Thursday, December 11, 2008

கள்ளமும், பொய்மையும்



எனதில்லாதவைகளுக்கும், என்னால் ஆகாதவைகளுக்குமாய்
உள்ளுக்குள் புரையோடும் இயலாமை
பொய்த்துப் பிரசவிக்கிறது
நிதர்சனத்தின் கால்ப்பிளவில்.

கிடைமட்டமாகியிருக்க வேண்டிய
தலையாட்டல்கள்,
நெடுமட்டங்களாகுகையில்
உண்மையின் ஆசனவாயில்
உளியொன்று உட்புகுத்தப்படுகிறது.

நிஜத்தின் கண்ணில் கறுப்புத்துணி கட்டி
அதன் முதுகில் குத்தித் தள்ளும் நாவு,
பொய்யுரைக்கும் வாய் முகட்டில் இருக்கும்.

காற்றோடு திரிந்தலையும் எண்ணிலாப்
பொய்களைத் துகிலுரிய
காலம் சிமிட்டிக் கொண்டேதான் இருக்கிறது
நொடிகளை.

உயிரோசை 15/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.



0 மறுமொழிகள்:

  ©Template by Dicas Blogger.

TOPO