவியல்களை மட்டும் காட்டுவது யுத்தம் சார்ந்தவொரு நல்ல படைப்பின் கருதுகோளாக இருக்க இயலாது. உடன், அவ்வீரர்களைப் பீடிக்கும் உளவியல் அழுத்தக் கூறுகளைக் காட்சிகளின் வாயிலாகப் பதிவு செய்வதும்தான் யுத்த சினிமாவைக் கையிலெடுக்கும் கனவான்களின் கற்பனைக்கேற்ற சக்தி வாய்ந்த சவால். அதிலும் கேள்விக்கே இடமில்லாமல் சபாஷ் போட வைக்கிறது BOB.
என் வரிகள் உங்களுக்கு சற்று உயர்வு நவிற்சியாகப் படலாம். ஆனால் நீங்கள் BOBஐப் பார்க்கக் கூட வேண்டாம். இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்தாலே புரியும், நான் மிகை கூட்டியெழுதவில்லை என்பது.
பத்துப் பாகங்களில் ஐந்தாவதானதை இயக்கியிருப்பவர் Tom Hanks என்பது உபரித்தகவல். அவரேதான் இயக்கினாரா, இல்லை மற்றொரு தயாரிப்பாளர் உதவினாரா என்று கேட்பவர்களுக்கு என்னிடம் பதிலில்லை! J
Steven Spielbergம், Tom Hanksம், மீண்டுமொரு 200 மில்லியன் டாலரைக் கொட்டி உருவாக்கிய The Pacific என்ற மற்றொரு மினி-சீரீஸ் 2010ல் வெளியாகியிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானுடனான அமெரிக்கப் போர் பற்றியது. இதுவும் பத்து எபிசோடுகள். இன்னுமென்ன.. தரவிறக்கியாயிற்று! மற்றுமொரு கொண்டாட்டத்துக்குத் தயாரானது போல் குதிக்கிறது மனது. பார்த்து விட்டு நான் எதுவும் எழுதப் போவதில்லை. நன்றாகத்தானிருக்கும். நீங்களும் ஒரு யுத்தப் பிரியரென்றால் (?!) இவ்விரு படைப்புகளையும் தவற விடாதீர்கள். விடவே விடாதீர்கள்!
BOBஐ ஒரு ரசிகனாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகவும் என் காலத்துக்கும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
-0-
என் கல்லூரிக் காலத்தில் தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட இருவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஒருவர் கமல்ஹாசன். இன்னொருவர் இளையராஜா. இப்பொழுது அந்த ஆசையில்லை என்றல்ல. ஏனோ கால மாற்றத்திலோ, நெஞ்சமுறும் முதிர்வில் நிகழும் சத்தமிலா நகர்வுகளிலோ நீர்த்து விட்டது அவ்வாசை. இப்பொழுது கேட்டால், Steven Spielbergஐயும், Tom Hanksஐயும் சந்திக்க ஆசை என்று சொல்கிறது மனது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. மனமெனும் குரங்குக்குக் கிளைகளுக்கா பஞ்சம்?
கீழே நான் கொடுத்திருக்கும் வீடியோக்களைப் பாருங்களேன் (I Insist!).
சந்திக்க ஆசைப்படுகிறேன் என்று நான் சொன்ன இருவரும், ஆஸ்கர் விருது வாங்கிய மேடையில் கூட எத்தனை அடக்கத்துடன், நேயத்துடன் பேசுகிறார்கள் என்பது புலனாகும்.
Tom Hanks அவர் மனைவியின் மேல் எத்தனை காதலுடன் பேசுகிறார் பார்த்தீர்களா? (...and I am standing here because the woman I share my life with, has taught me and demonstrates for me everyday, just what Love is!)
Spielberg – சொல்லவே வேண்டாம். அவர் ஆஸ்கர் வாங்கிய இரண்டு படங்களும் அஸ்சாதாரணமான படங்கள். (Schindlers List மற்றும் Saving Private Ryan) அப்படியிருந்தும் அவரால் இவ்வளவு அடக்கத்துடன் எப்படித்தான் பேச முடிகிறதோ?
Schindlers Listக்காக ஆஸ்கர் வாங்கிய மேடையிலேயே, படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காகப் பொங்கிய கண்ணீரை மறைக்கத் தெரியாமல் மறைக்கும் அவரின் மனிதம், அவரும் ஒரு யூதர்தான் என்பதால் மட்டுமல்ல என்று நம்புவதால்தான் எனக்கும் வரச்செய்கிறது கண்ணுக்கொன்று வீதம் இரண்டே துளிகளை!
3 மறுமொழிகள்:
அருமை....நல்ல பகிர்வு
Hi Mathan... could pls send war movies list ..
யுத்தத்தக்கு நம்ம கேப்டன் விஜயகாந்த அனுப்பிருந்தா II world war சீக்கரம் முடிஞ்சிருக்குமே...
இப்படங்களை பார்த்து நெஞ்சிருகிபோயிருந்தால்... relax பண்ண 'The curious case of Benjamin Button' பார்க்கும் ... u will feel different experience... என்ன முதல்ல படத்துக்குள் tune ஆகறதுதான் கஷ்டம்...once tune ஆகிட்டீங்க... அப்புறம் வேறு நிலை..
Post a Comment