Monday, July 12, 2010

மஞ்சள் விளக்கடி விளையாட்டு

ஊருக்கு வந்து சேரும் காலைகள் பெரும்பாலும் ஒரே போன்றிருக்கக் கூடியவை. காந்திபுரத்து மாற்றங்களில் துவங்கி அடுத்த 18 கிமீ தொலைவு வரைக்கும் என் நகரம் சந்தித்திருக்கும் மாற்றங்களை அசைபோடும் சன்னலோரப் பயணங்களாய் பனி வழிபவை.

சமீபத்தில் மொழிக்காக எடுக்கப்பட்ட மாநாடு எந்தளவுக்கு மொழிக்குத் தொண்டு செய்ததென்று புரியாவிடினும், சாலைகள் சற்று மெருகேறியிருந்ததும், நகருக்குப் பூசப்பட்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல் டால்கம் பவுடர்கள் மணம் மங்கத் துவங்கியிருப்பதும், சுள்ளென்றடிக்கும் உண்மையின் வெயிலால் வழியும் வியர்வையில் அவை வெள்ளைத் திட்டுகளாக அப்பியிருப்பதும், பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சாலைப் பணிகளை சப்பாத்திக் கட்டை கொண்டு தேய்த்து மக்களேதான் முடித்துக் கொள்ள வேண்டுமாவென்பன போன்ற கேள்விகளுடனும் சூலூர் வந்து சேர்ந்தேன்.

எப்பொழுதும் வாரக்கடைசிகளில்தான் ஊருக்கு நம் விஜயம். ஆனால் இந்த முறை அதிர்ஷ்டவசமாக வியாழன் முதல் ஞாயிறு வரை நான்கு நாட்கள் அம்மா கை சாதம் வாய்த்திருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் சில பணிகளை முடிக்க உத்தேசித்திருந்தேன். அவைகளில் ஒன்று என் பள்ளிக்குச் சென்று, பள்ளியையும், ஆசிரிய, யைகளையும் பார்த்து வருவதென்பது.

காலை 10 மணிக்கே கிளம்பி விட்டேன். நடக்கத் துவங்கிய அதே வழியில்தான் பன்னிராண்டுகள் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்றென்னை அந்தப் பாதையில் வசிக்கும் மக்கள் அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள். என் வெளுத்துப்போன ஜீன்ஸும், டீ ஷர்ட்டும் அவர்களிடமிருந்து என்னைத் தொலைவுறச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. வழியில் தென்பட்ட சில முகங்கள் சிரிப்போடு நிறுத்திக் கொண்டன. சில அப்பாவை விசாரித்தன. சில என் இருப்பையும், பணியையும் பற்றிய வழக்கமான கேள்விகளைக் கேட்டன. ஊருக்குச் சென்றால் திரும்பும் வரை இன்ஸ்டண்ட் புன்னகையொன்று உதட்டோரமாக இருத்தல் அவசியம்.

பள்ளிக்கருகில் சென்றுவிட்ட போது சற்று பதட்டமாகவும், அதே சமயம் excitement (குதூகலம்?!) ஆகவும் இருந்தது. 1947ல் துவங்கப்பட்ட சூலூர் அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளியின் படர்ந்திருந்த அமைதி உள்ளுக்குள் சென்று எங்கோ இடித்து நின்றது.

பார்வையின் ஒவ்வொரு நகர்வுடனும் மோதித் தெறித்துக் கொண்டிருந்த நினைவுத் துளிகளில் சறுக்கிச் செல்தல் வயதை மறக்கடித்துக் கொண்டிருந்தது. காலத்தின் ஊமை சாட்சிகளாய் நின்றிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கு அருகிலும் சென்று நலம் விசாரிக்கத் தோன்றியது.

பால்யத்தின் பச்சை நினைவுகள் இரவு இரயில் பயணத்தில் காணும் தூரத்து மஞ்சள் விளக்குகளாய் மினுக்கின. என் பயணத்தை விட்டிறங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கலாமா என யோசிக்க வைத்தன. ஆனால் அது அத்தனை சுலபமில்லையே.

நாங்களனைவரும் புத்தகத்தை விரித்துக் கொண்டமர்ந்து படிப்பதாகப் பாவனை செய்யும் அந்த அரங்கைக் கடந்து, தலைமையாசிரியர் அறைக்குச் சென்றேன். நான் படிக்கும் போதிருந்த தலைமையாசிரியர் ஓய்வு பெற்று விட்டதால் இப்போதிருப்பவருடன் மனம் அத்துணை ஒன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சம்பிரதாயமான பேச்சுகளைத் தவிர வேறு எதுவும் சாத்தியப்படவில்லை. மற்ற ஆசிரியைகளைக் கண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு 10ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியைகள் அறைக்குச் சென்றேன்.

தொலைவில் செல்கையிலேயே தெரிந்தது. ஒரே ஒரு ஆசிரியை மட்டுமே Teacher’s roomல் அமர்ந்திருந்தார். பின்புறமிருந்து பார்க்க எவரெனத் தெரியவில்லை. அறைக்குள் சென்று திரும்பிய பின்னர்தான் மகிழ்ச்சி பிரவாகங் கண்டது. ஆம். யாரைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் ஆசைப்பட்டேனோ.. எங்கே இன்றென்று பார்த்து லீவெடுத்திருப்பார்களோ என்று பயந்திருந்தேனோ.. அதே இராதாமணி ஆசிரியை அவர்கள்.

மிஸ் என்னைத் தெரிகிறதா என்று கேட்டேன். மெள்ளத் தலை நிமிர்த்தி என்னைக் கண்டவர், முகம் ஞாபகத்திலிருக்கிறது. ஆனால் பெயர் மறந்து விட்டது என்று கூறினார்கள். வயோதிகத்தின் சுருக்கங்கள் நினைவின் தடங்களிலும் விழுந்திருந்தன. எந்த பேட்ச் என்றார்கள். என்ன படிச்ச என்றார்கள். என்ன செய்ற என்றார்கள். எங்க இருக்க என்றார்கள். ஒவ்வொரு பதிலுக்கும் அவரின் முகப் பிரகாசமும், புன்னகையின் அடர்த்தியும் கூடிக் கொண்டேயிருந்தன.

என்னதான் சொல்லுங்கள். இங்கே எத்தனை கஷ்டமிருந்தாலும், ஊருக்குச் செல்கையில் என்னப்பா செய்ற என்ற கேள்விக்கு, சாஃப்ட்வேர் என்ஜினியர் என்று சொல்லுகையில் என்னுள்ளே உணரப்படும் சராசரித்தனம், கேட்பவரின் மகிழ்ச்சியை, ஆச்சர்யத்தைக் காணும் போது சற்றே பெருமையாக உருக்கொள்ளத்தான் செய்கிறது. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் படிக்காத (அ) படித்தும் வேலை கிடைக்காத சில சொந்த (அ) சொந்தக்காரப் பிள்ளைகளுக்கான சோகம் இழையோடுவதை நான் நன்கறிவேன். நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை என்பதை எப்படிப் புரிய வைக்க என்று தோன்றும்.

நான் பேச ஆரம்பித்தேன்.

மிஸ் எனக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம். நான் டெந்த் டீ க்ளாஸ்ல படிக்கும்போது நீங்கதான் சைன்ஸ்க்கு வந்திங்க. Infact அப்போதான் ஃபர்ஸ்ட் டைமா நீங்க எங்க க்ளாஸுக்கு வந்திங்க. உங்களோட way of presentation எனக்கு ரொம்பப் பிடிக்கும். புக்கயே தொடாம பாடம் நடத்தறதப் பாக்கும்போது வகுப்புக்காக நீங்க பண்ணிருக்கற ஹோம் வொர்க் தெரியவரும். முகஸ்துதிக்காக சொல்லலங் மிஸ். It was majestic!

PSGல படிச்ச மூணு வருஷமும் நான் இஃபோரியா-ங்கற கல்ச்சரல் ஃபங்ஷன் காம்பியரிங் பண்ணேன். அதுக்கு உங்களோட way of presentationம், body languageம் one of the inspiration.

SSLC 3ர்ட் ரிவிஷன்ல நான்தான் மிஸ் சைன்ஸ்ல ஸ்கூல் டாப்பர். 97 வாங்கினேன். அதுக்காக நீங்க ஒரு பென் ப்ரெஸண்ட் பண்ணிங்க. அத நான் இன்னும் வெச்சுருக்கேன்.

இன்னும் நிறையப் பேசியிருப்பேன் போல. சற்று மூச்சிரைத்தது முடித்தவுடன்.

மேற்கண்டவையெல்லாம் மற்றவர்களுக்கு சராசரியாகத் தோன்றலாமோ என்னவோ.. எனக்கு மிகவும் precious ஆனவை. எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன் இருந்தாலும் அதை பெரும்பாலும் நாமெல்லோரும் பகிர்ந்து கொள்வதோ, அதற்கு நன்றி சொல்வதோ இல்லை. நான் அந்தத் தவறை செய்ய விரும்பவில்லை.

மிகவும் சந்தோஷப்பட்டார்கள். தன் பணிவாழ்வின் கடைசி ஆண்டில் தனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது.. இப்போதாவது வந்தாயே என்று சிரித்தார்கள். இவை போன்ற வார்த்தைகளைக் கேட்கையில்தான் தாமும் தம் கெரியருக்கு சிறிது அர்த்தம் சேர்ப்பித்திருப்பதாகத் தோன்றுவதாகச் சொன்னார்கள். ஆனால் முன் போலவெல்லாம் வகுப்பெடுப்பதில்லையாம் இப்பொழுது. ஏதோ ALM என்றொரு பாடமுறையைத்தான் பின்பற்ற வேண்டுமாம். அதன்படி ஆசிரியர்களும், மாணவர்களும் புத்தகத்தினைப் பார்த்துதான் பாடம் நடத்த / கவனிக்க வேண்டுமாம்.

ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்துவதற்கென்று ஒரு ஸ்டைல் இருக்கும். சும்மா அதிலெல்லாம் இவர்கள் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி அது கிடக்கட்டும்.

என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்தேன். ஒரே சந்தோஷப் பேரின்பம் மீண்டும். இண்டர்வெல்லின் போது அறைக்கு வந்த மற்றும் பள்ளியில் புதிதாய் சேர்ந்திருந்த ஆசிரியைகள் அனைவரிடமும் புத்தகத்தைக் காட்டி எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. எங்க ஸ்டூடண்ட் பாத்திங்ளா.. என்று பெருமையோடு சொல்லிக் கேட்கக் கொஞ்சம் குழைவுற்றது உள்.

2002ல் பள்ளிப் படிப்பை முடித்த இந்த 8 ஆண்டுகளில் அப்போதிருந்தவர்களில் இரண்டே இரண்டு ஆசிரியைகள்தான் இப்போதிருந்தனர். இன்னொருவரும் முக்கியமானவரே. தமிழாசிரியை கனகாங்கி அவர்கள். நினைவில் கொள்ளும் கலை என்றவொரு கவிதையில் தமிழாசிரியை பெயரும் வந்திருந்ததைப் பார்த்து, எல்லாருமே சந்தோஷப்பட்டார்கள். அவரும் மிகவும்.

இராதாமணி ஆசிரியை அவர்கள் முன்பை விட இன்றைய மாணவர்களைப் படிக்க வைப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி சிறிது பேசினார்கள். எனக்கும் அவையெல்லாம் நியாயமாகத்தான் பட்டன.

தனியார் பள்ளிகள் போல, சேர்த்துக் கொள்ளும் போதே, மாணவன் திறமையானவனா என்பது முதல் படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலை அவன் வீட்டில் வாய்க்குமா என்பது வரை எல்லாவற்றையும் கணக்குப் போட்ட பின்னர் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு மிகச் சுலபமாக செண்ட் பர்செண்ட் ரிசல்ட் காட்டுவதில்லையே அரசு பள்ளிகள்.

வருபவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு, படிக்க வைக்கத் தொண்டை கிழிவுறப் போராடும் அரசு பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய பேச்சுகளில் இந்த சமூகத்திற்கு அவர்கள் வகுப்பறையில் தூங்குவதும், இண்டர்வெல் பஜ்ஜி சொஜ்ஜியும் மட்டுமே நினைவுக்கு வருவது அவர்கள் துரதிர்ஷ்டம்.

பரவால்லப்பா.. கவர்மெண்ட் ஸ்கூல் பையன் இந்தளவுக்கு வந்திருக்கன்னா.. என்று புதிதாக வந்த ஒரு மிஸ் ஆரம்பிக்க..

அப்படி நாமளே நம்ம பசங்கள சொல்லக் கூடாது.. என்ன கொறஞ்சு போய்ட்டாங்க நம்ம பசங்க.. என்று சிறிய கோபத்துடன் இடைமறித்துக் கேட்டது நம்ம இராதாமணி மிஸ்தான். அந்தக் கேள்வியில் உறைந்திருந்த நியாயம் எனக்குப் பிடித்திருந்தது.

உண்மைதான். என்ன குறைந்து போய்விட்டது அரசு பள்ளி மாணவர்களுக்கு? எங்களால் இயன்றதனைத்தையும் சாதித்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்த ஆண்டு SSLC தேர்வில் அரசு பள்ளி மாணவிதானே மாநிலத்தில் முதல் மதிப்பெண். நம் காலத்தின் சராசரியான ஒரு மாணவன் எட்டக்கூடிய அதிகபட்ச உயரம் சாஃப்ட்வேர் என்ஜினியராவதாகத்தானே இருக்கிறது. தமிழகத்தின் நம்பர் ஒன் பள்ளியான கோபாலபுரம் DAV மாணவனும் இங்குதான் வருகிறான். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த நானும் இங்குதான் போஜனத்தை ஓட்டுகிறேன் எனும்பொழுது, அவனுக்கு எப்படி இது இழுக்கில்லையோ அப்படியே எனக்கும் இது சாதனையில்லை. ஆனால் தராசுகள் சில சமயம் ஒரு பக்கமாகச் சாய்கையில் இந்த ஒப்பீட்டை எங்களாலும் தவிர்க்க முடிவதில்லை.

அதற்காக சாஃப்ட்வேர் என்ஜினியராகும் விகிதாசாரம் இருபுறமும் ஒரே அளவிலிருக்கிறது என்று நான் கூற மாட்டேன். பூசணிக்காயை எழுத்திலும் எப்படி மறைக்க முடியும். பொத்தாம் பொதுவாக அரசு பள்ளி மாணவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிடுவது தவறென்பதுதான் என் கருத்து.

இந்த மாதிரி ஒரு பையனக் கூப்ட்டு இலக்கிய மன்ற விழாவுல பேசச் சொன்னா என்ன நம்ம ஹெச்செம்க்கு.. நம்ம கொழந்தைகளுக்கும் உபயோகமா இருக்கும்.. என்றார் இராதாமணி ஆசிரியை. என்ன சொல்ல.. என் ஆதிநாட் கனவுகளுள் ஒன்று அது. இந்தக் கேள்வி வருமளவுக்கு என் பாதை சரியாக அமைந்திருப்பதற்கு நன்றி சொல்கிறேன் இறைக்கு. கண்டிப்பாக ஒருநாள் எங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேசுவேன். அதைப்பற்றியும் எழுதுவேன். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்!

அதற்குள் இராதாமணி மிஸ்ஸுக்கு நேரமாகி விட்டது டெந்த் C வகுப்புக்குச் செல்ல. நீ நல்லா வருவ.. என்று கைகளைப் பிடித்து வாழ்த்திவிட்டு, கண்களைப் பிடித்து விடை பெற்று வகுப்பை நோக்கி நடக்கத் துவங்கிய அவர்களை ஏனோ பார்த்துக் கொண்டே இருந்தேன். கருணையே இல்லாத காலம் ஒரு நல்ல ஆசிரியரின் கடைசி ஆண்டினை நொடிகளாகக் கரைத்துக் கொண்டிருந்தது.

மஞ்சள் விளக்கடி விளையாட்டிலிருந்து எப்பொழுது என் பயணத்திற்குத் திரும்பினேன் என்று தெரியவில்லை. தட தடக்கும் லௌகீக இரயிலின் வேகத்தில் காற்று முகத்திலறைகிறது.
11 மறுமொழிகள்:

ராம்ஜி_யாஹூ July 13, 2010 at 1:33 AM  

அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள்.

பல வருடங்களுக்கு பிறகு , நாம் படித்த பள்ளி, கல்லூரி க்கு போகும் பொழுது நாம் உணர்ச்சி வசப்ப் படுவது இயல்பே

மதன் July 13, 2010 at 1:45 AM  

ராம்ஜி யாஹூ என்பது அடிக்கடி கண்ணில் படும் பெயர்!

வந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி!

நேசமித்ரன் July 13, 2010 at 2:57 AM  

மதன்


மனசுக்கு நெருக்கமாகிக் கொண்டே இருக்கிறீர்கள்

எனது பால்யத்தில் எறிகிறது இந்த இடுகை

பா.ராஜாராம் July 13, 2010 at 2:59 AM  

மதன்,

உங்க பேனாவை கொஞ்ச நாளைக்கு என்னிடம் கொடுத்துருங்களேன் ப்ளீஸ்.

மதன் July 13, 2010 at 9:53 AM  

நேசன் - நெருக்கம் என்பது தெரியும். பால்யத்தில் எறிந்தது தெரியாது. இரண்டுக்கும் நன்றி! :)

பா.ரா - இதான் உங்க தன்னடக்கம். இதே உள்ளடக்கத்த நீங்க எழுதிருந்திங்கனா வட்டார வழக்கு மொழில சொல்லி சொல்லி அடிச்சுருப்பிங்க. உங்களுக்கு என் பேனா வேண்டாம். உங்களோடதுதான் நல்ல பேனா! :)

சு.சிவக்குமார். July 13, 2010 at 1:04 PM  

நல்ல செறிவுடன் கூடிய பகிர்வு மதன்.

வாழ்த்துக்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ July 14, 2010 at 12:56 AM  

கடந்த நினைவுகளை மீண்டும் புதிபித்திருகிறது உங்களின் பதிவு . மிகவும் நேர்த்தியாக எழுதி இருகிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி

மதன் July 14, 2010 at 1:22 AM  

பனித்துளி சங்கர் - எப்படி இப்படிலாம் பேர் யோசிக்கறிங்க? :)

பாராட்டுக்கு நன்றிங்க!

செல்வராஜ் ஜெகதீசன் July 15, 2010 at 1:39 PM  

என்னையும் என் பள்ளிக் காலத்திற்கு
கொண்டு போய் விட்டீர்கள், நல்ல பதிவு மதன்.

மதன் July 15, 2010 at 4:49 PM  

நண்பர் செல்வராஜ் - நன்றி!

ganesh August 1, 2010 at 3:12 PM  

நண்பா அருமையாக பகிர்ந்துள்ளாய்!!!!!!!!!!
உன் எழுத்துக்கள் என்னையும் நம் பள்ளிக்கு அழைத்து சென்றது என்பதில் ஐயமில்லை !!

  ©Template by Dicas Blogger.

TOPO