தேரோடும் சூலூரில்..
மற்ற ஊர்களைப் பற்றித் தெரியவில்லை. சரியாக விஜய தசமியன்று எங்களூராம் சூலூரில் பெருமாள் கோயில் தேர். தேர் என்றால் எங்களுக்கெல்லாம் இருப்புக் கொள்ளாது. காலாண்டு விடுமுறையின் முடிவில் முத்தாய்ப்பாய்த் தேரோட்டம் என்பதால் துள்ளல் இன்னும் கூடும். எங்கள் பெருமாள் கோயிலின் முன்பு ஒரு மைதானம் உண்டு. "பெருமா கோயில் க்ரவுண்டு" என்று வழங்குவோம் அதை. வாரக் கடைசிகளில், பொழியும் வெயிலில் கிரிக்கெட் ஆடி, பெருமா கோயிலுக்குள் சென்ற பந்தை பயந்து, பயந்து எடுத்து வந்து, திட்டு வாங்கும் வானரங்கள் எல்லோரும், தேர்நாளன்று நல்ல பிள்ளைகளாக அணிவகுத்து நிற்போம் கோயில் முன்பு.
வடக்குப் பகுதி வாழ் எஞ்சோட்டான்கள் எல்லாரும் இருப்போம் ஒருவிதப் பதட்டத்தோடு. ஆளாளுக்கு ஓரிடம் பிடிக்க வேண்டுமே தேரிழுக்க. அனைவரையும் ஒட்டுக்காய் காணுதல் அரிதுதான் என்றாலும் இடம்பிடிக்கும் வரை பதை பதைப்பு கூடிக்கொண்டே இருக்கும். பேசவெல்லாம் நேரமில்லை.
பெருமா கோயிலுக்கு முன் இருக்கும் பிள்ளையாருக்கும், ஆஞ்சநேயருக்கும் மரியாதை செலுத்திவிட்டு, மஞ்சள், ரோஸ், பச்சை என்று மல்லிகா ஸ்டோர்சில் வாங்கிய கலர் பேப்பர்களுடன் அழகு மிளிரும் தேரில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் எங்கள் உற்சவருக்கும் ஒரு கற்பூரம் காட்டிவிட்டு, ஊர்ப் பெரியவர்கள் மடுச்சுக் கட்டிய வேட்டியுடன் நிற்க, அப்போதைய பல்லடம் எம்மெல்யேவோ, கோவைத் தொகுதி எம்ப்பியோ, வடத்தைத் தொட்டுக் கொடுக்க, ஊரே கூடியிருக்கும் ஜே ஜே-வென்று. தேரிழுக்க.
எங்கள் தேருக்காகவே பிரத்யேகமாக கேரளாவிலிருந்து வரும் நீண்ட தலை முடிச் சாமி கையில் வித்தியாசமான ஒரு அரிவாள் வைத்திருப்பார். தேருக்கு முன்னால் யாவருக்கும் முதலில் செல்வது அவர் தான். அவருக்குப் பின்னால் அவர் குழுமத்தை சேர்ந்தவர்கள் ஒரு மாதிரி சேர்ந்தாற்போல் ஆடிக்கொண்டே வருவார்கள் இரண்டு வரிசைகளில் வெற்றுடம்போடு. அடுத்து 2, 3 யானைகள் வரும். யானைச் சாணியை மிதித்தால் படிப்பு வரும், உடம்புக்கு நல்லது என்ற காற்றுவழிச் செய்திகளுக்கெல்லாம் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம், ஈரம் இற்று, நாராகும் வரை அதை மிதிப்பதில் வந்து முடியும்.
இழுக்க ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் கரை காணாது அலை பாயும் ஆரவாரம். சிறியவர், பெரியவர் என்றில்லாது அதகளப்படும் ஏரியாவே. ஆங்காங்கே கட்சி வேட்டிகள் கண்ணில்படும். குச்சி வைத்திருக்கும் போலீஸ்காரர்கள் அங்கும், இங்கும் முறைப்பர். இதற்கிடையில் எப்படியாவது முட்டி மோதி உள்ளுக்கு வர வேண்டுமென்று ஆடியோடிக் கொண்டிருக்கும் அடிப் பொடியன்கள் நாங்கள் வேறு.
தேர் சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதற்காக, "கட்டை போடுபவர்" என்பவர் பக்கத்திற்கு ஒருவர் என இருவர் இருப்பர். அவர்கள் கையில் இருக்கும் பச்சை கலர் கட்டையை தேரின் பிரம்மாண்டச் சக்கரத்தில் வைத்து, வைத்து, தேர் செல்லும் திசையைத் தீர்மானிப்பார்கள். எனக்கெல்லாம் ஹீரோயிசம் என்றால் எத்தனை கிலோ வேண்டும் என்று கேட்பவர்கள் போல் இருக்கும் அவர்களைப் பார்க்கையில். சற்று பிசகினால் கழுத்தில் ஏறிவிடும் தேர்க்கால். அடுத்த வேளை சோறு நிச்சயமில்லை. ஆனாலும், அவர்களை அறிந்தோ, அறியாமலோ, சிலநூறு சிறுவர்களுக்கு அவர்கள் ஹீரோக்களாய்த் தெரிவது அவர்களுக்குத் தெரியுமா. தெரிந்தால் என்ன நினைப்பர் என்று நினைப்பேன் நான்.
மேடும், பள்ளமுமாய்ப் படுத்துக் கிடக்கும் சாலையில் தேரை இழுத்துச் செல்வதைப் பார்க்கவே நன்றாக இருக்கும். முன்னே சில நூறு பேர்கள் இழுத்தால் மட்டும் போதாது. பின்னால் இழுத்துப் பிடிக்க என்று சில பத்துப் பேர்கள் இருக்க வேண்டும். வடத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால் நானெல்லாம் முன்னேயும், பின்னேயும் ஓடிக்கொண்டிருப்பேன். எங்கே ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தாலும் சரியென்று.
முன்னிருப்பவர்கள் இழுக்கையில், கட்டுக்கடங்கா வேகமெடுத்து முன்னே செல்லும் தேர். முன்னுக்கும் இல்லாமல், பின்னுக்கும் இல்லாமல் ஒரு மாதிரி நடுவாண்டி நடந்து வரும் ஊர்ப் பிரமுகர் "டேய் டேய் இழுத்துப் புடிங்கடா.. தடம் மாருதல்லோ" என்று பின்னால் இருப்பவர்களுக்குச் சொல்வார். அப்போது பின்னவர்கள் சேர்ந்து கயிற்றை இழுத்துப் பிடிக்க, தேர் வேகம் குன்றி, ஒரு மாதிரி கோணலாய் நிற்கும். இவ்வாறே இழுக்க, இழுத்துப் பிடிக்கவென்று தேர்வலம் களைகட்டும். இந்த 'பின்னணித்' தலைவர் பதவிக்கு ஒருவர் இல்லாது ஒருவர் எப்போதும் இருந்து கொண்டே இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கும்.
தேர்வீதிகளில் வலம் வந்து, திரும்ப கோயிலை அடைந்து உற்சவரை, உள்சேர்ப்பதே எல்லா ஊர்களையும் போல எங்கள் முறையும். கிழக்குத்தேர் வீதியின் குறுகல்களில் தேரை நகர்த்த முனைகையில், நேரம் நீராய் செலவழியும். அவ்வீதி முனையில், ஒரு ரைட் டர்ன் எடுத்துத் தேரைத் தெற்குத்தேர் வீதியில் திருப்பி நிப்பாட்டுகையில் அவனவனுக்கு மூச்சிரைத்து, வேர்த்துக் கொட்டித், தண்ணி கேட்டுத் தவித்துவிடும்.
இடையே சும்மாவா வருவான்கள் நம்ம பையன்கள். வாழைப் பழத்தை வாங்கி, வருவோர், போவோர் மீதெல்லாம் அடிப்பான்கள். கேட்டால் தேர்ச்சடங்காம். இந்த சம்பிரதாயத்தை எவன் கண்டுபிடித்தானோ தெரியாது. ஆனால் நிச்சயமாகப் பெருமாளுக்காகச் செய்வதாய்த் தோன்றவில்லை.
மேலே, எவன் சைட்டாவது தீபாராதனையைப் பார்க்கத் தப்பித், தவறி வந்து விட்டால் ஆயிற்று. அளப்பறை தாங்காது. என்னமோ இவர்கள் தான் ஒற்றை ஆளாய், அம்மாம் பெரிய தேரை இழுத்துக் கட்டி வந்து, நிற்கச் செய்திருப்பதைப் போலவும், மற்றவர்களெல்லாம் ஒப்புக்குச் சப்பாணிகள் போலவும் லந்து பண்ணிவிடுவார்கள்.
தேரின் உயரத்தை சமாளிக்க தேர் வீதிகளைக் கடக்கும் வயர்கள் அனைத்தும் முந்தின நாளில், அந்தந்த இலாகாக்களால் அவிழ்த்து விடப்பட்டிருக்கும். மின்சாரம் வேறு இல்லையா. பெருமாளின் தேரோட்டத்திற்கு விளக்கொளி வருவது சந்திரனின் வெள்ளோட்டத்தில்.
மேற்கூறிய ரைட் டர்ன் முடிகையிலேயே சாயங்காலத்திற்குக் கிளம்பினது, இருட்டாகியிருக்கும். இந்த முக்கில் தேரை நிறுத்தி விட்டால், "ஒரு பொட்டுத் தொளின்னாலும் உளுந்துன்ன எடுத்துர்லாம் டா" என்று மழை வாராவிட்டால் தேரை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் ஐதீகம் அவர்களுக்கு. நாம் ஏன் முறைப்பானேன். உக்கார எடம் கெடச்சா மூச்சு வாங்கி, முதுகு சாச்சுக்கப் பார்க்கும் மனசு.
நிறுத்தி விட்ட சில நிமிடத் துளிகளில், இருட்டுக் கட்டிய வானத்திலிருந்து இரண்டு துளி மேல் விழுகையில் தான் நமக்கெல்லாம் பெருமாளின் நினைப்பே வரும். ஏதோ ஒன்று உள்ளே புரண்டு என்னமோ பண்ணும். "இருக்கார்ரா பெருமாள்" என்று தெரிந்த உண்மையை புதியதாய் உணர்த்தி யோசிக்கச் செய்யும். நிலா வெளிச்சத்தில், கற்பூர ஒளியில் மங்கலாக முகம் காட்டும் உற்சவர் அழகு கூடியிருப்பார். கண்மூடி தியானித்து, அரை நிமிடமாகியிருக்கையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் தேரைத் துவங்க. காணாது போன உற்சாகத்தை அள்ளிக் கொடுத்ததால்தான் உற்சவர் எனப் பெயர் வந்ததோ என்று யோசிக்கவெல்லாம் நேரமின்றி, துள்ளித் தொடங்கியிருப்போம் கோயிலை நோக்கி.
நம்ம வீட்டைத் தாண்டுகையில் நான் எந்த மூலையிலிருந்தாலும், என்ன கூட்டமிருந்தாலும், அம்மா பார்த்து விடுவாள் அந்த இருட்டொளியிலும். எல்லா அம்மாக்களுக்குமே தத்தம் பிள்ளைகளை அடையாளங்காணுதல் கடினமாயிருப்பதேயில்லை. "அங்க வாரவன.." என்று கை காட்டிச் சிரிக்கும் அழகில் சந்தோஷம் உள்ளோடும்.
ஒரு வழியாக கோயிலுக்குப் பக்கத்தில் வந்து சேர்கையில் நிலா உச்சியில் இருக்கும். உற்சாகம் அடிவானில் இருக்கும். ஒரு நான்கு மணி நேரப் பந்தமே ஆனாலும், தேரை நிலைக்குக் கொண்டு வந்து நிப்பாட்டுகையில், பிரிவுக் கீற்று ஒன்று சற்றே உறுத்தும். இன்னும் ஒரு வருசம் ஆகுமே இதெல்லாம் நடக்கவென்று. நம்ம பயல்கள் திரும்ப ஆனைச்சாணி தேடுவர் க்ரவுண்டில். "யானமுடி கெடச்சாப் பார்றா.. ஆயர்றுவா டா ஒரு முடி.." என்பான் ஒருவன்.
ஏதோ ஒரு வகையிலான அமைதி ஆட்கொள்ள, உள்ளே சென்று, பெருமாளை சேவித்து விட்டு, வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்கையில், எதனால் என்று தெரியாத போதும் ஒரு திருப்தி உள்ளே சுரக்கும் வயது மறந்த நிலையில்.
"செரமனாட்ட வருவான்னு நாஞ்சொன்னில்லடா" என்பார் அப்பா அம்மாவிடம். நிலைகொண்ட தேர், இனி ஒரு வருசத்துக்கு சீந்துவாரின்றித்தான் இருக்கும் என்று நினைத்துக் கிடந்தவன், எப்போது தூங்கினேன் என்றே தெரியாமல் தூங்கியிருப்பதில் முடியும் எங்கள் தேரோட்டம்.
சாமிக்கோ, சடங்குக்கோ.. தேர் எங்களைப்போன்ற இத்துனூண்டுகளுக்கெல்லாம் உவகை தருவதாகவே இருந்தது. இதுவரை பார்த்திராத ஊர்வாசி முகங்களையும் அறிமுகப்படுத்துவதாயிருந்தது. ஆயிரங்கை சேர்ந்து ஏதோ ஒன்றைச் சாதிப்பதைப் போன்றதாயிருந்தது. சாலையின், மற்றும் சமூகத்தின் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்காமல் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியத்தை உணர்த்தவும் தேவையாயிருந்தது.
சென்ற வாரம் விஜய தசமியன்று அப்பா சொன்னார்.. "கரண்ட் இல்ல.. இங்க தேரல்லோ.." அதிகம் சலனப்படாமல் ஃபோனை வைத்தபின், முகத்துக்கு முன்னால் கொசுவர்த்திச் சுருள் வளராமலேயே போய்வந்தேன் தேரிழுக்க.
9 மறுமொழிகள்:
Soolur poi, ther izhutha maathiriye iruku da...
super na... naan thaer parthathu ella.. but could atleast imagine it now :) pradeep
mathi i went to sulur for this. athuvum inga varthukku munnadi. so i decided i have to make that. i enjoyed a lot with that. ennoda thambiya kaanom, avan thozhavi kandu pidikkarthukkulla mudiyala da ennala. intha varusam yaanai ellam illa, ,mazhaiyum illa po. aana enaku pazhaiya gnabagam ellam varuthu. thanx for the old memories... take care
Hi da madhi..
Great narration da.. engayo poita.. Sulur memories have come in front of me.. thanks for that da.. I am seeing another writer Sujatha (ur narration closely matches his) in you.. good keep it up.
-guru..
பிரதீப் தம்பி.. ரொம்ப நன்றி..
சிவா அண்ணா.. ராகவ் காணமா தேர்ல.. ஹா.. ஹா..!
குரு-ணா.. சுஜாதாவா.. நீங்க ஓவரா பாராட்டிட்டிங்க..!!
Good one.......I have heard a lot abt Sulur ther........Now feeling it in ur blog...Keep up the good job.....கோயில்த்தேர் should be written as கோயில் தேர்...........please change it
கருத்துக்கு நன்றி பிரபாகரன். சந்திப்பிழை நீக்கப்பட்டது.
நல்லாயிருக்கு... பழைய நினைவுகள் துளிர்க்கிறது மதன்!
நன்றி பழமைபேசி!
Post a Comment