Thursday, May 13, 2010

குரல்வளையில் தடம் பதியும் தனிமையின் கொடும் பற்கள் (அ) என்னை என் தனிமை கொன்றால் அது கொலையா தற்கொலையா (அ) என் நிர்வாணத்தை எப்போதும் தனிமை எட்டிப்பார்த்து விடுகிறது



நெடுமரங்களடர்ந்த அத்துவானத்திற்குள் என்னை ஒளித்து வைத்துக் கொண்டு என்னோடே சித்து விளையாடிக் கொண்டிருக்கிறது என் தனிமை. தாடைக்குள் அடங்காத நாவில் ஒழுகிக் கொண்டேயிருக்கும் ஞாபகச் சொட்டுகளை கவனியாமல், வழி மறந்தலையும் ஒரு செவலை நாய், மரங்களை நோக்கிக் காலைத் தூக்கி, நிறுத்தாமல் அடித்து விடுகிறது அந்தந்த நாட்களுக்கான காழ்ப்புகளை, வன்மக் கழிவுகளை.

எனதிலிருந்து எனது விலகி என்னைக் காண்கையில், கரைந்து வரும் கடமைகள் குறித்தான உன்மத்தப் பிரவாகம் தென்படலாம். என் மீதான பரிவின் கரையில் நிகழ்வதது என்பதுதான் என் வாதப் பிரதிவாதம்.

கண் நீளக்கூடிய தொலைவு மட்டும் மணற் கடலாய் இறைந்து கிடக்கும் பிரதேசம்தான் நான் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை என்ற துகளாய் உருக்கொண்டு விடுமோ என்ற பயம், நான் உறங்கும் போதும் என் விழியசைவின் பதற்றத்தில் தெரிவதாகக் காலையெழுந்ததும் கண்ணாடி சொல்கிறது.

நான் தூங்கும் எழிலைப் பார்த்து ரசிக்க தாக்ஷாயணி இல்லாத குறையை இந்தக் கண்ணாடிதானே போக்குகிறது என்ற சமாதானம் எனக்குத் தேவையேயில்லை எனும்போது அது சொல்லும் கூறு கெட்ட வார்த்தைகளுக்குச் செவி மடுக்கும் தேவை மட்டும் எங்கிருந்து வரும்?

பகிர்தலின் தளத்தில்தான் வாழ்வு பல்கிப் பெருகுகிறது என்பதில் நிறைந்து கிடக்கும் உண்மை, இந்தப் பத்துக்குப் பதினைந்து அறைக்குள் வசிக்கத் துவங்கும் முன் வரை என் கபாலத்திற்குள் கால் பதிக்கவில்லை.

ஆங்காங்கே கிடக்கும் பொருட்கள் ஏன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன? உள்ளே உருளும் ஒரு துளிக் கடலினுள் சங்கமித்து விடத் தெரியாத அற்பமான என்னிடம் அவை அப்படி எதைத்தான் எதிர்பார்க்கின்றன? நானும் அவைகளும் தனியதுகளாகத்தான் வாழ்கிறோம் என்றாலும், எங்களின் தனிமைகள் ஒற்றுமையோடு இருப்பதை எனக்கு உறைக்க வைக்கத் திட்டம் போடுகின்றனவா?

ஒவ்வொரு நாளையும் நக்கித் தீர்த்துப் பணமாக ஆக்கிவிட்ட திருப்தியுடன் வீடு திரும்பிய பின், குறிப்பிட்ட ஏதேவொரு பொருளை நான் வைத்திராத ஓரிடத்தில் காண்கிறேனோ என்ற ஐயப்பாடு, அந்த நொடியை, க்ஷணத்திலொரு குத்தூசியாக மாற்றித் தணலில் ஊற வைத்தெடுத்து என் கண்களில் குத்துகிறதோ என்னவோ.. என் குறியைக், குதத்தை எதை ஊன்றிப் படுத்தாலும், உறக்கத்தில் மட்டும் கண் முழுக மாட்டேனென்கிறது.

நாவாட நான் விரும்பாவிடினும், இந்த மின்விசிறி என்னுடன் எதையாவது பேசிக் கொண்டேயிருக்கிறது. அதற்கு மின்சாரம் பீய்ச்சும் காப்பர் கம்பிகளுக்கு உப்புக் காப்பிட யோசித்தேன், அப்படியேனும் அதற்கு ரோஷம் வர. என் திட்டத்தைப் பற்றி எனக்கே சொல்லிக் கெக்கலிக்கிறது. பொருட்களை இடம் மாற்றி வைத்து, பயமாள்ந்த கிணற்றில் என்னைத் தள்ளிவிட்ட கயவாளி அதுதான் போலும்.

Cast Awayயில் வரும் Wilson என்ற பந்துக் கதாபாத்திரத்தைப் போலென்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. தனிமையின் அமானுஷ்யத்தில், தான் பிறழ்ந்து விடாமல் இருக்க என்னைப் பகடையாக்கி, உருட்டுகிறது. ஒளி வலையொன்று தோன்றி மறையப் போகும் ஒரு கால நுனிக்குப் பின்பு நான் உறைந்து போவது நிகழும் என்று ஜோஸ்யம் சொல்கிறது.

வெள்ளொளி மின்னும் புத்தம் புதுக் கத்தி ஒன்று வாங்கி வந்த பின்தான் என் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் அறுபட்டது. அதற்குப் பின்பும் கூட, 'எழுதி வைத்ததெல்லாம் என் மேலான குற்றப்பத்திரிக்கையல்ல. உன் மரண வாக்குமூலம்..' என சளைக்க வைக்கிறதெனை, தன் வாலைத் தான் கவ்வச் சுற்றும் நாய் ஜன்மமாம் இந்த மின்விசிறி. உதிர வாசந் தெரியாத சைவக்கத்தி வைத்திருக்கும் பெண்டுகன் என்கிறது.

ஆகட்டும். மின்னலை அறுத்தெரிபவனுடைய கத்தி, அவன் நரம்பு வாயில்களைத் திறப்பித்த துர்லபத்தை சாதித்துக் காட்டியதில், இன்னமும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கும் மின்விசிறியை விட, நக இணுக்கு வழியே நச்சைப் புகட்டி என்னைக் கோழையாக்கியிருக்கும் இந்தத் தனிமையின் கங்கணத்திற்குப் பங்கதிகம்.

என் கருங்குருதிக் கறையைக் காய வைக்க வேகவேகமாய் தன்னை சுழற்றிக் கொள்ளப்போகும் மின்விசிறிக்காக, அதன் றெக்கைகளுக்குள் ஊடுபாவி, சுக்கு ஆயிரமாய் குதறப்போகும் தனிமையை நான் மிச்சம் வைத்துச் செல்லும் நெகிழ்வுடன், இடக்கை வாகில் அறுத்துக் கொள்ளத் துவங்குகிர்ர்....



5 மறுமொழிகள்:

நேசமித்ரன் May 13, 2010 at 3:46 AM  

கவிதைக்கு உரிய மொழி
உங்கள் கவிதையை விட அடர்த்தியாய்

கொஞ்சம் இளக்கமாய் இருந்தால் அறுந்து அறுந்து வரும் தொடர்பற்ற தன்மை தவிருமோ .....

:)

எனக்குப் பிடித்திருக்குங்க மதன் மொழி

Ashok D May 13, 2010 at 12:06 PM  

பிரக்ஞையின் சமிக்ஞைகளின் லயம் அழகு...



(இவை மாறவேண்டுமெனில் மனதுக்கு பிடித்த ஒரு அழகான பெண்ணை காதலிக்கலாம்.. ஒத்துக்கொண்டால் எதாவது பணிதேசத்துக்கு பயணிக்கலாம், ஊதிய உயர்வு கேட்கலாம், வீட்டின் பால்கனியில் ஜானிவாக்கரும் ஒரு பாக்கெட் 555 சிகரெட்டுடன் அமர்ந்துக்கொள்ளலாம், இல்லையெனில் இது மாதிரியொரு கமெண்டை யார் ப்ளாக்கிலாவது போடலாம்)

மதன் May 13, 2010 at 12:32 PM  

நேஸ்-

உங்கள் உள்ளீடுகளை எப்போதுமே நான் மதிப்பதுண்டு. பாராட்டுக்கும் நன்றி. :)

அஷோக்-

இயன்றவற்றை செய்கிறேன். முதலிரு ஆப்ஷன்ஸும் சூப்பர்! :)

Saminathan May 14, 2010 at 10:39 PM  

அருமை...
எனக்கு மிக மிகப் பிடித்திருக்கின்றது..

மதன் May 14, 2010 at 11:26 PM  

மிக்க நன்றி பூந்தளிர்!

  ©Template by Dicas Blogger.

TOPO