Monday, May 3, 2010

காஃப் ஸிரப் குடிகாரர்கள்!


நிகழ்வு 1:

அன்று எனக்கு உடம்பு சரியில்லை. தென் பெங்களூரில், டாக்டர் ஜெக்தீஷ் அந்த்தின் (Jagdish Antin) ஒரு விசிட்டுக்கு 200 ரூபாய் வாங்கினாலும் மொய்ராசிக்காரர். அவரைப் பார்த்து ஒரு ஊசி போட்டுக்கொண்டு எதிரே இருந்த பத்மா மெடிக்கல்ஸில் மருந்து வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது Avengerல் வந்திறங்கிய ஒரு மனிதருக்கும், மருந்துக் கடைக்காரருக்கும் நிகழ்ந்த உரையாடல்:

வந்தவர்: குரூ.. ஈ சிரப் கொடீ குரூ.. (குறிப்பிட்ட ஒரு காஃப் சிரப்பைக் கேட்கிறார். பெயர் நினைவிலில்லை)

ம.கா: Prescription இதியா..?

வந்தவர்: இல்லா.. குரூ.. சல்ப அர்ஜண்ட்டாகிதே.. அதே.. கொடீ குரூ..

ம.கா: யேய்.. இல்லாப்பா.. Prescription இல்லாந்த்ரே ஹோகி.. ஆகல்லா.. மத்தே.. நனகு பிரஷ்னே பரத்தே.. ஈவாக லாஸ்ட் டைமே தும்பப் பிரஷ்னே ஆயித்து..

மருந்தைக் கொடுக்க ஏன் இந்தக் கடைக்காரர் இத்தனை பிகு செய்கிறார் என்று தோன்றினாலும், எனக்கிருந்த தலைவலிக்கு அவர்கள் உரையாடலில் கவனம் செலுத்தத் திராணியில்லாமல் என் மருந்தை வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்.. அதற்குப் பின்பும் வந்தவர் கடைக்காரரைக் கெஞ்சிக் கொண்டுதானிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு: 2

மதுப்பழக்க மறுவாழ்வு மையமொன்றில் அனுமதிக்கப்பட்டு, சில காலம் அங்கிருந்துவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தார் என் நண்பனொருவனின் அப்பா. அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் தெரியவந்த தகவலொன்று. குடிப்பழக்கம் காரணமாக அந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை விட, கஞ்சா முதலிய பொருட்களுக்கு அடிமையானவர்கள்தான் அதிகமாம். அதுவும் காஃப் சிரப் அடிமைகள் இன்னும் அதிகமாம். 15 வயசுப் பையனொருவனின் கதையையெல்லாம் சொன்னார். கேட்கவே காதுகளுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.

நிகழ்வு 3:

மீண்டும் புலர்ந்து விட்ட இன்னுமொரு நாளின் காலையில் உணவருந்த அன்னபூர்ணேஸ்வரிக்குச் சென்றேன். எதிர்பாராவிதமாக கடை சாத்தியிருந்தது. இதென்னடா.. மதுரைக்கு வந்த சோதனையாக இருக்கிறேதேயென்று, இதுபோன்ற இடுக்கண் சமயங்களில் இருக்கும் ஒரே ஆப்ஷனான Joy Bakes எனப்படும் பேக்கரி இலக்கணங்கள் மாறாதவொரு கேரளத்துப் பேக்கரிக்குச் சென்றேன்.

நான் பஃப்ஸைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பேக்கரிக்குள் நுழைகையில் இருக்க வேண்டிய அச்சு அசல் உரிமைத் தொனியுடன் உள்ளே வந்தார் ஒருவர். கல்லாவுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு திண்டில் சௌகர்யமாக அமர்ந்தவர், பேண்ட் பாக்கெட்டிலிருந்து RexCof என்ற காஃப் சிரப்பை எடுத்தார். திறந்தார். கவுத்தினார். அரை பாட்டில் காலி.

தண்ணியடிக்கையில் வரக்கூடிய அதே தொண்டைக் கனைப்பு, கண்ணை இறுக்கி மூடித் திறத்தல் போன்றவையும் காணக் கிடைத்தன. பாட்டிலை மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, மலையாளங் கலந்த கன்னடமா, இல்லை கன்னடங் கலந்த மலையாளமாவென்று தெரியாத பாஷையில் பேசிச் சிரித்தவாறே சென்று விட்டார். என்னுடைய நாளுக்கு மீண்டு வர சற்று அவகாசம் தேவைப்பட்டது எனக்கு.

இதைப் பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆக வேண்டுமா என்று யோசித்தேன். இதைப் பார்த்துவிட்டு அடடே.. இதுவும் நல்லா இருக்கும் போலிருக்கே என்று யாராவது களத்தில் குதித்தால், ஏதாவது ஒரு மகராசியின் சாபம் எனக்கு வந்து சேருமேயென்று.

நாம் சொல்லித்தான் இனி எவரும் கெட்டுப் போகப் போவதில்லை. அதே போல் நாம் சொல்லித்தான் இவர்கள் யாரும் திருந்தவும் போவதில்லை என்பதுதான் நிதர்சனமாகப்பட்டது.

ஏன்தான் இப்படி அல்ப போதைக்கெல்லாம் அலைகிறார்களோ என்று வெறுப்பு மேலிடுகிறது. எங்கு நோக்கினும் போதை.. எதற்கெடுத்தாலும் போதை.. படித்தவன் படிக்காதவன் எல்லாருக்கும் போதை.. ஜெயித்தாலும் போதை.. தோற்றாலும் போதை.. அப்படி இந்த போதையில் என்னதான் இருக்கிறது என்ற உள்ளுந்தல் மதுக்கடைகளைத் தாண்டுகையில் ஏற்படுவதுண்டு.

தனிமனித ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் முறை பிறழ்ந்த காமத்துக்கு என்ன மரியாதையோ, அதே வகையில்தான் போதையையும் நான் பார்க்கிறேன். என்னைப் போன்ற பழம் பஞ்சாங்கமாகவோ, வீட்டுக்கு பயந்த கோழையாகவோ, இன்னும் என்னென்ன பட்டங்களெல்லாம் குடிக்காதவர்களுக்கு சூட்டுவார்களோ, எல்லாமாகவும் நானிருப்பதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இப்படி வரைமுறையில்லாமல் கண்டதையும் வாங்கிக் குடித்து, உடலையும் கெடுத்து, குடும்பத்தையும் குப்புறக் கவிழ்த்து… எங்கேதான் சென்று கொண்டிருக்கிறதோ நம் நாடு..

குடிப்பது விஷம்தான் என்றாலும், நல்ல பிராண்ட் விஷத்த வாங்கிக் குடியுங்களேன் என்று சொல்வதைப் போலிருக்கிறது எனக்கு!

எல்லாரும் கொஞ்சம் பாத்து, பதனமா இருந்துக்கங்கப்பா.. பொல்லாத உலகமா இருக்கு.. வேறொண்ணும் சொல்றதுக்கில்ல!



4 மறுமொழிகள்:

நுள்ளான் May 3, 2010 at 12:37 PM  

இருமலிற்காக தரப்படும் மருந்து போதையா?
நானும் ஏதோ பிரிட்டோன் ஸ்ரப் என்றெல்லவா இருந்தேன்.

இதுவரைக்கும் நான்கு போத்தல்கள் தந்திருப்பார்கள் மருட்துவர்கள்.

போதைதரும் மதுசாரத்தின் வகைதான் அந்த ஸ்ரப் என்றால் அதற்குப் பதிலாக ஒரு நெப்போலியன் அடிச்சிட்டு குப்புறப்படுத்திருப்பேன்.

தகவலிற்கு நன்றி

Joe May 3, 2010 at 6:41 PM  

கொரெக்ஸ் போன்ற இருமல் மருந்துகளை மருந்துச்சீட்டில்லாமல் தருவதற்கு ஏன் இப்படி தயங்குகிறார்கள் என்று நானும் யோசித்ததுண்டு. பிறகு தான் தெரிய வந்தது.

இது போன்ற போதைக்கடிமையான அறைப் பங்காளி ஒருவன் எங்களிடம் திருடிய சம்பவமும் நடந்தது பெங்களூரில்.

Ashok D May 3, 2010 at 7:01 PM  

//நல்ல பிராண்ட் விஷத்த வாங்கிக் குடியுங்களேன் என்று சொல்வதைப் போலிருக்கிறது எனக்கு!//

விஷமா.... அது...?
போங்க தம்பி ...ரொம்பத்தான் குறும்பு... போய் atleast பீர்ல இருந்தாவது ஆரம்பியுங்க...

காப் சிரபெல்லாம் குழந்தையல சாப்பிடது... சரக்குக்கு வந்தபிறகு இருமலாவது பெருமலாவது...எல்லாம் போயிந்தி..

மதன் May 3, 2010 at 9:49 PM  

விராடன் - நன்றி.

நன்றி வால் II. ஏற்கெனவே ஒருவர் இருப்பதால்! :)

ஜோ - நன்றி.

அஷோக் - உங்களைப் போன்ற நண்பர்கள் விளையாட்டுத்தனமாய் குடிக்கக் கேட்கும்போது கண்டிக்கவும் முடிவதில்லை.

இருமல் வரவில்லை என்பதில் சந்தோஷம்தான். வேறு எதுவுமே வராமல் நலமுடன் இருந்தீர்களானால் என்னைப் போல் மகிழ்பவனும் வேறெவருமிருக்க முடியாது. :)

என்னையும் வேறு ஜோதியில் ஐக்கியமாகச் சொல்கிறீர்களா.. வெளங்கும்..!

  ©Template by Dicas Blogger.

TOPO