Thursday, September 16, 2010

மொழியும், மொழி சார்ந்து சொறிதலும்!


மொழியை மையப்படுத்தி எழுப்பப்படும் / இருப்பதாக நீட்டி முழக்கப்படும் உணர்வெழுச்சிகள், அம்மொழியின் வளர்ச்சியைக் காட்டிலும், தனிப்பட்ட சிலரின் ஆதாயங்களுக்காகவும், அரசியலுக்காகவும் பலிகடாவாதலே வரலாற்றின் பெரும்பான்மைப் பக்கங்களில் காணக் கிடைக்கின்றன. தமிழுணர்வு என்ற வார்த்தையைப் போல கன்னடவுணர்வு, தெலுங்குணர்வு என்றெல்லாம் கூட இருக்குமா என்று அவ்வப்போது என் சிற்றறிவிலோர் ஐயப்பாடு தோன்றுவதுண்டு. கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு அவ்வப்பொழுது அடிக்கும் கூத்துகளுக்கெல்லாம் வேறென்ன பெயர் சொல்வது எனக்கு நானே பதிலையும் சொல்லிக் கொள்வேன்.

வரம்புகளுக்கப்பாற்பட்டு தமிழ் சார்ந்த உணர்வு இருப்பதானவொரு தோற்றம் தமிழ்நாட்டில் தென்பட்டாலும், அதற்கான வழியில் நாம் நடந்து கொள்கிறோமா என்று சற்று சிந்தித்தால், பெரியதொரு ஓட்டை விழுந்த அரை டிரவுசர்தான் நினைவுக்கு வருகிறது.

சமீபமாய் நிகழ்ந்தேறிய மாநாட்டுக் குழப்படிகளிலிருந்து தப்பிப்பதற்காகவேனும் அண்டை மாநில வாசம் உதவியதே என்று நான் நினையாத நாளில்லை அக்காலத்தில். சென்ற வாரம் கோவை சென்றிருக்கும் பொழுது ஒரு கடையின் பெயரை கவனித்தேன். குவாலிட்டி அடுமனைஎன்றிருந்தது. இப்பெயரில் எது தமிழ்? Quality Bakes என்றிருக்கும்போது அப்பெயர் நல்லதொன்றாகத்தான் பட்டது. அக்கடையின் வகைமையைத் தமிழ்ப்படுத்தினால் போதுமா? அக்கடையின் அடையாளமாய் விளங்கும் பெயரையும் translate செய்திருந்தாலல்லவா நீங்கள் செய்ய விழைந்த பணி முழுமையடைந்திருக்கும்? ஏன் இப்படி அரைகுறையாக transliterate செய்து, ஏதோ தமிழ்த்தொண்டு புரிந்தாற் போலான சீன் போடுவானேன்?

0

சரி போகட்டும். நம் பெயரை தமிழில் எழுதச் சொன்னால் நம்மில் எத்தனை பேர் நம் இனிஷியலையும் (இனிஷியலுக்குத் தக்க தமிழ் வார்த்தை தெரியாத குற்றத்தை தமிழன்னை கண்டுகொள்ள மாட்டாளாக!) தமிழில் எழுதுகிறோம்? என் பெயரை எப்பொழுது எழுதினாலும் மதன்.வே என்றெழுதும் பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நல்லவேளையாக அப்படித்தான் சிறு வயது முதலே எழுதி வருகிறேன்.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவரான அபிலாஷின் பெயர் எங்கு கண்டாலும் ஆர்.அபிலாஷ் என்றுதான் இருக்கிறது. அவரைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை. உதாரணத்திற்கு அவர் பெயர்தான் எளிதில் சிக்கிற்று. அவர் மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோர் செய்யும் காரியந்தானிது. சுட்டிக் காட்ட வேண்டுமென்பதல்ல. திருத்திக் கொள்ள வேண்டுமென்பதே நோக்கு!

0

நான் அலுவலகத்துக்கு cabல் தான் செல்ல வேண்டும். நரகத்தனமான போக்குவரத்தில் நாள் முழுவதும் பாடுபடும் வண்டியோட்டிகளுக்கு FM ரேடியோ என்பது மிகப்பிடிக்கிறது. அவர்கள் புண்ணியத்தில் 'போக' மற்றும் 'வர' என்று ஒரு நாளைக்கு ஒன்றரை மணிநேரம் கன்னடத் திரைப்பாடல்களைக் கேட்டு, நான்காண்டுகளில் ஓரளவுக்குக் கூடவே பாடுகிறேன்.

இதில் கவனிக்கத் தக்க அம்சம் என்னவென்றால், கன்னட நாட்டையும், மொழியையும் பற்றி இவர்கள் பாடியிருக்கும் அளவுக்கு நிச்சயமாக நம் எம்ஜியார் தொட்டு இன்றுவரையான நடிகர்கள் கூட முயற்சித்ததில்லை எனலாம். எதற்கெடுத்தாலும் கன்னட மாத்தே.. , நம்ம நாடூ.. கரூ நாடூ.. , ஆச்சா போச்சா என்கிறார்கள்.

சாம்பிளுக்கு ஒரு பாடலைப் பற்றி சொல்கிறேன். சில முறை கேட்டதிலிருந்து எனக்கந்தப் பாடலின் ட்யூன் பிடித்திருந்ததால் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். கற்பனையில் டாக்டர்ர்ர் ராஜ்குமார் அவர்கள் பாடுவதாக ஒரு கற்பனைக் கழுதை வேறு ஓடிக் கொண்டிருந்தது.

ஒருநாள் ஆர்வம் தாங்காமல் யூட்யூபில் பார்த்தால், நம்ம எஸ்பீபீ அவர்கள் பாடி, நடித்திருந்தார். அநேகமாக அவர் வெயிட் போட ஆரம்பித்திருந்த சமயமாகவிருக்கும். ஒரு மேடையில் நின்று, சங்கடமே படாமல் கையைக் கையை மேலே தூக்கிப் பாடிக் கொண்டிருந்தார். அவர் எதைச் செய்தாலும் மிகுந்த தொழில் பக்தியுடன் செய்வாராதலால், இந்தப் பாடலிலும் உணர்வு பொங்க நடித்திருந்தார். பாதகமில்லை. ஆனாலும் எனக்கேனோ ஏதோ ஒன்று உறுத்தியது. அவ்வுறுத்தல், அடிப்படையில் ஒரு தெலுங்கரான இவரைக் கன்னடவுணர்வு பொங்கும் ஒரு பாடலுக்கு நடிக்க வைத்துக் கொண்டாடும் கன்னட சமூகம் குறித்தானதா.. அல்லது மூன்று மொழிகளிலுமே இம்மாதிரிப் பாடல்களைப் பாடியிருக்கும் இவர், தன் தாய்மொழியுணர்வுக்குப் பாடுகையில், சற்றேனும் குற்றவுணர்ச்சி வராதா என்பது குறித்தானதா என்று புலனாகவில்லை.

இந்தப் பாடலின் முதல் சில வரிகள்:

இதே நாடூ.. இதே பாஷே..
எந்தெந்தூ நன்னதாகிறலி..
எல்லே இரலி.. ஹேகே இரலீ..
கன்னடவே நன்ன உசிரல்லி..

அது இன்னா மேட்டர்னா.. இதே நாடும், இதே பாசையும் என்னிக்கும் இவ்ரோடத்துதானாம். மேல சொன்னாக்கா.. எங்கேந்தாலும், எப்டீந்தாலும், கன்னடந்தா இவ்ருக்கு உஸுராம்!

பாடலைக் காண!


0

என்னமோ போங்கப்பா.. நமக்கும் ஓடுகிறது வாழ்க்கையெனும் வண்டி.

பிழைத்துக் கிடந்தால் சந்திப்போம்! :)



5 மறுமொழிகள்:

Ashok D September 16, 2010 at 4:03 PM  

R.அபிலாஷ் ரைமிங்கா இருக்கறதனால வெச்சியிருக்கலாம்... quality Bakes மாதிரிதான்..

D.R.அஷோக்

(என் பேர்ல வடமொழி, ஆங்கிலம்ன்னு பிச்சு உதர்றது பாருங்கோ... வேணும்டே செய்யல எல்லாம் ஒரு ரைமிங்குதான் ;)

மதன் September 17, 2010 at 1:05 AM  

அஷோக் அண்ணா.. எந்த மொழியா இருந்தா என்னங்க.. அத தமிழ்லயே எழுத வேண்டியதுதானே.. இங்லீஷ்ல எழுதினாதான் ஃபிகர் மடியும்னுதான உங்கள மாதிரி யூத்தெல்லாம் நெனச்சுட்டு இருக்கீங்க? :)

பா.ராஜாராம் September 17, 2010 at 2:31 AM  

மதன், :-)

அசோக் & மதன், :-))

Mohan September 17, 2010 at 2:53 PM  

நாம தமிழ் நாடு,தமிழ் மொழினு சொல்வதற்கும் அவர்கள் கன்னட நாடு,கன்னட மொழி என்று புகழ்ந்து பாடுவதற்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது;பின்னதில் வருவது தாழ்வுணர்ச்சியினால் :-)

மதன் September 17, 2010 at 10:04 PM  

வாங்க பா.ரா.. சௌக்கியமா இருப்பிங்கனு நம்பறேன். வேலைப்பளு காரணமா உங்க கூடவெல்லாம் பேசவேயில்ல நான்!

மோகன்,

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க.. அவங்களுக்கு அவங்க மொழி உயர்ந்தது தானே? :)

  ©Template by Dicas Blogger.

TOPO