சாரு!
சமீபத்தில் சாருவின் தளத்தில் எழுதப்பட்டிருந்தது போல், 'சாருவின் பெயரை தலைப்பில் போட்டு விட்டாலே, வலைத்தளத்திற்கு வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்பதால், வலையில் எழுதுபவர்கள் அவர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்' என்ற கருத்து உண்மையா தெரியாது. ஆனால் வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நான் எழுதுபவனில்லை என்பதாலும், நீண்ட நாட்களாக சாருவைப் பற்றி எழுத நினைத்திருந்தவற்றை இப்போதேனும் எழுத வேண்டும் என்பதாலும், அந்தக் கருத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இதை எழுதுகிறேன்.
சாரு - நான் தவறாமல் படிக்கும் எழுத்தாளர்களுள் ஒருவர். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களில் எனக்கு இவரைப் பிடிக்கும், இவரைப் பிடிக்காது என்றெல்லாம் எதுவும் இல்லை. சாருவே சொல்வது போல் எழுத்தாளன் ஒரு பிரம்மா. அவனுடைய ஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர்களைப் படைத்துக், காத்து, அழிக்கும் சர்வேஸ்வரன். இதில் இவர்தான் உசத்தி, இவர் தாழ்த்தி என்பதிலெல்லாம் எனக்கு ஏனோ உடன்பாடில்லை.
தன் கற்பனையை நம்பி இரண்டு வரியேனும் எழுத முன்வருபவன் ஒவ்வொருவனையும் எனக்குப் பிடிக்கும். அதேபோன்று படைப்புகளிலும் எந்த பாரபட்சமும் எனக்கில்லை. குழந்தை உட்பட அவனவனுக்கு, அவனவன் உடைமைகள் உயர்வு. போலவே அவனவனுக்கு அவனவன் எழுத்தும்.
வலையுலகில் எத்தனையோ படைப்புகள் காணக்கிடைக்கின்றன. படிக்கையில், சில படைப்புகள் நன்றாக இல்லாதது போன்ற எண்ணம் தோன்றலாம். ஆனால் அது என்னுடைய பிழையே தவிர எழுதியவரைக் குறை சொல்லிப் புண்ணியமில்லை.
என் எதிர்பார்ப்புக்கும், ரசனைக்கும் ஏற்ற உயரத்திற்கு எழுத வேண்டும் என்று அவனுக்கு என்ன தலைவிதி? அவன் விருப்பத்திற்கு அவன் எழுத வேண்டும். எழுத்துக்கு ஒருவன் செய்யும் குறைந்தபட்ச மரியாதை இதுவாகத்தானிருக்கும். அதையும் மீறி எனக்கு படைப்பின் தரத்திலோ, கருத்திலோ உடன்பாடில்லை என்றால் மேற்கொண்டு அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளனைப் படிக்காமல் விட்டுவிட்டு, என் உயரத்துக்கேற்ற எழுத்தினைத் தேடுவதே உத்தமம்.
'எழுத்து பிடிக்கவில்லையென்றாலும், கருத்தைப் பகிர வேண்டும். அதுதான் எழுதுபவனும், அவன் எழுத்தும் மேம்பட உதவும்' என்றும் வாதிடலாம். ஆனால் எனக்கென்னவோ 'லூஸாக விட்டுவிட வேண்டும்' என்ற கருத்துதான் சரியெனப்படுகிறது. எதற்கு விவாதம். நான் இப்படியே இருந்து விட்டுப்போகிறேன். விட்டுவிடுவோமே!
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சாருவுக்கு மட்டும் நேர்ந்த விசித்திரம் ஒன்று உண்டு. அவர் வாசகர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று அவரை மிகவும் பிடித்துப் போனதால் ரசிகர்களாகிவிட்ட வாசகர்கள், மற்றொன்று 'அவர் எழுதுவதெல்லாம் குப்பை.. வெறும் செக்ஸ்' என்று அவரைக் குற்றம் சாட்டும் தரப்பினர். என்ன குற்றம் சாட்டினாலும் இவர்களால் அவரைப் படிக்காமல் இருக்க முடியாது என்பது அடுத்த விசித்திரம்.
நான் இந்த வகையில் மூன்றாம் தரப்பினன். எனக்கும் அவர் எழுதும் பல விஷயங்களில், எழுதும் விதத்தில் உடன்பாடிருக்காது. ஆனால் அடிப்படையில், என் விருப்பத்திற்கேற்ப ஒருவர் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், எனக்கு இந்தக் கருத்தியல் உடன்பாடின்மை பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இதையும் தாண்டி அவர் எழுத்தில் ஒளிந்திருக்கும் சுவாரசியம்தான் என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதும் உண்மை. எனினும், 'சுவாரசியமான எழுத்தாளர்' என்று ஒரு சிறு வட்டத்திற்குள் அவரை அடைத்து விட முடியாது. அப்படியானால் அவர் ஒரு இலக்கிய ஆளுமையா? என்று கேட்டாலும், நான் 'தெரியாது' என்றுதான் பதில் சொல்வேன். ஏனென்றால் 'இலக்கிய ஆளுமை' என்ற வரையறையெல்லாம் எதைக் கொண்டு அளவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அவரைப் படிக்காமல் இருக்க முடிவதில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.
சுஜாதாவுக்குப் பிறகு, இவரளவுக்கு இளைஞர்களின் வாழ்வோடு ஒன்றியும், இளைஞர்களைக் கவரும்படியும் எழுதத் தமிழில் தற்சமயம் ஆளில்லை என்பது மிகை கலவாத உண்மை. இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் அவரைப் புகழ எனக்கு எந்தக் காரண காரியமுமில்லை. அவரைப் புகழுமளவு நான் பெரியவனுமில்லை. என்னைப் போன்ற ஒருவன் புகழ்ந்தால் அவருக்கு எவ்வித ஆதாயமும் ஏற்படப்போவதுமில்லை. மேற்கூறியவை சாருவைப் பற்றிய என் அபிப்பிராயங்கள். அவ்வளவே.
'சரி. இப்போது எதற்கு சாருவைப் பற்றிய உன் முந்திரிக்கொட்டைக் கருத்துரைகள்' என்கிறீர்களா? வாஸ்தவமான கேள்விதான். அவரோடு அவ்வப்போது மின்னஞ்சலில் தொடர்பிலிருப்பதுண்டு. அவற்றுள் சிலவற்றை அவர், அவருடைய இணையதளத்தில் பிரசுரித்ததும் நிகழ்ந்ததுண்டு. அவற்றை இங்கேயும் பதிவிட்டு வைக்க உத்தேசித்ததில் விளைந்தவைதான், 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்' என்று ஆரம்பிக்காமல் நான் இதுவரை சொன்ன கதை.
போகட்டும். இனி அடுத்த பதிவில் சாருவுக்கும், எனக்குமான கடித இலக்கியத்தைப்(?!) பார்ப்போம்!
5 மறுமொழிகள்:
எழுதுவதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.. அவரவர் படைப்புகள் அவர்களைப் பொருத்த வரை சிறந்தவையே.. நமக்கு பிடித்த மாதிரி எழுத வேண்டும் என எண்ணுவது தவறு
நன்றி கார்த்திகைப் பாண்டியன்!
நல்லதொரு இடுகை!
உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள், நிறைய வாசியுங்கள்!
தெளிவான பதிவு மதன்.
நன்றி ஜோ.. நன்றி அஷோக்!
Post a Comment