ஆத்தா
அந்தாத்தா பேரு அய்யம்மா. எங்கூட்ல இருந்து சித்த தூரத்துலதான் ஆத்தா வீடு. காவிக் கலர்ல பொடவையும், வெள்ள சாக்கெட்டும் போட்ருக்கும். அரிசிக்கடைல வேலைக்கு சேந்த பெறகு, டவுன்லயே ரூமப் பாத்துப் போய்ட்டதால ஊர்ப்பக்கம் அவ்வளவா வர்றதில்ல. இருக்க மட்டும் ஆத்தாவ அப்பப்போ போய்ப் பாக்கச் சொல்லுவா அம்மா. ஆத்தாவுக்கும் வசந்தா வையன் முருகன்னா இஸ்டம். பாக்கப் போகும் போதெல்லாம் 'ஏஞ்சாமி எப்புடி இருக்ற.. உடம்புக்கெல்லா ஒண்ணுமில்லில்லோ.. சளிக் கிளிப் புடிக்க வெச்சுக்காத சாமி'-னு பதனமாப் பேசும்.
போன வாரம் போன்ல பேசும் போதே அம்மா சொன்னா. 'பாட்டிக்கு திடீல்னு முடீலீடா முருகா.. மேலைங் கீலைமு இளுத்துக்குது'னு. அப்போலிருந்தே தோணிக்கிட்டுருந்துது. இந்த வார சனி நாயிருக்கு முடிஞ்சா ஒரெட்டுப் போயிப் பாத்துட்டு வந்துரனும்னு. வெள்ளிக்கெளமையே சம்புகங் கிட்ட சொல்லிருந்தேன். நாஞ் சித்த போய்ட்டு வந்துர்றண்டானு. சாயங்கால் நேரம் ஏனோ இருட்டுக் கட்டிட்டு இருந்துது அன்னிக்கு.
சிலு சிலுனு காத்துல பஸ்ஸுல வரைல ஆத்தா நெனப்பாவே இருந்துச்சு. பள்ளிக்கோடத்துல படிக்கைல ஒரு நாளு ராத்திரி பத்துப் பதனோரு மணியிருக்கும். ஒண்ணுக்கு உக்காரணும்னு வெளிய வந்தவன், ஆத்தா சேரப் போட்டு வீதீல உக்காந்து உப்புசத்துக்குக் காத்து வாங்கறதப் பாதீலதான் பாத்தேன். கஸ்டப் பட்டு அடக்கீட்டு, அக்கட்டால ஓடிப்போய் மீதிய முடிச்சுட்டு வரைல ஆத்தா என்னைவே பாத்துது. நான் கீழயே பாத்துட்டு, ஊட்டுக்குள்ள ஓடீட்டேன். மறா நாள் என்னைப் பாத்துட்டு 'இவடத்தாலைக்கு வாடா முருகா'-னு கூப்ட்டுது. யேனோ பாசமாத் தலைத் தடவிக் குடுத்துச்சு. 'ராத்திரி நீயி ஒண்ணுக்கு குக்காந்ததப் பாத்தேன்னு ஆருகிட்டையும் சொல்ல மாட்டஞ் சாமி'-னுச்சு. அன்னைல இருந்தே அந்தாத்தானா இஸ்டம்.
ஊருக்கு வந்து சேரைல மழ வேற புடிச்சுருச்சு. துண்டத் தலைக்குப் போட்டுட்டு ஊட்டுக்கு வந்துட்டேன். ராத்திரி சோறுங்கைல அம்மா செல்லப்பண்ணங்கிட்ட ஒழுங்கா வேல செய்றனா இல்லையானெல்லாம் கேட்டுட்டு, அப்பறமா சொன்னா. 'விடிஞ்சுன்ன போய்ப் பாத்துட்டு வா ஆத்தாவ. வெளக்குப் போட்ட மால நேரத்துல போய் நிக்காத'-னு. நானும் செரினு சொல்லிட்டு, குளுருக்கு நல்லாப் போத்தீட்டுத் தூங்கீட்டேன்.
அடுத்த நாள் காத்தால ஆத்தாவப் பாக்கலானு போனேன். அம்மாவும் கூட வந்தா. 'உன்ற வையனுக்கு நீன்னா இஸ்டம்டி வசந்தா. எந்த மகராசி வந்து வாச்சாலும், அவன் உம்பையனாவே இருப்பாண்டி'-னெல்லாம் ஆத்தா சொல்லுமா.. அதனாலயேவோ என்னுமோ, நான் ஆத்தாவப் பாக்கப் போகைல எல்லாம் அம்மாவும் வருவா. எனக்கு அம்மாவப் புடிக்கும்னு இந்தாத்தாக்கு எப்புடித் தெரியும்னு எனக்குத் தெரியாது.
யேனோ கொஞ்சம் உள்ளுக்க பயமா இருந்துச்சு. ஆத்தா ரொம்ப எளச்சுப் போயிருச்சுணான்னு கெளம்பறக்கு முன்னாடி பாப்பா சொன்னா. நடக்கைல பயம் தெரிஞ்சுராத மாதிரி நடந்தேன். அம்மா கையப் புடிச்சுருந்தேன் எப்பயும் போல. வாசப்படிலயே பாக்கியாக்கா உக்காந்துட்டுருந்துது. எங்களப் பாத்துடனே எந்துருச்சு உள்ள வந்துச்சு எங்க கூடவே.
'இப்பதான் சாப்ட்டுட்டு, மாத்தரயும் போட்ட்டுப் படுத்துச்சு'-னு சொல்லுச்சு பாக்கியாக்கா. அந்த வீட்ல இருந்த அமைதி, சத்தமில்லாம எதையோ சொல்ற மாதிரியே இருந்துது. என்ன சொல்ல வருதுனு தான் புரீல. அங்கிருந்த டீவி, சேர், பீரோவெல்லாங் கூட மூஞ்சியத் தூக்கி வெச்சுட்டு இருக்கற மாதிரி ஒரு பிரம்மை தோணிட்டே இருந்துது எனக்கு. பச்சை சாணிப் பவுடர் காலக் குத்தற அந்தப் பழய தரைல இருந்த கூதலோட ஆத்தா இத்தன வருசமா நடக்கைல வெச்ச ஒவ்வொரு எட்டும் சேந்து குதியாட்டம் போடறது எனக்கு மட்டும் தான் தெரியுதானும் தெரியில.
உள்ள ஆத்தா படுத்துட்டுருந்துச்சு. போன தடவ பாக்கும் போது கூடக் கொஞ்சம் பரவால்லாம இருந்துது. இப்பொ எலும்பெல்லாம் துருத்தீட்டு நிக்க, ரெண்டா மடங்கி, ஒடஞ்சு உழுகற நெலமைல இருக்குது. விட்றுங்க்கா தூங்கட்டும்னு சொல்லச் சொல்லக் கேக்காம, 'முருகம் வந்துருக்காம்மா'-னு பாக்கியாக்காதான் எழுப்பி விட்டுச்சு. ஆத்தா மேலுக்கு சேலையப் போட்டுக்காம இருந்துச்சா.. எந்துருச்சு என்னையப் பாத்துடனே நகுத்த முடியாத கையத் தூக்க முடியாமத் தூக்கி, எதையாவது எடுத்துப் போட்டு, எளகித் தொங்கிப் போயிருந்த மார மறைக்கப் பாத்துச்சு. நான் குமுஞ்சுகிட்டேன். அம்மாதான் துண்ட எடுத்துக் குடுத்தா.
அந்த ரூமெல்லாம் அடிக்கற வாசம் ஆத்தாவோட மூத்திரத்தோடதா இல்ல இத்தன் நாள் ஆத்தா வாழ்ந்த வாழ்க்கையோட மிச்சத்தோடதானு முடிவு பண்ண எனக்குப் பக்குவம் பத்தாது. கட்டல் காலுக்குக்கிட்ட வெச்சுருந்த மீரா சீவக்கா டப்பால காவாசிக்கு ஆத்தா துப்பிருந்த கோழ. அதே மாதிரிதான் கடசிக்காலத்துல நம்மளயெல்லாம் வயசு ஒண்ணுக்கும் ஆகாம உறிஞ்சிட்டு, வெறுஞ் சக்கயாத் துப்பிட்டுத் தள்ளி நின்னு வேடிக்க பாக்குமோ. ஒரு ஸ்டூல்ல நடுவுல பெரிய ஓட்டயப் போட்டு, கீழ ஒரு பாத்தரத்த வெச்சுருந்துது. ஆத்தரம் அவசரத்துக்கெல்லாம் பொடக்காளி வரைக்கும் போய்ட்டு வரத் தெம்பில்லாத கொடுமைக்கு இதெல்லாம் பண்ணித்தான ஆகணும்.
என்னதான் முடியாமக் கொள்ளாமக் கெடந்தாலும், சுத்தமா சத்தமே வரலனாலும், எப்பயுங் கேக்கறது எல்லாத்தையும் பதவிசாக் கேட்டுச்சு ஆத்தா. கேணப்பய எனக்குதான் என்ன கேக்கறது, என்ன பேசறதுனே தெரியுல. 'எப்புடியாத்தா இருக்குது'-னு கூடக் கேக்குல. குப்பாத்தாக்காவும் இருந்துச்சு. ஆத்தா சித்த கண்ண மூடிப் படுத்தப்பறம் அம்மா குசு குசுனு கேட்டா. 'யேனுங்க்கா.. ராயப்பத் தேவர் செத்துப் போய்ட்டாராமா.. தெரியுங்ளா'னு. 'ராத்திரி மகேசு வந்தப்ப சொன்னா வசந்தா.. என்ன பண்றது.. அம்மாவ இப்புடி வெச்சுட்டு, எந்த எழவு சேதியப் பத்தியும் சத்தமாப் பேசக் கூட முடீல.. போறதுக்கா கையிலாகும்?'-னு குப்பாத்தாக்காவும் மெதுவாத்தாஞ் சொல்லுச்சு.
எனக்குப் புரீவே இல்ல.. 'ஏனுங்க்கா போக்கூடாது'-னு கேட்டதுக்கு, 'முடியாமக் கெடக்கறவங்க கிட்ட எந்த எழவு சேதியும் சொல்லக் கூடாதுரா முருகா. சாவப் பத்தின பயம் சாஸ்தியா இருக்கைல, எழவு சேதி காதுல கேட்டா, எந்தக் கட்டைக்கும் தாங்காது. மழைல ஊறிக்கெடந்து இத்துப் போற தறித் துணி மாதிரி மனசு உட்டுப் போயிரும். ராயப்பத் தேவர வுடு.. முதலை நாயக்கம் பட்டீல ஆத்தாவோட அண்ணஞ் செத்துப் போயி ஒரு வாரமாச்சு. அதயே ஆத்தா கிட்ட சொல்லுல.. தெரியாமத்தான் நானும், பாக்கீமாளும் போய்ட்டு வந்தோம். தெரிஞ்சுதுனாப் பொக்குப் பொக்குனு இருக்கற உசுரும் போய்ச் சேந்துரும்'-னு மூச்சுடாம சொல்லிட்டு, கண்ணுல தண்ணி விட்டுச்சு.
ஒவ்வொரு மனுசனும் கடசிக் காலம்ங்கிற கெணத்தத் தாண்டித்தான் ஆகணும். பெத்ததுகளோ, மத்ததுகளோ.. தொணைக்குனு நாலு சனம் இருந்தா அந்தக் கெணத்து மேலொரு பகலையாவது இருக்குனு கண்ண மூடீட்டுக் கைத்தாங்கலாத் தாண்டீட்டு செத்துத் தொலையலாம். அதுவும் இல்லைனா, தெரிஞ்சோ, தெரியாமயோ பண்ணின பாவம் எல்லாம்னு நெனச்சிக்கிட்டே தனியாக் கெடந்து புழுப் புளுத்து சாக வேண்டியதுதான். ஆத்தாவுக்கு அதெல்லாம் இல்லாம நல்ல சாவு வரனும்னு வேண்டிகிட்டேன்.
வீட்டுக்குப் போன பெறகு அம்மா ஆத்தாவப் பத்திப் பேசினா. 'ஆத்தா வந்து, அதோட வீட்டுக்காரர் ஆறுமுகத்தேவர விட ஒரு வய்சு பெருசாம். யேதோ அவசரத்துல பண்ணின கண்ணாலமாம். பாட்டியத் தவிர ஆருக்குந் தெரியாதாமா'-னு சொன்னா. 'உனக்கு யாருமா சொன்னா'-னு கேட்டதுக்கு, 'மருதத் தேவர் மாசாணியாத்தா கோயில்ல சாமியாடும் போது, ஆத்தா தனியா இத சொல்லிப் பரிகாரங் கேட்டுச்சாமாடா.. அவரே சொன்னார்'-னா. இந்த விசியந் தெரியாதவுக ஊருக்குள்ள யாரும் இருப்பாங்களானு மட்டுமில்ல. என்னோட ஒண்ணுக்கு உள்ப்பட இதுமாதிரி இன்னும் எத்தன ரகசியம் எம்பத்தேழு வருசம் வாழ்ந்த அந்த ஒடம்புக்குள்ள ஓடிக்கிட்டுருக்கும்னும் எனக்குத் தெரியாது.
எள வயசுல தாத்தாக்கு சோறு கொண்ட்டு காட்டுக்குப் போகும் போது மதியானம் சுடுகாட்டத் தாண்டித்தான் போகோணுமாம். அப்பொ உச்சிவெய்யில்ல ஆத்தாவ யேதோ பேயடிச்சுருச்சாம். அதுல சூம்பிப் போனதுதான் ஆத்தா கையாம். சொன்ன மாதிரி ஆத்தாவோட எடது கை வளஞ்சு, சூம்பிப் போயிருக்கும். பாத்துருக்கேன். இத்தன வருசந் தாண்டியும் இந்த சேதி இன்னும் நிக்காம காது மாத்தி காது ஓடீட்டுருக்குதுனா எத்தனயெத்தன நாக்குகளத் தாண்டி வந்துருக்கும்னு நெனச்சுப் பாத்தேன்.
காத்து எப்புடித் தடந்தெரியாமத் தவிக்கறாப்புல ஊருக்குள்ள எல்லாத் தெசைலயும் அலைஞ்சு தேயுமோ, அதே மாதிரி மனுசங்க அவுத்து விட்ட ரகசியங்களும், கூட்டிக் கொறச்ச விசியங்களும் கூட சேந்து காலத்துக்கும் தேயாம அலஞ்சுகிட்டுருக்கும் போல.
ஒரு மனுசனோட சாவு அந்த ஒத்த ஒடம்போட சேத்து, அவனுக்குள்ள பொதஞ்சு கெடக்கற நெனப்பு, இதுவரைக்கும் பாத்த எடங்க, போன ஊருக, சொன்ன பொய்யுகனு எத்தன எத்தனயையும் சேத்துப் பொதச்சுப் போட வெக்குது. அதனாலயே வயசாளிங்க கண்ணப் பாக்கும் போதெல்லாம் எனக்கு என்னுமோ பண்ணும். எத்தனாயரம் மூஞ்சிகளப் பாத்துருக்கும் அந்தக் கண்ணு. இப்பொ என்னையும் பாக்குதேனு இருக்கும். ஆத்தா கண்ணும் அப்புடித்தான். கண்ணு முழீ சுத்தி ஓரத்துல வெள்ளையடிச்சுப் போயிருக்கும். அந்த வெள்ள வட்டம் காட்ற கலங்கலா இருக்கற கண்ணுக்குள்ள அடி கொள்ளாம ஆடீட்டிருக்கற ஒரு வாழ்க்கையும் புரிய வரும்.
இப்புடியே அதயும், இதயும் பேசீட்டும், நெனச்சுட்டும் இருந்ததுல நாயத்துக்கெலம பொழுதும் போயிருச்சு. இப்பத்தான் வந்தாப்புல இருந்துது. அதுக்குள்ள கெளம்பறதுக்கு ஆயிருச்சுனு நெனச்சேன். ஆத்தாவுக்கும் இப்படித்தான் இருக்குமோனு தோணுச்சு. ஏந்தே இப்படியெல்லாந் தோணுதுனு எம்மேல எனக்கே கோவமா வந்துது.
எப்ப வந்தாலும், ஆத்தாகிட்ட சொல்லாமப் போறதில்லயா.. செரி ஒரு பேச்சு சொல்லிட்டுப் போயிரலாம்னு அம்மாவக் கூப்ட்டேன். போயி 'ஆத்தா நான் கெளம்பறனாத்தா'-னு சொன்னேன். சூம்பிப் போயிருந்ததால ஒழுங்காக் கும்பிட முடியாத கை ரெண்டையும் சேத்து வெச்சு 'மகராசனாப் போய்ட்டு வா சாமி'-னு மனசார சொல்லுச்சு ஆத்தா. கண்ல தண்ணி முட்டிருச்சு எனக்கு. பாக்கியக்காகிட்ட சொல்லிட்ருக்கைல, ஆத்தா அவசரமா அக்காவ எதுக்கோ கூப்ட்டுச்சு.
பேசீட்டு வெளிய வரைல தான் பாத்தேன். ஆத்தா செவுத்தோரமா நின்ன மாதிரி சேலயத் தூக்கி மூத்திரம் பேஞ்சுட்டுருந்துது. சாவு முழுங்கணும்னு ஆத்தாவுக்குள்ள காத்துட்டுருக்கற ஒரு குட்டு ரகசியங்களும், சாவ முழுங்கணும்னு ஆத்தாவுக்கு வெளில பாத்துட்டுருக்கற ஒரு குட்டு ரகசியங்களும் மஞ்ச மூத்தரத்துல நொர நொரயா நொரச்சு, மோதி வெடிக்கற மாதிரி இருந்துச்சு. கூடீ சீக்கிரம் ஒருநாள் அந்த மொதக் குட்டு ஜெயிச்சு, ரெண்டாவது குட்ட ஒண்ணுமில்லாம ஆக்கீரும்னு தோணுச்சு. ஆத்தா மூஞ்சியப் பாக்காம நான் கெளம்பிட்டேன். மேக்க நல்ல கருக்கல் கட்டீருந்துது. லேசாத் தலயும் யேனோ வலிக்கற மாதிரி இருந்துச்சு.
9 மறுமொழிகள்:
என்னமோ தெரிலே சாமி, படிக்க படிக்க கண்ணுலே
தண்ணி முட்டுது.
குப்புன்னு உள்ளுகுள்ளே ஏதோ பெறளுது.,
நல்லாரு சாமி...
உங்க பேரும், வாழ்த்தும் கதைக்குப் பொருத்தமா இருக்கு.. நன்றிங்க பெருசு..!
நல்லா இருக்கு மதன்!
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சுந்தர்..!
I really enjoyed your story.. well composed words.. striking narration .. great reading pleasure..
keep up the good work..
Thank You so much for all your compliments Arumugam..!
மிக அற்புதமான பதிவு. உணர்வுகளை வலிக்க கிளறிவிடும் சம்பவ அமைப்பு.. மறந்து போன மனிதர்களையும் பாசத்தையும் பந்தங்களையும் நினைத்து ஒரு துளியாவது கண்ணீர் சிந்த வைக்கிறீர்கள் நண்பரே.. பதிவுக்கு வாழ்த்துக்கள். இத்தகைய ஒரு உணர்வை தோன்றவைத்ததுக்கு நன்றிகள்...
மிக்க நன்றி முத்துக்குமார்..!
Hi Madhi, this reminds me my grandma. she was not no more now, but still i remember her love and affection towards all people. Though her legs could not walk, she used her thoughts to spread. she is a great inspiration to me and this story reminds me her thoughts. -guru
Post a Comment