என் சட்டைப்பையினுள்
அது ஒரு மிருகம்
கொடூர மிருகம்
நெற்றியில் பல் பதித்து
தோலுரிக்க ஆரம்பித்து
கால் நுனி வரை இழுத்துப் போடும்.
முழுவதுமாய் எனை
சிவப்புப் பாளமாக்கி நக்கும்.
அந்நக்குதலின் சுகத்துக்காய் கிடந்திருக்கலாம்.
மிகத் தடிமனான நாக்கு அதற்கு.
செங்களரியில் கன்னம் வைத்து
அதன் குளிருக்கு இதம் சேர்க்கும்.
அவ்வப்போது எங்கேனும் ஓடிவிடும்.
தேடினாலும் கிடைக்காது.
திடீரென முன்வந்து பல்லிளிக்கும்.
எனை முழுவதுமாய்
உறிஞ்சக் கெஞ்சினால்
குதிகாலில் கோணியூசி குத்தி
உறிஞ்சி, உறிஞ்சி எனக்குள்ளேயே துப்பும்.
எப்போதும் தூங்காது.
தலை மேட்டில் அமர்ந்து கண்கொட்டாது
பார்த்துக் கொண்டிருக்கும்.
அதனோடு இருத்தல்
தரும் சுகம் அலாதியானது.
பார்க்க சாது போல என்னை
அண்டி நடந்து வரும்.
பிறர் முன் நான் அதன்
முதலாளி போல் நடிப்பேன்.
என் போலிமை அறிந்தும்
காட்டிக் கொடுக்காது
ஆதரவாய் அமைதி காக்கும்.
எங்கள் விசுவாசத்தை
நாங்கள் பொருட்படுத்துவதில்லை.
கைமாறிக் கொண்டேயிருப்போம்
எனக்கான அதுவும்
அதற்கான நானும்.
தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தக்கதும், பாரம்பர்யமிக்கதுமான இதழான நவீன விருட்சத்தில் பிரசுரமானது.
நவீன விருட்சத்தைப் பற்றிக் கூறி, படைப்பை அனுப்ப ஊக்குவித்த சுந்தர் அவர்களுக்கும், தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் புழங்கிய இதழில், சிறியன் எனக்கும் ஓரிடம் கொடுத்த மூத்த படைப்பாளியான அழகியசிங்கர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
4 மறுமொழிகள்:
ஏற்கனவே படித்திருந்தேன் வாழ்த்துக்கள்..
நன்றி தமிழன் கறுப்பி..!
இந்தக் கவிதையை போன வாரம் விருட்சத்தில் படித்தேன். நல்லா இருக்கு கவிதை
ஹ்ம்ம்.. நன்றி சுந்தர்..!:)
Post a Comment