Wednesday, April 29, 2009

சாரு - கடிதம் I

from Mathan V
to charunivedita@charuonline.com
date Fri, Feb 20, 2009 at 8:49 AM
subject ப்ரிய சாருவுக்கு..


ப்ரிய சாருவுக்கு,

ஒரு வாசகன் எழுதிக்கொள்வது.

தங்கள் நேரத்தை வீணாக்காமல் விஷயத்தை சொல்லிவிடுகிறேன்.

நான் முன்பே ஓரிரு முறை தங்களுடன் மின்னஞ்சலில் தொடர்பிலிருந்துள்ளேன்.

நான் முதன்முதல் எழுதிய கதைக்கு 'beautiful story' என்று நீங்கள் அனுப்பிய Reply எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது என்று உங்களுக்கு நான் எழுதிய நன்றிக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.

என் சில கவிதைகள் மற்றும் ஒரு சிறுகதை ஆகியன உயிரோசையில் பிரசுரமாகியுள்ளன. தங்கள் நேரம் அனுமதியாது என்று தெரிந்தும், லிங்க் அனுப்புகிறேன். ஒருவேளை தாங்கள் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்தால், உருப்படியான எழுத்தை நோக்கி நகர எனக்கது உதவியாயிருக்கும் என்ற ஒரு நப்பாசையில்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=866

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=816

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=787

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=726

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=897

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=956

அன்புடன்,
மதன்

பதில் கடிதம்:

அன்புள்ள மதன்,

படித்தேன். இந்த முறையும் உங்கள் சிறுகதை பிடித்திருந்தது. கவிதைகளில் பயணச் சிதைப்பு, நான் ரௌத்திரன், பிரிதலின் வன்பிடியுள் மூன்றும் பிடித்திருந்தன. முகம் மாற்றல்கள், குழப்பத் தீர்வுகள் இரண்டும் பிடிக்கவில்லை. பிடித்தது, பிடிக்காதது இரண்டுக்குமே காரணம் தெரியவில்லை.

கவிதைகளில் அக நானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், சித்தர் பாடல்கள், பாரதி போன்றவைகளைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கம்ப ராமாயணம் படித்திருந்தால் இன்னும் உத்தமம். நவ கவிதையில் தேவதச்சன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி, பிரம்மராஜன், தேவதேவன், தர்மு சிவராமு, நகுலன், கலாப்ரியா, எஸ். வைதீஸ்வரன், சேரன், மனுஷ்ய புத்திரன் போன்றவர்களைப் படிக்கலாம்; படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் அநேகம் பேர் உண்டு. என்றாலும் பாப்லோ நெரூதா, ரில்கே, ஒக்தாவியோ பாஸ், ஆலன் கின்ஸ்பெர்க் ஆகியோரைப் படிக்க வேண்டியது கட்டாயம். அதிலும் ஆலன் கின்ஸ்பெர்கின் ஹௌல் என்ற கவிதையைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்ல வேண்டும்.

இவற்றையெல்லாம் ஏற்கனவே படித்திருந்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள் மதன். சில நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்றுதான் எழுதியிருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

20.2.2009.

2.45 p.m.

from Mathan V
to charunivedita@charuonline.com
date Sat, Feb 21, 2009 at 6:04 PM
subject Re: ப்ரிய சாருவுக்கு..


சாருவுக்கு,

தங்கள் நேரம் செலவழித்து, அனுப்பியவற்றைப் படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் பட்டியலிட்டவைகளுள் பாரதியும், மனுஷ்யபுத்திரனையும் தவிர வேறு எதையும் மற்றும் யாரையுமே படித்ததில்லை. கண்டிப்பாகப் படிக்கிறேன். அப்படியே படித்திருந்தாலும், எதற்காகக் கோபப்பட வேண்டும்?

என் பொருட்டு நீங்கள் பகிர்ந்துகொண்டவைகள், என்னைப் போன்ற இன்னும் சில நூறு பேருக்கும் உபயோகப்படும் என்பதில் எனக்கு சந்தோஷம் கூடுகிறது.

உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி.

ப்ரியத்துடன்,
மதன்



1 மறுமொழிகள்:

Krishna Prabhu April 30, 2009 at 5:00 PM  

யாராவது படைப்புகளை சாருவுக்கு அனுப்பினால் திட்டி பதிலிடுவார் என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுடைய மின் அஞ்சலுக்கான மறுமொழியில் அப்படி எதுவும் அவர் வசை பாடியதாக தெரியவில்லை. பிறகு ஏன் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள்?. தொடர்ந்து கவிதை படைக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

  ©Template by Dicas Blogger.

TOPO