Sunday, March 14, 2010

மனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் – 14/03/2010

மென்பொருள் மற்றும் BPO போன்றவிடங்களில் பணிபுரிவோர் பெரும்பாலும் நேரங் கெட்ட நேரங்களில் அலுவலகத்திற்கு செல்வதும், திரும்பிச் செல்லுதலும் இயல்பான ஒன்று.

பின்னிரவு நேரங்களில் வீடு திரும்புவோரில், Cab-களில் கடைசியாக வீடு வந்து சேருவது பெண்களாக இருந்தால் (அதாவது கூட வரும் ஏனைய ஆண்கள் இறங்கிய பிறகு) ஒரு செக்யூரிட்டியும் கூட வருவது சகஜம். Cab Driverஆல் அந்தப் பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாதென்பதற்காக. பாதகமில்லை.

எனக்கு ஒரு சந்தேகம். இல்லை நிறைய. அந்த செக்யூரிட்டியும் ஒரு ஆண்பிள்ளைதானே. அவருக்கு பெண்கள் மேல் ஆசை வராதா? அந்த Driverக்கு இருக்கும் உடலமைப்புதானே அந்த செக்யூரிட்டிக்கும் இருக்கிறது? இல்லை.. ஏதாவது ஆபரேஷன் செய்த பின் தான் செக்யூரிட்டி வேலைக்கு ஆளெடுக்கிறீர்களா?

செக்யூரிட்டி என்ற வேலைக்கு வந்த உடனேயே, ஒழுக்கக் கோட்பாடுகளை அவருக்குள் பதிய வைக்க உங்களால் முடிகிறதென்றால், அதையே ஏன் அந்த Driverக்கு நிகழ்த்த முடியவில்லை? அல்லது முயற்சிக்கவில்லை?

அடுத்த வீட்டுப் பெண்ணையும் தன் சகோதரி போல் கருதும் எண்ணத்தை அவரவராக வளர்த்துக் கொள்ளும் வரை, இவைபோன்ற போலிக் கட்டுப்பாடுகளையெல்லாம் வாழ்க்கை வரைமுறை என்று நம்பிக் கொண்டிருக்கும் வரை, இந்தக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்.

-0-

ஏனோ மொழியை ஆராய்தலென்பது உவப்பானதாக இருக்கிறது. குறிப்பாக தென்னகத்து மொழிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமைகள் குறித்தும், அவை ஒன்றையொன்று சார்ந்தும், சாராதும், தனக்கென்று தனியான ஒலி மற்றும் எழுத்துரு வடிவுற்றுக் கிளைத்தமை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரியப்படுகிறேன். தொடர்புடைய புத்தகங்கள் குறித்து நண்பர்கள் தெரியப்படுத்துங்களேன்.

சவுரவ் என்ற பெயரை சில வங்காளிகள் ஆங்கிலத்தில் Sourabh என்றும், ஏனையோர் Sourav என்றும் எழுதுகிறார்கள். போலவே Rajiv மற்றும் Rajib போன்ற பெயர்களும்.

நாம் B என்ற ஆங்கில எழுத்திற்குப் பயன்படுத்தும் ஒலிவடிவை வங்கத்தில் V என்ற எழுத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். Vim Bar எனும் சோப்பை, Bim Bar என்றுதான் உச்சரிக்கிறார்களாம்.

போகட்டும். தமிழில் நாம் வேகம் என்கிறோம். கன்னடத்தில் Baega என்கிறார்கள். போலவே, நாம் வேற (வேறு) என்பதை, Baera என்றும், நாம் விடு என்பதை, Bidu என்றும் சொல்கிறார்கள்.

தென்னாட்டிலும் V மற்றும் B ஒலிவடிவுகள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுகின்றன. ஆச்சர்யம்.. இவை கீபோர்டிலும் அருகருகேதான் இருக்கின்றன.

-0-

கீபோர்டைப் பார்த்தாயிற்றா..? சரி..

சற்று நேரத்துக்கு முன்னர்தான் Pixar தயாரிப்பான A Bug’s Life படம் பார்த்தேன். வெள்ளைக்காரன் படமெடுத்தாலே நல்லாருக்கும்னு சொல்லீருவீங்களே என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், அப்படி சொல்லும் கூட்டத்துக்கு நான் தலைவனில்லாவிடினும், பொதுச்செயலாளராகவாவது கொள்ளுங்கள். ப்ளீஸ்..!

ஆங்கிலப் படங்கள் பார்ப்பதின் உச்சபட்ச சௌகர்யம், ஒரு படத்தைப் பார்க்கும் முன்பே அது இரண்டு மணி நேரம் செலவழிப்பதற்குத் தகுதியான ஒன்றா என்று தெரிந்து கொண்டுதான் நாம் தரவிறக்கமே செய்வோம் என்பதுதான்.

அந்த வகையில் Pixar-ன் மேல் எனக்கிருக்கும் மரியாதைக்குத் துளியும் பங்கம் கற்பிக்காத படம் A Bug’s Life. பூச்சிகளின் வாழ்நிலையைக் கூட அழகு மிளிர உருவாக்கியளிப்பது Pixarக்கு சாத்தியப்படுகிறது.

தொடர்ச்சியாக வேறு வேறான விளிம்புகளில் கதைக்களத்தையும், கதை சொல்லலையும் நிரூபிப்பதில் காட்சியூடகத்தின் எண்ணிலாப் பரிமாணங்களை வெளிக்கொணரும் திறமையைப் பார்த்து ஆச்சர்யப்படுவது எனக்கு சாத்தியப்படுகிறது.

-0-

ஊருக்குச் சென்று வந்த அலுவலக நண்பனொருவன், ஸ்வீட்ஸ் வாங்கி வந்திருந்தான். வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று எல்லாருக்கும் மெயிலும் அனுப்பினான் வழக்கம் போலவே. இதுவரையில் எல்லாம் சரியாக நடந்தது.

Folks,

Sweets are in the Panty. Kindly grab your shares.

Thanks.


-இதைத்தவிர!

குறிப்பு: Pantry – உணவுப் பொருட்கள் வைக்குமிடம்

நேரங் கிடைக்கையில் சந்திப்போம். நன்றி.6 மறுமொழிகள்:

கதிரவன் March 14, 2010 at 2:24 AM  

மதன், இவை 'மனம் பிறழ்ந்த' குறிப்புகளாக - எதுவும் எளிதில் புரியாமல் இருக்குமோ என நினைத்தேன் :-)

// கீபோர்டைப் பார்த்தாயிற்றா..? சரி..// ரசித்தேன்

தகவலுக்காக: ரஷ்ய மொழியிலும் B என்ற எழுத்து உண்டு. அதை ஆங்கில V ஒலி அமைப்புடன் உச்சரிக்கின்றனர்

ரோஸ்விக் March 14, 2010 at 3:46 AM  

நல்ல குறிப்புகள்.

pant(r)y அசத்தல். :-))))

மதன் March 14, 2010 at 4:19 PM  

ரஷ்யாவிலுமா..!

தகவலுக்கு நன்றி கதிரவன்.

ரோஸ்விக் - நன்றி.

Mohan March 15, 2010 at 10:15 AM  

கன்னடம் மற்றும் தமிழ் ஒப்பீடு நன்றாக உள்ளது. என்னைப் பொறுத்தவரைக்கும் கன்னடம் கற்றுக் கொள்ள அதுதான் எளிய வழியாகவும் தோன்றுகிறது.தமிழில் நாம் 'வ' என்ற எழுத்தைப் பயன்படுத்தும்போது கன்னடத்தில் 'ப' எழுத்தைப் போட்டுப் பயன்படுத்தினால் ஓரளவிற்கு கன்னடத்தில் சமாளிக்கலாம்(உதா: வா,பா,வீதி,பீதி).தமிழில் 'வ'விற்குப் பதிலாக கன்னடத்தில் 'ப' பயன்படுத்தினால், தமிழில் பயன்படுத்தும் 'ப' விற்குப் பதிலாக 'ஹொ' பயன்படுத்துகிறார்கள்(உதா: போ,ஹோ)

Karthikeyan G March 19, 2010 at 10:28 AM  

நல்ல நாட்குறிப்புகள்..

//எனக்கு ஒரு சந்தேகம். இல்லை நிறைய. அந்த செக்யூரிட்டியும் ஒரு ஆண்பிள்ளைதானே. அவருக்கு பெண்கள் மேல் ஆசை வராதா? அந்த Driverக்கு இருக்கும் உடலமைப்புதானே அந்த செக்யூரிட்டிக்கும் இருக்கிறது?//

இருவருக்கும் ஆசை வரலாம்/ வரக்கூடும். but both driver and security are strangers to each other. As per simple human psychology, We will not commit crime when we are with strangers. So both driver or security will never join to do a crime against the girl, as they are strangers to each other.

மதன் March 20, 2010 at 5:50 AM  

Karthikeyan G -

உங்கள் கருத்து ஒரு வகையில் உண்மைதான்.

கூட்டத்துக்கு மத்தியில் இயல்பாகவே நமக்கான முகமூடி நம்மை அதற்குள் மாட்டிக்கொண்டு விடும்.

ஆனால் இந்த டிரைவர்களும், செக்யூரிட்டிகளும் நான் பார்த்தவரை ஒன்றாக தம்மடிப்பவர்களாக இருக்கிறார்கள்.

கூட்டுக் 'களவாணி' செய்வதற்கான் வாய்ப்புகள் தான் பிரகாசமாகப் படுகின்றன கார்த்திகேயன்.

ரொம்ப நாளாச்சு நீங்க வந்து. நன்றி.

  ©Template by Dicas Blogger.

TOPO