தாகத்தின் இறுதித் துளி
நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
இப்பொழுது.
எந்தவொரு தடையுமில்லாமல்
எதன் மீதும் பிடிப்புக் கொள்ளாமல்
காற்றின் அந்தர வெளிக்குள்
நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
யுக யுகங்களாய்.
எனக்கிது பிடித்திருக்கிறது
ஆம்..
எங்கோ ஆழாதியாழத்தில்
இருக்கும் அந்த ஒன்றின் மீதான
தாகத்தின் இறுதித் துளி
நாவினடியில் பத்திரமாய் இருப்பது தெரிந்திருக்கும் வரை
இது எனக்குப் பிடித்ததாகவே இருக்கும்
ஆனால்
அது என்னவென்பதோ
அல்லது நான் எப்பொழுது அதை அடையப் போகிறேன் என்பதோ
அல்லது எனக்கு எப்பொழுது அது கிடைக்கப் போகிறது என்பதோ
இவற்றில் ஏதோவொன்று உறுதிப்பட்டாலும்
அதே கணத்தில்
ஒரு பிரளயம் என்னை சந்திக்கக் காத்திருக்கும்
என்பது தெரிந்திராத வரை மட்டுமே
இது எனக்குப் பிடித்ததாக இருக்கும்
தெரிந்த நிலையிலிருந்து
தெரிந்து கொள்ளாத நிலைக்கான
எனது பயணம்
தேடலின் மீதான ஆசையாகித்
தொலைந்து கொண்டிருக்கிறது
நான் விழுந்து கொண்டிருக்கிறேன்
இப்பொழுதும்..
0 மறுமொழிகள்:
Post a Comment