Thursday, July 29, 2010

சில ஹாடம்பாக்கத் திரைப்படங்கள்..

மஞ்சளாய் இருத்தலை விட வெளுத்த மதியங்கள்தான் இந்நாட்களில் அதிகம் வாய்க்கின்றன பெங்களூரில். வெயில் நாட்களில் கடவுள் குண்டு பல்பு போட்டுவிட்டார் எனவும், வெயிலில்லாத குளிர் நாட்களில் ட்யூப் லைட் போட்டுவிட்டார் எனவும் சிறு வயதில் எண்ணித் திரிந்திருக்கிறேன். அதுபோன்றதொரு ட்யூப்லைட் மதியத்தில் எழுதத் துவங்குகிறேன்.

உடன் எவருமில்லாத நாட்களைப் பொசுக்கும் எரிபொருளுக்காகவேனும் என்னால் எல்லாக் கோணங்களிலும் புணருறும் மடிக்கணினியில் சமீபமாய் பார்த்த சில ஆங்கிலத் திரைப்படங்களைப் பற்றி சில வார்த்தைகள் பேச உத்தேசம்.


 Bob Zemeckis எனக்குப் பிடித்த இயக்குனர்களிலொருவர். Forrest Gump அவர் இயக்கியவைகளுள் நான் பார்த்த முதல் திரைப்படம். மூன்று முறை பார்த்த  பின்னர்தான் Tom Hanks என்ற எக்காளமிடும் நடிப்பாசுரனைத் தாண்டி இயக்குனரின் யுக்திகள் புலப்படவே துவங்கின. இருவருக்குமே ஆஸ்கரைப் பெற்றுத் தந்த பெருமைக்குத் தகுதியான படம் Forrest Gump.

Zemeckis, Forrest Gumpக்கு முன் இயக்கிய படம் Back to the Future. தலைப்பே கவிதை. அறிவியற் புனைகதைகளின் காட்ஃபாதர் கான்செப்ட்டான டைம் மெஷின் கதை. 1985ல் வெளிவந்தது. டைம் மெஷினைப் பயன்படுத்தி எதிர்பாராமல் 30 ஆண்டுகள் பின்னே (1955க்கு) சென்று விடுகிறான் கதையின் 18 வயது நாயகன் Marty.

30 ஆண்டுகள் வித்தியாசத்தில் அவன் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்கள், காலாச்சார, வாழ்வியல் மாற்றங்களென்று எல்லாவற்றையும் கதையின் போக்கிலேயே சுட்டிக் காட்டுகிறார் Zemeckis. Marty பருவ மங்கையாகவிருக்கும் தன் தாயைப் பார்க்கிறான். நண்பர்களிடம் அடிவாங்கும் அசடாக தன் தந்தையைப் பார்க்கிறான். தாயோடு பேசுகையில் நீ இவ்ளோ ஒல்லியா..என்று ஆரம்பித்துத் தடுமாறுவதில் துவங்கி, அவன் தாய் தந்தைக்குள் ஈர்ப்பு வர அவனே உதவுவது வரை காட்சிகள் சுவாரசியம் மங்காது செல்கின்றன.

அவன் வேண்டாமென்று சொல்லச் சொல்ல, அவன் தாய் அவனுடன் சல்லாபிக்க ஆசைப்படும் காட்சிகள் கொஞ்சம் கொழ கொழா. நல்ல வேளையாக முத்தம் கொடுத்த பின்பு, உன்னை முத்தமிடுவது என் சகோதரனை முத்தமிடுவது போலத்தானிருக்கிறது என்று சொல்லிவிடுகிறாள் தாய்.

நிகழில் டைம் மெஷினைக் கண்டறிந்த புத்திஜீவியும் அப்போது இளமையாக இருக்கிறார். தான் எதிர்காலத்தில் கண்டறியப்போகும் டைம் மெஷின் பற்றிய அரைகுறைக் குறிப்புகளை Martyயிடம் அவரே பெற்றுக் கொள்கிறார். அவரின் உதவியுடன் Marty மீண்டும் எதிர்காலத்திற்கு எப்படி வருகிறான் என்பதுதான் ஒற்றை அங்குல லாஜிக் கூட பிசகாமல் Zemeckis உருவாக்கியிருக்கும் Back to the Future. இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மூன்று பாகங்கள் வந்துள்ளனவாம். எல்லாவற்றையும் பார்க்கலாமென்றிருக்கிறேன்!


அடுத்து Beowulf. இதுவும் Zemeckisன் படைப்புதான். தொழில்நுட்ப அடிப்படையில் வலிமையான திரைப்படம். ஆனால் கதை என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை என்னைப் பொறுத்தவரை. சும்மா ஒரு monster வந்துச்சு. அதக் கொல்ல ஒரு ஹீரோ வேணும். ஆ.. தோ வந்துட்டாண்டா Beowulf..  என்பதாய்த் தொடரும் fantasy heroism வகையறாதான் Beowulf.  

இதில் monsterன் அம்மாவாக வரும் ஏஞ்சலினா ஜோலியை ஏன்தான் அரை நிர்வாணியாகவே அலைய விட்டார்களோ. அனிமேஷன் திரைப்படம் என்பதொரு சிறப்பம்சம். ஒருமுறை பார்க்கலாம்.. இஷ்டப்பட்டால்!


 A Clock Work Orange. IMDB-ன் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் எப்போதும் இருக்கும் படம். காலஞ்சென்ற திரைமேதை Stanley Kubrick இயக்கியது. மிகு வன்முறையும், பாலியல் வன்கொடுமை குறித்த எள்ளலும் படத்தை மூன்று நான்கு முறை வயதுக்கு வரச் செய்திருக்கின்றன. 1971லேயே ஹாலிவுட்டில் இத்தகு படங்கள் சாத்தியமாகியிருக்கின்றன என்பது ஆச்சரியத்திற்குள்ளாக்குகிறது.

முதற் பாதியில் கதையின் மையப் பாத்திரத்தின் மேல் நமக்கு ஏற்படும் அளவு கடந்த கோபம், பிற்பாதியில் கருணை வழியும் பரிதாபமாய் நம்மையறியாமலேயே உருமாறுவதில் இருக்கும் ஆச்சர்யம், அது நிகழ்ந்து முடிந்த பின்தான் நமக்குப் புலனாகிறது என்பதில் Stanley Kubrickன் மேதைமை பளிச்சிடுகிறது. A Classical Thriller!


ஆ.வி ஹாய் மதன் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னொருமுறை கமல்ஹாசனுடன் Spartacus படத்தின் பெருமைகளைப் பேசினால், பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என்று மதன் (எ) கோவிந்த குமார் (!) சொல்லியிருந்தது நினைவில்(ஏயே) இருந்த ஒரே காரணத்துக்காகவே Spartacus படத்தைத் தரவிறக்கினேன். 1960ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்தப் படம்.

ஆச்சரியம் என்னவென்றால் இப்படமும் Stanley Kubrick-னுடையதுதான் என்பது படம் ஓடத் துவங்கிய பின்னர்தான் தெரிய வந்தது. பணத்திற்காக விற்கப்படும் அடிமாட்டு அடிமைகளாயிருந்து, மக்களின் குரூர ரசனைக்காக சண்டையிட்டு மடியும் க்ளாடியேட்டர்களைப் பற்றி அப்போதே படமெடுத்து விட்டார்கள் என்பது கூட பிறகுதான் தெரிய வந்தது. இந்த விஷயத்தில் Ridley Scottஐத்தான் முன்னோடியென்று நினைத்திருந்தேன்.

இரண்டு தலைமுறைகளுக்குப் பிந்தைய ஒருவன், 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் பார்க்கும் வகையில் தொய்வில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் சிறையிலிருந்து தப்பிக்கும் அடிமைகள் தடுப்பு சுவராக வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளை ஒரு கும்பலாகத் தலைக்கு மேல் தூக்கி, இன்னொரு தடுப்பின் மீது மோதிச் சாய்க்கும் காட்சி. என்னடா எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே என்று யோசித்தால்.. ஆம்.. அதேதான்.. விருமாண்டி க்ளைமேக்ஸ்.

எதையெதையெல்லாம் உருவலாம் என்பதற்காக சினிமாக்காரர்கள் உலக சினிமா பார்க்கிறார்கள். எதையெதையெல்லாம் உருவியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களாகிய நாம் உலக சினிமா பார்க்கிறோம். ஆஹா.. இப்படியல்லவா வாழ வேண்டும் கலை!

இந்த லட்சணத்தில் கோடம்பாக்கத்தை கோலிவுட் என்று சொல்லக் கூடாதாம். ஹாலிவுட்டைத்தான் ஹாடம்பாக்கம் என்று சொல்ல வேண்டுமாம். இந்தக் கருத்தை உதிர்த்த நடிகரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அல்லக்கை ஒருவர் இதைப் பெருமையாக வேறு சொல்கிறார். யப்பா.. சாமி.. உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு அளவில்லையா.. எங்கள் கோய்ந்த்தூர்ப்பக்கம் சொல்லும் ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. கேக்கறவன் கேணயனா இருந்தா எரும் மாடு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம்..

கமல்ஹாசன் எதற்கு இப்படி சொன்னார்.. இது டி.ராஜேந்தர் டைப் வசனமாக இருக்கிறதே.. என்றுதான் நினைத்தேன். டி.ராஜேந்தர் தானே நிஜத்தை மறந்து விட்டு இப்படி தன்னம்பிக்கைக் குழைச்சலாக உளறிக் கொட்டிக் கொண்டிருப்பார்? உங்கள் மேலெல்லாம் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கை மிச்சமிருக்கிறது அய்யா. பேசுவதை.. கொண்டாட்டங்களை.. விருதுகளை.. இவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு செயலில் காட்டுங்களேன்.. ப்ளீஸ்!

ஒரு நடிகருக்குக் குழந்தை பிறந்ததை சிங்கத்துக்கு சிங்கம் பிறந்திருப்பதாக எஸ்ஸெம்மெஸ்ஸிக் கொண்டாடும் ரசிகர் மந்தைகளான எங்களை வைத்துக் கொண்டு இந்தப் பேச்செல்லாம் ரொம்பவே ஓவராகப்படுகிறது! 


சும்மாயிருக்காமல் பார்த்துத் தொலைத்த இன்னொரு படம் Patch Adams. இது இன்னும் மோசம். ஹாலிவுட்டிலிருந்து இந்திக்கு வந்து, அங்கிருந்து ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவும் காப்பியடித்த முன்னாவசூல் ராஜாபாய்க்களின் மூலம்தான் Patch Adams.

Memento – கஜினி, Derailed – பச்சைக்கிளி முத்துச்சரம், Planes, Trains and Automobiles அன்பே சிவம்.. என்று நீளும் பட்டியலைப் பற்றியெல்லாம் யாராவது பேசுவீர்களா.. ம்ம்.. மூச்ச்..!

எங்கேயோ துவங்கி, எங்கோ சென்று விட்டேன். அதனாலென்ன.. பரவாயில்லை. அப்படி எழுதினால்தானே பின்னால் உட்கார்ந்திருக்கும் நவீனாவின் கள்ளக் காதலனென்று ஒத்துக் கொள்வார்கள்!5 மறுமொழிகள்:

இராமசாமி கண்ணண் July 29, 2010 at 2:26 AM  

//The Departed//

I thing it is Derailed Mathan...

James Arputha Raj July 29, 2010 at 2:27 AM  
This comment has been removed by the author.
James Arputha Raj July 29, 2010 at 2:30 AM  

"பச்சைக்கிளி முத்துச்சரம்" is remake of "Derailed". "The Departed" is also a remake of HongKong film Internal Affairs, it still got Oscar where as original one deserved it but didn't get any. Hollywood also makes lot of remakes from Spanish, Korean and Japanese movies, I thing there is nothing wrong about remakes, unless made poorly.

You should watch all three part of "Back To Future" film series continuously. Director has done a great job in making the movie interesting even when watched back to back for 7hrs , specially when the story goes explaining about actions done in 1st part affecting the future and alternate reality in the following 2nd and 3rd part. all three of them are must watch movies.

நேசமித்ரன் July 29, 2010 at 2:27 PM  

நல்ல விமர்சனம் மதன்

மதன் July 31, 2010 at 6:22 PM  

திருத்தி விட்டேன் இராமசாமி கண்ணன். நன்றி.

ஜேம்ஸ் - ரீமேக் செய்வதில் குற்றமில்லைதான். ஆனால் செய்து விட்டு, அபப்டியொரு படமிருப்பதே எனக்குத் தெரியாது என்று சொல்வதை என்ன சொல்வது?

இயக்குனர் கௌதம் சொல்லியிருக்கிறார். Derailed என்ற படத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்று! :)

நேஸ் - :)

  ©Template by Dicas Blogger.

TOPO