தெரிந்தும் தெரிந்துமே
அழ வேண்டும் என்று
முடிவு செய்தால்
எத்தனை சத்தமாக அழ முடியுமோ
அத்தனை சத்தமாக அழ வேண்டும்
அழ வைக்க வேண்டும் என்று
முடிவு செய்தாலோ
எந்தளவுக்கு சத்தம் வராமல் அழ முடியுமோ
அப்படி அழ வைக்க வேண்டும்
ஒப்புக் கொள்ள வேண்டுமென்று
தோன்றிவிட்டால்
செய்ததில் பாதியை எல்லோர் முன்பும்
ஒப்புக் கொள்ள வேண்டும்
காட்டிக் கொடுக்க வேண்டுமென்று
தோன்றிவிட்டாலோ
செய்யாததில் பாதியையும்
குறிப்பிட்ட மிகச்சிலரிடம்
காட்டிக் கொடுக்க வேண்டும்
நம்மைப் பெருமைப்படுத்துபவர்கள்
குனிந்து நம் மணிக்கட்டில்
முத்தமிட்டால் போதுமானது
நாம் பெருமைப்படுத்துபவர்களுக்கோ
குனிய வைத்து
பின்புறம் முத்தமிட வேண்டும்
தற்கொலை செய்துகொள்ள
வேண்டுமென்று யோசித்தால்
எவ்வளவு கொடூரமாகச் சாக முடியுமோ
அவ்வளவு கொடூரமாகச் சாக வேண்டும்
கொலை செய்வதைப் பற்றி யோசித்தாலோ
எத்தனை சாந்தமுடன்
ஒரு கொலை சாத்தியப்படுமோ
அவ்வண்ணம் நிகழ்த்த வேண்டும்
சரி.
இவையெலாம் எதற்காக?
தெரிந்தோ தெரியாமலோ
நமக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தக்க வைத்துக் கொள்ளவும்
அதைவிட முக்கியமாய்
தெரிந்தோ தெரியாமலோ
பிறருக்கென வாய்த்து விட்ட
அனுதாபத்தையோ,
பெருமிதத்தையோ
தெரிந்தும் தெரிந்துமே
சிதைத்தொழிக்கவும்
நன்றி: உயிரோசை 16/8/2010
2 மறுமொழிகள்:
சுயநலவாதிகளுக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தக் கவிதை!
எனக்கு கூட ரொம்ப பிடிச்சுங்க அருணா! :)
Post a Comment