அவிழா முடிச்சுகள்
பரவிக் கிடக்கும்
பால்வெளியில் பல கோடிச்
சூரியன்கள் படைத்துவிட்டேன்.
இருண்ட வெற்றிடத்தை,
இடமாகவே
இல்லாத இடத்திலும் இட்டு
நிரப்பிவிட்டேன்.
பரவலைத் தாண்டிய
வடிவேதும் தரவில்லை வெளிக்கு.
அவனுக்கெட்டிய அறிவின் வரையில்
பூதமென்கிறான் மானிடன்.
தீயை,
நீரை,
காற்றை.
இவை போன்ற இன்னபிற எண்ணிலா
விடயங்களால் ஆக்கியிருக்கிறேன்
அண்டத்தை என்றறியான்.
கோளங்கள் ஒன்றொன்றும்,
இன்னொன்றுக்கு
ஈயாய், எறும்பாய்.
எது, எதின் எறும்பு என்பதை
அழித்தாயிற்று.
பெயர்களேதும் மிச்சமில்லை.
அத்தனை வகை வாழ்விகளென்
சராசரத்தில்.
எல்லாமே முயல்கிறது
அறிவதற்காகா
என் பேரண்டத்தை அறிய.
பெருமிதமில்லை.
உனக்கு பிரம்மமான நானும்
ஒன்றுமில்லாத
வேறொன்றுக்கு
எறும்போ, கனவோ
என்ற ஐயமிருப்பதால்.
விரவிக் கிடக்கும் வெளியில்,
நானும்,
நீயும்,
தோன்றியதும்,
தோற்றுவித்ததும்,
எல்லாமும்,
தூசின் தொண்ணூறே.
இக்கவிதையை வெளியிட்ட கீற்று வலைத்தளத்திற்கு நன்றி.
0 மறுமொழிகள்:
Post a Comment